Saturday 20th of April 2024 11:17:19 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சி மாவட்ட இ.போ.ச. சாலை, பேருந்து தரிப்பிட பிரச்சினைகளுக்குத் தீர்வு!

கிளிநொச்சி மாவட்ட இ.போ.ச. சாலை, பேருந்து தரிப்பிட பிரச்சினைகளுக்குத் தீர்வு!


கிளிநொச்சி மாவட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்கான நிரந்தர சாலை அமைத்தல் மற்றும் கிளிநொச்சி நகருக்கான பேருந்து தரிப்பிடத்தை நிர்மாணித்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் அமுனுகமவுடன் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்பாளர் றுஷாங்கன் பேசித் தீர்வுகளைப் பெற்றுக்கொண்டார்.

கிளிநொச்சி மாவட்டத்துக்கு மார்ச் 19-ஆம் திகதி வியாழக்கிழமை வருகை தந்த போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவை வரவேற்று இ.போ.ச.போக்குவரத்துச் சாலைக்கு அழைத்துச்சென்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேலதிக இணைப்பாளர் றுஷாங்கன், அங்கு முகாமையாளர், ஊழியர்களுடன் அவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் நடாத்தினார்.

இதன்போது, கிளிநொச்சி மாவட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்கு நிரந்தர சாலை ஒன்றை அமைக்கவேண்டியதன் அவசியத்தை முகாமையாளர் தலைமையிலான குழுவினர் வலியுறுத்தியபோது, அதனை உடனடியாக கட்டித்தருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உறுதிளித்தார்.

போக்குவரத்துச்சாலைக்கென ஒதுக்கப்பட்ட காணிக்கான உரிமம் இன்னமும் போக்குவரத்துச் சபைக்குக் கிடைக்கப்பெறவில்லை என்பதை இதன்போது ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்பாளர் றுஷாங்கனிடம் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அமுனுகம, இது விடயம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநருடன் பேசி காணி உரிமத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துதருமாறு கேட்டுக்கொண்டார்.

காணி உரிமம் கிடைக்கப்பெற்றதும், போக்குவரத்துச்சாலையைக் கட்டுவதற்கான பணிகளை உடனடியாக ஆரம்பிப்பதாகவும், இதன்போது, சாலை வாளகத்திலேயே எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் பேரூந்து திருத்தப் பணிகளுக்கான தொழில்நுட்ப பிரிவு ஆகியவற்றையும் அமைக்க ஏற்பாடு செய்வதாகவும் இதன்போது அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குமான சேவைகளை நடாத்துவதற்கு மேலதிகமாகத் தேவைப்படும் சிறிய மற்றும் பெரிய பேரூந்துகளையும் விரைவில் பெற்றுத்தருவதாகவும் அமைச்சர் அமுனுகம இதன்போது தெரிவித்தார்.

தற்போது கிளிநொச்சி சாலை வசமிருக்கும் 33 பேரூந்துகளில் 27 மட்டுமே செயற்படும் நிலையில் இருப்பதாகவும், தூர இடச் சேவைகளை நடாத்துவதற்கும், குறுந்தூர சேவைகளை நடாத்துவதற்கும் மேலதிகமாக பேரூந்துகள் தேவை எனவும் சாலை முகாமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்தே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, சில தூர இடங்களுக்கான வழித்தட அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் பிரச்சினையை வடக்கு மாகாணசபையுடன் கலந்துரையாடித் தீர்த்துவைக்குமாறு அமைச்சர் அமுனுக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்பாளர் றுஷாங்கனிடம் கேட்டுக்கொண்டார்.

இதேபோல், கடந்த ஆட்சிக் காலத்தில் மாகாணசபையினால் ஆரம்பிகப்பட்டு இடையில் கைவிடப்பட்டுவிட்ட கிளிநொச்சி பேரூந்து தரிப்பிடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை தற்போது பொறுப்பெடுத்து மேற்கொண்டுவரும் கட்டுமானப் பணிகளையும் அமைச்சர் அமுனுகமவை அழைத்துச்சென்று காண்பித்தார் ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்பாளர் றுஷாங்கன். இதன்போது இந்தப் பணிகளை துரிதமாக நிறைவு செய்து விரைவில் பேரூந்து தரிப்பிடத்தை இயங்கச்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்தப் பயணத்தின்போது கிளிநொச்சி மாவட்ட போக்குவரத்துத் திணைக்கள அலுவலகத்தையும் நேரில் சென்று பார்வையிட்டு அங்கு காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்வது குறித்தும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கனுடன் போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் திலும் அமுனுகம கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE