Wednesday 21st of April 2021 06:08:47 AM GMT

LANGUAGE - TAMIL
.
மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் போர்க் குற்றங்கள்! - நா.யோகேந்திரநாதன்!

மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் போர்க் குற்றங்கள்! - நா.யோகேந்திரநாதன்!


இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான வாக்கெடுப்பு இம்மாதம் 22ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடரில் இடம்பெறவுள்ளது. பிரிட்டன் தலை மையிலான 5 நாடுகளால் இவ்விவகாரம் தொடர்பாக திருத்தப்பட்ட பிரேரணை வாக்கெ டுப்புக்கு வந்துள்ளது.

மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மனித உரிமைகளை நிலைநாட்டும் வகையிலேயே அணுகும். அதேவேளையில் சர்வதேச நாடுகள் தமது தேசிய, பிராந்திய, பூகோள நலன்களின் அடிப்படையிலேயே எந்த ஒரு பிரச்சினையையும் அணுகும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இலங்கை சீனாவின் பக்கம் மிக வேகமாகச் சாய்ந்து கொண்டிருக்கிறது. அதன் அண்மைக்கால நடவடிக்கைகள் இந்தியா, மேற்குலக நாடுகள் என்பனவற்றுக்குச் சவால் விடும் வகையில் அமைந்துள்ளன. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க மறுத்தமை, இந்தியாவுக்கு வழங்கப்பட்ட திருமலை எண்ணெய் குதங்களைத் திருப்பப் பெறுவது, வடக்கில் சீனாவால் 3 மின்சார நிலையங்கள் அமைக்கப்படுவது, பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம், கொழும்பு 'பிம்ஸ்டெக்' மாநாட்டுக்கு மியன்மார் இராணுவ ஆட்சியின் வெளிவிவகார அமைச்சரை அழைத்தமை போன்ற விடயங்கள் என யாவையும் இந்தியாவையும் மேற்குலக நாடுகளையும் உதாசீனம் செய்யும் வகையில் அமைந்துள்ளதுடன் தனது சீன சார்புத் தன்மையை உறுதியாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

இப்படியான நிலையில் மேற்குலகுக்கு இலங்கையைக் கையாள்வதில் இருமார்க்கங்கள் உண்டு. ஒன்று இலங்கையின் மீது கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தி அது சீனா பக்கம் சாய்வதைத் தடுக்க முடியாவிட்டாலும் கட்டுக்குள் வைத்திருப்பது, அடுத்தது கடும் அழுத்தங்களைப் பிரயோகிப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு இலங்கையின் நகர்வுகளை ஒரு மென்போக்குடன் கையாள்வது.

தற்போது வெளிப்படுத்தப்படும் நிலைமைகள் இரண்டாவது வழி முறைக்கான சாத்தியப்பாடுகளையே தோற்றுவிக்கின்றன. அது நிச்சயமாகத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறான விளைவுகளையே ஏற்படுத்தும்.

எனவே சர்வதேச நாடுகள் முதலாவது வழிமுறையை மேற்கொள்ளும் வகையில் தமிழ் மக்களும் தமிழ்த் தலைமைகளும் தங்கள் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை பொத்துவில் முதல் பொலிகண்டி வரைப் பேரணி, நல்லூர், மட்டக்களப்பு, அம்பாறை உண்ணாவிரதப் போராட்டங்கள், காணாமற்போனோர் உறவுகளின் போராட்டம் என உள்நாட்டிலும் அம்பிகை அம்மாவின் உண்ணாவிரதம், ஜெனிவா புலம்பெயர் மக்களின் பேரணி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முயற்சிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் புலம்பெயர் நாடுகளிலும் நேர்மையாகவும், தீவிரமாகவும் மேற்கொள்ளப்படுகின்றன.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளுக்கு சர்வதேச அரங்கில் ஒரு பெறுமதி உண்டு. அவ்வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

ஆனால் இந்தத் தமிழ்த் தேசியக் கட்சிகளோ ஒரு அணியாக தங்களுக்குள் ஐக்கியத்தைக் கட்டியமைக்கப் பிடிவாதமாக மறுப்பதுடன் சிவில் அமைப்புகள், மதகுருமார் நடத்தும் போராட்டங்களுக்குள்ளும் தலையை நுழைத்து தம்மை நாயகர்களாகக் காட்டமுயற்சித்துக் குழப்பங்களை விளைவிக்கின்றனர்.

மேற்குலகை இரண்டாவது வழிமுறையிலிருந்து முதலாவது வழிமுறையை நோக்கி நகர்த்தும் பணியை தமிழ் மக்களின் ஒன்றுபட்ட உறுதியான சக்தி மிக்க நடவடிக்கைகள் மூலமே சாத்தியமாக்கமுடியும். ஆனால் எமது அரசியல் கட்சிகளோ தனித்தனி ஓட்டங்கள் ஓடி எல்லாவற்றையும் சிதைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றன.

இவ்வாறு தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைகள் ஒவ்வொன்றும் தாங்கள் மட்டுமே தமிழ் மக்களின் தலைமை என்ற வகையிலான ஒரு தோற்றப்பட்டை ஏற்படுத்தும் வகையிலேயே ஜெனீவா விவகாரம் தொடர்பாக தங்கள் நிலைமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜெனிவாவில் எமக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்துவதைவிட அவர்கள் ஜெனிவா விவகாரத்தை தங்கள் எதிர்காலத் தேர்தல் தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். சகல தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் ஒன்றிணைந்து வலிமையான ஒரு சக்தியாக எமது கோரிக்கைகளை முன் வைப்பதைவிட ஒருவரையோருவர் குற்றம் சாட்டித் திட்டித் தீர்ப்பதிலேயே கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஆனால் அண்மையில் பிரிட்டனின் உள்ள தமிழ் மக்களுக்கான அனைத்துக் கட்சிகளின் சம்மேளனத்தின் உபதலைவர் சிவோன் மக்டோவா, தலைவர் சேர்.எட்டேவி ஆகியோர் முன்வைத்த பிரேரணைக்கமைய பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்பான விவாதம் இடம்பெற்றது. தொழிற் கட்சியினரால் முன்வைக்கப்பட்ட இப்பிரேரணை விவாதத்தில் கொன்சர்வேற்றிவ் கட்சியைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கான அனைத்துக் கட்சிகளின் சம்மேளன உறுப்பினரான எலியட் கோல்போணும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துக் காரசாரமாக உரையாற்றியிருந்தார்.

இலங்கையில் தமிழ் மக்கள் மீது இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டது என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டு கண்டித்து உரையாற்றினர். அத்துடன் பிரிட்டன் தன் நட்பு நாடுகளுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான ஒரு வலிமையான அரசியல் தீர்வை இலங்கை அரசு வழங்கும் வகையில் அழுத்தம் கொடுக்கப்படவேண்டுமெனவும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பனவற்றில் ஈடுபட்டவர்களின் சொத்துகள் முடக்கப்படவேண்டுமெனவும் அவர்களுக்குப் பயணத்தடைகள் விதிக்கப்பட வேண்டுமெனவும் அங்கு வலியுறுத்தப்பட்டது. மேலும் ஜெனீவாவில் 46வது கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் இலங்கை தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதெனவும் கண்டிக்கப்பட்டது.

இவ்விவாதத்தில் பங்குகொண்டு பதிலளித்த பிரிட்டிஷ் அமைச்சர் நைஜல் அடம் அவர்கள் இலங்கையில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை முடக்குவது, பயணத்தடை விதிப்பது என்பன தொடர்பாக உறுப்பு நாடுகள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் தமிழர் பேரவையின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்ட இவ்விவாதம் உடனடி யாகப் பெரும் பலன்களை ஏற்படுத்தி விடமுடியாது என்ற போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயபூர்வமான தீர்வு காணப்படவேண்டும் என்பதற்கான ஆதரவின் வலிமையான குரலாக இது விளங்குகிறது. எமது விவகாரங்கள் தொடர்பான எதிர்காலத் தொடர் நடவடிக்கைகளுக்கு சர்வதேச மட்டத்தில் இது ஒரு உந்து சக்தியாக அமையும் என்பது ஒரு முக்கிய விடயமாகும்.

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒரே சக்தியாகக் குறைந்த பட்சம் ஒரு கூட்டணியாக ஒன்றிணைந்து குரல் கொடுக்கவோ நடவடிக்கைகளில் இறங்கவோ பிடிவாதமாக மறுத்துவரும் நிலையில் பிரிட்டனின் ஆளும் கட்சியான கொன்சவேற்றிவ் கட்சியும் எதிர்க்கட்சியாக தொழிற் கட்சியும் ஒன்றிணைந்து எமக்காக உரத்துக் குரலெழுப்பியுள்ளன.

அது மட்டுமன்றி தமது அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தையே குறை கூறியுள்ளதுடன் திருத்தங்களையும் கோரியுள்ளன, ஏற்கனவே பிரித்தானியாவால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் தற்சமயம் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு முன் வைக்கப்பட்டுள்ளன. அதாவது மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் தொடர்பான சாட்சியங்கள், ஆவணங்கள் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஐ.நா.வால் சேகரிக்கப்படவேண்டும் என்ற விடயம் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இது எதிர்காலத்தில் போர்க் குற்றவாளிகளை சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கு உட்படுத்தப்படும் மூலோபாயத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும் கருதப்படுகிறது.

இது தொடர்பான நிதித்தேவை தொடர்பாக பிரிட்டன் தயக்கம் காட்டியபோது அவுஸ்திரேலியா நிதிப் பங்களிப்புச் செய்ய ஒப்புக்கொண்டதன் மூலம் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பிரிட்டன் முதல் வரைவு முன்வைக்கப்பட்ட பின்பு இடம்பெற்ற உபகுழுக்களின் கூட்டங்களில் மனித உரிமை அமைப்புகள், புலம் பெயர் நாடுகளின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆகிய தரப்புகள் எடுத்த கடும் முயற்சிகள் ஊடாகவே இம்மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் பல நாட்டுப் பிரதிநிதிகளையும் மீண்டும் மீண்டும் சந்தித்துப் பல சுற்றப் பேச்சுகளை நடத்தியிருந்தார்.

ஏற்கனவே இங்கு குறிப்பிடப்பட்டதைப் போன்று சர்வதேசம் இலங்கையைக் கையாளக்கூடிய இரு வழிமுறைகளில் இரண்டாவதுக்கான சாத்தியக் கூறுகளே அதிகம் காணப்பட்டன. ஆனால் தற்சமயம் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் முதல் வழிமுறையை எட்டித் தொடாவிட்டாலும் இரண்டாவதிலிருந்து முதலாவதை நோக்கி ஒருபடி முன்சென்றுள்ளது.

எனவே ஜெனீவாத் தீர்மானத்தின் மூலம் சர்வதேசம் இலங்கையைக் கையாளும் விடயத்திலான சாதகத் தன்மை சற்று வலிமை பெற்றுள்ளது.

ஏற்கனவே பிரிட்டன் தலைமையில் 5 நாடுகள் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் முன்வரைவு முன் வைக்கப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அது மிகவும் திருப்திகரமானதெனக் கூறி வரவேற்றதுடன் அதை ஆதரிக்கும்படி சர்வதேச நாடுகளையும் கேட்டுக்கொண்டனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரோ த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாகவும், இனித் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படப்போவதில்லையெனவும் தெரிவித்துவிட்டது. ஆனால் இந்த இரு தரப்பினரும் மேற்படி முன்வரைவில் மாற்றங்களைக் கொண்டுவர எந்த முயற்சியையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி நல்லூர், மட்டக்களப்பு மாமாங்கம், அம்பாறை ஆகிய இடங்களில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச விசாரணை கோரி நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டங்கள் என்பனவற்றில் முஸ்லிம்களும் கலந்து கொண்டு தங்கள் பேராதரவை வழங்கினர். முஸ்லிம் தலைவர்களும் தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கினர்.

எனவே எமது தமிழ்க் கட்சித் தலைமைகள் முஸ்லிம் தலைமைகளுடன் கலந்துரையாடி முஸ்லிம் நாடுகள் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் அவர்களைத் தூண்டியிருக்கலாம். கொரோனாவில் இறந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்காமை, முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தொடர் கைதுகள், ஒடுக்குமுறைகள் என்பன காரணமாக பல முஸ்லிம் நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளன. முஸ்லிம் தலைவர்கள் மூலம் அந்நாடுகளை எமது தமிழ் அரசியல் தலைமைகள் அணுகியிருக்க முடியும். ஆனல் எமது தலைவர்கள் அது பற்றி அக்கறை காட்டவில்லை.

2015க்கு முற்பட்ட காலங்களில் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மஹிந்த அரசுக்கு ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைத் திரட்டிக் கொடுத்தார் என்பதை மறந்துவிட முடியாது.

தீர்மானத்தின் இறுதி வடிவில் ஏற்பட்ட தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானிய தமிழர் பேரவை, சர்வதேச மனித உரிமை அமைப்புகள், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் அமைப்புகள் ஆகியன மேற்கொண்ட கடும் முயற்சிகள் காரணமாகவே என்பது முக்கியமான விடயமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் போன்று போதுமென்ற மனதுடன் அவர்கள் வாழ்த்துப் பாடவுமில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் போல் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்களென வசைபாடிக் கொண்டிருக்கவுமில்லை.

தமிழர் தாயகத்தில் சிவில் அமைப்புகள், மதகுருமார், மாணவர்கள், காணாமற் போனோரின் உறவுகளின் அமைப்புகள் முன்னெடுக்கும் போராட்டங்களின் கூர்முனையாகவும் முஸ்லிம் மக்களை நேச சக்திகளாகவும் அரவணைத்தும் எமது பிரச்சினைகளைச் சர்வதேச மட்டத்துக்கு எடுத்துச் செல்லக் கூடிய நேர்மையும் அர்ப்பணிப்பும் உறுதியான கொள்கைப் பிடிப்பும் தந்திரோபாயமும் கொண்ட அரசியல் தலைமையோ, தலைமைகளோ இல்லையென்பது தெளிவாகவே வெளிப்படுத்தப்பட்டு விட்டது.

தமிழ் மக்களின் விமோசனத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய தமிழ் அரசியல் கட்சித் தலைமைகள் அதை இரண்டாந்தர விடயமாக பின்தள்ளிவிட்டு யார் தமிழ் மக்களிடம் தலைமைச் சக்தியாக காண்பிப்பது என்பதிலேயே அக்கறையாகவுள்ளனர்.

இதுவே தமிழ் மக்கள் கடந்த பதினொரு வருடங்களாகச் சந்தித்துவரும் பின்னடைவுகளுக்கான அடிப்படையான காரணம் என்பதை மறுத்துவிடமுடியாது.

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.

23.03.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, உலகம், கிழக்கு மாகாணம், வட மாகாணம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE