Friday 19th of April 2024 10:04:32 AM GMT

LANGUAGE - TAMIL
-
“இந்தியத் தூதுவரின் வடபகுதிக்கான அரசியல் விஜயம் ” - பேராசிரியர்  கே.ரீ.கணேசலிங்கம்

“இந்தியத் தூதுவரின் வடபகுதிக்கான அரசியல் விஜயம் ” - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


இலங்கையின் அரசியலில் பிராந்திய சர்வதேச சக்திகளின் தலையீடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.ஒரு நாட்டின் தலையீட்டை தவிர்க்க இன்னோர் நாட்டின் செல்வாக்கினை அதிகரிக்கும் போக்கினை அரசாங்கமும் அதற்கு எதிரான சக்திகளும் மேற்கொண்டுவரும் நெருக்கடியென்றினை அவதானிக்க முடிகிறது. அதாவது இந்தியாவை தவிர்க்க சீனாவையும் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவையும் இந்தியாவை எதிர் கொள்ள பாகிஸ்தானையும் உள்நுழைய அனுமதிக்கும் அணுகுமுறையை இலங்கை அரசாங்கமும் பிராந்திய நாடுகளும் மாறி மாறி ஏற்படுத்திவருகின்றன. ஏறக்குறைய இலங்கையின் இறைமையை பிராந்திய சர்வதேச சக்திகள் பங்குபோடும் நிலை பெரு வளர்ச்சி கண்டுள்ளது. இக்கட்டுரையும் இந்தியத் தூதுவரது வடபகுதிக்கான விஜயத்தின் அரசியலை உரையாடுவதாக அமையவுள்ளது.

முடிந்த வாரத்தில் 11 மற்றும் 12 திகதிகளில்(மார்ச்) வடக்குக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியத் தூதுவர் கோபால் பால்கே மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் அதி முக்கியத்துவம் மிக்க நகர்வுகளை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக மன்னாருக்கு விஜயம் செய்த இந்தியத் தூதுவர் இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நட்பில் அபிவிருத்தி முக்கியமான இடத்தில் உள்ளது. இந்தியாவின் திட்டங்கள் நேரடியாக மக்களைச் சென்றடைந்துள்ளது.மடு தேவாலய பகுதியில் யாத்திரைக்காக வருகை தரும் பக்தர்களுக்கான தங்குமிட விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிய போதே இவ்வாறு தெரிவித்தார்.அவ்வாறே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் அமைத்து வழங்கப்பட்டுள்ள கலாசார மத்திய நிலையத்தினை சில காலங்களுக்கு பாரமரிக்பதற்காக உதவ இந்தியா இணக்கம் தெரிவித்ததாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளார்.எனவே இத்தகைய இந்திய தூதுவரது நகர்வுகள் நோக்கங்களை விளங்கிக் கொள்வது அவசியமானதாகும்.

முதலாவது வடபகுதியில் அமைந்துள்ள தீவகள் மீதான சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்ட இந்தியா அதற்கான பதில் நகர்வை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தீவுகள் என்பது இந்தியாவின் கரையோரத்திலிருந்து 45 கடல் மைல் இடைவெளியென்பது இந்திய பாதுகாப்பு வலையத்திற்குள் சீனாவின் இருப்பு என்பதாகும். சீனா தனித்து பொருளாதார நகர்வுடன் அத்தீவுகள் மீது செல்வாக்கு செலுத்'தியிருக்குமாயின் அதனால்' இலங்கைக்கோ இந்தியாவுக்கோ எந்த ஆபத்தும் ஏற்படாது. ஆனால் சீனாவைப் பொறுத்தவரை தனது பொருளாதார நலன்களுக்கூடாக எதிர்கால இராணுவ வலுவை தீர்மானிதட்துவிடும் என்ற வாதம் இந்தியாவை சூழவுள்ள நாடுகளில் சீனா ஏற்படுத்திவருகிறது. அதனால் இந்தியா சீனாவின் யாழ்ப்பாண நகர்வுக்கு பதில் நகர்வை (ஊழரவெநச Pழடவைiஉள) மேற்கொள்ள வேண்டிய நிலைக்குள் உள்ளது. அதனாலேயே மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பிரதான தெரிவாக அமைந்திருந்தது. ஏற்கனவே முன்னாள் இந்தியத் தூதுவராக நிருபமா ராவ் பணிபுரியும் போது சேதுக்கால்வாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரித்த மன்னார் மக்களை சந்திப்பதற்காக மன்னார் விஜயம் மேற்கொண்டிருந்தார். அதன் பின்பு வடபகுதிக்கு வருகை தந்த துர்துவராக கோபால் பால்கே என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இரண்டாவது ஜெனீவா நடவடிக்கைகளில் இந்தியாவின் முடிபை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள இலங்கை அதிக முயற்சி எடுத்திருந்தது. அதில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கையில் இலங்கை ஆட்சியாளர்கள் காணப்பட்டனர். ஆனால் இந்தியாவின் நகர்வு இத்தகைய சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொண்டு தனது நலன்களை பாதுகாக்க முயன்றது. ஆனால் இலங்கை அரசாங்கம் சீனாவுடன் இணைந்து பயணித்துக் கொண்டு இந்தியாவை இராஜதந்திர ரீதியில் பயன்படுத்த திட்டமிட்டிருந்தது. அதனால் வடபகுதிக்கான தூதுவரது விஜயத்தின் ஊடாக இலங்கை ஆட்சியாளருக்கு தெளிவான ஒரு செய்தியை இந்தியா வழங்க முன்வந்திருந்தது.அதாவது பிரித்தானியா ஜெனீவாவில் முன்வைத்த தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் அனேகமானவை இந்தியாவினதாகும். இதற்கான ஆதரம் அத் தீர்மான வரைபில் 13 வது அரசியலமைப்பு திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தல் என்பது காணப்படுகின்றது. (இது பின்னர் மாற்றப்படுகிறதோ தெரியவில்லை. ஆனால் இப்பகுதி எழுதப்படும் வரை வரைபில் உண்டு) அதனையே இந்தியாவின் நிரந்தர ஐ.நா பிரதிநிதி பலதடவை வலியுறுத்தியிருந்தார். அதனையே கோபால் பால்கேயும் தெரிவித்துவருகிறார். எனவே தூதுவரது விஜயம் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தரப்புக்கும் வலுவான செய்தியை தெரியப்படுத்தியுள்ளது.

மூன்றாவது யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட கலாசார மத்திய நிலையத்தினை இலங்கையின் மத்திய அரசாங்கம் பாரமரிப்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்தது. அதற்கான முயற்சிகள் பலவற்றை மேற்கொள்ள முனைந்தது. யாழ்பபாண மாநகர சபையின் ஆட்சி மாற்றத்திற்கு ஒரு காரணமாக கலாசார நிலையம் என்ற தகவலும் உண்டு.எனவே இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு இந்தியத் தூதரகத்திற்கு உண்டு. அதனை மேற்கொள்ள வேண்டிய நகர்வை துர்துவரது வடக்கு விஜயம் செயல்படுத்தியுள்ளது. தற்போது மத்திய அரசாங்கத்திற்கு ஒரு தடை போடப்பட்டுள்ளது. காரணம் கலாசார மத்திய நிலையம் உருவாக்குவதற்கு இந்தியாவே மூலகாரணமாக அமைந்திருந்தது. அதனால் அதனை பராமரிக்கும் பொறுப்பில் இந்தியாவின் உரிமையை இலங்கை அரசாங்கம் நிராகரிக்க முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. ஆனால் சீனா 1935 ஆம் ஆண்டே பண்டாரநாயக்காவின் நினைவாக ஒரு கலாசார நிலையத்தை ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறது. இந்தியா அயல் நாடாக இருந்து கொண்டு 2021 இலேயே அத்தகைய முயற்சியொன்றை ஆரம்பித்துள்ளது.

நான்காவது கொழும்பு கிழக்கு முனையத்தில் இலங்கை நடந்து கொண்ட விதத்தை இந்தியாவால் எதிர்கொள்ள முடியாதுள்ளது. கிழக்கு முனையம் தொடர்பில் இலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்தியாவின் நெருக்கடி அம்பலமானதைக் காணமுடிந்தது. அதனை பொறுத்துக் கொள்ள முடியாத இந்தியா அதற்கான மாற்றீட்டை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் செயல்பட ஆரம்பித்துள்ளது. தென் இலங்கையை சீனாவிடம் ஒப்படைத்தது போல் வடக்குப் பிரதேசமும் சீனாவிடம் ஒப்படைக்காது தடுக்க வேண்டிய பொறுப்பு பற்றிய திட்டமிடலுடனேயே தூதுவரது வடக்கு விஜயம் அமைந்திருந்தது.

ஐந்தாவது .வடக்கு மீனவர்களுக்கும் தமிழக முpனவர்களுக்கும் இடையிலான முரண்பாடு அதிகரித்துக் கொள்ளும் சூழல் ஒன்றை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பாண்மையும் தூதுவரது விஜயத்தில் அடங்கியிருந்தது. குறிப்பாக இந்து மதவாதத்தை முன்னிறுத்தி ஆட்சியை நிலைப்படுத்திவரும் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியில் நியமனமான தூதுவர் மன்னார் தேவாலயத்திற்கு சென்றதும் யாத்திரிகர்களுக்காக மண்டபம் அமைக்கும் முயற்சிக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களில் ஒன்றாகும். அவர் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் என்ற வகையில் இத்தகைய விடயங்கள் சாதரணமானவையாக கொள்ளப்பட்டாலும் தற்போதைய நகர்வுக்கு ஒரு தனித்துவ அரசியல் பரிமாணம் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆறாவது இந்தியத் தூதுவரது விஜயத்தின் மிகப்பிரதானமாக தமிழ் அரசியல் கட்சிகளை சந்தித்தமை அமைந்ததுடன் அவர்களுடனான உரையாடலில் ஜெனீவாவையும் 13 வது திருத்தத்தையும் அதிகம் வலியுறுத்தி உரையாடியதைக் காணமுடிகின்றது. அத்துடன் இளம் தலைமுறையை சந்தித்ததுடன் அவர்களுடனான கலந்துரையாடலில் இளம்தலைமுறை எத்தகைய விடயத்தினை கவனத்தில் கொள்ள முனைகிறது என்பதை அடையாளம் காணவிரும்பியதையும் அவதானிக்க முடிகிறது. இதனூடாக தென் இலங்கைக்கு ஒரு செய்தியை வெளிப்படுத்த முனைந்திருக்கலாம் என்ற ஊகங்கள் அதிகமாகவுள்ளது.

ஏழாவது இந்தியத் தூதுவரது விஜயத்தின் பிரதிபலிப்புக்கள் விமர்சனத்திற்குள்ளும் அகப்பட்டுள்ளது. குறிப்பாக வீதியல் நீண்ட காலமாக போராடிவரும் தரப்புக்கள் தூதுவர் தம்மை சந்திக்க முயலவில்லை எனவும் இந்தியாவுக்கு அதற்கான தார்மீகப் பொறுப்பு உண்டு என்றும் வாதிக்கின்றார்கள். இன்றய தமிழர்களது நிலைக்கு இந்தியாவும் ஒரு காரணம் என்ற வாதத்தை நிராகரித்து விட முடியாது. ஆயுதப்போராட்டத்தை தொடக்கியதும் முடித்துவைத்ததிலும் இந்தியாவுக்கு பங்கு உண்டு என்பதை நிராகரித்துவிட முடியாது. ஆனால் இலங்கைத் தமிழரது நலன்களை இந்தியா பாதுகாக்காது விட்டாலும் இந்தியாவினது நலன்களையாவது பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. எதுவாயினும் இலங்கைத் தமிழரது நலன்களை பாதுகாப்பதன் மூலமே இந்தியாவின் நலன்களை பாதுகாக்க முடியும் என்ற புவிசார் அரசியல் புரிதல் எப்போது ஏற்படுகிறதோ அப்போதே இரு தரப்பின் பாதுகாப்பும் உத்தரவாதப்படுத்தப்படும் நிலை ஏற்படும்.

எனவே இந்தியத் தூதுவரது வடக்கு நோக்கிய விஜயத்தின் முக்கியத்துவம் பல கோணத்தில் அவதானிக்கப்பட வேண்டியதாகும். ஜெனீவா முதல் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள தீவகள் வரை இந்தியாவின் புதிய உத்திகளை வெளிப்படுத்துவதாக உள்ளது. இத்தகைய இந்தியத் தூதுவரது நகர்வு தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்தியா பொறுத்து கொண்டுள்ள எண்ணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இந்தியா சார்ந்து நம்பிக்கை ஏற்படுத்தும் அணுகுமுறைகள் அதிகரிப்பதற்கான பொறிமுறையாக தூதுவரது விஜயம் பார்க்கப்படுகிறது. எதிர்காலத்திலும் இத்தகைய நகர்வுகளை இந்தியத் தூதரகமும் துணைத்தூதரகமும் இணைந்து வடக்கு கிழக்கு மக்களது நெருக்கடிக்கான நகர்வுகளையும் அரசியல் ரீதியான இராஜீக முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்க்கை தமிழ் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE