Thursday 28th of March 2024 08:35:45 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ் இனத்தின் விடுதலைக்காக தமது பங்களிப்பினை சர்வதேசத்தில் இந்தியா வழங்குமென்று எதிர்பார்க்கின்றோம்! - மாவை சேனாதிராஜா!

தமிழ் இனத்தின் விடுதலைக்காக தமது பங்களிப்பினை சர்வதேசத்தில் இந்தியா வழங்குமென்று எதிர்பார்க்கின்றோம்! - மாவை சேனாதிராஜா!


தமிழ் இனத்தின் விடுதலைக்காக சிறந்த முறையில் தமது பங்களிப்பினை சர்வதேசத்தில் இந்தியா வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இந்த நாட்டில் தமிழ் தேசியத்தின் விடுதலை, தமிழினத்தின் விடுதலைக்கான அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு கட்டமைப்பாகவும் புலம்பெயர்ந்துள்ள தேசிய சக்திகள் இணைந்து கட்டமைப்புகளாக செயற்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்று நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் முன்னாள் வடமாகாணசபை அமைச்சர் பா.சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், கனகசபை, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், உறுப்பினர்கள், வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன், வாலிபர் முன்னணியினர், மற்றும் மகளிர் அணியினர், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான முன்நகர்வுகள், மாவட்ட ரீதியில் கட்சி எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சமகால அரசியல் நிலைமைகள் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் கட்சி ரீதியான செயற்பாடுகள் குறித்து தலைவர், பதில் பொதுச் செயலாளரினால் கருத்துக்கள் முன்வைக்ககப்பட்டதுடன் அங்கத்தவர்களின் கேள்விகளுக்கான விளக்கங்கள் கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இங்கு கருத்து தெரிவித்த தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,

எதிர்காலத்தைப் பற்றியும் ஜெனிவா மனிதவுரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பற்றியும் மக்கள் எங்களிடம் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்கள்.

பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளில் இலங்கை அரசாங்கத்துடன் நாங்கள் பேசுவதற்குத் தயார் என்ற செய்தியின் அடிப்படையில் நீங்கள் அரசாங்கத்துடன் பேசுவீர்களா என்ற கேள்வியையும் மக்கள் எழுப்பியிருந்தார்கள்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடங்கிய ஒரு அரசியலமைப்பு ஏற்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் வரவிருக்கின்ற பிரேரணைகளில் அப்படியொரு தீர்வை அவர்கள் முன்வைப்பார்களா, அரசியலமைப்பு இனப்பிரச்சினைக்கான தீர்வை மையமாகக் கொண்டு அமைக்கப்படுமா, அல்லது இந்த அரசாங்கத்திற்கு அப்படியொரு எண்ணம் இருந்தால் மக்களுடைய பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்படியொரு பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும், அதற்கு நாங்கள் ஆயத்தம் என்ற கருத்து தான் அங்கு பிரதிபலிக்கப்பட்டிருக்கின்றது. அதற்கான ஒரு சூழல் எழவேண்டும், அரசாங்கம் அதற்கான அழைப்பை விடுக்க வேண்டும். அரசாங்கம் அதற்குத் தகுந்ததாக இருந்து அந்த அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஆயத்தமாக இருந்தால் ஏற்கனவே நாங்கள் அதற்கான பிரேரணையை கொடுத்திருக்கின்றோம். அந்த அடிப்படைகளை மையமாகக்கொண்டு நாங்களும் பேச்சுவார்த்தை நடத்த முடியும். இலங்கை நாட்டின் அதிமுக்கிய பிரச்சினையாகும்.

தற்பொழுது மனிதவுரிமைப் பேரவையிலும் இனப்பிரச்சினை சம்பந்தமான தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அடிப்படையிலும் எங்களுக்கு புதிய உத்வேகம் இருக்கின்றது. இன்று சர்வதேச ரீதியாக இந்த நாட்டினுடைய இனப்பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்ற அடித்தளங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்த அடிப்படையில் இந்த அரசாங்கம் தயார் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்குத் தயார் என்ற செய்திதான் அன்று செய்தித் தாள்களில் வெளிவந்திருந்தது என நான் நினைக்கின்றேன்.

நாங்கள் அந்தத் தீர்மானம் தொடர்பாக அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு முன்னர் மனிதவுரிமைப் பேரவையிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முன்னரைவிட பலவழிகளில் முன்னேற்றமுடையதாக இருக்கின்றது. எத்தனையோ அமைப்புகள் பொதுமக்கள் மத்தியில் இத்தனை காலமும் இந்த இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை, போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லையென்று இந்த மனிதவுரிமைப் பேரவையில் ஒரு தீர்வு வரப்போகின்றது என்ற எதிர்பார்ப்போடு பிரேரணைகளை முன்வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் அவற்றுள் எல்லா விடயங்களும் மனிதவுரிமைப் பேரவையில் நிறைவேற்றப்படக்கூடிய விதிமுறைகள் இல்லாமல் இருக்கலாம். அதுவொரு பிரச்சனையாகும். அப்படியொரு தீர்மானம் மிகப் பெரியளவில் சர்வதேச குற்றவியல் விசாரணைகளில் எடுக்கப்போனால் அந்தப் பிரேரணையை அங்கு கொண்டுவர முடியுமா. அதற்கு அங்கு பல தடைகள் இருக்கின்றன. அதை நிறைவேற்றுவதற்கு அந்த நாடு இணக்கம் கொண்டிருக்கின்றதா, 47 நாடுகளில் எத்தனை நாடுகள் அவ்வாறான ஒரு பிரேரணையை எடுக்க முடிந்தால் அதுவொரு இலகுவான விடயமல்ல. அது பாதுகாப்புச் சபைக்கு போகவேண்டியிருக்கலாம். அந்த விடயங்களையெல்லாம் மனிதவுரிமைப் பேரவையினுடைய ஆணையாளர் மிகத்தெளிவாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற கருத்தையும் அதனை பிரதிபலிக்ககூடிய பல விதிமுறைகள் மனித உரிமை பேரவையின் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ன.

பொறுப்புக்கூறல்கள் எவ்வாறு நிலைநாட்டப்பட வேண்டும் என்பது தெளிவாக பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தில் போர்க்குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக மேலும் பல பிரேரணைகளை நிறைவேற்றுவதற்காக மனித உரிமை பேரவையின் ஆணையாளர் சாட்சியங்களையும் ஆதரங்களையும் திரட்டுவதற்காக 12 ஆணையாளர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீரியாவில் எவ்வாறு குற்றவியல் விசாரணையினை நடாத்துவதற்கு ஐநா ஊடாக எவ்வாறு நடவடிக்கையெடுக்கப்பட்டது இதேபோன்று மியன்மாரில் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைக்கு ஐநா மனித உரிமை பேரவை மற்றும் பாதுகாப்பு சபைக்கு அப்பால் கொண்டுசெல்ல நடவடிக்கையெடுக்கப்பட்டு அதற்கான ஆதாரங்களை திரட்டும் பணிகள் பல நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குற்றவியல் பிரேரணை இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படாவிட்டாலும் இலங்கையில் அரசும் இராணுவத்தினரும் இழைத்த குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க ஐநா மனித உரிரமை பேரவையில் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு வழிகாட்டல்கள் இருக்கின்றது.

இன்று ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக குற்றமிழைத்த இராணுவத்தினரை பாதுகாப்பதற்கு அரசியல் சட்டத்தினைக் கொண்டுவருவதற்கு தீர்மானித்திருக்கின்றனர். ஐநாவின் மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இலங்கையில் இராணுவத்தினை பாதுகாப்பதற்கான நடவடிக்கையினை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதான செய்திகள் வந்துள்ளது.

குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கவில்லை, பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்படவில்லை, இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படவில்லையென்ற தமிழ் மக்களின் ஆதங்கத்தின் வெளிப்பாடாக ஐநா மனித உரிமை பேரவையில் தங்களுக்கு சாதகமான விடயங்கள் வரவேண்டும் என்பதற்காக பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்திருந்தனர். அது அந்த மனித உரிமை பேரவையில் முழுமையாக அடங்கவில்லையென்ற ஏக்கம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது.

அதனை நாங்கள் பார்க்கும்போது சர்வதேச மன்னிப்புச்சபை, ஜெகான் பேரேரா போன்ற நடுநிலைவாதிகள், சர்வதேசத்தில் உள்ள பல நாடுகள் கூட மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடியது என தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் இந்த பிரேரணை எவ்வாறு நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது, குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவது மட்டுமன்றி இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்ற தீர்மானம் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் தமிழ் தேசியத்தின் விடுதலை தமிழினத்தின் விடுதலைக்கான அரசியல் தீர்வு ஏற்படுவதற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து கட்சிகளும் புலம்பெயர்ந்துள்ள தேசிய சக்திகளும் இணைந்த கட்டமைப்புகளாக செயற்படவேண்டும். இங்குள்ள தமிழ் தேசியத்தினை அடிப்படையாக கொண்ட கட்சிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் தேர்தலைப்பற்றியது அல்லாமல் தமிழ் மக்களின் விடுதலைக்காக கட்டமைப்பு ஒன்றினை உருவாக்க வேண்டும்.

தமிழின விடுதலைக்கான ஒரு கட்டமைப்பினை இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன் சர்வதேசத்தில் உள்ள தமிழ் தேசிய சக்திகளை ஒருங்கிணைத்து ஒரு கட்டமைப்பினை உருவாக்க வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது.

தேர்தலை நோக்காக கொண்ட கட்டமைப்பாக அல்லாமல் இன விடுதலைக்கான சிறந்த பலமான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் தெளிவுபடுத்தி வருகின்றோம்.

ஐநா மனித உரிமை பேரவை பிரேரணையில் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் முற்றுமுழுதாக கிடைக்காவிட்டாலும் அது முன்னெடுத்துள்ள நடைமுறைகளுக்கு எமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி சர்வதேசத்திலும் இந்த நாட்டிலும் செயற்பட வேண்டும்.

மாகாணசபை தேர்தல் தொடர்பில் மனித உரிமை பேரவையின் பிரேரணையிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்தியாபோன்ற நாடுகள் அந்த பிரேரணையில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியா நடுநிலைமை வகித்தாலும் ஆக்கபூர்வமான பணிகளை ஐநா பிரேரணை ஊடாக எடுத்திருக்கின்றது. விவேகமாகவும் தந்திரமாகவும் இந்தியா நடுநிலை வகித்துள்ளது. தமிழ் இனத்தின் விடுதலைக்காக சிறந்த முறையில் தமது பங்களிப்பினை சர்வதேசத்தில் இந்தியா வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என பல நாடுகள் அழுத்தங்களை வழங்கியுள்ளன. அவ்வாறு தேர்தல் நடாத்தாவிட்டால் பல நாடுகள் எதிராக செயற்படும் நிலையேற்படும். மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட்டால் அதனை வெற்றிகொள்வதற்காக புதிய அணுகுமுறைகளை மேற்கொள்ளும்.

இன்று பல குழப்பகரமான நிலையிருக்கின்றது. குறிப்பாக இலங்கை அரசாங்கம் வடகிழக்கு மாகாணத்தின் மாகாணசபைகளை கைப்பற்றுவோம் என்று கூறி வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவரும் நிலையில் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். தமிழ் தேசிய கட்சிகளை இணைத்து எவ்வாறு செயற்பட முடியும் என்பதை ஆராய்ந்து செயற்படுவோம்.


Category: செய்திகள், புதிது
Tags: மாவை சோ.சேனாதிராஜா, இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE