Friday 19th of April 2024 01:06:37 AM GMT

LANGUAGE - TAMIL
.
சர்வதேச விசாரணையை நோக்கிய மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம்! - நா.யோகேந்திரநாதன்!

சர்வதேச விசாரணையை நோக்கிய மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம்! - நா.யோகேந்திரநாதன்!


இலங்கையின் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுல விரோத நடவடிக்கைகள் ஆகியன தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடரில் பிரிட்டனின் தலைமையில் 5 நாடுகளால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் 22 வாக்குகளைப் பெற்று நிறைவேறியுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்பட்டவை போர்க் குற்றங்கள் அல்லவெனவும், மனிதாபிமான நடவடிக்கைகளே எனவும் இலங்கை வாதிட்ட போதும் இப்பிரேரணைக்கு எதிராக 11 வாக்குகளையே பெறமுடிந்தது. அதாவது இப்பிரேரணைக்கு எதிராகக் கிடைத்த வாக்குகளைவிட ஆதரவாக இரண்டு மடங்கு வாக்குகள் கிடைத்துள்ளன.

அதேவேளையில் அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளும் அவற்றுக்குச் சார்பான நாடுகளும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன எனவும் மேற்கு நாடுகளுக்கு எதிரான நாடுகள் எதிர்த்து வாக்களித்தன என்றொரு பார்வையும் உண்டு. அதில் ஓரளவுக்கு உண்மை உண்டென்ற போதிலும் 30/1 தீர்மானத்தை இலங்கை ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொண்டிருந்த போதிலும் அதில் ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த மீண்டும் மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும் அவற்றை நிறைவேற்றாததுடன் அண்மையில் இலங்கை அதிலிருந்து விலகியிருந்தது. அந்த நிலையில் இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நகர்வுக்கு ஐ.நா.மனித உரிமைகள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை மறுத்து விடமுடியாது.

அப்படியான ஒரு நிலையில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிக்சேல் பச்லட் அம்மையார் அவர்கள் முன்வைத்த இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் பிரிட்டனால் தீர்மானம் முன் வைக்கப்பட்டு நீண்ட விவாதங்களின் பின் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பு இலங்கையின் அரசாங்க தரப்பினராலும் தமிழ் அரசியல் தரப்புகளாலும் சர்வதேச மட்டத்திலும் ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் முன்னாள் இலங்கையின் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியும், மூத்த ராஜதந்திரியுமான தயான் குணதிலக வெளியிட்ட சில கருத்துக்கள் ஆழமாகக் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவையாக விளங்குகின்றன.

அவர் முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகராக விளங்கியவரும், வரதராஜப் பெருமாள் முதலமைச்சராயிருந்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாண சபையில் ஒரு அமைச்சராகப் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரின் அரசியல் அனுபவத்தை எவரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

அவர் இலங்கை விவகாரம் தொடர்பாக 6 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படுமெனவும் செப்டெம்பர் 2022 வரைக் கால அவகாசம் வழங்கப்படுமெனவும் 2022 செப்டெம்பரின் பின் இலங்கையின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் திரட்டப்பட்ட ஆவணங்கள், சாட்சியங்கள் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார். அதனால் உறுப்பு நாடுகளில் குறைந்தபட்சம் ஆதரவளித்த நாடுகளில் விசாரணைகள் அவற்றின் அடிப்படையில் நடத்தப்படும், இலங்கை சவால் விடும் வகையில் அவற்றை ஏற்க மறுத்தால் அடுத்த கட்டமாக சுற்றுலா, வர்த்தகம் உள்ளிட்ட விடயங்களில் இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

அதாவது அவரின் கூற்றுப்படி 46/1 தீர்மானம் மூலம் சர்வதேச விசாரணைக்கான கதவுகள் திறக்கப்பட்டு விட்டன.

அதேவேளையில் இலங்கை ஏற்கனவே இடம்பெற்ற விசாரணைகள் மூலம் முன்வைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு, காணாமற் போனோர் தொடர்பான பரணகம ஆணைக்குழு என்பவற்றின் அடிப்படையில் சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இலங்கை நீதிபதிகள், சர்வதேச நீதியாளர்கள் கொண்ட குழுவினால் விசாரணைகள் நடத்தப்பட்டுக் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் பட்சத்தில், இலங்கை தப்பித்துக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பது மட்டுமல்ல எதிர்காலத்திலும் அத்தகைய சாத்தியப்பாடுகள் உருவாவதற்கான வழிகள் இல்லை. தற்சமயம் வெகுவேகமாக இராணுவ மயப்படுத்தப்பட்டுவரும் அரசு இயந்திரத்தில் சிவில் நிர்வாகத்தில் கூடப் போர்க் குற்றமிழைத்தவர்கள் எனக் கருதப்படும் இராணுவ அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கெதிராகச் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஒரு நீதி விசாரணையை மேற்கொள்ள இலங்கையின் ஆட்சியாளர்கள் தயாராயில்லை. ஏனெனில் இன்றைய ஆட்சியின் அச்சாணியாக அவர்களே விளங்கி வருகின்றனர்.

எனவே 2022 செப்டெம்பர் மாதத்தின் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கட்டத்திற்கான சாத்தியக் கூறுகளே கூடுதலாகத் தென்படுகின்றன.

அதற்கான வாய்ப்புகள் முகிழ்ந்துள்ள தற்போதைய சூழலில் தமிழ்த் தரப்பு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுகிறது. தமிழ்த் தலைமைகள் இத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டமைக்கான பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவிட்டு அடுத்த கட்ட நகர்வுகளை சர்வதேசம் மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கப் போகிறோமா இன்னொரு புறத்தில் சர்வதேசம் எம்மை ஏமாற்றி விட்டதென வசை பாடிக் கொண்டு இருக்கப் போகிறோமா என்பது முக்கியமானது.

இரண்டுமே சர்வதேசத்தின் எமக்குச் சாதகமான நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி நிற்கும் கையாலாகாத்தனமாகும்.

தற்சமயம் ஆதரித்தோ எதிர்த்தோ விமர்சனங்களை வெளியிடுவதுடன் தாங்கள் கடமைகளை முடித்துக் கொண்டுவிடப் போகிறார்கள் என்பது போன்ற தோற்றப்பாடே தெரிகிறது. ஆனால் இனியும் தமிழ் அரசியல் தலைமைகளுக்குள்ள பாரிய பொறுப்பை உணர்ந்து கொள்ளாமல் வெறும் அறிக்கைகளுடனும் ஊடகச் சந்திப்புகளோடு காலத்தைக் கடத்தி வருவதையும் ஒருவருடன் ஒருவர் முரண்பட்டு மோதிக் கொண்டு, கிடைக்கும் சந்தர்ப்பங்களை கைவிடுவதைத் தமிழ் மக்கள் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை.

அண்மையில் அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளர் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையால் சாட்சியங்களையும் ஆவணங்களையும் சேகரிக்கவென அமைக்கப்படவுள்ள 9 பேர் கொண்ட குழுவை இலங்கை வர அனுமதிப்பதா, இல்லையா என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லையெனத் தெரிவித்துள்ளார். அதேவேளையில் இலங்கைக்கு எதிரான விடயங்களை ஆராய்ந்து சரியானவற்றைச் சமர்ப்பிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே நிபுணர் குழுவை இலங்கை வர அனுமதிப்பார்கள் போலவே தோன்றுகிறது.

அவர்கள் அனுமதித்தாலென்ன அனுமதிக்காவிட்டாலென்ன ஐ.நா.நிபுணர் குழு தனது கடமையை இலங்கைக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் மேற்கொண்டே தீரும்.

எனவே தமிழர் தரப்பில் உரிய சாட்சியங்களையும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய பாரிய பொறுப்பு உண்டு. அப்பொறுப்பை யார், எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற கேள்வி தான் இப்போது தமிழ் மக்கள் முன் எழுந்துள்ளது.

தனி நபர்கள் தனித்தனியாக நிபுணர் குழுவிடம் சாட்சியங்களையும் ஆவணங்களையும் சமர்ப்பிக்கப்படும்போது அவை ஒழுங்கற்றவையாகவும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பவற்றை நிறுவும் வகையில் அமையாமலும் போகலாம்.

எனவே சாட்சியங்கள் வழங்கப்படும்போது துறைசார் நிபுணர்களின் நெறிப்படுத்தல் அவசியம். ஜனாதிபதி சட்டத்தரணிகள் உட்பட திறமைவாய்ந்த வழக்கறிஞர்களைக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இது ஒரு சிரமமான காரியமல்ல.

தமிழ் அரசியல் கட்சிகளால் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற வகையில் இந்நடவடிக்கைக்குத் தலைமையேற்று ஏனைய சிவில், மத, முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றிணைத்து ஒரு ஒழுங்குமுறையாக முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் தமிழ்த் தலைமைகளோ இப்படியான ஆக்கபூர்வமான விடயங்களில் அக்கறை காட்டுவதைவிட ஒருவரை ஒருவர் குறைகூறுவதிலேயே கூடுதல் கவனம் செலுத்துவார்கள். இவர்கள் தனித்தனியே ஓடிக் குழப்பங்களை விளைவிப்பதே அவர்களால் மேற்கொள்ளக்கூடியதாக அமைந்து விடக்கூடாது.

போர் இடம்பெற்ற காலத்தில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகள் மட்டுமின்றிபோர் முடிந்த பின்பு தொல்பொருட் திணைக்களம், வனவளத் திணைக்களம், பௌத்த அமைப்புகள், மகாவலி அபிவிருத்தி சபை ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் நிறுவன மயப்படுத்தப்பட்ட இன அழிப்பு நோக்கம் கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

இப்பாரிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு தங்கள் பிடுங்குப்பாடுகளை ஒதுக்கிவிட்டு ஒன்றிணைந்து ஏனைய அமைப்புகளுக்கும் தலைமை தாங்கி தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படவேண்டும்.

ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே காணப்படுகின்றன. அதே பாதையில் தான் தமிழ்த் தலைமைகள் தொடர்ந்து செல்லுமானால் சிவில் அமைப்புகள், மத நிறுவனங்கள் தமிழ்த் தலைமைகளை ஓரம்கட்டிவிட்டு ஒரு அணியாகத் திரண்டு அப்பணியை முன்னெடுப்பதைவிட வேறு வழியில்லை.

அருவி இணையத்திற்காக : நா.யோகேந்திரநாதன்

30.03.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE