Tuesday 23rd of April 2024 02:00:24 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஜெனீவாத் தீர்மான வாக்கெடுப்பில் விலகியிருந்த இந்தியாவும் இலங்கையின் இராஜதந்திர நெருக்கடியும்! - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

ஜெனீவாத் தீர்மான வாக்கெடுப்பில் விலகியிருந்த இந்தியாவும் இலங்கையின் இராஜதந்திர நெருக்கடியும்! - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவந்த தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டதுடன் 14 நாடுகள் நடுநிலமை வகித்திருந்தமை கவனிக்கக்தக்கதாகும். குறிப்பாக பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக இலங்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என 46/1 தீர்மானம் கூறுகின்றது. மிக முக்கியமாக போர்க்காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் ஐ.நா ஆணையாளர் அலுவலகம் தகவல் மற்றும் சான்றுகளைத் திரட்டவும் ஒருங்கமைக்கவும் பகுத்தாராயவும் பாதுகாக்கவும் வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளது. இத்தீர்மானத்தின்சாதக பாதகத் தன்மையை விட நாடுகளின் நலன்களையும் புவிசார் அரசியலையும் இலங்கைத் தமிழர்கள் விளங்கிக் கொள்ள இன்னோர் வாய்ப்பாக அமைந்துள்ளது. இக் கட்டுரையும் வாக்கெடுப்பில் இந்தியாவின் நடவடிக்கை வெளிப்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக அமையவுள்ளது.

முதலாவது இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது விலகியிருந்தமை தொடர்பில் இந்தியாவுக்கான ஐ.நா.பிரதிநிதி தெரிவித்த விடயத்தினை அவதானிப்போம். இந்த விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறை இரண்டு அடிப்படைக் கருத்தினால் வழிநடத்தப்படுகிறது எனத் தெரிவித்தார். ஒன்று இலங்கைத் தமிழரின் சமத்துவம் நீதி கண்ணியம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் கடப்பாடு இந்தியாவுக்குள்ளது. இரண்டு இலங்கையின் ஒற்றுமை உறுதித்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு உறுதி செய்யவும் தமிழரின் அபிலாரசையை உறுதி செய்யவும் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதும் இந்தியாவின் கடப்பாடு எனத் தெரிவித்தார். இவ்வாறு இலங்கைத் தமிழரையும் இலங்கை அரசாங்கத்தையும் ஓரே நேரத்தில் காப்பாற்ற முயலும் இந்தியாவின் அணுகுமுறையை நடுநிலமை எனக் கூறமுடியுமா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நடுநிலமை என்ற தத்தூர்த்த அணுகுமுறை போலியானது என்ற வாதம் உலகளதாவிய ரீதியில் நிலவுகிறது. அதாவது ஏதே ஒரு பக்கம் சாய்ந்திருத்தல் என்பதே தத்துவரீதியிலான புரிதலாகும். அதாவது இந்தியா நடுநிலமை வகித்ததால் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளதாக இலங்கையின் வெளியுற அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா தெரிவித்துள்ளார். அதே நேரம் இந்தியா வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விலகியிருந்தமைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழர் விடயத்தில் கடந்த காலத்தில் ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு இந்தியா பல தடவை எதிர்த்தும் சில தடவை ஆதரித்தும் பல தடவை கலந்து கொள்ளாமலும் தவித்திருக்கிறது. இவ்வாறு ஏன் இந்தியா நடந்து கொள்கிறது.

ஒன்று இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தால் இலங்கை மீது செல்வாக்குச் செலுத்த முடியாது என இந்தியா கருதுகிறது என்ற வாதம் ஒன்று நிலவுகிறது. சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துள்ளதால் இந்தியா முற்றிலுமாக விலக முடியாது எனக்கருதுகிறது. அது முற்றிலும் நிராகதரித்துவிட முடியாது. ஆனால் அதற்காக அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் முடியாது.காரணம் இந்தியாவின் அயல் நாடு என்ற வகையில் இலங்கையின் நகர்வுகள் அனைத்தும் இந்தியாவைப் பாதிக்ககும் என்றடிப்படையில் நோக்குதல் அவசியமானது. இந்தியாவை விலகி இலங்கை செயல்பட முடியுமா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக 1971 பாகிஸ்தான் இந்திய போரின் போது இலங்கையின் நகர்வை நிராகரித்த இந்திரா காந்தி அதற்கு எதிராக இராஜீக நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் பின்பு எந்தத் தலைவரும் அப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாதவர்களாக காணப்படுகின்றனர். அது மட்டுமன்றி இந்தியா ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பல தடவை வாக்களித்துள்ளது. அதன் போதெல்லாம் இலங்கை இந்திய உறவு பாதிக்கவில்லை. சுமுகமாகவும் இயங்கியது.

இரண்டு பிரித்தானியா தலைமையில் ஒரு தீர்மானத்தை ஜெனீவாவில் கொண்டுவரப்படும் போது இந்தியா வாக்களிக்காது விலகியிருப்பது என்பது அதிக செய்திகளை தந்துள்ளது. அதாவது இந்தியா மேற்கு அணியில் இருப்பதாகக் கூறிக் கொண்டாலும் பிராந்திய அரசியலில் இந்தியாவின் நலனுக்கு உட்பட்டே செயல்படும். அதனை மேற்கு கேள்வி கேட்க முடியாது. வேண்டுமாயின் இந்தியாவின் ஆலோசனைக்கும் கோரிக்கைக்சுகும்' மேற்கு செவிசாய்க்குமே அன்றி இந்தியா மேற்குக்காக தனது நலனைக் கைவிடாது. இதனை தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கைத் தீவை அப்படியே பாதுகாத்துக் கொண்டு தமிழர் பிரச்சினைக்கு தீர்வை எட்டிவிட முயலுகிறது. அதற்காகவே இலங்கை -இந்திய உடன்படிக்கையை ஜெனீவா வரையும் கொண்டு சென்று சர்வதேச அங்கீகாரமாக்கியுள்ளது. 13 திருத்தமே தமிழருக்கான தீர்வு.

மூன்று இத்தீர்மானத்தின் மூலம் இலங்கையை எந்த நாட்டுக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதை சீனா தெரிவித்துள்ளது. அதாவது மேற்குலகத்திற்கு முன் இலங்கைத் தீவை இழக்க முடியாது என்ற தகவலை வெளிப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இலங்கையின் தோல்வியானது சீனாவுக்கு பாரிய வெற்றியாகவே உள்ளது. இலங்கையை விட்டு சீனா விலகாது என்பதையும் இலங்கைக்கு சீனாவை தவிர வேறு எந்த நாடும் கைகொடுக்கவில்லை என்பதையும் இவ்வாக்கெடுப்பு உணர்த்தியுள்ளது. இதில் இந்திய இராஜதந்திரம் தோற்றுள்ளது என்றே தெரிகிறது. அதாவது இலங்கையை சீனாவிடமிருந்து மீட்டும் நகர்வு அனைத்தும் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தாலும் சரி எதிராக வாக்களித்தாலும் சரி நடுநிலமை வகித்தாலும் சரி இலங்கை அரசாங்கம் சீனா பக்கம் என்பதை கடந்த ஒரு தசாபட்தமாக இந்தியா அனுபவித்துவருகிறது.அது மட்டுமன்றி இத்தீர்மானத்தின் மூலம் சீனா இலங்கையை தனது பலமான பிடிக்குள் கொண்டுவந்துள்ளது. அதற்காகவே சீனா - இலங்கை ஆதரவு வாதத்தை அதிகம் வெளிப்படுத்தியிருந்தது.

நான்கு பிரித்தானியா ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய பின்பு தனது வர்த்தகத்தையும் சந்தையையும் தென்பூகோள நாடுகளை நோக்கி விஸ்தரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான முதன் அடியாகவே ஜெனீவா விடயத்தை கையில் எடுத்துக் கொண்டது. அத்துடன் அமெரிக்காவின் நட்பு நாடு என்றவகையில் செயல்பட வேண்டிய நிலை பிரிட்டனுக்கு ஏற்பட்டுள்ளது.இந்தியாவுடன்' நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ள பிரிட்டன் திட்டமிடுகிறது.

ஐந்து இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திரம் ஜெனீவாவில் தோல்வி கண்டுவிட்டது என்றே தெரிகிறது. ஏறக்குறைய சர்வதேச அரசியலையும் பிராந்திய அரசியலையும் சரிவரக் கையாண்டுவந்த இலங்கை ஆட்சித்துறை தற்போது நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. 2005 முதல் 2015 நிலமை மீளவும் சர்வதேச அரசியலில் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் நெடுங்கால நட்பு நாடான ஜப்பான் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்காமை உக்ரையின் உட்பட இலத்தீனம மெரிக்க நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்தமை மற்றும் இஸ்லாமிய நாடுகளின் அதே நிலையை எடுத்தமை இலங்கையின் இராஜதந்திரத்திற்கு ஏற்பட்ட தோல்வியாகவே விமர்சகர்கள் மதிப்பீடு செய்கின்றனர். இலங்கையின் உள்நாட்டு விடயம் மட்டுமல்ல சீனாவுடனான நெருக்கமும் அத்தகைய தோல்விக்கு வழிவகுத்த காரணியாகத் தெரிகிறது. இதற்காக இலங்கையின் வெளியுறவுத் துறையினரை பதவி நீக்குவது மற்றும் நாடுகள் மீது வசைபாடுவது பலவீனமான அணுகுமுறையாகவே தெரிகிறது. சரிசெய்யப்பட வேண்டியது இலங்கையின் வெளியுறவுக் கொள்கையும் உள்நாட்டுக் கொள்கையுமாகும். தமிழகத் தேர்தல் காலத்திலேயே இறுதியுத்தம் இலங்கையில் நிகழ்ந்தது. அதே போன்றே தற்போதும் தமிழகத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் நிகழும் போது இந்தியாவை இலங்கை கையாளத் தவறியுள்ளது அதன் பலவீனமான இராஜதந்திரத்தின் பக்கத்தினைக் காட்டுகிறது.

எனவே இலங்கை மீதான தீர்மானம் மேற்கு நாடுகளது அரசியல் நலனுக்கு இலாபகரமானதாக அமைந்துள்ளது போல் சீனாவுக்கும் இலாபகரமானதாக மாறியுள்ளது. சீனா இலங்கையின் நிரந்திரப் பிடிகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. இந்தியா எத்தகைய நகர்வினை மேற்கொண்டாலும் இலங்கையின் எண்ணத்தில் இல்லாத நாடாகவே உள்ளது.கிழக்கு முனையம் வடக்கின் தீவுகள் சம்பூர் போன்ற அனைத்திலும் இந்தியா எதிர் கொண்ட நெருக்கடிகளை கருத்தில் கொள்ளுதல் இந்த அரசியலை விளங்கிக் கொள்ள போதுமானது. அதாவது ஜெனீவாவில் இந்தியா வாக்கெடுப்பில் விலகியதன் மூலம் இலங்கையில் செல்வாக்குச் செலுத்த முடியும் என்பது கடந்த காலத்தில் நிகழ்ந்த அனுபவங்களை கொண்டு மதிப்பிட வேண்டும். அவ்வாறே எதிர்காலமும் அமைய வாய்ப்புள்ளது. இந்தியாவின் இலங்கை மீதான செல்வாக்கினை இலங்கையை விட சீனாவே தீர்மானிக்கின்றது.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE