தாய்வானில் 350 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்று சுரங்கப்பாதையில் இன்று தடம் புரண்டதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்தனர். மேலும் 72 பேர் ரயிலுடன் சுரங்கப் பாதைக்குள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மோசமாக சேதமடைந்த சுரங்கப்பாதையின் உள்ளே தடம்புரண்டுள்ள ரயிலில் இருந்து பயணிகளை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தாய்வான் மத்திய அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் தலைநகர் தைபியில் இருந்து தைதுங் நகரத்திற்கு சென்று கொண்டிருந்தது.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 09:00 மணிக்கு (01:00 GMT) இந்த ரயில் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.
இன்றைய விபத்தில் இறந்தவர்களில் ரயில் ஓட்டுநரும் அடங்குவதாக தாய்வான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ரயிலுடன் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக்கொண்டவர்களை மீட்பதே எங்களின் முன்னுரிமை வேலைத்திட்டம் என தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்து பல தாய்வானின் வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்தி மோசமான ரயில் விபத்தாக அமைந்துள்ளது.
தாய்வானில் கடந்த 2018-இல் இடம்பெற்ற ரயில் விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
1991-இல் இரண்டு ரயில்கள் மோதியதில் 30 பயணிகள் கொல்லப்பட்டதே ரயில் விபத்தொன்றில் தாய்வானில் அதிகளவானவர்கள் கொல்லப்பட்ட சம்பவமாக பதிவாகியிருந்தது. இந்த விபத்தில் 112 பேர் காயமடைந்தனர்.