Wednesday 21st of April 2021 05:07:49 AM GMT

LANGUAGE - TAMIL
.
அருட்பணியின் அர்த்தமுள்ள பரிமாணங்களால் ஒளி வீசிய அருட்தந்தை! - நா.யோகேந்திரநாதன்!

அருட்பணியின் அர்த்தமுள்ள பரிமாணங்களால் ஒளி வீசிய அருட்தந்தை! - நா.யோகேந்திரநாதன்!


'சர்ச்சைக்குரிய மதகுருவாக நோக்கப்படுவதை நான் அறிவேன். ஆனால் என்னைப் சுற்றி சர்ச்சைக்குரிய சம்பவங்கள் இடம் பெறுகின்றன. அதன் காரணமாக சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பாக நான் பேச வேண்டியுள்ளது. எனவேதான் நான் சர்ச்சைக்குரிய மதகுருவாக மற்றவர்களால் நோக்கப்படுகின்றேன்'.

இது முன்னாள் மன்னார் மறைமாவட்ட பேராயர் மறைந்த அருட்திரு இராயப்பு ஜோசேப் அடிகளார் அவர்களிடம் ஒருமுறை லங்கா தீப பத்திரிகையின் ஊடகவியலாளர் 'நீங்கள் ஏனையவர்களைவிட ஒரு சர்ச்சைக்குரிய குருவானவராக பார்க்கப்படுவது ஏன்'? எனக் கேட்கப்பட்டபோது அவர் வழங்கிய பதில்.

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அவர் 25 ஆண்டுகள் மன்னார் மறைமாவட்ட பேராயராக விளங்கிய காலத்தில் அவரது நியாயபூர்வமான நடவடிக்கைகள் காரணமாக அவர் ஒரு சர்ச்சைக்குரியவராக திட்டமிட்ட வகையில் சில சக்திகளால் சித்தரிக்கப்பட்டார்.

இளம் வயதிலேயே இறை பணிக்காக தனது சொந்த விருப்பு வெறுப்புக்களைத் துறந்து தன்னை மக்கள் சேவையில் அர்ப்பணித்த அருட்திரு இராயப்பு ஜோசேப் அவர்கள் அருட்பணியின் உயர்ந்த வடிவம் மக்கள் சேவையே என்ற வகையில் ஒளி வீசி நின்றவர்.

எனினும் எதிர்பாராக நோய் காரணமாக தனது 25 வருட கால மறைமாவட்ட அருட்பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில் கடந்த வியாழனன்று காலை காலமாகிவிட்ட செய்தி கத்தோலிக்க மக்களை மட்டுமின்றி முழுத் தமிழ் பேசும் மக்களையுமே சோகத்தில் ஆழ்த்திவிட்டது.

மக்களை பாவ நெருப்பிலிருந்து மீட்கச் சிலுவை சுமந்த தேவகுமாரன் சிலுவையில் அறையப்பட்டு பெரிய வெள்ளியன்று உயிரிழந்தார். சிலுவையில் அவர் ஆவி பிரிந்தபோதும் 3ஆம் நாள் உயிர்த்தெழுந்த அவரின் பாதையில் பலகோடி மக்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வருடம் பெரிய வெள்ளிக்கு முதல் நாளன்று காலமான பேராயர் அவர்கள் தனது நற்பணிகள் மூலம் எமது மக்கள் மத்தியில் நிலைபேறான ஒரு புனித வாழ்வைப் பெற்றுள்ளார். அவர் மேற்கொண்ட ஒவ்வொரு பணிகளிலும், அவர் நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் கொடுத்த குரலின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவர் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

அவர் துன்பப்பட்டு துயரம் சுமக்கும் மக்களுக்கு இளைப்பாறுதல் தரும் ஆலமரமாகக் கிளை பரப்பி விழுதுவிட்டு ஓங்கி நின்றார்.

அச்சுறுத்தல்களைக் கண்டு அவர் அடங்கிவிடவில்லை; வசவுகளைக் கண்டு அவர் வாடிப் போய்விடவில்லை; நெருக்கடிகளைக் கண்டு நெளிந்து கொடுத்துவிடவில்லை; அநீதிகளுக்கு எதிராக அச்சமின்றி மோதி நியாயங்களைத் தேடினார். அதிகாரக் கரங்களின் மனிதகுல விரோத நடவடிக்கைகளை துணிச்சலுடன் அம்பலப்படுத்தினார்.

போர் காலத்தில் எமது மக்களின் மீது இழைக்கப்பட்ட அநீதிகளிலிருந்து எமது மக்களைப் பாதுகாக்க அச்சத்தைக் களைந்து களமிறங்கினார். ஆர்ப்பரித்த அதிகாரத்தின் முன்பும் உயர்த்தப்பட்ட துப்பாகிகளின் முன்பும்கூட அவரின் பணிகள் மக்களைப் பாதுகாக்கும் வலிமையான கேடயங்களாக விளங்கின.

பேசாலையில் கடற்படையினர் மீது 17.06.2000 அன்று இனந்தெரியாதவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பேசாலை வெற்றி மாதா ஆலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது தாக்குதலை நடத்துமுகமாக கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவாறு படையினர் முன்னேறினர்.

ஆண்டகை அவர்கள் அச்சமோ தாமதமோ இன்றி அப்போதைய அரச அதிபர் திருமதி ஸ்டான்லி டி மெல்லையும் அழைத்துக்கொண்டு அங்கு சென்று அந்த மக்களைக் காப்பாற்றினார். அன்று வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பல நூறு உயிர்கள் காப்பாற்றப்பட்டன. 2.1.2007ல் விடத்தல் தீவில் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகளே என அதிகார பீடங்கள் சாதித்தபோது அவர்கள் பொதுமக்களே என ஆதாரபூர்வமாக நிரூபித்து உலகின் முன் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.

நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளின்போது போர் காலத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக எழுத்து மூலமான அறிக்கையைச் சமர்ப்பித்ததுடன் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் தமிழர்களுக்கு என்ன நடந்தது என கேள்வி எழுப்பினார். இது என்றென்றும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான வலிமையான ஆவணமாக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கைதிகளை அடிக்கடி சென்றுபார்த்து அவர்களின் நலன்கள் தொடர்பாக அக்கறை செலுத்துவதிலும் காணாமல் போனோர் தொடர்பாக உலகின் காதுகளில் ஒலிக்கத்தக்க விதமாக குரல் கொடுப்பதிலும் அவர் முன்னின்று செயற்பட்டார்.

இன்னொருபுறம் சுனாமியாலும் போரினாலும் பாதிக்கப்பட்ட முதியோரைப் பராமரிக்க இந்தியாவின் அன்னை திரேசா இல்லச் சகோதரிகளை வரவழைத்து அவர்கள் மூலம் வவுனியா பம்பைமடுவில் ஒரு முதியோர் சிறுவர் பராமரிப்பு இல்லத்தை உருவாக்கினார்.

முருங்கனில் டொன்பொஸ்கோ நிறுவன உதவியுடன் தொழிற் பயிற்சி நிலையத்தை அமைத்து இளைஞர்களின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டினார். மடுத் திருப்பதியில் அருட்சகோதரிகளுக்கான தியான இல்லத்தை அமைத்து ஆன்மீக ஈடேற்றத்திற்கான அமைதி நிலவும் ஒரு மையத்தை உருவாக்கினார்.

மனித இனத்தின் முன்னேறிய நபர்களுக்கு நீதியைத் தேடும் வேட்கையும் நியாயத்தை நிலைநிறுத்தும் இலட்சியமும் இருப்பதுண்டு. ஆனால் அவர்களின் சிலர் எதிர்ப்புகள், அச்சுறுத்தல்கள் கண்டு ஒதுங்கி விடுவதுண்டு. ஆனால் இன்னும் சிலரோ எத்தகைய தடைகள் வரும்போதும் அவற்றை ஏணிகளாக்கி இலட்சியம் தவறாது மக்கள் பணியில் தொடர்ந்து பயணிக்கின்றனர். அத்தகைய முக்கியமானவர்களில் தலைசிறந்த ஒருவராக அருட்திரு இராயப்பு ஜோசேப் ஆண்டகை அவர்கள் திகழ்ந்தார்.

அவர் மக்களை நேசித்தார். ஆன்மீகத்தை வெறும் ஆராதனைக்குரிய வழிமுறையாக மட்டும் பார்க்காமல் அநீதிக்கு எதிரான ஆண்டவனின் குரலாகவே நோக்கினார். அவ்வகையில் அவர் தன்னைப் போல் பிறரையும் நேசித்தார். அதன் காரணமாக மக்களும் அவரை நேசித்தனர். எனவே அவர் இறப்பின் பின்பும் மக்கள் மத்தியில் நித்திய ஜீவனுடன் உலாவருவார்.

மக்களுக்காக வாழ்ந்து மக்களுக்காகவே தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த பேராயர் அருட்திரு இராயப்பு ஆண்டகை அவர்களுக்கு 'அருவி' தன் இதய பூர்வமான அஞ்சலிகளை சிரம் தாழ்த்தி தெரிவித்துக்கொள்கின்றது.

அருவி இணையத்திற்காக : நா.யோகேந்திரநாதன்.

02.04.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், மன்னார்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE