Saturday 20th of April 2024 12:30:15 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை இறுதி நிகழ்ச்சிவரை துக்கத்தைக் கடைப்பிடிப்போம்! - மாவை சேனாதிராசா!

ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை இறுதி நிகழ்ச்சிவரை துக்கத்தைக் கடைப்பிடிப்போம்! - மாவை சேனாதிராசா!


மறைந்த அதிவணக்கத்திற்குரிய ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் இறுதி நிகழ்ச்சி வரை தமிழர் தாகயம் வடக்கு-கிழக்கு முழுவதும் துக்கத்தை கடைப்பிடித்து அஞ்சலிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மாவை சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

வணக்கத்துகக்குரிய ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை, 81ஆவது வயதில் காலமாகிவிட்ட செய்தி கேள்வியுற்று மிகுந்த துயரமடைகிறோம். நீண்ட காலமாய் கிருத்துவ குருவாகவும் பங்குத் தந்தையாகவும் குருமுதல்வராகவும் தமிழர் தேசத்தில் பல மாவட்டங்களிலும் பணியாற்றி இறுதியில் மன்னார் மறைமாவட்டத்தில் ஆயராகவும் திருநிலைப்படுத்தி வாழ்ந்தவர்.

றேமில் குருத்துவப் பட்டத்தையும் பெற்றவர். கிருத்துவத் துறையில் கலாநிதிப்பட்டமும் பெற்றவர். இறுதிக்காலத்தில் நோயுற்றவராய் நினைவு குன்றிப் பேசும் நிலையிழந்து துயரிலிருந்தவரானார்.

இயேசு கிருத்துவின் காலம் கிருத்துவ மறைமத காலத்தின் ஆரம்பம் இயேசு கிருத்துவானவரின் போதனைகளுக்கு எதிரான ஆட்சியிலிருந்தோர் அவரைச் சிலுவையில் அறைந்தனர். சித்திரவதைக்குள்ளானார். இயேசு கிருத்துவின் அர்ப்பணம், தியாகம் அன்னார் புனித ஆத்மா உலகம் முழுவதும் கிருத்துவ மதத்திற்கு வித்திட்டது. கிருத்துவ மதத்திற்கு அத்திபாரமாய் அனைத்து மக்களின் மனங்களிலும் ஆழப்பதிந்துவிட்ட புனிதரானார் இயேசு கிறிஸ்து. அந்த வழியில் கிருத்துவ மதக் குருவானவராய் இணைந்து பல மாவட்டங்களிலும் பணியிலிருந்து மன்னார் மறை மாவட்டத்தின் ஆயராய் விளங்கினார் வணக்கத்துக்குரிய ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை.

இலங்கையில் கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை கிருத்து மதத்தலைவராயிருந்த முழுக்காலத்திலும் கிருத்துவ மதத்தின் ஆயராகத் தலைவராக மட்டுமல்லாமல் தமிழ் மக்களின், ஏழை எளிய மக்களின் சமூகத் தெண்டனாகவும், தமிழர் தேசத்தின் விடுதலைக்காகவும் தமிழ் மக்களின் விடிவுக்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து உழைத்து சான்றாண்மை மிக்க போராளியாகவும், தலைவனாகவும் விளங்கிய பெருமைக்குரியவராய் விளங்கினார். அரசினால், இராணுவத்தினால் பலதடவை அச்சுறுத்தலுக்குள்ளானவருமாவர்.

இனவிடுதலைக்கான போர்க்காலத்திலும் கூட அரசினால் இராணுவத்தினால் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப் பட்டவர்களுக்காகவும் அவர்கள் விடுதலைக்காகவும் குரலெழுப்பினார். சிறைகளில் அவர்களைச் சென்று பார்வையிட்டார். அவர்கள் குடும்பங்களுக்கு பெண் அனாதைகளுக்கு இல்லங்கள் அமைத்து வாழவைத்தார். கல்விப் பணியாற்றினார்.

இனவிடுதலைக்கான போர்காலத்தின் இறுதியில் 2007 – 2009 காலப்பகுதிகளில் பாதுகாப்பான இடங்களுக்கு பொதுமக்களை வாருங்கள் என அரசும் இராணுவத்தினரும் அழைத்துவிட்டு அவ்வாறு வந்த மக்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும் போரில் பாவிக்கத் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் பயன்படுத்தி குண்டுகளையும் வீசிப் பல்லாயிரம் மக்கள் பலியாக்கப்பட்டனர்.

போரின் இறுதிக்காலத்தில் சரணடைய விரும்பியவர்களைக் கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க அரசுடன் பேச்சிலீடுபட்டார். வன்முறை அழிவுகளை நிறுத்தப் போரைநிறுத்த முயற்சிகளெடுத்தார்.

இறுதிப் போரில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை அரசும் இராணுவமும் போர்க்குற்றமிழைத்தார்களென சர்வதேச அரங்கில் திட்டவட்டமாக அறிவித்தார். நீதிக்காக, சமாதானத்திற்காக உயிரைத்துச்சமென மதித்து இறுதிவரை குரலெழுப்பி வந்தார். ஜனநாயக வழிப்போராட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்கு கொண்டு தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். அவர் விரும்பியபடி தமிழர் தேச மக்கள் விடுதலை கிடைக்காமலே அவர் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்.

இலங்கை முழுவதும் கிருத்துவ மக்கள் அனைத்து மாவட்ட ஆயர்கள் ஏனைய மதத்து மக்கள் மனித உரிமையாளர் மனிதாபிமானமிக்க அனைவரும் உலகளாவிய வகையில் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தி நிற்கின்றனர்.

எதிர்வரும் 05-04-2021 திங்கட்கிழமை மன்னார் மாவட்டத்தில் அனைத்து ஆயர்களும் அன்னார் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளனர்.

அன்று வரை நாம் எல்லோரும் வடக்கு கிழக்கிலும் முழுமையான துக்கநாளாகக் கடைப்பிடித்து வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை அவர்களுக்கு அஞ்சலி செய்வோம், ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திப்போம் என அழைப்பு விடுக்கின்றோம்.

அனைவரின் சார்பிலும்

மாவை.சோ.சேனாதிராசா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு


Category: செய்திகள், புதிது
Tags: மாவை சோ.சேனாதிராஜா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE