Friday 19th of April 2024 10:27:04 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 49 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 49 (வரலாற்றுத் தொடர்)


முதலாளித்துவ மயப்படுத்தப்பட்ட இலங்கையின் பாரம்பரிய விவசாயம்! - நா.யோகேந்திரநாதன்!

'பல போர்களை நடத்தி உயிர்ப் பலி கொடுத்துக் கைப்பற்றுவதால் பெறும் பலன்களைவிட அதிகமானதும் உறுதியானதுமான பெறுபேறுகளைக் குடியேற்றத் திட்டங்கள் மூலம் பெறமுடியும். ஒரு நிலத்தில் குடியேற்றப்படும் குடியேற்றவாசி தன் நிலத்தைப் பாதுகாக்கும் போர் வீரனாக உளப்பூர்வமாக மாறி விடுகிறான். எனவே அந்த நிலம் படை நடவடிக்கைகள் இன்றியோ அல்லது குறைந்த பட்சப் படை நடவடிக்கைகளுடனேயே பாதுகாக்கப்படுகிறது'.

இது பாலஸ்தீன மக்களின் நிலங்கள் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் நாயகன் எனக் கருதப்படுபவரும் 1964ல் மேற்கொண்ட படை நடவடிக்கைகள் மூலம் எகிப்தின் சினாய், சிரியாவின் கோலோன் குன்றுகள், ஜோர்டானின் ஒரு பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றி இன்றுவரை பாலஸ்தீனிய மக்களைக் கூடார வாழ்வுக்குள் தள்ளியவரும் பின்னாட்களில் இஸ்ரேலின் பிரதமராகப் பதவி வகித்தவருமான மோசே தயான் கூறிய வார்த்தைகள்.

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு உருவாக்கப்பட்ட டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கல்லோயா, அம்பாறை, அல்லை, கந்தளாய், பதவியா ஆகிய பகுதிகளில் விவசாய அபிவிருத்தி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழ்ப் பிரதேசங்கள் சிங்கள மயப்படுத்தப்பட்டதுடன் அவை தமிழ் மக்களுக்கு எதிரான இனவெறி மையங்களாக உருவாகி விட்டன. அது மட்டுமின்றி அவை மேலும்மேலும் விரிவடைந்து இன்னும் ஏராளமான அயல் தமிழ் பிரதேசங்கள் விழுங்கப்பட்டன.

அதேபோன்று 1965 தொடக்கம் 1970 வரை ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி – தமிழரசுக் கட்சி கூட்டரசாங்கமும் விவசாய அபிவிருத்தி என்ற பேரில் குடியேற்றத் திட்டங்களை ஆரம்பித்தன. இவை விவசாயத்தை முதலாளித்துவ மயப்படுத்தும் உடனடி வேலைத்திட்டத்தையும் தமிழ்ப் பகுதிகளைச் சிங்கள மயப்படுத்தும் தூரநோக்கையும் கொண்டமைந்திருந்தன. இத்தூர நோக்குத் தொடர்பான சரியான புரிதல் இருந்தோ இல்லாமலோ தமிழரசுக் கட்சியும் தனது பரிபூரண ஆதரவை வழங்கியது.

அதன் முதற் கட்டமாக கொழும்பிலுள்ள 12 பெரும் தமிழ் முதலாளித்துவ நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு நெடுங்கேணியில் விவசாயப் பண்ணைகளை அமைக்கும் நோக்குடன் தலா ஆயிரம் ஏக்கர் காட்டுக் காணிகள் 99 வருடக் குத்தகைக்கு வழங்கப்பட்டன. அவர்கள் மணலாற்றின் அடர்ந்த மழைக் காடுகளை வெட்டித் துப்புரவு செய்து அமெரிக்கப் பாணியிலான பெரும் பண்ணைகளை அமைத்தனர். ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான மலையகத் தொழிலாளர்களை இறக்குமதி செய்து காடுகளைத் துப்புரவு செய்யப் பயன்படுத்தியதுடன் அவர்களை அங்கேயே குடியமர்த்தி பண்ணைகளில் தொழிலாளர் தேவைகளை நிறைவு செய்தனர். அதன் காரணமாக ஆயிரக்கணக்கான மலையக மக்கள், குடும்பம் குடும்பமாகக் கொண்டு வரப்பட்டுப் பண்ணைக் காணிகளில் குடியமர்த்தப்பட்டனர். வளமான மணலாற்று மண்ணில் பெரும் விவசாயப் பண்ணைகள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டன.

அதேவேளையில் பிரதமர் டட்லி சேனநாயக்காவால் மகாவலி அபிவிருத்தி சபை உருவாக்கப்பட்டு மகாவலி கங்கையை வட பகுதிக்குத் திசைதிருப்பும் நோக்குடன் மகாவலி நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம் 1968ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

1984ம் ஆண்டு இப்பிரதேசம் மகாவலி அபிவிருத்தி சபையின் கீழ் கொண்டு வரப்பட்டு அங்கு பண்ணைகளில் குடியிருந்த மலையக மக்கள் உட்பட 42 கிராமங்களைச் சேர்ந்த 13,288 கிராமவாசிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் 48 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டனர். இவை தற்சமயம் முழுமையாகச் சிங்கள மயப்படுத்தப்பட்டு விட்டதுடன் மணலாறு என்ற தனிச் சிங்கள மாவட்டமாக உருவாக்கப்பட்டு விட்டது.

அடுத்து வடக்கு – கிழக்கு உட்பட இலங்கையின் உலர் வலயப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இளைஞர் குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றை உருவாக்குவதில் இரு முக்கிய நோக்கங்கள் உள்ளடங்கியிருந்தன. ஒன்று உப உணவு உற்பத்தியை முதலாளித்துவ மயப்படுத்துவதன் மூலம் பசளை, கிருமி நாசினி, உழவு இயந்திரம், தெளிப்பான் கருவிகள் என்பற்றுக்கும் உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கும் கொழும்பு மையத்தில் தங்கியிருத்தலாகும். அடுத்து ரஷ்ய – சீன தத்துவார்த்தப் போராட்டம் காரணமாகவும் வியட்நானம், கொரிய, பாலஸ்தீன, கியூப விடுதலைப் போராட்டங்கள் காரணமாகவும் பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி காரணமாகவும் இலங்கையிலும் இடதுசாரிச் சிந்தனைகளும் புரட்சிகர எண்ணங்களும் இளைஞர்கள் மத்தியில் உருவாகியிருந்தன. அப்போது நிலவிய வேலையில்லாத் திண்டாட்டமும் அவற்றை ஊக்குவித்தன. எனவே இளைஞர்களை அவ்வழியில் செல்லவிடாமல் திசை திருப்பும் வகையில் இளைஞர் குடியேற்றத் திட்டங்கள் அமைக்கப்பட்டன.

அவ்வகையில் வடக்கில் விஸ்வமடு, திருவையாறு, முத்iதையன்கட்டு ஆகிய திட்டங்களும் வடமத்திய மாகாணத்தில் ராஜாங்கனை, கலாவௌ ஆகிய பகுதிகளிலும் இளைஞர் குடியேற்றத் திட்டங்கள் அமைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி அமெரிக்க சமாதானப் படையின் அனுசரணையுடன் இராணுவப் பாணியில் விவசாய அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ள விவசாயப் படை அமைக்கப்பட்டது. இளைஞர் குடியேற்றத் திட்டங்களில் வாய்க்கால்கள் அமைப்பது போன்ற வேலைகளுக்கு இந்த விவசாயப் படை பயன்படுத்தப்பட்டது.

இந்த இளைஞர் குடியேற்றத் திட்டங்களில் முதலில் முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு இளைஞர்கள் வசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒரு ரூபா சம்பளமாகவும் வழங்கப்பட்டது. காடுகளை வெட்டித் துப்புரவு செய்து நிலத்தைப் பண்படுத்தும் பணியை அவர்களே மேற்கொள்ள வேண்டியிருந்தது.

நீர்ப்பாசனம் போன்ற தேவைகள் உரிய முறையில் வழங்கப்படாததாலும் காட்டு மிருகங்களின் அழிவு காரணமாகவும் போக்குவரத்து மருத்துவ வசதிகள் இன்மையாலும் இளைஞர் குடியேற்றத் திட்ட இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது.

ஏற்கனவே கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ் குடியேற்றப்பட்ட உருத்திரபுரம், வட்டக்கச்சி, இராமநாதபுரம், முரசுமோட்டை போன்ற குடியேற்றங்களில் நீர்ப்பற்றாறாக்குறை காரணமாக வருடாவருடம் விவசாயிகள் நட்டத்தை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அதன் காரணமாக குடியேற்ற விவசாயிகள் கொடிய வறுமைக்குள் தள்ளப்பட்டிருந்தனர். இரணைமடுக் குளத்தின் நீர் மத்தியதர விவசாயிகளுக்குப் போதியளவு வழங்கப்பட்டு மிகுதி நீரே குடியேற்ற விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

குறிப்பாகச் சிறுபோக காலத்தில் மத்தியதர விவசாயிகளுக்கு நீர் வழங்கப்பட்ட பின்பு குடியேற்றவாசிகளுக்கு வழங்கப்படும்போது ஒருவருக்கு கால் ஏக்கர் கூடிய பட்சம் அரை ஏக்கர் மட்டுமே நீர் வழங்கப்படும் நிலை நிலவியது.

கிளிநொச்சியின் மையத்தில் அமைந்திருந்த மத்தியதர விவசாயிகளின் காணிகளை காட்டு மிருகங்களிலிருந்து பாதுகாக்க எல்லைக் காவல் வேலிகளாகவே குடியேற்றத் திட்டங்கள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் சண்முகதாசன் தலைமையிலான சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் யோகேந்திரநாதன் என்பவர் தலைமையில் கட்சிப் பணிகளை மேற்கொள்ளச் சில இளைஞர்கள் கிளிநொச்சி வந்தனர். விவசாயிகள் மத்தியிலும் இளைஞர் குடியேற்றத்திட்டங்களிலும் இறங்கி வேலை செய்த அவர்கள் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அவர்களை ஸ்தாபன ரீதியாக அணி திரட்டுவதால் மட்டுமே தீர்வு காணமுடியும் என்பதை உணர்ந்தனர்.

எனவே அவர்கள் விவசாயிகள் மத்தியில் இறங்கி வேலை செய்து விவசாய சங்கங்களை அமைத்ததுடன் அவற்றை ஒன்றிணைத்து மாவட்டக் கிளையையும் அமைத்தனர்.

அதன்மூலம் மேற்கொண்ட பல கலந்துரையாடல்கள் மூலம் அரசாங்கத்திடம் சில கோரிக்கைகள் முன்வைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. அவையாவன எட்டு ரூபா விற்ற ஒரு புசல் நெல்லின் விலையை பன்னிரண்டு ரூபாவாக அதிகரிக்கப்படவேண்டும் என்பதும் மத்தியதர விவசாயிகளுக்கும் குடியேற்ற விவசாயிகளுக்கும் ஒரே அளவில் நீர் பங்கீடு செய்யப்படவேண்டுமென்பதும் சிறுபோகத்தில் ஏற்படும் நீர்த் தட்டுப்பாட்;டை நீக்க இரணைமடுக் குளத்தின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும் என்பதுமாகும். அத்துடன் இக் கோரிக்கைகளை முன் வைத்து ஒரு விவசாயிகள் மாநாட்டை நடத்தித் தீர்மானங்களைப் பிரகடனம் செய்து அரசாங்கத்துக்கும் சமர்ப்பிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

கிளிநொச்சியின் மத்தியதர விவசாயிகள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் வசித்துக்கொண்டு இங்கு கணக்குப்பிள்ளைகளை வைத்து கூலியாட்கள் மூலம் கமம் செய்பவர்களாகவே இருந்தனர். இவர்கள் தமிழரசுக் கட்சியின் பிரமுகர் வட்டமாதலால் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராயிருந்த தமிழரசுக் கட்சியில் கா.பொ.ரத்தினம் இம்முயற்சிகளைப் பல்வேறு விதங்களில் குழப்ப முயன்றார். ஆனால் மக்கள் அதற்கு இடங்கொடுக்கவில்லை.

மாநாடு மிகவும் வெற்றிகரமாகக் கிளிநொச்சி ஈஸ்வரன் பட மாளிகையில் இடம்பெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அப்போதைய காணியமைச்சர் சி.பி.பி.சில்வாவை யோகேந்திரநாதன் தலைமையில் விவசாயிகள் பிரதிநிதிகள் கம்பஹா நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.பண்டாரநாயக்காவின் அனுசரணையுடன் சந்தித்து தீர்மானங்களைச் சமர்ப்பித்து ஏறக்குறைய இரண்டு மணி நேரம் கலந்துரையாடல்களை நடத்தினர். அப்போது அதில் கலந்து கொண்டிருந்த காணியமைச்சின் செயலாளர் ஸ்ரீகாந்தா இரணைமடுவின் நீர் மட்டம் உயர்த்தப்பட்டால் மாங்குளம் நீரில் மூழ்கி விடுமென்பதால் இரணைமடு உயர்த்தும் கோரிக்கையை நிராகரிக்கும்படி கா.பொ.ரத்தினம் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார். எனினும் அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார்.

சி.பி.சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூலம் அரசியலுக்கு வந்தவர் என்பது விவசாயப் பிரதேசமான மின்னேரியாவைச் சேர்ந்தவர் என்பதும் சிங்கள மேட்டுக்குடி அல்லாத சாலம இனத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடமே நெல்லின் விலை உயர்த்தப்பட்டதுடன் மத்திய தர விவசாயிகளுக்கும் குடியேற்ற விவசாயிகளுக்கும் நீர் சம அளவில் பங்கிடும் முறை அமுலுக்கு வந்தது. அத்துடன் இரணைமடு குளக்கட்டு உயர்த்தும் பணிகள் ஆசிய பவுண்டேசன் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய விடயம் தமிழ் அரசியல்வாதிகள் தமிழின் பெயரால் சாதாரண தமிழ் மக்களைத் தங்கள் தேர்தல் வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்தினரேயொழிய சாதாரணத் தமிழ் மக்களின் நலன்கள் பற்றி அக்கறைப்பட்டது கிடையாது. அவர்கள் தமிழ் மத்தியதர, மேட்டுக்குடியினர் நலன்களின் அடிப்படையிலேயே செயற்பட்டு வந்தனர்.

அதேவேளையில் இளைஞர் குடியேற்றத்திட்டங்களில் போதிய வசதிகள் வழங்கப்படாமை, சிலருக்கு உப உணவுப் பயிர்ச் செய்கைக்குப் பொருத்தமற்ற காணிகள் வழங்கப்பட்டமை என்பன காரணமாகத் திருவையாறு, விஸ்வமடு போன்ற குடியேற்றத் திட்டங்களில் போராட்டங்கள் வெடித்தன. எனினும் இளைஞர்களில் ஒரு பகுதியினர் கொழும்பு புறக்கோட்டை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி மிளகாய், வெங்காயம் என்பவற்றைச் சந்தைப்படுத்தியதால் ஓரளவுக்குத் தங்கள் நிலையை உயர்த்த முடிந்தது. அதன் காரணமாகப் கொழும்பை மையப்படுத்திய முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சி வடக்கிலும் வளர ஆரம்பித்தது.

காலமாற்றத்தில் விவசாயம் முதலாளித்துவ மயப்படுவது தவிர்க்கப்படமுடியாதது என்பது உண்மைதான். பரப்புக் கணக்கில் உள்ள காணிகளில் விவசாயம் செய்த விவசாயிகள் ஏக்கர் கணக்கான காணிகளில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளக்கூடிய குடியேற்றத்திட்டங்கள் அந்த நோக்கத்துடனேயே உருவாக்கப்பட்டன. அதனால் விவசாயிகள் இறக்குமதி உள்ளீடுகளை நம்பிப் பயிர் செய்ய வேண்டிய ஒரு தங்கு நிலைப் பொருளாதாரத்துக்குள் தள்ளப்பட்டனர்.

அதாவது சாதாரண விவசாயிகளின் உற்பத்தி முயற்சிகள் கூட அரசாங்கத்தில் தங்கியிருக்கவேண்டிய நிலை எழுந்தது.

போர் காலத்தில் அரசாங்கம் வடக்குக்கு இரசாயனப் பசளைளைத் தடை செய்தால் விவசாயிகள் பெரு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்ததும் பின்பு இயற்கைப் பசளைகளைப் பயன்படுத்தி வடக்கில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக விவசாயிகள் சுயஆதார உற்பத்தி மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எப்படியிருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் கூட்டாட்சியில் தமிழ் மக்களின் நலன்களை விட ஐ.தே.கட்சி ஆட்சி நிலைத்திருக்க வேண்டுமென்பதற்கே முதலுரிமை கொடுக்கப்பட்டது.

மாவட்ட சபைகள் உட்பட பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட எந்தவொரு விடயமும் நடைமுறையில் அமுல்படுத்தப்படாத போதும் அந்த 5 வருடங்களும் தமிழரசுக் கட்சி, ஆட்சிக்கு ஆதரவு வழங்கி வந்தது. அதுமட்டுமின்றி விவசாயத்தை மத்தியத்துவப்படுத்தி முதலாளித்துவ மயமாக்கியது மட்டுமின்றி அரசின் சகல ஏகாதிபத்திய சார்பு நடவடிக்கைகளுக்கும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கினர்.

மொத்தத்தில் தமிழரசுக் கட்சியின் இன மோதல், அல்லது இன உரிமைப் போராட்டம் என்பன ஐக்கிய தேசியக் கட்சியுடன் சமரசம், இணங்கிப் போதல் விட்டுக்கொடுத்தல் ஆகிய வடிவங்களிலும் ஸ்ரீலங்கா சுதந்தி;ரக் கட்சி ஆட்சியில் மோதல்கள் போராட்டங்கள் என்ற வடிவங்களிலுமே தொடர்ந்தன என்பதே உண்மையாகும்.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE