Friday 29th of March 2024 06:33:08 AM GMT

LANGUAGE - TAMIL
-
அரசுக்கு எதிரான போலிப் பிரசாரங்களைத் தோற்கடிப்பேன் - வவுனியாவில் கோட்டா!

அரசுக்கு எதிரான போலிப் பிரசாரங்களைத் தோற்கடிப்பேன் - வவுனியாவில் கோட்டா!


“கோட்டாபய ராஜபக்ச முக்கியமல்ல, என்னை இந்த இடத்துக்குக் கொண்டு வந்த கொள்கையும் பலமுமே முக்கியமானதாகுமென்று நான் எப்போதும் கூறி வருகின்றேன். நாம் அதனையே பாதுகாக்க வேண்டும். அரசுக்கும் எனக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் போலிப் பிரசாரங்களின் நோக்கம் இந்தக் கொள்கையைத் தோல்வியுறச் செய்வதாகும். உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகள் முன்னெடுத்துவரும் இந்தப் போலிப் பிரசாரங்களை தோல்வியுறச் செய்து என்னை ஜனாதிபதிப் பதவிக்குக் கொண்டு வந்த கொள்கையைப் பாதுகாப்பேன்." - இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

தான் அதிகாரத்துக்கு வரும்போது வீழ்ச்சியுற்றிருந்த பொருளாதாரம், கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியலும்கூட தேசிய பசுமைப் பொருளாதாரமாகக் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளையே தான் நிறைவேற்றி வருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தனது பதவிக்காலத்தில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் போகுமானால் தன் மீது குற்றம் சுமத்துமாறும் மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவின் போகஸ்வெவ மகா வித்தியாலய வளாகத்தில் இன்று நடைபெற்ற 'கிராமத்துடன் கலந்துரையாடல்' 17ஆவது நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நுகர்வுக்காக இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களினதும் தரம் தொடர்பில் தொடர்ச்சியாக பரிசீலனைக்குட்படுத்தப்படுகின்றது. இறக்குமதி செய்யப்பட்ட ஒருதொகை தேங்காய் எண்ணெய் நுகர்வுக்குப் பொருத்தமானதல்ல என அண்மையில் கண்டறியப்பட்டிருப்பது இந்தப் பரிசீலனையின் பெறுபேறாகவே ஆகும். பரிசீலனையைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு நுகர்வு பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாகும்.

நான் அதிகாரத்துக்கு வந்து குறுகிய காலப்பகுதியில் பல்வேறு பணிகளைச் செய்துள்ளேன். சுற்றாடலுக்குப் பாரிய அழிவை ஏற்படுத்திவந்த செம்பனை அல்லது முள்தேங்காய் பயிர்ச் செய்கையை முழுமையாகத் தடை செய்துள்ளேன். தேங்காய் எண்ணெய் நுகர்வில் சாதகமான பெறுபேறுகளை அறிந்து பாம் ஒயில் இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது. நாட்டினுள் போதைப்பொருள் கொண்டு வரப்படுவதற்கான வழிகளும் மூடப்பட்டுள்ளன. சுற்றிவளைப்புகளின் மூலம் போதைப்பொருள் மற்றும் நுகர்வுக்குப் பொருத்தமற்ற பொருட்களைக் கைப்பற்றுவதற்கு முடிந்துள்ளது.

நான் அதிகாரத்துக்கு வரும்போது வெள்ளை வான், முதலைகள், சுறா மீன்கள் பற்றி எல்லாம் போலிப் பிரசாரங்களை சமூகமயப்படுத்திய குழுக்கள் தமது போலிப் பிரசாரங்கள் வெற்றியளிக்காத நிலையில் தற்போது காடழிப்பு பற்றிப் போலியான மற்றும் மோசமான கருத்துக்களை சமூகமயப்படுத்தி வருகின்றனர்.

நிறுவனமயப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் அரசுக்கும் எனக்கும் எதிராக முன்னெடுத்துவரும் போலிப் பிரசாரங்களை தோல்வியுறச் செய்து என்னை ஜனாதிபதிப் பதவிக்குக் கொண்டு வந்த கொள்கையைப் பாதுகாப்பேன்.

தமது பெற்றோர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கின்ற காரணத்தால் சில பிக்குகளுக்கு சாசனப் பணியை மேற்கொள்வது சிரமமாக உள்ளது. எனவே, சாசனத்துக்காகப் பிள்ளைகளை வழங்கியுள்ள குடும்பங்களுக்கு தேவையின் அடிப்படையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகள் திட்டத்தின் கீழ் தொழில் ஒன்றை வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

வவுனியா மாவட்டத்தில் நீர்ப் பற்றாக்குறை குறித்து பொதுமக்கள் முன்வைத்த கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றேன். பல தசாப்தங்களாக இருந்துவரும் குடிதண்ணீர்ப் பிரச்சினைக்கு ஒரு வருடத்துக்குள் தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளேன்.

வவுனியா மாவட்டத்தின் சனத்தொகையில் 92 வீதமானவர்கள் குடிதண்ணீர்ப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். துரித கருத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் நீர்வழங்கல் முன்மொழிவு முறைக்காக 60 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தின் அனைத்து குழாய்க் கிணறுகளையும் புனரமைத்தல், பல சமூக நீர்த்திட்டங்களை ஆரம்பித்தல் ஆகியவற்றை உடனடித் தீர்வாக நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டப் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை, கட்டடங்கள் மற்றும் கதிரை, மேசைகள் பற்றாக்குறை விரைவாகத் தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினையாக மக்கள் சுட்டிக்காட்டினர். இது பற்றிய தகவல்கள் மற்றும் புள்ளி விபரங்களைப் பெற்று தேவைக்கேற்ப நிதி ஒதுக்குமாறு கல்வி அமைச்சுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளேன்.

போகஸ்வெவ கிராமத்தில் 16 குளங்கள், கிவுல் ஓய திட்டம் உள்ளிட்ட 17 குளங்களைப் புனர்நிர்மாணம் செய்வதற்குப் பணிப்புரை விடுத்துள்ளேன்.

தொல்பொருள் மரபுரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் கிராமத்தின் விகாரைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ள கிராமங்களைப் பாதுகாப்பதற்காக மின்சார வேலிகளை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதேச வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர், தாதியர் மற்றும் ஏனைய ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பணிப்புரை விடுத்துள்ளேன்" - என்றார்.

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி..எஸ்.எம். சார்ள்ஸ், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன், வவுனியா மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்கள், பாதுகாப்புப் பிரதானிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE