Wednesday 24th of April 2024 08:45:40 PM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2021: தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2021: தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது!


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2021 இற்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றன.

234 உறுப்பினர்களை தேர்வு செய்யும் வைகயில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் பிரசார நடவடிக்கைகள் இன்று பி.பகல் 7.00 மணியுடன் நிறைவுக்கு வரவுள்ளன.

தமிழ்நாட்டில் தற்போது ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்குமான நேரடி போட்டியாக இந்த தேர்தலும் வழக்கம் போல் அமைந்துள்ளது.

234 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் களத்தில் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் 3 ஆயிரத்து 585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், மூன்றாம் பாலினத்தவர் இருவரும் போட்டியிடுகின்றனர்.

குறிப்பாக 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் சரி பாதி எண்ணிக்கையில் 117 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பின்னணியில் இன்று பி.பகல் 7.00 மணிக்கு பிரசாரம் ஓயும் நிலையில் பி.பகல் 7.00 மணிக்கு முன்னதாக வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் தொகுதிகளை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற கட்டுப்பாடும் நடைமுறைக்கு வருகிறது.

சுமார் 25 நாட்களுக்கு மேலாக "அன்பார்ந்த வாக்காள பெருங்குடி மக்களே..." என்ற அறைகூவலுடன் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அனைத்து தரப்பினரும் இன்று அதிதீவிரமாக தத்தமது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவார்கள்.

நாளை ஓய்வு நாளாக அமைவதுடன், நாளை மறுதினம் காலை 7.00 மணி முதல் வாக்குப்பதிவு ஆரம்பமாக உள்ளது.

இதற்காக, மொத்தம் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் தயார் படுத்தப்படுகின்றன. வாக்குப்பதிவுக்காக ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இவற்றுடன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 205 கட்டுப்பாட்டு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் 'விவிபேட்' கருவி ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 807 எந்திரங்களும் இணைக்கப்பட உள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணியில் 4 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

வாக்குப்பதிவு நாளை மறுநாள் இரவு 7 மணிக்கு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டிகளில் வைத்து 'சீல்' வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட இருக்கின்றன.

நாளை மறுதினம் வாக்குப் பதிவு இடம்பெற்றாலும், வாக்கு எண்ணிக்கையானது வரும் மே மாதம் 2-ந்தேதியே இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் காலை, இந்த பெட்டிகளில் உள்ள 'சீல்' உடைக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்படும். அன்று காலை 11 மணி முதலே முன்னணி நிலவரங்கள் தெரியவரும் நிலையில் மாலைக்குள் இறுதி முடிவு தெரிந்துவிடும்.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE