Monday 20th of September 2021 02:18:10 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் மந்திரக் கோல்கள்! நா.யோகேந்திரநாதன்!

ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் மந்திரக் கோல்கள்! நா.யோகேந்திரநாதன்!


தென்னாசியாவின் மிகப்பெரும் அரசியல் சாணக்கியன் எனக் கருதப்படும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு முக்கிய வரலாற்றுத் தருணங்களிலெல்லாம் ஒரு தீர்மானிக்கும் சக்தியாகத் தன்னை இனங்காட்டி வந்துள்ளார். அவர் இனவாதத்தை அரசியல் மயப்படுத்திய மூலகர்த்தாவாக விளங்கியபோதும் பல சமயங்களில் தன்னிலையிலிருந்து இறங்காமலேயே தன்னை ஒரு சமரசவாதியாகவும் ஜனநாயகத்தின் காவலனாகவும் வெகு லாவகமாக முகம் காட்டி வந்துள்ளார்.

1977ல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அவர் ஆட்சிக்கு வந்த பின்பு தனது மேற்கத்தைய முதலாளித்துவ ஏகாதிபத்திய சார்புக் கொள்கையை முன்னெடுக்கவும் சாதாரண அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் உரிமை வேட்கையை மழுங்கடிக்கவும் அவர் மூன்று மந்திரக் கோல்களைத் தன் கையில் எடுத்துக் கொண்டார். ஒன்று – நிறைவேற்று அதிகாரம்; அடுத்தது திறந்த பொருளாதாரக் கொள்கை; மூன்றாவது இனவாதம். இந்த மூன்றுமே அவர் தனது அதிகாரத்தைத் தக்க வைக்கவும் நாட்டைத் தான் விரும்பிய பாதையில் கொண்டு செல்லவும் மூலாதாரமாக விளங்கின.

அவரின் பின் ஆட்சிக்கு வந்த ஆர்.பிரேமதாச, திருமதி சந்திரிகா விஜயகுமாரணதுங்க முதலியோர் மக்கள் மயப்பட்ட அரசியல் அடித்தளத்திலிருந்து வந்தபோதும் ஜே.ஆரின் பாதையில் முன் செல்லாவிட்டாலும், அதிலிருந்து விலகி வெளியே வந்துவிட முடியவில்லை.

ஆனால் அவர்களின் பின் ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ சகோதரர்கள் அதே ஆயுதங்களைக் கையிலெடுத்து ஜே.ஆர். பாணியிலான அரசியலை முன்னெடுத்தனர். ஆனால் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கதவுகள் மேற்குலகத்துக்குத் திறந்தன. ராஜபக்ஷவின் திறந்த பொருளாதாரக் கொள்கையோ சீனாவிடம் முற்றாகச் சங்கமித்தது.

ஆனால் ராஜபக்ஷ சகோதரர்கள் எந்த ஜே.ஆரின் மந்திரக் கோல்களை இறுகப் பற்றி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினார்களோ அதே மந்திரக் கோல்களே அவர்களுக்கு கழுத்தை நெரிக்குமளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இலங்கை சர்வதேச மேலாதிக்கப் போட்டியில் சிக்கித் தவிக்கும் நிலையில் எப்படி அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்வதென முடிவு செய்ய இயலாமல் ராஜபக்ஷ சகோதரர்கள் தடுமாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் இலங்கையின் பிரதான ஏற்றுமதி தேயிலை, இறப்பர் என்பனவாகவே இருந்தன. 1977இற்கு முன்பு இலங்கை அரசியலில் உறுதியான நடுநிலைமைக் கொள்கையைப் பின்பற்றியதுடன் சுயதேவைப் பூர்த்திப் பொருளாதாரக் கொள்கையில் வேகமாக முன்னேறியது. வெளிநாட்டு இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளுர் உற்பத்திப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது.

1977ல் ஜே.ஆர்.ஆட்சிக்கு வந்ததும் திறந்த பொருளாதாரக் கொள்கை அமுலுக்கு வந்து வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்கள் சந்தைக்கு வந்தன. அதன் காரணமாக வளர்ச்சியடைந்து வந்த தேசிய முதலாளித்துவ சக்திகள் நலிவடைய ஆரம்பித்தன. சுதந்திர வர்த்தக வலயம் உருவாக்கப்பட்டு அந்நிய முதலீடுகள் கூவி அழைக்கப்பட்டன. அதன் காரணமாக அந்நிய முதலீட்டுடன் கூடிய ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உருவாகின. அதன் பின்பு இலங்கையின் பிரதான ஏற்றுமதியாக தைக்கப்பட்ட ஆடைகள் மாறின. இலங்கையில் தைக்கப்பட்ட ஆடைகளுக்கு ஐரோப்பிய, அமெரிக்கச் சந்தைகள் திறந்து கொண்டன. அந்நிய முதலீட்டாளர்களைக் கவர்வதற்காக சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை சட்டப்படி தடை செய்யப்பட்டது. அடுத்து சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிக்கப்பட்டது. அதன் காரணமாகப் பல வெளிநாட்டு நிறுவனங்களின் நட்சத்திர ஹோட்டல்கள் பல நிறுவப்பட்டன. அவற்றால் இலங்கையில் பிரதான வருமானங்களில் ஒன்றாகச் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெற்றது.

இவற்றின் காரணமாக சுயதேவைப் பூர்த்தியை நோக்கி வளர்ச்சி பெற்ற இலங்கைப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து தங்கு நிலைப் பொருளாதாரமாக மாறியது. அதன் பலனாகத் தேசிய முதலாளித்துவம் இல்லாமற் போய் அது அந்நிய நிறுவனங்களுடன் இணைந்த தரகு முதலாளித்துவமாக மாறியது.

இப்படியான மாற்றத்துக்கு எதிரான சக்திகள் நிறைவேற்று அதிகாரம் மூலம் ஒடுக்கப்பட்டன. தேசிய முதலாளித்துவ சக்திகளுக்குத் தலைமை தாங்கிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க போன்றோரின் குடியுரிமைகள் பறிக்கப்பட்டன.

பொதுசன பாதுகாப்புச் சட்டம், பிரிவினைவாதத் தடைச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பன மூலம் தமிழ் மக்களின் ஜனநாயக வடிவிலான உரிமைப் போராட்டங்களுக்குத் தடை போடப்பட்டன. இனக் கலவரங்கள் மூலம் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவது மேற்கொள்ளப்பட்டது. ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவது என்ற பேரில் வகைதொகையின்றி தமிழ் மக்கள் வேட்டையாடப்பட்டனர்.

இவ்வாறு திறந்த பொருளாதாரக் கொள்கை, நிறைவேற்று அதிகாரம், இன ஒடுக்குமுறை போன்ற மந்திரக் கோல்களைப் பயன்படுத்தி ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனநாயகத்தின் பேரால் ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.

மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்பு அதே மூன்று மந்திரக் கோல்களையும் ராஜபக்ஷ சகோதரர்கள் கையிலெடுத்துக் கொண்டனர். 2006ல் விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சு முறிவடைந்த நிலையில் மீண்டும் போர் தொடங்கப்பட்டது. 2009ல் விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்ட நிலையில் வெற்றி வீரர்களாக சிங்கள மக்களின் அதிவீர நாயகர்களாகக் காட்டிக்கொண்டனர்.

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்பு இன்றுவரை பயங்கரவாத எதிர்ப்பு என்ற பேரில் தமிழ் மக்கள் மீது சகலவிதமான ஒடுக்குமுறைகளும் ராஜபக்ஷ தரப்பினரால் தொடரப்படுகின்றன. முஸ்லிம்கள் மீதான வன்முறைகள், அவர்கள் இன, மத, கலாசார நடைமுறைகள் மீதான தாக்குதல்கள் என்பன உயரிய மட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அதாவது ஜே.ஆர். எவ்வாறு இனக்காலவரங்கள் மூலமும் இராணுவ, பொலிஸ் அடக்குமுறைகள் மூலமும் இன ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டாரோ அதற்கு எவ்விதத்திலும் குறையாதவாறு ராஜபக்ஷக்கள் ஆட்சியிலும் அவை தொடர்கின்றன.

அதேவேளையில் நிறைவேற்று அதிகாரத்தின் பேரில் போர்க்குற்றவாளிகளாகக் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் உயர் அதிகாரப் பதவிகள் வழங்கப்பட்டு நிர்வாகம் இராணுவமயப்படுத்தப்படுகிறது. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட கொடிய குற்றமிழைத்தவர்கள் பொது மன்னிப்பில் விடுவிக்கப்படுகின்றனர். பல வழக்குகள் சட்டமா அதிபரால் வாபஸ் பெறப்படுகின்றன. அநீதிகளை இனம் கண்டு வெளிக்கொண்டுவந்தவர்கள் வெவ்வேறு குற்றச் சாட்டுக்களின் பேரில் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர்.

இவ்வாறு இனவாதம், நிறைவேற்று அதிகாரம், திறந்த பொருளாதாரக் கொள்கை என்பவற்றைக் கையில் எடுத்து ஒரு சர்வாதிகாரம், கொடுங்கோன்மை என்பவற்றை நோக்கிப் பயணித்த ராஜபக்ஷ சகோதரர்களை அதே மந்திரக்கோல்களே கழுத்தை நெரிக்க ஆரம்பித்துள்ளன.

இனவாத அடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரதான பேசுபொருட்களாகி விட்டன. போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கருதப்படுபவர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படவேண்டும். பயணத்தடைகள் விதிக்கப்பட்டு சொத்துகள் முடக்கப்படவேண்டும் போன்ற கருத்துகள் மேலெழ ஆரம்பித்துள்ளன. நிறைவேற்று அதிகாரத்தால் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் மனித குல விரோத நடவடிக்கைகளாக விஸ்வரூபம் எடுக்கும் நிலை தோன்றியுள்ளது. அவ்வகையில் மனித உரிமைகள் பேரவையில் 46/1 தீர்மானத்தின்படி இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பன தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணைக்கு ஏற்றவாறு சாட்சியங்கள், அவை தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றைத் திரட்ட ஐ.நா.மனித உரிமை ஆணையாளரால் நிபுணர் குழு அமைக்கப்படுகின்றது. இது எதிர்காலத்தில் இலங்கைக்கு சர்வதேச ரீதியான பலவித நெருக்கடிகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உண்டு.

இலங்கைத் துறைமுக நகரம், அம்பாந்தோட்டைத் துறைமுகம் என்பன சீனாவுக்கு வழங்கப்பட்டமையானது சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்திற்கும் இந்துசமுத்திர மேலாதிகத்திற்கும் சாதகமாகவே அமைந்துள்ளது.

எனவே இந்தியா இலங்கைத் துறைமுகத்தின் கிழக்கு முனைத்தினைப் பெற்றுக்கொள்ள கடும் முயற்சிகளை மேற்கொண்டபோதும் அது வெற்றியளிக்கவில்லை. தற்சமயம் மேற்கு முனையத்தை வழங்குவதன் மூலம் இலங்கை இந்தியாவைச் சமாளிக்க முனைகின்றது.

இன்னொருபுறம் வடக்கிலுள்ள தீவுகளில் மின்சார நிலையங்களை அமைக்க சீனா அனுமதிக்கப்பட்டமையும் இந்தியாவின் பாதுகாப்புக்குப் பாதகமாகவே கருதப்படுகின்றது.

இந்த இரு விடயங்களும் இந்தியாவுக்கும் இந்தியாவின் பாதுகாப்புக்கும் பாதகமானவை என இந்தியா கருதியபோதும் அது இவ்விடயங்களில் நேரடியாகத் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.

ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்பட்டபோது இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படாமல் நடுநிலைமை வகித்ததுடன் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்ற விடயத்தை அங்கு முன்வைத்ததன் மூலம் அதை சர்வதேச மயப்படுத்தியுள்ளது. அவ்வகையில் இந்தியா அதன்மூலம் இலங்கைக்கு ஒரு மறைமுகமான எச்சரிக்கை விடுத்துள்ளதென நம்பக்கூடியதாகவுள்ளது.

எனவே இந்தியா இலங்கை விவகாரங்களில் வெளிப்படையாக இல்லாவிடினும் அடிப்படையில் ஒரு இறுக்கமான போக்கையே கடைப்பிடிக்கின்றது.

எனவேதான் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் அதில் இலங்கைக்கு வழங்கப்பட்ட 18 மாத கால அவகாசமும் இலங்கை அரசாங்கத்தின் கழுத்திற்கு மேல் தொங்கவிடப்படும் சுருக்கயிறாகவே பார்க்கப்படுகின்றது.

ஆனால் இலங்கையின் நடவடிக்கைகள் மேலும் மேலும் சீனா பக்கம் சாய்வதாகவே அமைந்துள்ளது. அதிலிருந்து மீள முடியாதளவுக்கு இலங்கை சீனாவின் கடனாளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தியா மேற்கு நாடுகள் ஆகியவற்றின் அழுத்தங்கள் தொடர்ந்து அதிகரித்துச் செல்லவே வாய்ப்புகள் உண்டு.

எனவே ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நிறைவேற்று அதிகாரம், திறந்த பொருளாதாரக் கொள்கை, இன ஒடுக்குமுறை ஆகிய மந்திரக்கோல்கள் இப்போது ராஜபக்ஷ சகோதரர்களின் ஆட்சிக்கு சர்வதேச மட்டத்தில் மட்டுமின்றித் தேசிய அளவிலும் தடுமாறவைக்குமளவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளமை மறுக்கமுடியாத உண்மையாகும்.

அருவி இணையத்திற்காக : நா.யோகேந்திரநாதன்.

06.04.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE