Thursday 25th of April 2024 10:28:44 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஐபிஎல்-2021 ரீ-20 கிரிக்கெட் தொடர் இன்று சென்னையில் ஆரம்பம்!

ஐபிஎல்-2021 ரீ-20 கிரிக்கெட் தொடர் இன்று சென்னையில் ஆரம்பம்!


எட்டு அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல்.-2021 ரீ-20 கிரிக்கெட் தொடர் இன்று சென்னையில் ஆரம்பமாகின்றது.

இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராவிட்டாலும் ஐ.பி.எல். போட்டி மீண்டும் அதன் தாயகமான இந்தியாவுக்கு திரும்புகிறது.

இதன்படி 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மே 30-ந்தேதி வரை சென்னை, பெங்களூரு, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை கொண்ட ஆமதாபாத்தில் மே 30-ந்தேதி அரங்கேறுகிறது.

வழக்கமாக ஒவ்வொரு அணிக்கும் உள்ளூர் மைதானங்களில் 7 லீக் ஆட்டங்கள் நடத்தப்படும். இது தான் அந்த அணிக்கும் சாதகமான அம்சமாக இருக்கும். ஆனால் முதல்முறையாக இந்த சீசனில் எந்த அணிக்கும் தங்களது சொந்த ஊரில் போட்டிகள் கிடையாது.

ஐதராபாத், மொகாலி, ஜெய்ப்பூர் ஆகிய இடங்கள் இந்த முறை போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதனால் அந்த நகரங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஐதராபாத் சன்ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அதிருப்திக்குள்ளாயின. அவர்களை சரிகட்டுவதற்காக யாருக்கும் உள்ளூர் ஆட்டங்கள் இல்லாதவாறு போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் போட்டியை நடத்த வேண்டி இருப்பதால் வீரர்களின் அதிகமான போக்குவரத்தை தவிர்ப்பதற்காக போட்டி நடக்கும் இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. லீக் சுற்றின் போது ஒவ்வொரு அணிகளும் மொத்தம் 3 தடவை மட்டுமே மற்ற இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும்.

கொரோனா எதிரொலியாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை நேரில் பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த சீசனிலும் ரசிகர்களின் ஆரவாரத்தை பார்க்கும் வாய்ப்பு இல்லை. பூட்டிய மைதானத்திலேயே ஆட்டங்கள் நடக்க உள்ளன. கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு அதில் இணைந்துள்ள வீரர்கள் மற்றும் பயிற்சி குழுவினர், நிர்வாகிகள் எந்த காரணத்தை கொண்டும் கொரோனா விதிமுறைகளை மீறக்கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

வீரர்களுக்கு அடிக்கடி கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறை இந்த முறையும் தொடரும். எந்த வீரருக்காவது கொரோனா பாதிப்பு தென்பட்டால் உடனடியாக அந்த வீரர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இ்ந்தியன்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இரு அணிகளின் உத்தேச அணி வருமாறு:-

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, கீரன் பொல்லார்ட், ஜேம்ஸ் நீஷம், குருணல் பாண்ட்யா, நாதன் கவுல்டர்-நிலே அல்லது ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், முகமது அசாருதீன், டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், கைல் ஜாமிசன், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE