Friday 19th of April 2024 02:27:09 AM GMT

LANGUAGE - TAMIL
.
அமரர் ஊர்தி வாகனத்தினை ஆணையாளர் சேதப்படுத்தியதற்கான சகல அத்தாட்சியும் எங்களிடம் உண்டு! – ஜனா எம்.பி!

அமரர் ஊர்தி வாகனத்தினை ஆணையாளர் சேதப்படுத்தியதற்கான சகல அத்தாட்சியும் எங்களிடம் உண்டு! – ஜனா எம்.பி!


மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள மக்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இறக்கும்போது அவர்கள் உடலங்களை தமது வீடுகளுக்கு கொண்டு செல்வதற்காக இலவசமாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் முன்னெடுக்கப்பட்டுவரும் அமரர் ஊர்தியை, ஆணையாளர் சேதப்படுத்தியதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள மக்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இறக்கும்போது அவர்கள் உடலங்களை தமது வீடுகளுக்கு கொண்டு செல்வதற்காக இலவசமாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் முன்னெடுக்கப்பட்டுவரும் அமரர் ஊர்தியை பாதுகாப்பாக நிறுத்துவதற்காக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்ட குறித்த அமரர் ஊர்தி வாகனம் இன்று சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த வாகனத்தினை சேவைக்கு கொண்டுசெல்லமுடியாத வகையில் செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் ஜிகே அறக்கட்டளையின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜிகே அறக்கட்டளையின் ஊடாக இலவச அமரர் ஊர்தி சேவை கடந்த நான்கு வருடமாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் முன்னெடுக்கப்படுவதாகவும் இதுவரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடலங்கள் ஏற்றிச்சென்று வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சேவைக்கு மட்டக்களப்பில் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அவற்றினை பாதுகாப்பான முறையில் தரித்துவைப்பதற்காக மாநகரசபை முதல்வர் ஊடாக சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநகரசபையின் வாகன தரப்பிடத்தில் நிறுத்தவைக்கப்பட்டிருந்த வாகனத்தினை மாநகரசபையின் ஆணையாளர் அதனை சேதப்படுத்தி நகராமல்செய்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஜிகே அறக்கட்டளை 2017ஆம் ஆண்டு மனித நேய அடிப்படையில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு சேவையாற்றும் எண்ணத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் மரணிக்கும் ஏழை மக்களின் பூதவுடல்களை வீடுகளுக்கு எடுத்து செல்லவும் கிராமங்கள், எல்லைப்பகுதிகளில் யானை தாக்குதல்கள், அகாலமரணங்கள் ஏற்படும்போது அவர்களின் சடலங்களை பிரேதப்பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கும் அதனை மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு கொண்டு செல்வதற்கும் இந்த இலவச அமரர் ஊர்தி சேவை தொடங்கப்பட்டது.

சுமார் நான்கு வருடங்களில் சுமார் 1200க்கும் அதிகமான பூதவுடல்கள் ஏற்றப்பட்டுள்ளன. இதன் சேவை மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கும் இந்த சேவை விரிவடைந்திருக்கின்றது.

இலவச சேவையினை நாங்கள் மேற்கொண்டுவரும் நிலையில் இந்த சேவையினை தொழிலாக செய்வோரினால் இந்த ஊர்திக்கும் அதன் சாரதிக்கும் பல அச்சுறுத்தல்கள் கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ளது. அதனால் இரவு வேளைகளில் அந்த ஊர்திக்கு பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுகின்றது.

வறிய மக்களின் தேவைக்காக பயன்படுத்தப்படும் அந்த ஊர்திக்கு ஏதாவது நேர்ந்தால் இந்த சேவையினை நாங்கள் தொடரமுடியாது என்ற அடிப்படையில் இரவு வேளைகளில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மத்தியில் பாதுகாப்பு கமராக்களுக்கு மத்தியில் மாநகரசபையின் வாகன தரிப்பிடம் உள்ளதன் காரணத்தினால் ஏழை மக்களுக்கு சேவை செய்யும் வாகனத்தினை பாதுகாக்கும் வகையில் இரவு நேர அனுமதியை தருமாறு மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களிடம் கோரியிருந்தோம்.

அதற்காக நாங்கள் விடுத்த வேண்டுகோள் தொடர்பில் மாநகரசபையின் அமர்வில் விவாதிக்கப்பட்டு 38 உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் குறித்த ஊர்தியை பாதுகாத்து வழங்கவேண்டும் என்ற தீர்மானத்திற்கு அமைவாக மாநகரசபையின் தரிப்படத்தில் அமரர் ஊர்தி நிறுத்தப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்னர் மாநகரசபையின் புதிய ஆணையாளராக மா.தயாபரன் பொறுப்பேற்றிருந்தார். அவர் பொறுப்பேற்ற காலம் தொடக்கம் பல தடைகளையும் பல இடையூறுகளையும் அமரர் ஊர்திக்கு ஏற்படுத்திவந்தார்.

இறுதியாக நேற்று முன்தினம் இரவு அந்த ஊர்தி அங்கு நிறுத்தப்பட்டிருக்கும்போது இரவு வேளையில் சென்ற மாநகர ஆணையாளர் ஊழியர்களைப் பயன்படுத்தி உடைந்த கல், மண், கட்டிட கழிவுகள் கொண்டு வாகனத்தினை நகராதவாறு செய்துள்ளார். அதுமட்டுமன்றி அந்த வாகத்தில் இலவச அமரர் ஊர்தி, ஜிகே அறக்கட்டளை என்று எழுதப்பட்டிருந்த வாசகங்கள் எல்லாம் சேதமாக்கப்பட்டுள்ளது.

எங்களது அறக்கட்டளைக்கு சொந்தமான இந்த வாகனத்தினை எங்களது அனுமதியின்றி சேதப்படுத்தியுள்ளார். இந்த செயற்பாட்டினை ஆணையாளர் முன்னின்று நடாத்தியதற்கான சகல ஆதாரங்களும் எங்களிடம் இருக்கின்றது. இந்த வாகனத்தினை மாநகர முதல்வரிடமும் உறுப்பினர்களிடமும்தான் நாங்கள் பாரப்படுத்தியிருந்தோம்.

இன்று ஜிகே அறக்கட்டளையின் நிர்வாகக்கிளை கூடியது. அதில் சிலமுடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற வாகன தரிப்பிடத்தல் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் சேவைக்கு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது. இன்றும் கூட புல்லுமலை பகுதியில் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்ப பெண் ஒருவர் வறுமையினால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடலத்தினை வைததியசாலைக்கு கொண்டுவரமுடியாத நிலையில் நாங்கள் மிகவும் கவலையுடன் இன்று உள்ளோம். மாநகரசபை முதல்வர் ஆணையாளரின் செயற்பாட்டுக்கு என்ன நடவடிக்கையெடுக்கப்போகின்றீர்கள் என்பதை கேட்டு கடிதம் எழுதவுள்ளோம். அதனை தொடர்ந்து சட்ட நடவடிக்கைக்கு செல்ல தயாராகயிருக்கிறோம்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE