Monday 20th of September 2021 01:34:35 AM GMT

LANGUAGE - TAMIL
.
இன ஒடுக்குமுறையால் முற்றுகையிடப்படும் புதிய அரசியலமைப்பு! - நா.யோகேந்திரநாதன்!

இன ஒடுக்குமுறையால் முற்றுகையிடப்படும் புதிய அரசியலமைப்பு! - நா.யோகேந்திரநாதன்!


'இலங்கையின் நான்காவது அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான முன்வரைவைத் தயாரிக்கும் முகமாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்னிலையில் பல்வேறு தரப்பினரும் சாட்சியங்களை வழங்கியும் அறிக்கைகளைச் சமர்ப்பித்தும் வருகின்றனர். அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், மத நிறுவனங்கள் என்பன தொடர்ந்து தங்கள் ஆலோசனைகளைச் சமர்ப்பித்து வருகின்றன.

அவ்வகையில் கடந்த வாரம் இலங்கையின் முக்கிய பிரிவினாக்களின் மகாநாயக்க தேரர்கள் வழங்கிய சாட்சியங்களும் அவற்றின் இன ஒடுக்குமுறைக்கான வலிமையான நோக்கங்களும் உற்று நோக்கப்பட வேண்டியனவாயுள்ளன. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெத்கமுவ நாலக தேரர், சிறிரோஹண பீடத்தைச் சேர்ந்த மோரே கஸ்ஸப்ப தேரர், எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் வழங்கிய சாட்சியங்களின்போது இலங்கை முழுவதும் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கவேண்டுமெனவும் தமிழ், ஆங்கிலம் என்பன இரண்டாவது மொழியாகவே பயன்படுத்தப்படவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் ஒற்றையாட்சி உறுதியாகப் பாதுகாக்கப்படவேண்டும் எனவும், அதிகாரப் பகிர்வு அனுமதிக்கப்படக்கூடாதெனவும் நாட்டின் பெயர் சிங்கள இனத்தை மட்டும் குறிப்பிடத்தக்கதாக அமைய வேண்டுமெனவும் நாட்டில் உள்ளுராட்சித் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பன மட்டுமே நடத்தப்படவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். அதாவது மாகாண சபைத் தேர்தலுக்கு இடமளிக்கக்கூடாது. அதேபோன்று சியரல்ல சோபித தேரர் மாகாண சபைகளால் அரசாங்கத்துக்கு வீண் செலவெனவும் அவற்றுக்கான தேர்தல்கள் நடத்தப்படக்கூடாதெனவும் தெரிவித்துள்ளார். இன்னொருபுறம் முத்தெட்டுவ ஆனந்த தேரர் கஸ்ஸப்ப தேரர், விமலஜோதி தேரர் ஆகியோர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் மாகாண சபைகள் ஒழிக்கப்படவேண்டுமெனவும் அவற்றுக்கான தேர்தல்கள் நடத்தப்படக்கூடாதெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இவற்றை நாம் வெறுமனேயே இனவாத, மதவாதிகளின் கருத்தாக ஒதுக்கி விடமுடியாது. ராஜபக்ஷ தரப்பினர் தாங்கள் விரும்பும், மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் மக்களின் கோரிக்கைகளாக எழுச்சி பெற்றவை என்பதை நம்ப வைக்க சில பௌத்த தேரர்களையும் பௌத்த மத பீடங்களையும் கடந்த காலத்தில் பயன்படுத்தியமையைக் கவனத்தில் எடுக்காமல் விட முடியாது. இத்தகையவர்களின் கருத்துகள் சிங்கள மக்கள் மத்தியில் இன ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் ஒரு கருத்தியலைச் சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கும். எனவே ராஜபக்ஷ குழுவினரின் நோக்கங்கள் உருமாற்றம் பெற்றுச் சிங்கள மக்களின் அபிலாஷைகளாக வெளிப்படும்.

தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக் கருத்தியல் எல்லாவல்ல மெத்தானத் தேரர் அணியினராலும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக் கருத்தியல் ஞானசார தேரர் தலைமையிலான பொதுபலசேனவாலும் எவ்வாறு சிங்கள மக்கள் மத்தியில் மக்கள் மயப்படுத்தப்பட்டன என்பதை நாமறிவோம்.

எனவேதான் ஒரு சிங்கள பௌத்த, ஏனைய இனங்களை அரசியலமைப்பு ரீதியாக அடிமைகளாக மாற்றக்கூடிய ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முற்தயாரிப்பு நடவடிக்கைகளாகவே இவற்றைப் பார்க்க வேண்டியுள்ளது.

இப்புதிய அரசியலமைப்புத் தொடர்பாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தற்போது அமுலில் உள்ள அரசியலமைப்பு அமுலுக்கு வந்து 43 வருடங்கள் கடந்து விட்டன எனவும் காலமாற்றத்திற்கு ஏற்றவாறு ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்க வேண்டியதேவை எழுந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். இந்த 43 ஆண்டுகள் காலப்பகுதியில் இந்த அரசியலமைப்பு 20 திருத்தங்களைக் கண்டுவிட்டது. இந்த 20 திருத்தங்களாலும் கூட அவர்களின் காலமாற்றத்துக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியவில்லை என்பது ஒரு வியப்புக்குரிய விடயம்தான்.

இன்று உலகின் மிகப் பெரிய வல்லரசுகள் எனக் கருதப்படும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிலும் பிராந்திய வல்லரசான இந்தியாவிலும் காலமாற்றம் எவ்வாறு ஏற்பட்ட போதிலும் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து ஒரே அரசியலமைப்பே இன்றுவரை எவ்வித மாற்றமுமின்றி அமுலில் இருந்து வருகின்றது. ஆனால் சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகளுக்குள் மூன்று அரசியலமைப்புகளைத் தூக்கியயெறிந்துவிட்டு நான்காவது அரசியலமைப்பை உருவாக்கத் தயாராகிறது.

கடந்த காலங்களில் அமுலிலிருந்த எந்த ஒரு அரசியலமைப்பும் தமிழ் மக்களுக்கும் பாதுகாப்பானதாக இருக்கவுமில்லை தமிழ் மக்கள் இலங்கையின் தேசிய இனம் என்ற வகையில் தமிழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படவும் இல்லை. அதுமட்டுமின்றி 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புகள் தமிழ் மக்களின் ஆதரவின்றியே நிறைவேற்றப்பட்டன.

தமிழ் தலைமைகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இலங்கையின் முதலாவது அரசியலமைப்பான சோல்பேரி அரசியலமைப்பில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கென 29வது சரத்து செனட் சபை, நியமன உறுப்பினர்கள் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த அரசிலமைப்பு அமுலில் இருந்தபோதே 6 இலட்சம் மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட அவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர். 1956ல் தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் தமிழ் மக்களின் மொழியுரிமை பறிக்கப்பட்டது. எனவே தமிழ்த் தலைவர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட முதலாவது அரசியலமைப்பும் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பை வழங்கவில்லை.

1972ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சிங்களம் மட்டும் இலங்கையின் ஆட்சி மொழி என்பதையும் பௌத்தத்துக்கு முதலிடம் என்பதையும் அரசியலமைப்பு ரீதியாக உறுதி செய்தது. அது தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக அரசியலமைப்பு மூலம் உறுதி செய்தது. அதைத் தமிழ் மக்கள் முற்றாகவே நிராகரித்திருந்தனர்.

1978ம் ஆண்டின் அரசியலமைப்பு சிங்களம் மட்டும் பௌத்தத்துக்கு முதலிடம் என்பவற்றைக் கொண்டிருந்ததோடு பிரிவினைவாதத் தடைச் சட்டம்> பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சட்டபூர்வமாக தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை மேற்கொள்ளக்கூடிய சட்டங்களை உருவாக்கக் களமமைத்தது.

அதாவது இதுவரை அமுலிலிருந்த மூன்று அரசியலமைப்புச் சட்டங்களும் தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக்கும் வகையிலும் தமிழ் மக்களின் மொழி, வதிவிட, பொருளாதார, குடியியல் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் தமிழ் மக்கள் மீதான மனிதாபிமானமற்ற ஒடுக்குமுறைகளை மேற்கொள்ளும் வகையிலும் அமைந்திருந்தன என்பதை மறுத்துவிடமுடியாது.

அதேவேளையில் 2015ல் ஆட்சி பீடமேறிய மைத்திரி, ரணில் தலைமையிலான நல்லிணக்க அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கியது. அதிலும் பௌத்தத்துக்கு முதலிடம் என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றுக்கொண்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு என்ற சரத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிலாவது அரசியலமைப்பு மூலம் உரிமைகள் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இழுத்துப் பறித்து ஆக்கபூர்வமான நகர்வு எதுவும் ஏற்படாத நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறியது. அத்துடன் அதுவும் கைவிடப்பட்டது. அதிகாரப் பகிர்வு சாத்தியமில்லை என்பது தெரிந்த நிலையிலும் தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றியது. ஆனால் ஒரு கட்டத்தில் அது அரசியலமைப்பின் முன் வரைவு அல்லவெனவும் அது ஒரு ஆலோசனை அறிக்கை மட்டுமே என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அதிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியினர் கூட மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பரவலாக்கம் கொண்ட அரசியலமைப்பை உருவாக்குவதில் விசுவாசமாக இருக்கவில்லையென்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

இதில் முக்கிய விடயமென்னவெனில் இலங்கையில் அரசியலமைப்புகள் நிறைவேற்றப்படும்போது நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்களின் அடிப்படையிலல்லாது ஆட்சி அதிகாரத்திலுள்ள தரப்பினரின் நலன்களின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டன.

அவ்வகையில் ஆட்சிகள் மாறும்போது அரசியலமைப்புகள் மாற்றப்பட்டன. ஆனால் ஒவ்வொரு அரசியலமைப்பிலும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை மட்டும் மாற்றமின்றி அதே தடத்தில் அதிகரிக்கப்பட்டே வருகிறது.

அவ்வகையில் தற்சமயம் உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு தமிழ், முஸ்லிம் மக்களின் மீதான ஒடுக்குமுறைகளை வலுப்படுத்தும் வகையிலும் அவற்றை முன்னெடுத்துச் செல்ல இராணுவ மயப்பட்ட அரசியலதிகாரத்தை உருவாக்கும் வகையிலுமே அமையக்கூடிய அறிகுறிகள் தெளிவாகவே தெரிகின்றன.

அதேவேளையில் அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர் குழுவிடம் தமிழ் அரசியல் தலைமைகள் சில ஆலோசனைகளை முன் வைத்திருந்தனர். அவை தொடர்பாக அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வல, பொதுசன பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோர் சுமந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோரின் நாட்டைப் பிரிக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்படாதெனத் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமின்றி அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அரசாங்கத்துடன் பேசத் தயார் என அறிவித்த நிலையில் அதற்குப் பதிலளித்த ஹெகலிய ரம்புக்வல தாங்கள் எவருடனும் பேசத் தயார் எனவும் ஆனால் ஒற்றையாட்சியில் மாற்றம், ஒருமித்த நாடு, வடக்கு, கிழக்கு இணைப்பு என்பன பற்றிப் பேசத் தயாரில்லையெனவும் தெரிவித்தார். தமிழ் மக்களின் மிகக் குறைந்த பட்சக் கோரிக்கைகள் தொடர்பாகக் கூடப் பேசத் தயாரில்லையென அவர் தெரிவித்திருப்பதன் மூலம் அவர்களின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

எனவே புதிய அரசியலமைப்பு எப்படி உருவாகும் என்பதும் அவர்களிடமுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் அது நிறைவேற்றப்படும் என்பதும் தெளிவாகத் தெரியும் நிலையில் தமிழ்த் தலைமைகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுகிறது.

நாம் எமக்கும் எதிரிகளுக்குமிடையேயுள்ள முரண்பாடுகளையும் எதிரிகளுக்குமிடையேயுள்ள முரண்பாடுகளையும் சரியாக இனங்கண்டு அவற்றுக்கேற்ற வகையில் நாம் ஐக்கியப்படக் கூடிய சக்திகளை ஐக்கியப்படுத்தி எமது இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்பது மாக்ஸியத் தத்துவமாகும்.

ஏப்ரல் 21 தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியைக் குற்றவாளியாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் காரணமாக ஆட்சியாளர்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையே கசப்புணர்வு வளர்ச்சியடைந்து வருகிறது. அதேபோன்று முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் ஒடுக்குமுறைகள் காரணமாக முஸ்லிம் தலைமைகள் அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டிலுள்ளன.

எனவே தமிழ் தலைமைகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர்> முஸ்லிம் தலைமைகள், ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. ஆகியோரை ஒரு பொது உடன்பாட்டின் அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதைத் தடுக்கமுடியும். இதில் திருமதி சந்திரிகா விஜயகுமாரணதுங்க> மங்கள சமரவீர ஆகியோர் பாரிய ஒத்துழைப்பை வழங்குவார்கள்.

ஆனால் தமிழ் தலைமைகள் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவார்களா அல்லது ஒருவரையொருவர் குற்றம் சாட்டி அறிக்கைகளை வெளியிட்டுவிட்டு, அரசியலமைப்பு நிறைவேறிய பின்பு அதை வைத்து தேர்தல் வியாபாரம் நடத்துவார்களா என்பதுதான் தமிழ் மக்களிடம் எழும் கேள்வியாகும்.

அவ்விடயத்தில் தமிழ் மக்களுக்கு சாதகமான பதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் இதுவரை தென்படவில்லை.

அருவி இணையத்திற்காக - நா.யோகேந்திரநாதன்

13.04.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE