Tuesday 23rd of April 2024 06:05:16 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கை - இந்திய புவிசார் அரசியலுக்குள் அகப்பட்டுள்ள வடக்கு மீனவர் பிரச்சினை!

இலங்கை - இந்திய புவிசார் அரசியலுக்குள் அகப்பட்டுள்ள வடக்கு மீனவர் பிரச்சினை!


இலங்கை - இந்திய உறவினை தீர்மானிக்கும் பிரதான அம்சமாக அமைந்திருப்பது அமைவிடமாகும். அதனை என்னும் இலகுவாகக் குறிப்பிடுவதானால் புவிசார் அரசியல் எனலாம். இரு நாட்டுக்குமான உறவினை புவிசார் அரசியல் வரையறுக்க முயலுகிறது. அதாவது இலங்கை -இந்திய தரையமைப்பு மட்டுமல்ல கடல் பரப்பும் அது அமைந்திருக்கின்ற இந்து சமுத்திரமும் பிரதான இடம்பெறுகிறது. கடலால் பிரிக்கப்பட்டடிருந்தாலும் இரு நாடும் கலாசார பண்பாட்டு தளத்தில் அதிக பிணைப்பினைக் கொண்டுள்ளன. அதனால் அரசியல் மற்றும் இராணுவ விடயங்களில் இந்தியாவும் இலங்கையும் பரஸ்பரம் ஒன்றிணைந்து செயல்படுவதையே இந்தியத் தரப்பு கருதுகிறது. அவ்வாறு இலங்கைத் தரப்பு விலகிய போதெல்லாம் அதிகமான நெருக்கடியை இலங்கை கடந்த காலத்தில் எதிர் கொண்டிருகிறது. சமகாலத்தில் அதற்கான வாய்ப்பு குறைவாக தெரிந்தாலும் மாலைதீவுடனான இந்தியாவின் நடவடிக்கைகள் இலங்கை விடயத்திலும் கவனிக்கப்பட வேண்டியுள்ளதாகவே தெரிகிறது. இக்கட்டுரையும் இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை சார்ந்த தேடலாக அமையவுள்ளது.

முதலில் இந்திய -இலங்கை கடல்பரப்பானது சர்வதேச விதிகளுக்கு அமைவானதாக வகைப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டத்திற்கு அமைவாக(UNCLOS) செயல்படுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இரு நாட்டு உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளன.(1974/1976/1977). குறிப்பாக 32 கி.மீ இடைவெளியால் பிரி;க்கப்பட்டு;ள்ள இரு நாடுகளும் மன்னார் வளைகுடாவையும் பாக்கு நீரிணையையும் வங்காளவிரிகுடாவையும் அடிப்படையாகக் கொண்டு புரிந்துணர்வை ஏற்படுத்தியுள்ளன.அத்தகைய உடன்பாட்டின் அடிப்படையிலேயே இரு நாட்டுக்குமான கடல் எல்லை வரையறுகட்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தகைய நடைமுறைகளை எல்லாம் கருத்தில் கொள்ளும் போது குழப்பமான விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டிய நிலையேற்பட்டு;ள்ளளது.குறிப்பாக இந்திய மீனவர்களது அத்துமீறல் நிகழ்வதாகவும் இலங்கையின் வடக்கு கடல்பரப்பிலேயே அதிக மீன்பிடி அத்துமீறல் நிகழ்வதாகவும் மீனவ தொழில் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. அத்தகைய குற்றச்சாட்டுகளை ஆதாரப்படுத்தும் தகவல்கள் அதிகமாக வெளிவருகின்றன. அதில் மிக வலுவான தகவலாக சற்ரலைற் மூலமான வீடியோக்களும் படங்களும் நிலமையை தெளிவுபடுத்துகின்றன. அதாவது இரவு 1 மணிக்கு பின்பு வடக்கின் கடல் பகுதியை நோக்கி நகரும் மீன்படி ரோளர்கள் அதிகாலை 4 மணியளவில் இப்பிரதேசத்தை விட்டு கடந்து செல்கின்றன என்பதாகும். அத்தகைய மீன்பிடி ரோளர்கள் எவையும் உடன்பாட்டின் எல்லையையோ கட்டுப்பாட்டு பகுதியையோ பின்பற்றுவதில்லை. வடக்கின் கடல் பகுதி முழுவதும் 1-4 மணிவரையும் ரோளர்கள் நடமாடுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதனால் பாரிய இழப்பீடு வடக்கு மீனவர்களுக்கும் கடல்பகுதிக்கும் ஏற்படுவதென்பது யாருமே அறிந்த விடயம். அதனைக் கடந்து இந்த விடயத்தில் தெளிவான அரசியல் நிலவுவதைக் காணமுடிகிறது.

ஒன்று வடக்கு மீனவர்கள் மிக நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கவனத்தில் கொள்வதனை விடுத்து அவர்களை அரசியல் ரீதியில் கையாள அரசியல் தலைமைகள் முயலுகின்றன. இதனால் மீனவ தொழில் சங்கங்கள் இந்திய மீனவர்களின் நடவடிக்கைக்கு எதிராக பாரிய பேராட்டங்களை மேற்கொண்டு எதிர்ப்பு வாதத்தை ஏற்படுத்துகின்றனர். அத்தகை அரசியலில் இரு பிரதான நன்மைகள் அரசியல் தலைமைகளுக்கு உண்டு அதாவது உள்நாட்டில் வாக்குகளை திரட்டுவதுடன் இந்திய எதிர்ப்பு வாதத்தை ஏற்படுத்தி முற்றாகவே பகைப்புலமுடையவர்களாக இரு தரப்பினையும் உருவாக்குவதாகவுள்ளது. அதாவது வடக்கு தமிழ் மீனவர்களையும் தமிழக மீனவர்களையும் முரண்பாடுடையவர்களாக மாற்றுவதில் உள்ள அரசியலை பயன்படுத்திக் கொள்ள அதிக முனைப்புக்கள் காணப்படுகின்றன.இது தனித்து தமிழக வடக்கு மீனவர் விடயமாக மட்டும் அமையாது அது இந்தியளவில் பிரதிபலிக்கக் கூடிய விடயமாகவும் அமைந்துள்ளது.தமிழருக்கம் இந்தியாவுக்குமான உறவையும் இதில் கருத்தில் கொள்வது அவசியமானது.அது ஏற்கனவே சிதைந்து போயுள்ளது அதனை மேலும் சிதைக்க முயல்வது ஆபத்தான அரசியல் எதிர்காலத்தை ஏற்படுத்தக் கூடியது. அதனைத் தவிர்ப்பது அவசியமானது.

இரண்டு இந்திய மீனவர்களுக்கும் தமிழருக்குமான முரண்பாடு என்ற கோணத்தில் இந்த விடயத்தை அணுகுவதனையே அவதானிக்க முடிகிறது. இலங்கையின் இறைமை என்பது தென் இலங்கை மீறப்படுவது மட்டுமல்ல. வடக்கும் கிழக்கும் இலங்கையின் இறைமைக்குட்பட்டதே.வடக்கு கிழக்கில் அல்லது வடக்கில் மீறப்படுவதென்பதும் இலங்கையின் இறைமை மீறப்படுவதாகவே கருதப்பட வேண்டும். ஏனைய பிரதேசங்களில் காட்டப்படும் அக்கறை வடக்கில் காட்டப்படாதது மட்டுமல்ல ஏனைய விடயங்களில் வடக்கின் மீது செலுத்தப்படும் கவனம் மீனவர் விடயத்திலும் காட்டப்படாதது பற்றிய கேள்விகள் தவிர்க்க முடியாததே. வடக்கின் மீது எந்த அரசும் எதனை மேற்கொண்டாலும் வளங்கள் சுரண்டப்பட்டாலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலும் அது இறைமையாகக் கொள்ளபட முடியாததா என்ற கேள்வி நியாயமானதாகவே எழும். இத்தகைய எல்லையற்ற வளச்சுரண்டல் வடக்கை மட்டுமல்ல இலங்கையையும் பாதிப்பதுடன் முழுப்பிராந்தியத்தையும் பாதிப்புக்குள்ளாக்கும் என்பதை அரசியல் தலைமைகள் உணர வேண்டும்.இந்தியாவுடனான மீனவர் பிரச்சினையை அரசுகள் சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளலாம். அதற்கான சட்ட உடன்படிக்கைகளும் எல்லையில் நிறுத்த கடற்பலமும் இறைமை படைத்த அரசிடம் உண்டு. ஆனால் அதனை மேற்கொள்ள தவறுவதற்கான காரணம் புவிசார் அரசியல் மட்டுமன்றி வடக்கின் மீதான அணுகுமுறையுமாக அமைய வாய்ப்புள்ளது.இவ்வகை வாய்ப்புக்கள் இருக்கும் போது இந்திய மீனவர்களை கைது செய்வது மீள விடுவிப்பது ஒர் அரசியலாக்கியுள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

மூன்றாவது இந்தியாவின் நலனுக்கு எதிராக வடஇலங்கை வேறு அரசுகளால் பயன்படுத்தப்படுவதனை இந்தியா அனுமதிப்பது கடினமானதே. காரணம் இந்திய நலன்களுக்குள் இலங்கையின் ஏனைய பிரதேசங்களை விட வடக்கு நேரடியாக செல்வாக்குச் செலுத்துகிறது. அதிலும் வடபகுதியின் கடல் பிராந்தியம் மற்றும் தீவுகள் இந்தியக் கரையோரத்திலிருந்து 32 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளன. சீனாவின் செல்வாக்கு தீகளை நோக்கி நகர இந்தியாவும் தீவுகளை தனது செல்வாக்குக்குள் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள முனையும். கச்சதீவு தொடர்பில் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் கூறும் அரசியலை விட மத்திய அரசு எடுக்கும் முடிபுகளே முக்கியமானது. மத்திய அரசு தமிழ் நாட்டின் நலன் என்பதை விட இந்திய தேசிய நலனுக்குள்ளேயே கச்சதீவைப் பற்றிய முடிபுகளை மேற்கொள்ளும். தமிழகத்தில் பா.ஜக. அ.தி.மு..க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பு தமிழகத் தேர்தலில் சாத்தியமாகுமானால் கச்சதீவு மத்திய மாநில அரசுகளின் கூட்டு நகர்வாக அமைய வாய்ப்பு;ளளது. அப்போது மத்தியினதும் மாநிலத்தினதும் நலன்கள் ஓரிடத்தில் சந்திக்கும் நிலை ஏற்படும். எது எவ்வாறு அமைந்தாலும் இப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கே அதிக மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

நான்காவது கச்சதீவு மற்றும் மீனவர் பிரச்சினை என்பனவற்றுடன் 13 வது திருத்த சட்டமும் நிலையான அரசியலை இந்தியாவுக்கு ஏற்படுத்தக் கூடியது. அதனால் அதன் தொடர்ச்சியை பேணுவதும் நிலையானதாக மாற்றுவதும் இந்தியாவுக்கு அவசியமானது. இவற்றின் மூலமே இந்தியாவின் செல்வாக்கு மட்டுமல்ல நலன்களும் பாதுகாக்கப்படும். அதனால் இலங்கை தனது பவிசார் நண்பர்களுடன் வைத்துக் கொள்ளும் நட்புறவில் இந்தியா முதன்மை என்பதை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமானதாக உள்ளது. வெறும் வார்த்தைகளால் மட்டுமல்ல நடைமுறையிலும் அதனைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.அதனைக் கருத்தில் கொள்ள தவறும் போதெல்லாம் இலங்கை-இந்திய நட்புறவில் நெருக்கடி ஏற்ப்படுவது அவதானிக்க முடிகிறது.

ஐந்தாவது இது மீனவர் பிரச்சினையாக மட்டும் கருத முடியாது. அதனுடன் கடத்தல் மிகப்பிரதான விடயமாக மாறியுள்ளது. அதில் போதைப் பொருள் முதன்மையானதாக உள்ளதுடன் கடந்த காலத்'தில் ஏற்பட்டிருந்த தீவிரவாத மற்றும் ஆயுதக் கடத்தலும் நிகழ வாய்ப்புள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலும் அத்தகைய உரையாடல் ஒன்று ஆரம்பத்தில் முதன்மைப்படுத்தி செய்திகள் வெளியாகியிருந்தன. இலங்கை முழுவதிலும் போதைப் பொருள் தடுப்பது மிகப் பெரும் சவாலாகியுள்ளது.

அத்தகைய போதைப் பொருள் கடத்தலுக்கு கடல்பகுதி முக்கிய பிரதேசமாக உள்ளது. அதிலும் வடபகுதிக் கடல்பகுதி அதிக பரிமாற்றம் நிகழும் கடல் பகுதியாக தெரிகிறது. ஆரம்பத்தில் வடக்கை பாதித்த போதைப் பொருள் பாவனை தற்போது தெற்கையும் மோசமாகப் பாதித்து வருகிறது.

எனவே வடக்கு மீனவர் பிரச்சினைக்கான தீர்வு அரசியலாக்கப்படுவதை விடுத்து வளப்பகிர்வுடனும் வாழ்வாதாரத்துடனும் இணைக்கப்பட வேண்டும். ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களும் எதிர்தரப்பினரும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏறக்குறை அனைத்துப் பிரச்சினைகளையும் அரசியலாக்குகின்றனரே அன்றி அதற்கான அடிப்படைக்கு தீர்வை நோக்க தவறுகின்றனர். அவ்வாறு அரசியலாக்கப்படுவதும் தமது நலனுக்கானதாகவே தெரிகிறது. தமது வாக்கினையும் கட்சியின் வாக்கினையும் மட்டுமே இலக்காகக் கொள்கின்றனாரேயன்றி மக்களின் அரசியல் சமூக பொருளாதார விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தெரியவில்லை. இதுவே இலங்கையின் கடல்பரப்பிலும் நிகழ்கிறது. இரு நாட்டுக்குமான புவிசார் அரசியல் நகர்வில் மீனவர் பிரச்சினை மட்டுமல்ல அனைத்து பிணக்குகளும் அரசியலாகின்றதே அன்றி தீர்வாக எதுவும் எட்டப்படமுடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. அரசியல் அனைத்திலும் பிரதிபலிக்கப்படுவதாக உள்ளது தவிர்க்க முடியாததது. அதுவே உலகத்தை தலைமை தாங்குகிறது. ஆனால் அதன் உண்மைத் தன்மை அதன் ஆரோக்கியத்தில் தங்கியுள்ளதே அன்றி பலவீனத்திலல்ல.

பலவீனத்திற்காக பயன்படுத்தப்படுவது எதுவம் அரசியலாகாது. அதனை அரசறிவிலாகக் கொள்ளவும் முடியாது.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE