Thursday 28th of March 2024 09:13:23 PM GMT

LANGUAGE - TAMIL
.
மாற்றுச் சமூகம் தமிழர்களை ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும்! பா. உறுப்பினர் த.கலையரசன்!

மாற்றுச் சமூகம் தமிழர்களை ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும்! பா. உறுப்பினர் த.கலையரசன்!


எமது இனம்சார்ந்த அரசியலை எமது உறவுகள் மத்தியில் நாங்கள் உருவாக்காவிட்டால் மாற்றுச் சமூகம் எங்களைக் கூறுபோட்டுத் துண்டாடி எம்மை ஆக்கிரமிக்கக் கூடிய ஒரு நிலைமையே ஏற்படும். எம்மை இன்னும் ஏமாற்றுகின்ற விடயங்களுக்கு எமது மக்கள் இடம்கொடுக்கக் கூடாது என அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் அவர்களின் ஏற்பாட்டில் புலம்பெயர் தேச உறவுகளின் அனுசரணையில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள், வறிய குடும்பம் ஒன்றிக்கு தையல் உபகரணம், திருச்சபைக்கு குதிரைகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் இந்த கருத்தினை முன்வைத்தார்.

எமது உறவுகள் சிறப்பாக வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் தான் நமது புலம்பெயர் உறவுகள் சிலர் எமக்கான உதவித் திட்டங்களைச் செய்து வருகின்றார்கள். அதனைக் கொண்டு நாங்களும் எதிர்காலத்திலே முயற்சியுள்ளவர்களாகச் செயற்பட வேண்டும். எமது சமூகத்திலே மிக மோசான சிந்தனையொன்றுள்ளது. முயற்சி என்பது மிகக் குறைவு ஏதேனும் கிடைக்குமா என்ற சிந்தனையுள்ளவர்களே அதிகமாக இருக்கின்றார்கள். இந்த நிலைமை மாற வேண்டும்.

நாங்கள் கடந்த காலங்களிலே பல உதவித் திட்டங்களைச் செய்துள்ளோம். ஆனால் அரசினால் வழங்கப்பட வேண்டிய பல உதவித் திட்டங்கள் எமக்குப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குடிநீர்ப் பிரச்சினை முற்றுமுழுதாகத் தமிழர் பிரதேசங்களிலே புறக்கணிக்கப்பட்ட ஒரு விடயம். ஆனால் எங்களுடைய முயற்சியால் நான் பாராளுமன்றம் சென்ற பிற்பாடு எமது கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களுடன் உரிய அமைச்சரிடம் நேரடியாகச் சென்று இவ்விடயம் தொடர்பில் ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தோம். அதன் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் அம்முயற்சிகள் வெற்றியடையக் கூடிய நிலைமை காணப்படுகின்றது. பலரும் பலவாறு பேசலாம். ஆனால் எமது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், முன்னேற்றங்கள் காணப்பட்டும் இருக்கின்றன.

அம்பாறை மாவட்த்திலே பொத்துவில் பிரதேசம் தமிழர் நிலப்பரப்பின் எல்லையாக இருக்கின்றது. இங்கு எமது மக்களின் காணி தொடர்பான பல விடயங்கள் இருக்கின்றன. இது தொடர்பிலும் நாங்கள் எமது முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அந்தக் காணி விடயங்களைத் தீர்ப்பதற்குரிய பணிகளையும் முன்னெடுத்திருக்கின்றோம். நிச்சயம் எதிர்காலத்தில் அதுவும் வெற்றியளிக்கும் என்று நம்புகின்றோம்.

தமிழ்த் தேசியம் என்று சொல்லப்படுகின்ற தூய்மையான அரசியலை முன்னெடுக்கின்ற அரசியல்வாதிகளால் மாத்திரமே எமது மக்களின் பிரச்சினை குறித்தான விடயங்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும். நாங்கள் யாருக்கும் சோரம் nபோய் யாருக்கும் அடிபணிந்து எமது சமூகத்தை விற்றுப் பிழைப்பதற்குத் தயாரில்லை. எமது பிரதேசங்களின் அனைத்து விடயங்களும் அறிந்தவர்களாகவே நாங்கள் செயற்படுகின்றோம்.

எமது சமூகம் ஏமாற்றப்படும்; சமூகமாக இருந்து விடக் கூடாது. எமது ஒவ்வொரு பிரதேசங்களிலும் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். உள்ளுர் அரசியலில் மிகவும் சிறப்பாகச் செயற்படக் கூடியவர்களை நாங்கள் இனங்காண வேண்டும். எதிர்வருகின்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் எமது இனம்சார்ந்த அரசியலை எமது உறவுகள் மத்தியில் நாங்கள் உருவாக்காவிட்டால் மாற்றுச் சமூகம் எங்களைக் கூறுபோட்டுத் துண்டாடி, எம்மை ஆக்கிரமிக்கக் கூடிய ஒரு நிலைமையே ஏற்படும்.

அபவிருத்திக் குழுக் கூட்டங்களின் போது எமது பிரதேசங்கள் எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்ற விடயத்தைப் பலரும் அறிந்திருப்பீர்கள். அண்மையில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது. எமது பிரதேசங்கள் அபிவிருத்திகளில் புறக்கணிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சிநிரல் அங்கு இருந்தது. இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், அபிவிருத்திக் குழுத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றோம்.

நாங்கள் எமது மக்களின் தேவைகளுக்காக, பணிகளுக்காகத் தொடர்ச்சியாகப் பயணிப்போம். எம்மை இன்னும் இன்னும் ஏமாற்றுகின்ற விடயங்களுக்கு எமது மக்கள் இடம்கொடுக்கக் கூடாது. எம்மை நாமே ஆளக்கூடிய, எம்மை எமது மக்களே தெரிவு செய்யக் கூடிய நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் திட்டங்களைத் தயார்ப்படுத்தி எமது மக்களை வளப்படுத்தக்கூடிய விதத்தில் நாங்கள் செயற்படுவோம் என்று தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE