Thursday 28th of March 2024 08:06:13 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 51 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 51 (வரலாற்றுத் தொடர்)


1972 அரசியலமைப்பை எதிர்த்து தமிழரசுக் கட்சியின் போராட்டம்! - நா.யோகேந்திரநாதன்!

'எனது ராஜினாமா காரணமாக இடம்பெறப்போகும் இடைத் தேர்தல் மூலம் அரசாங்கத்துக்குப் பதில் கொடுக்கப்படும். தமிழ் மக்கள் தமது அபிலாஷைகள் என்ன என்பதை இத் தேர்தல் மூலம் புரியவைப்பார்கள். இனி முடிவு தமிழ் மக்களுடையதாகும். நடைபெற்ற விடயங்களைக் கருத்தில் கொள்ளும்போது என்னுடைய கொள்கையானது இலங்கைத் தமிழருக்குத் தாம் அடிமையாக இருக்கப் போகிறார்களா அல்லது சுதந்திர மக்களாக இருக்கப் போகிறார்களா என அவர்களுக்குத் தங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது. இந்த நிலைப்பாடு தொடர்பாக அரசாங்கம் என்னோடு மோதட்டும். நான் தோற்றால் என்னுடைய கொள்கையை நான் கைவிடுகிறேன். அரசாங்கம் தோற்றால் அது தன்னுடைய கொள்கையையும் அரசியலமைப்பையும் தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று சொல்வதை நிறுத்தவேண்டும். இந்த நாட்டில் நாம் மரியாதையாக வாழவேண்டுமானால் நாம் இந்த அரசியலமைப்பை எதிர்க்கவேண்டும்'.

இது தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1972ம் ஆண்டில் புதிய அரசியலமைப்பை எதிர்த்து ராஜினாமா செய்த பின்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் வெளியிட்ட கருத்தாகும். இந்த ராஜினாமா தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட இரு தமிழ் இளைஞர்கள் தங்கள் கைகளைக் கீறி செல்வநாயகத்துக்கு இரத்தப் பொட்டு வைத்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

1965 – 1970 காலப்பகுதில் ஐ.தே.கட்சி 7 கட்சிக் கூட்டரசாங்கத்தில் பங்கு கொண்ட தமிழரசுக் கட்சியினர் டட்லி - செல்வா ஒப்பந்தத்தில் இணங்கப்பட்ட எந்த ஒரு விடயமும் நிறைவேற்றப்படாத போதும், தமிழ் மக்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டபோதும் ஆட்சிக் காலம் முழுவதும் கூட்டாட்சிக்கு ஆதரவு வழங்கி வந்தனர். இந்த நிலைமையால் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சி மீது கொண்டிருந்த நம்பிக்கை கணிசமானளவு வீழ்ச்சியடைந்திருந்தது.

அதன் விளைபலனாக 1970ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக் கட்சியின் முக்கிய தலைவர்களான எம்.வி.நாகநாதன், அ.அமிர்தலிங்கம், ஜெயக்கொடி, ஆலாலசுந்தரம் போன்ற தலைவர்கள் படுதோல்வியடைந்திருந்தனர். அதேவேளையில் யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட மாட்டின் நூறுக்கு உட்பட்ட வாக்குகளாலேயே வெற்றி பெற்றிருந்தனர். ஜீ.ஜீ.பொன்னம்பலமும் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுப் படுதோல்வியடைந்திருந்தார்.

அதேவேளையில் தென்னிலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி இலங்கையை ஜனநாயக சோஷலிச குடியரசாக்கும் வகையில் சோல்பேரி அரசியலமைப்பை நீக்கி ஒரு புதிய தேசிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதெனவும் சிங்களம் மட்டும் சட்டத்தை அமுல்படுத்துவதெனவும் பௌத்தத்துக்கு முதன்மை இடம் வழங்குவதெனவும் தனது தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதிகளை வழங்கியது. மக்களுக்கு 2 கொத்து அரிசி வழங்கப் போவதாகவும் விவசாயிகளுக்கு வாய்ப்புகளை வழங்கி தேசிய உணவுற்பத்தியைப் பெருக்கப் போவதாகவும் வாக்குறுதிகளை அள்ளி வழங்கியது.

ஏற்கனவே ஐ.தே.கட்சியின் மக்கள் விரோத ஆட்சி காரணமாக வெறுப்புற்றிருந்த சிங்கள மக்கள் ஐக்கிய முன்னணிக்குப் பேராதரவு வழங்கினர்.

1970 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 91 ஆசனங்களிலும் சமசமாஜக் கட்சி 19 ஆசனங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி 6 ஆசனங்களிலும் வெற்றி பெற்று ஐக்கிய மக்கள் முன்னணி மொத்தமாக 116 ஆசனங்களைப் பெற்று 2/3 க்கு அதிக பெரும்பான்மையைப் பெற்றனர். ஐக்கிய தேசியக் கட்சி 17 ஆசனங்களையே பெற்றது. டட்லி சேனநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடம் ஒப்படைத்தார்.

எனவே 1965 – 1970 காலப்பகுதியில் ஆட்சி செய்த ஐ.தே.கட்சி தலைமையிலான கூட்டரசாங்கத்துக்கு ஐ.தே.கட்சியைத் தோற்கடித்ததன் மூலம் சிங்கள மக்களும் தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய தலைவர்களைத் தோற்கடித்ததன் மூலம் தமிழ் மக்களும் தகுந்த பாடத்தைக் கற்பித்திருந்தனர்.

எனவே தங்களின் மீது நம்பிக்கையிழந்து விட்ட தமிழ் மக்களிடம் மீண்டும் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்தத் தமிழ்த் தலைமைகள் மாற்று வழி பற்றிச் சிந்திக்க வேண்டிய கட்டத்துக்குள் தள்ளப்பட்டனர்.

அடுத்த கட்டமாக 14.05.72இல் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, ஏனைய தமிழ் உணர்வாளர்கள் திருமலையில் ஒன்றுகூடி அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்க் கூட்டணி என்ற பெயரில் ஒரே அணியாக இயங்கி அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதெனத் தீர்மானித்தனர்.

அதேவேளையில் இலங்கை தேசிய அரசுப் பேரவையில் 22.05.1972ல் ஏற்கனவே அமுலில் இருந்த சோல்பேரி அரசியலமைப்பு நீக்கப்பட்ட இலங்கை சோஸலிச ஜனநாயகக் குடியரசின் யாப்பு 2/3 க்கு அதிகமான பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அந்த வாக்கெடுப்பின்போது 19 தமிழ் உறுப்பினர்களில் 15 பேர் எதிர்த்து வாக்களித்தனர். ஆதரித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருளம்பலம் தியாகராஜா, தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாட்டின், கிழக்கு மாகாணத்தில் சுப்பிரமணியம், இராசன், செனட்டர் குமாரசூரியர் ஆகியோர் ஆதரித்து வாக்களித்தனர்.

புதிய அரசியலமைப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து 25.06.1972ல் கோப்பாயில் கூடிய தமிழ்க் கூட்டணியினர் ஆறு அம்சக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன் வைப்பதெனத் தீர்மானித்தது.

இன்னொருபுறம் புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு சத்தியப் பிரமாணம் செய்யாவிடில் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகிக்க முடியாத நிலை ஏற்படும். இந்த நிலையில் புதிய அரசியலமைப்பை எதிர்த்து வாக்களித்ததுடன் நிராகரிப்பதாகப் பிரகடனம் செய்த தமிழரசுக் கட்சியினருக்கு சத்தியப் பிரமாணம் செய்து பதவிகளைக் காப்பாற்றுவதா அல்லது பதவிகளை விட்டு வெளியேறுவதா என்ற கேள்வி எழுந்தது. தமிழரசுக் கட்சியின் வாலிபர் அணியினர் சத்தியப் பிரமாணம் செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அது ஒரு துரோக நடவடிக்கையென வர்ணித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை விட்டு வெளியேறி வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனக் கோரினர்.

எனினும் செல்வநாயகம் தனக்கு இளைஞர்கள் மத்தியிலுள்ள மரியாதையைப் பயன்படுத்தி அவர்களைச் சமாதானப்படுத்திவிட்டு 04.07.72ல் சத்தியப் பிரமாணம் செய்தனர். இதன் காரணமாக அவர்களின் பதவிகள் காப்பாற்றப்பட்டாலும் தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்ற பிரசாரத்தை அரசாங்கம் மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் சத்தியப் பிரமாணம் செய்ய மறுத்து வெளியில் வலுவான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால் அவர்களால் முன்வைக்கப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளின் ஒரு பகுதியோ அல்லது அரைகுறையாகவோ தன்னிலும் சேர்க்கப்படக்கூடிய வாய்ப்புகள் அமைந்திருக்கும்.

இதன் காரணமாக இளைஞர்கள் மத்தியில் மட்டுமன்றி, தமிழ் மக்கள் மத்தியிலும் கசப்புணர்வு தோன்ற ஆரம்பித்தது.

25.06.1972ல் சிங்கள மொழிக்கு வழங்கப்படும் உரிமைகள் தமிழ் மொழிக்கு வழங்கப்படவேண்டுமெனவும் மதசார்பின்மை அரசியல மைப்பால் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படவேண்மெனவும் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் கோரி முன்வைக்கப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கையை முன் வைத்து மாவிட்டபுரத்தில் இடம்பெற்ற ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதம் ஆவதற்கு முன்பே அரசாங்கம் கோரிக்கைகளைப் பரிசீலனைக்குக்கூட எடுக்காத நிலையில் தமிழரசுக் கட்சியினர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டமை பெரும் எதிர்ப்புணர்வையே ஏற்படுத்தியது.

இப்படியான கோரிக்கைகளை இவர்கள் பங்கு வகித்த ஐ.தே.கட்சி அரசாங்கத்திடம் முன் வைக்கவுமில்லை, போராட்டம் நடத்தவுமில்லை.

எனவே இளைஞர்கள் மத்தியில் வளர்ந்துவந்த எதிர்ப்பைத் திசை திருப்பவும் தமிழ் மக்களிடையே இழந்து கொண்டிருந்த செல்வாக்கைத் தடுத்து நிறுத்தவும் ஒரு மாற்று வழியைக் கையாள வேண்டிய நிலை எழுந்தது.

அதுதான் செல்வநாயகத்தின் ராஜினாமா!

03.10.1972 அன்று அரசியலமைப்பை ஏற்று சத்தியப் பிரமாணம் செய்து மூன்று மாதங்களின் பின் அதே அரசியலமைப்பை எதிர்த்துத் தனது நாடாளுமன்ற பதவியை ராஜிநாமா செய்தார்.

தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்பை நிராகரிக்கிறார்கள் என்ற ஆணையைக் கோருமுகமாகவே தான் பதவியை விட்டு வெளியேறுவதாகப் பிரகடனம் செய்தார். இது மீண்டும் இளைஞர்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அரசாங்கமோ காங்கேசந்துறைத் தேர்தலை நடத்தாமல் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக ஒத்திப்போட்டு வந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தில் பங்காளிகளாக இணைந்து செயற்பட்டு வந்த தமிழ் கட்சிகள் அதாவது தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ், தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய ஒன்று சேர்ந்து உருவாக்கிய தமிழர் கூட்டணி அரசாங்கத்துக்கு எதிரான பலமான சக்தியாக உருவாகியது.

1973 செப்டெம்பர் மாதம் 7ஆம், 8ஆம், 9ஆம் திகதி கோப்பாயில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் 12வது மகாநாட்டில் மூன்று கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு உணர்ச்சி பொங்க உரையாற்றினர். தமிழ் மக்கள் சுயாட்சி பெறுவதே தமிழ் மக்களின் விமோசனத்துக்கு ஒரே வழி எனப் பலத்த கரகோஷத்தின் மத்தியில் பிரகடனம் செய்தனர்.

'இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 12 ஆவது மாநாடு மொழியால், கலாசாரத்தால், வரலாற்றால், பிரதேசத்தால் ஒரு தனி இனமாக வாழவேண்டுமென்ற உணர்ச்சியால் ஒரு தனித் தேசிய இனமாகக் கணிக்கப்படுவதற்குப் பூரண தகுதியுள்ள இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இனங்களின் சுயநிர்ணய உரிமையென்ற அடிப்படைத் தத்துவத்தின்படி தம் பாரம்பரியத் தாயகத்தில் இலங்கைத் தமிழ்த் தேசிய இனம் தன்னாட்சி காண்பதே ஒரேஒரு வழியென்று இத்தால் தீர்மானிக்கிறது'.

இது கோப்பாயில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் 12வது மாநாட்டில் ஏகமனதாகப் பலத்த கரகோஷத்தின் மத்தியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும். ஒரு தேசிய இனம் தனது சுயநிர்ணய உரிமையை வேண்டி நிற்பது முழுக்க முழுக்க நியாயமானதே.

அடிப்படையில் சோல்பேரி அரசியலமைப்பின் கீழ் இலங்கை ஒரு அரைக்குடியேற்ற நாடாகவே விளங்கியது. இலங்கை சுதந்திரம் பெற்ற நாடு என்று கூறப்பட்ட போதிலும் அதன் சுயாதிபத்தியம் என்பது பிரிட்டனின் நாணயக் கயிற்றில் பிணைக்கப்பட்டிருந்தது என்பதே உண்மையாகும்.

இலங்கைப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் எந்த ஒரு சட்டமும் பிரித்தானிய மகாராணியின் பிரதிநிதியான மகாதேசாதிபதி ஒப்புதல் வழங்கினால் மட்டுமே செல்லுபடியாகும். இலங்கையின் நீதித்துறை வழங்கும் தீர்ப்புகளை லண்டன் பிரிவு கவுன்ஸில் மாற்றவோ ரத்துச் செய்யவோ முடியும். தேவை ஏற்படும் போது இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தவோ, நாடாளுமன்றத்தைக் கலைக்கவோ மகாதேசாதிபதிக்கு அதிகாரம் உண்டு.

1972ம் ஆண்டின் புதிய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாறான பிரிட்டனின் இலங்கை மீதான மேலாதிக்கத்தை நீக்கி இலங்கையின் இறைமையை நிலை நிறுத்தியது.

இலங்கையின் சுயாதிபத்தியத்தை நிலைநிறுத்திய இந்த அரசியலமைப்புச் சட்டம் தமிழ் மக்களின் உரிமைகளை அரசியலமைப்பு ரீதியாக மறுத்தமை துரதிஷ்டவசமானதாகும். அந்நிய மேலாதிக்கத்துக்கு எதிராக புதிய அரசியலமைப்பு எடுத்த நடவடிக்கைகளுக்குத் தோள்கொடுக்க வேண்டிய தமிழ் மக்கள் தங்களைப் பாதுக்க அரசியலமைப்புக்கு எதிராகவே போராட வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்தது.

1956ல் தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அதைப் பெரும்பான்மை வாக்குகளால் இரத்துச் செய்ய முடியும். ஆனால் புதிய அரசியலமைப்பின் மூலம் தனிச் சிங்களச் சட்டம் உறுதி செய்யப்பட்டு விட்டதால் அதை மாற்றுவதானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படும். அதேபோன்று பௌத்த மதத்துக்கு முன்னுரிமை என்பதும் அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்டு விட்டது.

ஆனால் தமிழரசுக் கட்சியோ சோல்பேரி அரசியலமைப்பின் 29(2) விதி நீக்கப்பட்டதாலும் செனட் சபை, நியமன உறுப்பினர்கள் இல்லாமற் செய்யப்பட்டதாலும் தமிழ் மக்களின் பாதுகாப்பு பறிக்கப்பட்டு விட்டதாக கூப்பாடு போட்டுத் தங்கள் பிரித்தானிய ஏகாதிபத்திய விசுவாசத்தை வெளிப்படுத்தினர். ஆனால் 29வது சரத்து, செனட் சபை, நியமன உறுப்பினர்கள் ஆகிய விடயங்கள் அமுலில் உள்ள போதே தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டதும், 1948ல் மலையக மக்கள் நாடற்றவர்களாக்கப்பட்டதும், ஸ்ரீமாவோ, சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் 5 இலட்சம் மலையக மக்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதும் இடம்பெற்றன.

உண்மையிலேயே சிங்களமும், பௌத்தமும் அரச மொழியாகவும் மதமாகவும் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதப்படுத்தப்பட்டதை எதிர்த்து வலிமையான போராட்டங்களை நடத்தியிருக்கவேண்டும். அதேவேளையில் பதிய அரசியலமப்பு மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கியிருக்கவேண்டும்.

இலங்கைத் தேசியத்தை சிங்களத் தேசியமாகக் கையாளும் சிங்களத் தலைமைகளும், தமிழ்த் தேசியத்தை உண்மையான இலங்கை தேசியத்துக்கெதிராகக் கையாளும் தமிழ்த் தலைமைகளும் அரசியலில் மேலாதிக்கம் வகிக்கும் வரையில் இலங்கையின் இனமோதல் முடிவுக்கு வரப்போவதில்லை.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE