Thursday 18th of April 2024 02:29:13 AM GMT

LANGUAGE - TAMIL
.
அரச உத்தியோகத்தர்கள் சிங்கள மொழியை கட்டாயமாக கற்றுக் கொள்ள வேண்டும்! - ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா!

அரச உத்தியோகத்தர்கள் சிங்கள மொழியை கட்டாயமாக கற்றுக் கொள்ள வேண்டும்! - ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா!


அரச உத்தியோகத்தர்கள் தமிழ் தாய் மொழிக்கப்பால் சிங்கள மொழியை கட்டாயமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று அரச மொழிகள் திணைக்களம் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றது என ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.

சிங்கள பாடநெறிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பல அலுவலகங்களிலும் திணைக்களங்களிலும் நடைபெற்று வரும் நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான சிங்கள பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு தலைமையுரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

தமிழ் மொழிக்கும் அப்பால் இரண்டு மொழிகள் இலங்கையில் அவசியமாக காணப்படுகிறது. எமது தாய் மொழிக்கு அப்பாலுள்ள இரண்டு மொழிகளிலும் நாம் ஒவ்வொருவரும் தேர்ச்சி பெற்றவர்களாக திகழ வேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டு தான் அரச உத்தியோகத்தர்களுக்கு தமிழ் தாய் மொழிக்கப்பால் சிங்கள மொழியை கட்டாயமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று அரச மொழிகள் திணைக்களம் எதிர்பார்த்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இலங்கையில் அரச உத்தியோகத்தில் உள்ள ஒருவர் தமிழ் தாய்மொழிக்கு அப்பால் உள்ள இரண்டு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக திகழ்வார்களாக இருந்தால் அவர்களது கடமைகளைச் செய்வதில் மிகவும் இலகுவாக இருக்கும் நம்மை நாடி வரும் பொது மக்களுக்கு சேவை வழங்குவதற்கு நமது தாய் மொழியையும் விட தாய் மொழியுடன் சிங்கள மொழியில் தெரிந்திருந்தால் தேவைப்படின் அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் சேவைகளை செய்வதற்கு மொழி அவசியமாக காணப்படுகிறது.

பயனாளிகள் தங்களது கடமைகளை நிறைவு செய்வதற்கு வரும் பொதுமக்கள் தமிழ் பேசுபவர்களாகவோ அல்லது சிங்களம் பேசுபவர்களாக இருந்தால் அவர்கள் பேசும் மொழியிலேயே நாம் கடமைகளை நிறைவேற்றி கொடுப்பதற்கு வசதியாக நமக்கு மொழி தெரிந்திருப்பின் அந்த கடமையை செய்வதற்கு மிகவும் இலகுவாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை எமது தாய் மொழியுடன் சேர்த்து சிங்கள மொழியை கற்பதுடன் சர்வதேச மொழியான ஆங்கிலத்தையும் கற்று மூன்று மொழிகளிலும் ஒவ்வொரு அரச உத்தியோகத்தர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக திகழ வேண்டும்.

அரச உத்தியோகத்தருக்கு தனது கடமையைச் செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் வெளிநாட்டில் எந்த பகுதியிலும் கடமை செய்வதற்கும் மொழி தெரிந்திருப்பின் தன் கடமைகளை செய்வதற்கு அப்பகுதியில் செல்வதற்கு அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆரம்ப பாடசாலை காலத்தில் இருந்து தமிழ் மொழியை கற்று தமிழ் மொழி பேசும் பிரதேசங்களில கடமை புரிவதால் சிங்கள மொழியை கற்பதில் ஆர்வம் குறைந்தவர்களாக காணப்படும்.

இனிவரும் காலங்களில் அவ்வாறு இருந்து விடாமல் எமது தாய் மொழியுடன் சேர்த்து சிங்கள மொழியும் ஆங்கில மொழியிலும் நாம் ஒவ்வொருவரும் தேர்ச்சி பெற்றவர்களாக திகழ வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச அலுவலகர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள மற்றும் தமிழ் மொழிக் கற்கை நெறிகள் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 18ஃ2020 சுற்று நிருபத்திற்கு அமைவாக தமிழ் பேசும் அரச அலுவலகர்களுக்கு சிங்கள மொழி பாடநெறியும், சிங்கள மொழி பேசும் அரச அலுவலகர்களுக்கு தமிழ் மொழி பாடநெறியும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

நாட்டின் நிர்வாகத்துறையினைச் சிறப்பாக முன்னெடுக்கும் வகையிலும், சகல இன மக்களிடத்திலும் மொழி வழியிலான சமாதானம், ஐக்கியம், இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் வகையிலும் அரச உத்தியோகத்தர்களை இரு மொழிப் பயன்பாட்டிற்கு தேர்ச்சி பெறச் செய்யும் நோக்கில் தமிழ் பேசும் அரச ஊழியர்களுக்கு சிங்கள மொழி பாடநெறியும், சிங்கள மொழி பேசும் அரச ஊழியர்களுக்கு தமிழ் மொழி பாடநெறியும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இப்பயிற்சி நெறிக்கு வளவாளராக காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் இரண்டாம் மொழி ஆசிரியரும், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் போதனாசிரியருமான எம்.எம்.செய்னுதீன் கலந்து கொண்டு பாடநெறிகளை கற்பித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE