Thursday 25th of April 2024 12:37:26 PM GMT

LANGUAGE - TAMIL
-
வடமாகாணத்தின் சிறந்த விவசாயிகளுக்கான விருது வழங்கும் வைபவம்!

வடமாகாணத்தின் சிறந்த விவசாயிகளுக்கான விருது வழங்கும் வைபவம்!


மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்திற்கான கட்டட திறப்பு விழா, வடமாகாணத்திற்கு உட்பட்ட சிறந்த விவசாயிகளுக்கான விருது , சான்றிதழ் , காசோலை வழங்கும் நிகழ்வு மற்றும் புதிய விவசாய போதனாசிரியர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் வைபவம் 19.4.2021 காலை 10.30 மணிக்கு யாழ் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ். எம் சார்ள்ஸ் கலந்துகொண்டார். மேலும் வடமாகாண பிரதம செயலாளர் , வடமாகாண விவசாய அமைச்சின் மாகாணப் பணிப்பாளர் ,விவசாய அமைச்சின் செயலாளர் , விவசாய துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு புதிய கட்டட தொகுதியை திறந்து வைத்து கருத்து தெரிவித்த ஆளுநர் அவர்கள் , மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு எனும் கொள்கையின் அடிப்படையிலே உள்நாட்டு உற்பத்திப் பொருட்களுக்கான முக்கியத்துவம் வழங்கும் நோக்கத்தின் அடிப்படையில் விவசாயிகளுக்கு பல விதமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் அந்த அடிப்படையில் பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு , உள்நாட்டு பொருட்களுக்கான சரியான விலை நிர்ணயம் வழங்கப்படுதல் போன்றவற்றினை மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றார் என தெரிவித்தார்.

மேலும் விவசாயிகளுக்கான குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்குதல் , விதைகள் மற்றும் உரம் வழங்குதல் , நீர்ப்பாசன திட்டங்களை உருவாக்குதல் போன்றவற்றை மேன்மை தங்கிய ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில் வடமாகாணத்தில் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்.

விசேடமாக வடமாகாணத்தின் 05 மாவட்டங்களிலுள்ள குளங்களினை புனரமைப்பு செய்வதற்காக 300 மில்லியன் நிதியை தனிப்பட்ட ஒதுக்கீடாக திறைசேரி மூலம் பெற்றுள்ளதாகவும் இந்த திட்டங்களின் ஊடாக விவசாய நிலத்தினை மேலும் விஸ்தரிப்பதற்கும் , விவசாயிகள் பயன் பெறுவதற்கான வாய்ப்புக்களை வழங்குவதற்கும் முயற்சிப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் விவசாயத் துறையை சார்ந்தவர்கள் இந் நிறுவனம் மூலம் பெற்றுக் கொள்ளும் தொழிநுட்ப அறிவினை சிறந்த முறையில் பயன்படுத்துமாறும் நியாயமான விலைக்கு பொருட்களை விற்பனை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும் வடமாகாணத்திலே விவசாயத்துறையில் காணப்படுகின்ற வசதிகளை பயன்படுத்தி வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துமாறும் அரச நியமனங்களை பெற்றுக்கொண்டவர்கள் சிறந்த முறையில் மக்களுக்கு சேவையாற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் மத்திய அரசிலிருந்து வருகைதரவிருக்கும் விவசாய அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி பல்வேறு செயல் திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக வடமாகாணத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான விருது, சான்றிதழ், மற்றும் காசோலையையும் புதிதாக நியமனம் பெற்ற விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்களையும் வழங்கி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE