Tuesday 27th of July 2021 02:14:07 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொழும்பு துறைமுகம் நோக்கிய இந்திய கடற்படைக் கப்பலின் வருகை இந்திய கடல் ஆதிக்கத்தின் நகர்வா?

கொழும்பு துறைமுகம் நோக்கிய இந்திய கடற்படைக் கப்பலின் வருகை இந்திய கடல் ஆதிக்கத்தின் நகர்வா?


இலங்கை அரசியலில் மீண்டுமொரு பிராந்திய போட்டிக்கான களம் திறக்கப்பட்டுள்ளது. புவிசார் அரசியலில் பிரதான போட்டியாளரான சீனாவும் இந்தியாவும் இலங்கை பொறுத்து கொள்கை வகுப்பதில் முனைப்புடன் செயற்படுகின்ற நிலை ஜெனீவாவிற்கு பின் தீவிரமடைந்துள்ளது. பிராந்திய அரசியல் போட்டியில் முக்கியம் பெறும் இரு நாடுகளும் அரசியல், பொருளாதார, இராணுவ விடயங்களில் இலங்கை சார்ந்து ஒத்துழைப்பதும், அதேநேரம் எதிர்ப்புணர்வு ஏற்படுத்தும் சூழல் ஒன்றையும் சமதளத்தில் அவதானிக்க முடிகின்றது. இந்தியாவை பொறுத்தளவில் ஜெனீவா அரங்கில் இலங்கை குறித்த கொள்கையின் தீவிர தன்மையை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. ஆனால் சீனாவை பொறுத்தவரை பொருளாதார உதவிகளுக்கூடாக இலங்கையை தனது பிடிக்குள் வைத்துகொள்வதற்கான அனைத்து நகர்வுகளையும் தெளிவாக மேற்கொண்டு வருகின்றது. இக்கட்டுரை சீன –இந்தியப் போட்டிக்குள் அகப்பட்டுள்ள இலங்கையின் அரசியலை புரிந்துக்கொள்வதற்கான தேடலாக அமையவுள்ளது.

முதலாவது, தமிழ் சிங்கள புத்தாண்டை அடுத்து சீன பாதுகாப்பு அமைச்சரான வெய் பெங்கி(Wei Fenghe) இலங்கை விஜயம் இரு நாடுகளாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரின் விஜயத்தின் பிரதான இலக்காக இலங்கை பாதுகாப்பு மற்றும் வெளிவுறவு சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்த இருப்பதாகவும், இருநாட்டுக்குமான உறவினை மேலும் பலப்படுத்துவதாக அமையும் என்றும்,இலங்கை ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷhவின் சீன விஜயத்திற்கான திகதியை உறுதிப்படுத்துவதுடன் ஜனாதிபதியின் அழைப்பினை இலங்கை ஜனாதிபதிக்யிடம் கையளிப்பதெனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்;ளன.

இரண்டாவது, இந்திய போர்கப்பல் ஐ.எஸ்.என் ரன்விஜய் (I.S.N RANVIJAY) கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் செய்துள்ளமை முக்கியமான அரசியல் இராணுவ நகர்வாக காணப்படுகின்றது. இக்கப்பலின் கொழும்பு துறைமுகம் நோக்கிய பயணம் பொறுத்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வெளியிட்ட அறிக்கையில், இரு நாட்டிற்குமான சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான விஜயம் எனவும், இரு நாட்டிற்குமான உறவு நெருக்கத்தை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுவதாக அமையும் என்றும் மூன்று நாட்கள் சினோகபூர்வ பயணம் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் I.S.N RANVIJAY ஒரு போர்கப்பல் வலுவடையதென்றும், நீர்மூழ்கிகளை தாக்கி அழிக்கும் திறன் உடையது ஏவுகணைகளை செலுத்தும் திறனுடைய கப்பல் எனவும் தெரியவருகின்றது.

மேற்குறித்த இரு சம்பவங்களும் இலங்கை அரசியலில் போட்டித்தன்மையையும் அதேநேரத்தில் எச்சரிக்கையையும் தருவதாக அமைகின்றது. குறிப்பாக அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.

ஒன்று இலங்கையின் அரசியல் களம் பாதுகாப்பு பொறுத்து முனைப்பான உரையாடலை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. அதாவது இலங்கையை சீனாவும் இந்தியாவும் இராணுவ ரீதியில் அணுகும்போக்கொன்றையும் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. இதற்கான அடிப்படை காரணி சீனாவினுடைய பாதுகாப்பு அமைச்சின் இலங்கை விஜயம் மட்டுமன்றி, சீனாவின் நீர் மூழ்கிகளும் போர்கப்பல்களும் இலங்கையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பையும் தடுத்து நிறுத்துவதற்கான உத்தி ஒன்றில் இந்தியா நகர்ந்துள்ளதாக தெரிகின்றது.கடந்த காலத்தில் இந்தியா அத்தகைய சீனாவின் நகர்வுகளை எததிர்கொண்டுடிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதே போன்று யப்பான், ரஷ்யா , அமெரிக்கா போன்ற நாடுகளின் போர்கப்பல்கள் சரக்கு கப்பல்கள் என்பன கடந்த காலங்களில் திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களை நோக்கி வருகை தந்திருந்தாலும், அவை ஒரு சிநேக பூர்வமான விஜயங்களாகவே மதிப்பிடப்பட்டு இருந்தன. ஆனால் இந்தியாவினுடைய நகர்வு அது சார்ந்தது என்று இலகுவில் கூறிவிட முடியாது. ஏனெனில் இந்தியா அனுப்பியிருப்பது போர்கப்பல் மட்டுமன்றி நீர்முழ்கிகளை தாக்கி அழிக்கும் திறனுள்ளதுடன, ஆகாஸ் போன்ற ஏவுகணைகளை தாங்கிய கப்பல் என்ற அடிப்படையிலும் ஜெனீவா அரங்கிற்கு பின்னரான இந்தியாவின் இராஜதந்திர நகர்வு என்றும் இதனை கருதமுடியும். இத்தகைய உபாயமானது சீனாவின் நகர்வுகளுக்கு எச்சரிக்கை செய்வதாகவே தெரிகின்றது.

இரண்டு, கொழும்பு கிழக்கு முனையம் நோக்கிய இந்தியாவின் நடவடிக்கை தோற்றுப்போனபோதும் அதன் தென்பகுதியை இந்தியாவிற்கு வழங்குவதற்கான ஒப்புதல்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியிருந்தமை கருத்தில் கொள்வது அவசியமானது என்பது இந்தியாவின் நகர்வாக தெரிகிறது. கொழும்பு நிதி நகரத்திற்கான வாணிப நடைமுறையில் விசேட விதி(Zoon Bill) முறைமைகளுக்கூடாக இலங்கை முயற்சிக்கின்ற சர்தர்ப்பத்தில் இந்திய போர் கப்பலின் விஜயம் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது . இதன் ஊடாக கொழும்பு துறைமுகத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முனைவதோடு இலங்கையின் பாதுகாப்பு செயற்பாடுகளை மேற்கொள்கின்றபோது இந்தியாவினுடைய முக்கியத்துவம் உணர்த்தப்படுவதாகவே தென்படுகின்றது. பாரம்பரியமாக இந்திய பாதுகாப்பு எல்லைக்குள் இருக்கும் இலங்கை - இந்திய நகர்வுக்கு விரோதமாக இலங்கை செயற்பட முடியாது என்பதையும் இத்தகைய நகர்வின் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.

மூன்று, முடிந்த வாரத்தில் மியான்மார் இராணுவ ஆதிக்கத்திற்கு ஆதரவாக ரஷ்யாவின் இராணுவ நகர்வுகள் தென்னாசிய அரசியல் இந்தியாவிற்கு இந்தோ- பசுபிக் விடயத்திற்கு சவால் மிக்க விடயமாக அமைந்துள்ளன. ஏற்கனவே சீனா அரசாங்கத்தினுடைய ஆதரவை பெற்றுள்ள மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் ரஷ்யாவின் பிரசன்னத்தோடு அதிவலுவுடைய இராணுவ ஆட்சியாளர்களாக மாறியுள்ளார்கள். இது முழுமையாக இந்திய சார்பு நிலையில் இருந்து மியன்மார் விலகி செல்வதோடு , சிரியாவிற்கு ஒப்பான ஒரு சூழலை மியன்மார் அடையப்போகின்றது என சர்வதேச ஆய்வாளர்களும் அரசியல் தலைமைகளும் எச்சரித்துள்ளன. 1833 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்ட மியன்மார் தனி நாடாகவும் பின்னர் இராணுவ ஆட்சியுடைய நாடாகவும், சீன ஆதரவு பெற்ற நாடாகவும் மாறியுள்ளது. அதன் அண்மைய நகர்வு இந்தியாவிற்கான அனைத்து வாய்ப்புகளையும் நெருக்கடிக்குள் தள்ளி விட்டிருப்பதையும் , பிராந்திய அரசியலில் இந்தியாவின் தோல்வியை உணர்த்தும் அதேநேரத்தில் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது . இதனால் இலங்கையை தக்கவைத்தல் என்பது இந்தியாவிற்கு மிக மிக அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. வடகொரியா, ரஷ்யா ,சீனா ஈரான் வரிசையில் மியன்மாரும் இணைந்திருப்பது இலங்கை பொறுத்து இந்தியாவின் அணுகுமுறையில் தீவிரத்தை ஏற்படுத்தும் நகர்வாகவே இந்தியாவின் நடவடிக்கை அமைந்துள்ளது.

நான்கு, இந்து சமுத்திர கடற்பகுதியில் இலங்கை மத்தியில் அமைந்திருப்பதோடு இந்திய கடல் எல்லைக்குள் கொழும்பு துறைமுகத்தினுடைய முக்கியத்துவம் நிதி நகரம் என்ற அடிப்படையில் பிரதிபலிப்பை பெற ஆரம்பித்ததும் அது ஒரு வளம்கொளித்த நிதிமையமாக அமைய இருக்கிறது என்பதை விட சீனாவின் நிதி நகரமாக மாற இருக்கின்றது என்பதே இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சியாகும். இதனால் கடற்சார்ந்து பொருளாதாரம் சார்ந்து சீனாவின் வளர்ச்சி இந்தியாவினுடைய பாதுகாப்பு பொறுத்து மட்டுமன்றி பொருளாதாரம் அடிப்படையிலும் இந்தோ - பசுபிக் உபாயம் சார்ந்தும் அதிக முக்கியத்துவத்தை பெறபோகின்றது என்பதும், இந்தியாவிற்கு எச்சரிக்கையாகும். இதனை அடிப்படையாக கொண்டு சீனாவின் எழுச்சி இந்திய கடல் எல்லைகளை இலகுவாக சாத்தியப்படுத்த முடியும் என்றும் , இந்தியாவின் கொல்லைப்புறம் (backyard) சீன பக்கம் போகின்ற ஒரு சூழலும் அது படிப்படியாக சீனாவின் கொல்லைப்புறமாக மாறுகின்ற நிலையும் இந்தியாவிற்கு ஆபத்தான அரசியலாகவே தெரிகின்றது. இதுமட்டுமன்றி , புவிசார் அரசியலையும் , பூகோள அரசியலையும் ஒரே நேரத்தில் இணைக்கும் சூழல் ஒன்றிற்கான வாய்ப்பு இலங்கையை மையப்படுத்தி சீனா, ரஷ்யா என்பன முன்நகர்த்த தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பும் அதன் அரசியல் பொருளாதார இராணுவ நகர்வுகளும் இலங்கையை எச்சரிக்கும் விதத்தில் கையாளப்பட வேண்டும் என்ற கொள்கை வகுப்பொன்றில் இந்தியா தவிர்க்க முடியாது பின்பற்ற ஆரம்பித்துள்ளது. ஆனால் சீனாவை பொறுத்தவரை கொழும்பு நிதி நகரம் மட்டுமன்றி இலங்கைகைக்கு வழங்கப்படும் கடன்களும் நிதிகளும் பொருளாதார திட்டங்களும் இரு நாட்டுக்குமான நெருக்கத்தில் பலப்படுத்துவதோடு சர்வதேச அளவிலும் இலங்கையின் நலனை உத்தரவதப்படுத்துவதில் கரிசனை கொள்ள சீனா முயல்கின்றது.

எனவே I.S.N RANVIJAY கப்பலின் கொழும்பு துறைமுகத்தை நோக்கிய வருகை சீன பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்தை கையாளுவதற்கான ஒரு பொறிமுறையாக அமைந்தாலும் அதனை கடந்து இலங்கை - இந்திய உறவு இராணுவ எச்சரிக்கைகளுக்கூடாக நகர்த்த ஆரம்பித்துள்ளது என்ற செய்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய மீனவர் விவகாரமும் இலங்கை தமிழர் அரசியலும் இலங்கை நகர்வுக்குட்;பட்ட கடலாதிக்க பலத்தை அதிகரிக்க இந்தியா திட்டமிடுகின்றது .

பேராசிரியர் . கே. ரீ. கணேசலிங்கம்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE