Tuesday 27th of July 2021 02:23:52 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 52 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 52 (வரலாற்றுத் தொடர்)


ஜே.வி.பி. புரட்சியும் இனவாதமும்! - நா.யோகேந்திரநாதன்!

'இலங்கையில் அறுபதாம் ஆண்டு காலப்பகுதியில் 10 இலட்சம் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்தனர். இவர்கள் இலங்கைக்கு விசுவாசமானவர்களல்ல. தோட்டத் தமிழர்களின் வீடுகளுக்குச் சென்றால் இலங்கைத் தேசியத் தலைவர்களின் படங்களை நீங்கள் பார்க்கமுடியாது. மகாத்மா காந்தி, நேரு, எலிசபெத் ராணி, அண்ணாத்துரை போன்றவர்களின் படங்களையே மாட்டி வைத்திருப்பார்கள். ஊதுவத்தி கொழுத்துவார்கள். இவர்கள் இலங்கையில் வாழும் இந்திய விசுவாசிகள். அதேபோல் இலங்கையில் தங்கியிருந்து வர்த்தகம் செய்யும் பெருந்தொகையான வர்த்தகர்களும் இந்திய விசுவாசிகளே. இங்கே வர்த்தகம் செய்து ஈட்டும் பணத்தை இவர்கள் இந்தியாவுக்குக் கொண்டுபோய் விடுகிறார்கள். தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்திவிட்டு தமிழுணர்வு கொண்ட அண்ணாத்துரை தலைமையிலான தி.மு.க.வினர் ஆட்சியமைத்து விட்டனர். ஒரு சமயத்தில் தனித் தமிழ் நாட்டுக்காகப் போராடிய அந்தக் கட்சி தமிழ் திரைப்படங்கள் வாயிலாகவும் புத்தகங்கள் வாயிலாகவும் தமிழ் எழுச்சியைப் பரப்பி வருகிறது. இலங்கையின் சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்கும் தி.மு.க. அச்சுறுத்தலானது. இவை அனைத்தும் இந்திய விஸ்தரிப்புவாதத்திற்குள் அடங்கும். இந்தியா இலங்கையில் காணப்படும் தனக்குச் சாதகமான அம்சங்களை மேலும் பலப்படுத்தி இலங்கையில் செல்வாக்குச் செலுத்தி இந்த நாட்டை விழுங்க முயலும்'.

இது 1971ம் ஆண்டு திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சிக்கெதிராக ஒரு ஆயுதப் புரட்சியை மேற்கொண்ட ஜே.வி.பி. என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி புரட்சிக்குத் தங்கள் தோழர்களைத் தயார் செய்யும் வகையில் நடத்திய 5 வகுப்புகளில் 5ஆவது வகுப்பில் நடத்திய போதனையாகும்.

இலங்கையின் மலையகத் தொழிலாளர்கள் இலங்கையிலேயே வேறு எந்தத் தரப்பினரையும் விடப் படுமோசமான முறையில் சுரண்டப்படும் ஒரு தொழிலாளர் கூட்டமாகும். பிரான்ஸ் நாட்டில் பிரெஞ்சுப் புரட்சிக்கு முற்பட்ட காலத்தில் எவ்வாறு நிலப்பிரபுத்துவப் பண்ணையடிமை முறை விவசாயிகளை விலங்கு பூட்டப்படாத அடிமைகளாக கொடிய அடக்குமுறைக்கு உட்படுத்தியதோ அவ்வாறே மலையகத் தொழிலாளர்களும் தோட்டங்களில் பண்ணையடிமை முறையிலான விவசாயக் கூலித் தொழிலாளர்களாக நடத்தப்பட்டு வந்தனர். 1948ல் இவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக்கப்பட்டதுடன் வரிசையாகக் கட்டப்பட்ட அறைகளைக் கொண்ட எவ்வித வசதிகளுமற்ற புறாக்கூடுகள் போன்ற 'லயன்' குடியிருப்புகளிலேயே வசிக்க வைக்கப்பட்டனர். கல்வி வசதி, சுகாதார வசதி என்பன இவர்களுக்கு எட்டாக்கனியாகவேயிருந்தன. அவர்கள் வசித்த தோட்டங்களில் எவ்வித போக்குவரத்து வசதியுமே வழங்கப்படவில்லை. தோட்டங்களின் மத்தியிலுள்ள குட்டி நகரங்களுக்குள் செல்வதானால் 'கால்நடையை' விட வேறு எந்த வசதியுமே இல்லை. அடிப்படையில் முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கெதிரான புரட்சி வேறு எந்த ஒரு தரப்பினரையும்விட இவர்களுக்கே தேவையாக இருந்தது.

ஆனால் முதலாளித்துவ ஆட்சியதிகாரத்துக்கு எதிராகப் புரட்சி செய்யவெனத் தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்த மக்கள் விடுதலை முன்னணியினர் தோட்டத்தொழிலாளர்களை தங்கள் நேச சக்திகளாக தங்களுடன் இணைத்து முன் செல்வதற்குப் பதிலாக அவர்களை எதிரிகளாகச் சித்தரித்தனர். தோட்ட உரிமையாளர்களாலும் கங்காணிகளாலும் ஆட்சியாளர்களாலும் பல்வேறு கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்ட இந்தத் தொழிலாளர்களை அவர்கள் இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கையாட்களாகவே பார்த்தனர்.

இந்திய விஸ்தரிப்புவாதம் என்ற வார்த்தை முதல் முதலில் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் நா.சண்முகதாசன் அவர்களாலேயே பயன்படுத்தப்பட்டது. இந்திய ஆட்சியாளர்கள் சீனாவுடன் எல்லைப் போரை நடத்தியது, பாகிஸ்தானுடன் ஒரு ஆக்கிரமிப்புப் போரை நடத்தி மேற்குப் பாகிஸ்தானைக் கைப்பற்றி பங்களாதேஷ் என்று ஒரு நாட்டை உருவாக்கியது. காஷ்மீர், நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்வது போன்ற இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்க நடவடிக்கைகளையே அவர் இந்திய விஸ்தரிப்புவாதம் எனக் கண்டித்திருந்தார். பெரி.சுந்தரம், தொண்டமான் போன்றவர்கள் தங்கள் சொத்துக்களை இந்தியாவில் கொண்டிருந்தனர் என்பது உண்மைதான். தோட்டத் தொழிலாளர்களின் தலைவர்களாக அவர்கள் விளங்கினாலும் இந்திய வம்சாவளியினராக அவர்கள் விளங்கினாலும் தோட்டத் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு அவர்களும் காரணமாகவே விளங்கினர்.

தோட்டத் தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து அடிமைக் கூலிகளாக இங்கு கொண்டு வரப்பட்டவர்கள் என்பதைவிட அவர்களுக்கும் இந்தியாவுக்கும் எவ்வித பந்தபாசமும் கிடையாது.

அப்படியான நிலையிலும் தோட்டத் தொழிலாளர்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கையாட்கள் எனப் பிரசாரம் செய்தமை ஜே.வி.பி.யினரின் இனவாதத்தின் இன்னொரு வடிவமே.

அதுமட்டுமின்றி ஜே.வி.பி.யின் தோற்றத்தின்போதே இனவாதம் ஒரு முக்கிய பிரசார ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டமையை மறந்து விடமுடியாது.

1960ல் ரஷ்ய புலமைப் பரிசில் மூலம் மொஸ்கோ லுமம்பா பல்கலைக்கழகத்தில் ரோஹண விஜயவீர மருத்துவக் கல்வி பயின்று வந்தார். ஆனால் 1962ல் சீனாவுக்கும், சோவியத் யூனியனுக்குமிடையே ஏற்பட்ட தத்துவார்த்த மோதலின்போது அவர் சீனசார்பு நிலைப்பாட்டை எடுத்தார். அதன் காரணமாக அவர் விடுமுறைக்கு இலங்கை வந்த பின்பு அவர் மீண்டும் ரஷ்யா திரும்ப ரஷ்ய தூதரகம் விசா வழங்க மறுத்துவிட்டது. அதையடுத்து அவர் சண்முகதாசன் தலைமையிலான சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிப அணியில் இணைந்து செயற்பட ஆரம்பித்தார்.

சண்முகதாசன் புரட்சி பற்றிய தெளிவான பார்வையைக் கொண்டிருந்தபோதிலும் புரட்சியை முன்னெடுப்பது தொடர்பாகத் தொழிலாளர், விவசாயிகள், இளைஞர்களை அணிதிரட்டுவதில் அக்கறையற்றிருந்தார். அவரின் முழுக்கவனமும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் தொழிலாளர் உரிமைகளைப் பெறுவதிலேயே குவிந்திருந்தது. அவர் பிரசாரம் செய்த தத்துவங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அவரும் ஏனைய அரசியல்வாதிகள் போல் ஒரு கனவான் அரசியல்வாதியாகவே விளங்கினார்.

இந்த நிலையில் புரட்சித் தத்துவங்களால் உத்வேகமூட்டப்பட்ட இளைஞர்கள் கட்சியை ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகர்த்த விரும்பினர். இதை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட விஜயவீர கட்சிக்குள் உள்ள தீவிர சிந்தனைப் போக்குகளைக் கொண்டவர்களைத் தன்னுடன் அணி திரட்டினார். அவர் சண்முகதாசன் ஒரு தமிழர் எனவும் தமிழர் புரட்சிக்குத் தலைமை தாங்குவதைச் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்ற பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விட்டார். இதை மோப்பம் பிடித்த சண்முகதாசன் அவரைக் கட்சியிலிருந்து நீக்கினார். ஒரு தமிழரின் தலைமையைச் சிங்கள மக்கள் ஏற்கமாட்டார்கள் என்ற பிரசாரத்தை வைத்தே அனுராதபுரம், களனி, மாத்தறை, காலி உட்பட கட்சியின் பிரதேச அமைப்பாளர்களைத் தன்னுடன் இணைத்துக்கொண்டார்.

எனவே ஜே.வி.பி.யின் தோற்றமே புரட்சியை முன்னெடுக்கும் நோக்கம் கொண்டதாக அமைந்த போதும் அது இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டது. அது மலையகத் தொழிலாளர்களை இந்திய விஸ்தரிப்புவாதிகளெனக் கூறி புரட்சியில் எதிரிகளாகச் சித்தரித்ததையும் அதே இனவாத அடிப்படையிலேயே என்பதை நாடு புரிந்து கொள்ளமுடியும்.

1965 தொட்டு 1970 வரை ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான கூட்டரசாங்கத்தின் அப்பட்டமான ஏகாதிபத்திய சார்பு, முதலாளித்துவக் கொள்கை காரணமாக 7 இலட்சம் வாலிபர்கள் வேலையற்றவர்ளாக வீதியில் நின்றிருந்தனர். அவர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டிருந்த வெறுப்புக் காரணமாக ஜே.வி.பி.யால் வெகு சுலபமாக அவர்களை அணி திரட்ட முடிந்தது. அது மட்டுமின்றி இளைஞர் குடியேற்றத் திட்டங்கள், விவசாயப் படையணிகள் என்பவற்றுக்குள் இரகசியமாக ஊடுருவி கட்சிக் கிளைகளை அமைத்து இளைஞர்களை அணி திரட்டமுடிந்தது.

விஜயவீரவின் துரிதமான வேலை காரணமாக சிங்களப் பகுதிகளெங்கும் பரந்த அளவில் கிளைகளைக் குறுகிய காலத்திலேயே அமைக்க முடிந்தது. பல பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழகங்களிலும் வெளியிலும் புரட்சிக் குழுக்களை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இக்குழுக்கள் மத்தியில் 5 வகுப்புகள் நடத்தப்பட்டன. அவற்றில் இடதுசாரி இயக்கங்களின் தோல்வி, பின்னடைவான நாட்டின் பொருளாதாரம், கிராமப் புறங்களில் நிலவும் வேலையின்மை மற்றும் வறுமை, சுதந்திரத்தின் பின்னான இலங்கை அரசியல் என்பன பற்றி முதல் நான்கு வகுப்புகளிலும் விளக்கமளிக்கப்பட்டது. ஐந்தாவது வகுப்பில் மலையகத் தொழிலாளர்கள் இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கையாட்களென்றும் அவர்களை நம்ப முடியாதெனவும் போதிக்கப்பட்டது. இவர்கள் வடபகுதியில் கிளைகளை நிறுவமுன்றபோதும், அவர்களின் இனவாதம் காரணமாகவும் வடபகுதி கம்யூனிஸ்டுகள் தத்துவார்த்தத் தெளிவு உள்ளவர்களாக இருந்த காரணத்தாலும் அவர்களால் அதில் வெற்றி பெறமுடியவில்லை.

இவர்களின் வேலைத்திட்டம் ஒரே நாளில் கிராமப்புறப் பொலிஸ் நிலையங்களைத் தாக்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அதேவேளையில் பிரதமரைக் கைது செய்து கடத்துவதுடன் நிர்வாக பீடங்களைக் கைப்பற்றுவதுடன் புரட்சி வெற்றி பெற்று ஆட்சியதிகாரம் ஜே.வி.பியால் கைப்பற்றப்பட்டு விட்டதாக வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு அறிவிப்பதெனவுமே அமைந்திருந்தது. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு மக்களை ஆதரவாக அணி திரட்டுவதெனவும் கூறப்பட்டது.

அவ்வாறான இராணுவப் புரட்சியை ஒத்த ஒரு புரட்சியை நடத்துவதற்கு இவர்களிடம் சில நாட்டுத்துவக்குகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகள், வாள்கள், கத்திகள், கோடரிகள் என்பன மட்டுமே ஆயதங்களாக இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களின் நடவடிக்கைகள் மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டாலும் சேகுவேரா இயக்கம் என்ற பேரில் ஒரு புரட்சிக் குழு வளர்ந்து வரும் விடயம் நாட்டு மக்கள் மத்தியில் பரவியிருந்தது. எனவே இவ்விடயம் தொடர்பாக அரச புலனாய்வுப் பிரிவினர் அக்கறை காட்டத் தொடங்கினர்.

எவ்வாறு ஜே.வி.பி.யினர் இராணுவ, பொலிஸ், விவசாயப் படை என்பவற்றுக்குள் ஊடுருவினரோ அவ்வாறே ஜே.வி.பி.க்குள் சாதாரண இளைஞர்களைப் போன்று புலனாய்வுப் பிரிவினர் ஊடுருவ ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் ரோஹண விஜயவீரவும் அவரின் 12 தோழர்களும் 16.03.1970அன்று அம்பாந்தோடடையில் வைத்துக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

அதேவேளையில் ஐ.தே.கட்சித் தலைமையிலான கூட்டாட்சியின் ஆயுட்காலம் முடிவடைய 25.03.1970ல் அரசாங்கம் கலைக்கப்படுகிறது. அடுத்து இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜயவீரவையும் தோழர்களையும் விடுதலை செய்வதாக அறிவிக்கிறார் திருமதி ஸ்ரீமாவோ.

அதையடுத்து ஜே.வி.பி.யினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசுக்கு ஆதரவாகத் தீவிரமான பிரசாரத்தில் இறங்குகின்றனர். அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதே சமயம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இடதுசாரிப் போக்குடைய பலரையும் தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.

25.05.1970ல் இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய முன்னணி மூன்றில் இரண்டுக்கு அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுகிறது. 07.06.1970ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி இணைந்த ஐக்கிய முன்னணி ஆட்சிப் பீடமேறுகிறது.

திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்ததும் அவர் ஏற்கனவே தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தமைக்கு அமைவாக ரோஹண விஜயவீரவையும் அவரின் 12 தோழர்களையும் 1970 ஜூலையில் அதாவது ஆட்சிக்கு வந்து ஒரு மாத காலத்தில் விடுதலை செய்கிறார்.

விடுதலையான ரோஹண விஜயவீர நாடு முழுவதும் திரிந்து அரசியல் வகுப்புகளை நடத்தி ஒருநாள் புரட்சிக்கான தயாரிப்புகளில் ஈடுபடுகிறார். வெள்ளவாய காட்டுப் பகுதிகளில் ஆயுதப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

எந்த அரசாங்கத்தை ஆட்சியிலேற்றத் தேர்தலில் உழைத்தார்களோ அதே அரசாங்கத்தையே கவிழ்ப்பதற்கான புரட்சியை சில மாதங்களில் நிறைவேற்றத் திட்டமிட்டனர்.

ஜே.வி.பி.யின் இரண்டாவது மட்டத்தலைவரான ஒருவர் மூலம் அவரின் உறவினான உயர்மட்டப் பொலிஸ் அதிகாரிக்கும் சில தகவல்கள் கசியவே அவர் தலைமைப் பீடத்துக்குத் தெரியப்படுத்துகிறார். ஏற்கனவே புலனாய்வுப் பிரிவினர் சேகரித்த தகவல்களும் சேரவே பொலிஸ் தலைமை விழிப்படைகிறது. 10.03.1971 அன்று அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது.

13.03.1971ல் ரோஹண விஜயவீரவும் சில முக்கிய தோழர்களும் அம்பாறை செல்லும் வழியில் வைத்து சிறப்புப் பொலிஸ் பிரிவால் கைது செய்யப்பட்டதுடன், உடனடியாக அவர்கள் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டு கோட்டைச் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

ஆனால் ஜே.வி.பி.யினர் தங்கள் திட்டத்தை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடிவு செய்தனர். புரட்சியை ஆரம்பிப்பது பற்றி தந்தி வாசகத்தின் சங்கேத வார்த்தைகளை பிழையாக விளங்கிக் கொண்டமையால் வெள்ளவாய பொலிஸ் நிலையத்தின் மீது இரவு நடத்தப்படவேண்டிய தாக்குதல் பகலே நடத்தப்பட்டு விட்டது.

அதனால் அதியுயர் உச்ச விழிப்பு நிலையைப் பிரகடனம் செய்த பொலிஸார் சகல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ததுடன் அன்று இரவு ஊரடங்கு சட்டத்தைப் பிரகடனப்படுத்தினர்.

அன்று இரவு 70 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 40 பொலிஸ் நிலையங்கள் கைப்பற்றப்பட்டன. பிரதமரைக் கைது செய்யும் முயற்சியும் ஊரடங்குச் சட்டம் காரணமாகக் குழப்படைந்து பிசுபிசுத்துப் போனது.

பொலிஸாரும் இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டு ஏறக்குறைய 25,000 சிங்கள வாலிபர்கள் கொல்லப்பட்டனர். அல்லது காணாமல் போயினர். 18,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜே.வி.பி. ஒருநாள் புரட்சி ஒரு நாளிலேயே முடிவுக்கு வந்ததுடன், பேரிழப்பையும் சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

அடிப்படையில் ஒரு புரட்சிகர மாற்றம் தேவைப்படும் பல்வேறு விதமான ஒழுங்குமுறைகளுக்கு உட்படுத்தப்படும் தொழிலாளர்கள், விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள், தமிழ்த் தரப்பினர் ஆகியோரை இணைக்காமல் சிங்கள இளைஞர்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் மூல சக்தியாகக் கொண்டு தனிச் சிங்களப் புரட்சியாக மேற்கொள்ளப்பட்ட புரட்சி தொடங்கிய நாளிலேயே தோல்வியை நோக்கித் தள்ளப்பட்டு விட்டது.

ஒடுக்கப்படும் மக்களின் ஆட்சியதிகாரத்தைக் கொண்டுவரப் போவதாகக் கூறிப் புரட்சி செய்த ஜே.வி.பி.யின் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் நடத்தியபோது தாம் பிரிவினையை எதிர்ப்பதாகக் கூறி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததிலிருந்து நாம் அவர்களின் இனவாத அடிப்படையைப் புரிந்து கொள்ளமுடியும்.

எனவே ஜே.வி.பி.மேற்கொண்ட புரட்சி தனது முற்போக்குத் தன்மையை ஆரம்பத்திலேயே இழந்துவிட்ட காரணத்தினாலும் இனவாதப் போக்குக் கொண்டிருந்ததாலும் புரட்சி தோல்வியடைந்தது மட்டுமின்றி பல அப்பாவிச் சிங்கள இளைஞர்கள் கூட உயிரிழக்கவும் ஒடுக்குமுறைக்கு உட்பட வேண்டியும் ஏற்பட்டது என்பது ஒரு வரலாற்றுப் பாடமாகும்.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE