Thursday 28th of March 2024 11:22:02 AM GMT

LANGUAGE - TAMIL
.
பதவிகளை முதன்மைப்படுத்தும் மூன்றாம் தர தமிழ் அரசியல்! - நா.யோகேந்திரநாதன்!

பதவிகளை முதன்மைப்படுத்தும் மூன்றாம் தர தமிழ் அரசியல்! - நா.யோகேந்திரநாதன்!


இலங்கையில் தற்சமயம் கொழும்புதுறைமுக நகரத்தை ஒரு புதிய ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வருவதற்கு பல தரப்பினரிடமிருந்து மேலெழுந்துள்ள கடும் எதிர்ப்பு, ஏப்ரல் 21ல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான அதிருப்தி, சீனி வரிக்குறைப்புத் தொடர்பாக அரசாங்கத்துக்குக் கிடைக்க வேண்டிய 15 கோடி ரூபா இல்லாமற் செய்யப்பட்ட மோசடி, நச்சுப் பதார்த்தம் கலந்த தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்தமை, அணுக்கதிர் வீச்சை ஏற்படுத்தக்கூடிய யுரேனியம் ஏற்றப்பட்ட சீனக்கப்பல் அம்பாந்தோட்டைக்கு வருகை தந்தமை போன்ற விடயங்கள் எரியும் பிரச்சினைகளாகத் தென்னிலங்கை அரசியலை உலுப்பிக் கொண்டிருக்கின்றன. இப்பிரச்சினைகள் நாடாளுமன்ற அமர்வுகளில் குழப்பங்களை ஏற்படுத்தி சபை நிகழ்வுகளை ஒத்தி வைக்குமளவுக்கு அங்கு கூர்மையடைந்துள்ளன.

துறைமுக நகரம் ஒரு ஆணைக்குழுவின் கீழ்க்கொண்டு வரப்படுவதன் மூலம் சீனாவின் இந்து சமுத்திர பிராந்தியத்தின் மீதான மேலாதிக்க நோக்கத்துக்கு வாய்ப்பாக அது பயன்படுத்தப்படமுடியுமெனவும், அதன் காரணமாக இலங்கை அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய வல்லாதிக்க சக்திகள் மோதும் களமாக இலங்கை மாறி விடக்கூடுமென்ற அச்சம் பரவலாக மேலெழுந்துள்ளது. அதன் காரணமாக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, அரசாங்கத்திலுள்ள ஒரு பகுதியினரும், இந்த அரசாங்கத்தை ஆட்சியில் ஏற்றி வைத்த சக்தி வாய்ந்த பௌத்த குருமாரும், சிவில் அமைப்புகளும் இவ்விடயம் தொடர்பாகக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. இச்சட்டமூலத்துக்கு எதிராக நீதி மன்றத்தில் முன்வைக்கப்பட்ட 15க்கு மேற்பட்ட மனுக்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று நிறைவு பெற்றுவிட்டன.

இவ்விடயம் சிங்கள மக்களுக்கு மட்டுமின்றி தமிழ் முஸ்லிம் மக்களையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏகாதிபத்திய வல்லரசுகள் மோதும் களமாக மாறும் போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் புறமொதுக்கப்படும் என்பதுடன் இம்மோதல்கள் எமது பிரச்சினைகள் பகடைக்காயாக உருட்டப்படும் சந்தர்ப்பங்களும் ஏற்படாதெனச் சொல்லிவிடமுடியாது.

அதுமட்டுமின்றி வடபகுதியின் மூன்று தீவுகள் மின்சார நிலையம் அமைப்பதற்காகச் சீனாவுக்கு வழங்கப்படவுள்ள நிலையில் இந்த வல்லாதிக்கப் போட்டியில் எமது பிராந்தியமும் உள்ளீர்க்கப்படும் ஆபத்து இல்லையென்று சொல்லிவிட முடியாது.

எனவே இப்பிரச்சினை தொடர்பாகத் தீவிர அக்கறை காட்டி தென்னிலங்கையின் எதிர்ப்பு அணிகளுடன் இணைந்து குரல்கொடுக்க வேண்டியது முக்கிய தேவையாகும். ஆனால் துரதிஷ்டவசமாக எமது தமிழ் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் எவ்வித சம்பந்தமுமின்றி மௌனம் காத்து வருகின்றனர்.

இவ்வாறே சீனி இறக்குமதி வரிக்குறைப்பால் இடம்பெற்ற மோசடி, நச்சுப் பதார்த்தம் கலந்த தேங்காயெண்ணை இறக்குமதி செய்யப்பட்டமை போன்ற விடயங்களால் தமிழ் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய பாவனைப் பொருட்களின் விலையுயர்வு, வாழ்க்கைச் செலவு உயர்வு என்பனவற்றில் இந்த ஊழல் மோசடிகளுக்கு முக்கிய பங்குண்டு.

எமது அரசியல் தலைமைகளோ, இவை சிங்கள மக்களுக்கு மட்டுமே உரிய பிரச்சினை என்பது போல். அவை தொடர்பாக அலட்சியப்போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர்.

இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட எமது மக்களுக்கு இன்றுவரை நீதி கிட்டாதது போன்றே, உயிர்த்த ஞாயிறு நாளில் கொல்லப்பட்ட, படுகாயமடைந்த மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் விடயமும் திருப்திகரமானதாகவும் நம்பிக்கைக்குரிய வகையிலோ இல்லை.

எனவே அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டியது எமது அரசியல் தலைமைகளின் தார்மீகக் கடமையாகும்.

ஆனால் இவ்வாறான தமிழ் மக்களையும் பாதிக்கக்கூடிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தலைவர்கள் எவ்வித அக்கறைகளையும் காட்டுவதாகத் தெரியவில்லை. இவ்விடயங்கள் தொடர்பாக நியாயங்களைக் கோரி உரத்துக் குரல் கொடுப்பதிலோ, இவற்றின் காரணமாகத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பாக மக்களைத் தெளிவுபடுத்தவோ எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

ஆனால் எமது தமிழ் அரசியல்வாதிகள் வடமாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பான விவாதங்களினால் ஊடகங்களை நிறைத்து வருகின்றனர். மாகாண சபைத் தேர்தல் நடக்குமோ இல்லையோ என்பது பற்றியோ அல்லது அது எப்படி நடத்தப்படும் என்பது பற்றியோ இதுவரை தெளிவு இல்லாத நிலையில் எமது அரசியல் தலைமைகள் முதலமைச்சர் பற்றிய சர்ச்சையை எழுப்பியுள்ளனர்.

அண்மையில் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஊடக சந்திப்பொன்றின்போது மாவை சேனாதிராஜாவுக்கு முதலமைச்சர் பதவி பொருத்தமில்லையெனவும், அவருக்கு அதற்கான தகுதி இன்மையாலேயே இரா.சம்பந்தன் தன்னை அழைத்து முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தினாரெனவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியினதும் தமிழ் தேசியப் பேரவையினதும் ஒருங்கிணைப்பாளர் வேலவன் சுவாமிகளே முதலமைச்சருக்குப் பொருத்தமானரெனவும் தெரிவித்திருந்தார்.

இக்கருத்துக்கள் வடக்கின் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கி விட்டன.

மாவை சேனாதிராஜா உடனடியாகவே கடந்த மாகாண சபை தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்பட்டமைக்கு தன் தகுதியின்மை காரணமல்லவெனவும் தான், சம்பந்தர் கேட்டுக்கொண்டமைக்காகத் தானாகவே விட்டுக்கொடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். அதில் உண்மையில்லாமலில்லை. இவ்விடயம் தொடர்பாக சி.வி.கே.சிவஞானம், சிவாஜிலிங்கம், சித்தார்த்தன் உட்பட யாவரும் மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டவேண்டுமென்பதை வலியுறுத்தி கருத்துக்களை மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளையில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணன் அவர்களை முதலமைச்சராக்கும் நோக்குடன் சில காய்கள் நகர்த்தப்படுவதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளன. அத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே மாநகர சபைப் பணியாளர்களின் சீருடை விடயமாக மணிவண்ணன் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டதும், பின்பு அவர் சாதாரண சட்டங்களின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டதும், அவரை விடுவிக்க சுமந்திரன், நீதிமன்றில் வாதப்பிரதிவாதங்களை மேற்கொண்டதாகவும், அவரின் விடுதலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரிமை கோரியமையும் இடம்பெற்றதாகவும் சில தரப்பினரால் கருதப்படுகிறது. கடைசியாக இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் த.தே.கூட்டமைப்பு சபைகளில் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் ஈ.பி.டி.பி. ஆதரவுடன் ஆட்சியமைத்ததிலிருந்து மணிவண்ணன் விவகாரம் வரை சுமந்திரனுக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையே ஒரு உள்ளார்ந்த புரிந்துணர்வு நிலவுவதாகவும் கருதப்படுகிறது.

தற்சமயம் திரு.சி.வி.கே.சிவஞானம் அவர்கள் வடமாகாண முதலமைச்சருக்கு வருவதற்கான தகுதி தனக்கு மட்டுமே உள்ளதென தெரிவித்ததாகவும் சில செய்திகள் வெளிவந்துள்ளன.

இவற்றின் காரணமாக மாவை சேனாதிராஜா முதலமைச்சராக வரக்கூடாது என்பதற்காக ஒரு வலை பின்னப்படுகிறதா என்ற கேள்வியும் எழவே செய்கிறது.

மாகாண சபைத் தேர்தல் நடப்பது பற்றி நிச்சயமின்மை நிலவுகின்ற போதிலும் பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டு, முதலமைச்சர் பிரச்சினை முன்தள்ளப்படுவதும் அது மக்கள் மத்தியில் பேசு பொருளாக்கப்படுவதும் ஏன் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் கட்சியின் வளர்ச்சிக்குக் காலம் காலமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் எந்தவொரு உறுப்பினரும் உயர் பதவிகளுக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி யாராவது மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று மேலெழுந்து வருவார்களானால் அவர்கள் ஏதாவது காரணத்தால் வெளியேற்றப்படுவார்கள் அல்லது தாமாக வெளியேற வைக்கப்படுவார்கள். ஆனால் அடிக்கடி கட்சியுடன் சம்பந்தமில்லாத 'ரெடிமேற்' தலைவர்கள் இறக்குமதி செய்யப்பட்டு கட்சியுள் ஆதிக்க சக்திகளாக உருவாக்கப்படுவார்கள். இப்படியான தலைமைப் பதவிகளுக்கு வருபவர்கள் பெரும்பாலும் வழக்கறிஞர்களாக இருப்பது தமிழரசுக் கட்சியில் மட்டுமின்றி தமிழ் அரசியலில் பேணப்படும் ஒரு மரபாக நிலைபெற்றுள்ளதையும் அவதானிக்கமுடியும்.

தமிழரசுக் கட்சியின் ஆரம்ப காலத்தில் அர்ப்பணிப்புடன் இரவு பகல் பாராது தொண்டாற்றிய பெரும் பிரசாரப் பீரங்கிகளாக விளங்கிய நாவேந்தன், பத்மாவதி வேலுப்பிள்ளை, புதுமைலோலன், மன்சூர் மௌலானா, எம்.எம்.ஏ.முஸ்தபா, எஸ்.இராசதுரை போன்ற பலர் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த போதிலும் மெல்ல ஓரங்கட்டப்பட்டு வெளியேற வைக்கப்பட்டனர். அதேவேளையில் சிவசுந்தரம், வி.நவரத்தினம் போன்ற சிரேஷ்ட உறுப்பினர்களும் நேர்மையாக வளைந்து கொடாமல், கொள்கைப் பற்றுடன் செயற்பட்டமையால் வெளியேற்றப்பட்டனர். ஆலாலசுந்தரம், மாவை சேனாதிராஜா, காசி ஆனந்தன் போன்றோர் பிரசாரக் கருவிகளாக மட்டும் பாவிக்கப்பட்டனர்.

அதேவேளையில் இறக்குமதி செய்யப்பட்ட 'ரெடிமேற்' தலைவர்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சர் திருச்செல்வம், பண்டிதர் கா.பொ.ரத்தினம், சி.வி.விக்னேஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன் என ஒரு நீண்ட பட்டியலே உண்டு. இரா.சம்பந்தன் கூட 1977 தேர்தலின்போது அமிர்தலிங்கத்தால் திருமலையில் நிறுத்தப்பட்ட ஒரு வழக்கறிஞர்தான். அவரும் நீண்ட காலத் தொண்டரல்ல.

காலம் காலமாகத் தொண்டராகவே பணியாற்றி வந்த மாவை சேனாதிராஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவமகாராசா படுகொலை செய்யப்பட்ட பின்பு, அந்த இடத்துக்குப் புலிகளால் நியமிக்கப்பட்டார். தற்சமயம் அவர் தமிழரசுக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டாலும் கட்சியின் அதிகார பீடங்களாகச் சம்பந்தனும், சுமந்திரனும் விளங்கி வருகின்றனர்.

இப்படியான ஒரு நிலையில் வழக்கறிஞர் அல்லாத மேட்டுக்குடி பாரம்பரியமற்ற மாவை சேனாதிராஜா வடமாகாண முதலமைச்சராக வருவதைத் தடுக்கும் முன்முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன.

இது மக்களின் உரிமைப் பிரச்சினைகளிலிருந்து நாளாந்தப் பிரச்சினைகள் வரை ஓரங்கட்டப்பட்டு, பதவிகளைப் பெறும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மூன்றாம் தர அரசியலிலிருந்தே முளைவிடுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இத்தகைய போக்கு மேலோங்கியிருக்கும் நிலையில், இப்போக்கை தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்கும் வரையும் தமிழ் மக்கள் விமோசனத்தை நோக்கி நகர்வது சாத்தியமில்லை.

அருவி இணையத்திற்காக : நா.யோகேந்திரநாதன்

28.04.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: க.வி.விக்னேஸ்வரன், ம.ஆ.சுமந்திரன், மாவை சோ.சேனாதிராஜா, இரா சம்பந்தன், இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE