Wednesday 24th of April 2024 09:58:13 AM GMT

LANGUAGE - TAMIL
-
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம்; பின்னணிக் காரணம் சீனாவா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம்; பின்னணிக் காரணம் சீனாவா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!


தென் இலங்கை அரசியலின் ஆட்சி அதிகார கட்டமைப்பும் வெளியுறவு கொள்கையும் இரு வேறு விடயங்களாக கருதியதன் விளைவினை எதிர்க்கொள்ள தொடங்கியது. இலங்கையின் அதிகார அரசியலானது வெளிநாட்டுக்கொள்கையை அதிகம் தங்கியிருக்கின்றது என்பதை சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலப்பகுதியில் அவதானிக்க முடிகின்றது.

2015ஆம் ஆண்டு அத்தகைய அனுபவத்தில் மிகப்பிந்திய உதாரணமாக அமைந்திருந்தது அதே சூழல் மீளவும் தற்போதைய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவுடனான உறவு கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான சர்ச்சை ஆட்சியாளர் மீதான எதிர்ப்புவாதம் போன்ற பல அம்சங்களை திரட்சிக்குள் இலங்கையின் ஆட்சித்துறை அகப்பட்டுள்ளது. இக்கட்டுரை தற்போது எழுந்துள்ள குழப்பத்திற்கான காரணங்களினையும் அதன் உண்மைத் தன்மையினையும் தேடுவதாக அமையவுள்ளது.

முதலாவது இலங்கையின் ஆட்சித்துறை மீதும் நிறைவேற்று அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி மீதும் அதீதமான குற்றசசாட்டுக்கள் கொழும்பு நிதி நகரம் தொடர்பில் எழுந்துள்ளது. அக்குற்றச்சாட்டின் பிரதான அம்சம் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட கொழும்பு துறைமுக நகரத்திற்கான பொருளாதார நிபுணர் குழுத்தொடர்பான விடயமேமாகும். கொழும்பு மாநகர சபையின் கட்டுபாட்டில் இருந்தும் கொழும்பு நகர கட்டுபாட்டில் இருந்தும் இலங்கை அரசியலமைப்பின் கட்டுபாட்டில் இருந்தும் விடுவிக்கப்படும் பிரதேசமாகவும் தனித்துவமான பிரதேசமாகவும் கொழும்பு துறைமுக நகரத்தை அடையாளப்படுத்துவதோடு அந்நகரத்தின் பாதுகாப்பு பொருளாதார முதலீடு மற்றும் வர்த்தக நடைமுறை போன்றவற்றின் ஆதிக்கத்தினை சீன அரசாங்கமும் சீனபிரஜைகளும் கொண்டிருப்பார்கள் என்ற சந்தேகத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை தொடர்ந்து எதிர்கட்சியினராலும் பௌத்த பீடங்களாலும் முன்வைக்கப்பட்டுவருகின்றது இதனை அடிப்படையாக கொண்டு கொழும்பு துறைமுக நகரத்தை தனிநாடு என்றும் சமஷ;டிக்கு ஒப்பான அதிகாரம் கொண்டது என்றும் சீனாவின் காலனி என்றும் அத்தகைய தரப்புகளால் உரையாடபட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஜனாதிபதி சட்டதரணியும் பாராளுமன்ற உறுப்பினரான விஜயதாச ராஜபக்ஷ முக்கிய எதிர்ப்புவாதியாக விளங்கியதோடு ஜனாதிபதிக்கும் விஜயதாசாவுக்குமான தொலைபேசி உரையாடல் இரு தரைப்புக்குமான முரண்பாட்டை மேலும் அதீதமானதாக மாற்றியுள்ளது. அவ்வாறாயின் அனைத்து தரப்புகளாலும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு சீனா மீதான எதிர்ப்புவாதமா அல்லது ஆட்சி துறை மீதான அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பு வாதமா அல்லது சீன எதிர்ப்பு வாதத்தின் மூலம் அதிகார மாற்றத்தை மேற்கொள்வதற்கான நகர்வா என்ற கேள்வி இயல்பானது.அதனை விளங்கிக் கொள்வது அவசியமானது.

ஒன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பேராயர் மல்கம் ரஞ்சித் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பிரதான விடயமாக ஆட்சி மாற்றத்தை நோக்கமாக கொண்டு ஒரு குழு உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டது என குறிப்பிட்டிருந்தார். அத்தகைய தகவல் ஆட்சியாளர்களையும் முன்னாள் ஆட்சியாளர்களையும் நெருக்கடிக்குள் உள்ளாக்கியது. இது பெரும் முரண்பாட்டை பாராளுமன்றதிற்குள்ளும் பாராளுமன்றதிற்கு வெளியேயும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அரசாங்கம் மீதான அதிருப்தியும் அரசாங்கம் உண்மையை கண்டறிய தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு எதிர்கட்சிகளிடமும் பௌத்த பீடங்களிடமும் கிருஸ்தவ இஸ்லாமிய அமைப்புகளிடம் எழுந்துள்ளது.

இதனால் இவ்வாட்சியை முடிவுக்கு கொண்டுவர எதிர்கட்சியினர் ஆளும் தரப்போடு இயங்கி வரும் கூட்டுக் கட்சிகளின் தலைமைகளுடனான சந்திப்பையும் உரையாடல்களையும் தீவிரப்படுத்தியுள்ளார். ஏறக்குறைய ஆட்சி மாற்றத்தில் நோக்கிய நகர்வொன்று தென் இலங்கையில் நிகழ ஆரம்பித்துள்ளது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடைய அரசாங்கத்தில் இருந்து வாசுதேவ நாணயக்கார உதயன் கம்பன்பில விமல் வீரவன்ச போன்றோர் எதிரணியுடன் கூட்டு சேர்ந்து செயற்படுவது பற்றிய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.ஆனால் எதிர் கட்சியின் பலவீனமம் ஆளும் தரப்பின் அணுகுமுறையும் அதற்கான வாய்ப்பினை நளுவச் செய்துள்ளன.

இரண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிராதான குற்றவாளி என அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட நபர்களை கடந்து வேறு பலருடைய பெயர்கள் பாராளுமன்றிலும் பாராளுமன்றிற்கு வெளியேயும் உச்சரிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பெயரால் இஸ்லாமிய அமைப்புகள் தடைசெய்யபப்ட்டதோடு இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் உலாமாக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த இஸ்லாமிய அரசியல் தலைமைகள் ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதோடு ஆட்சி மாற்றத்திற்கான பொறிமுறையில் கவனம் கொள்வதற்கு விருப்பம் உடையவர்களாக அவர்களது நகர்வுகள் காணப்படுகின்றது. ஆனாலும் இஸ்லாமிய அரசியல் தலைமைகள் வெளிப்படையாக அத்தகைய நகர்வுகள் எதிலும் இதுவரை ஈடுபடவில்லை.

மூன்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பாளரான லக்ச்மன் கிரயல்ல பாராளுமன்றத்திற்கு வெளியே கருத்து தெரிவிக்கும் போது இந்தியாவின் நலன்களை மீறி கொழும்பு துறைமுகம் தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆபத்தான விளைவுகளை தரும் என குறிப்பிட்டுள்ளார். அதாவது கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கான சட்டமூலம் இந்தியாவின் நலன்களுக்கு விரோதமானது என்பதை கோடிட்டு காட்டியதோடு கடந்தவாரம் இந்தியா ரன் விஜய் என அழைக்கப்படும் போர் கப்பலை அனுப்பியிருந்ததன் முக்கியத்துவத்தையும் கவனித்தில் கொள்ளுதல் அவசியமாகும் . அவ்வாறு இந்திய நலன்களை பாதிக்கும் விதத்தில் சீனாவின் கட்டமைப்பொன்று கொழும்பை மையப்படுத்தி உருவாவது இந்தியாவின் புவிசார் நலனை முற்றாகவே பாதிக்கும் ஒரு விடயமாக உள்ளது. இந்தியா அத்தகைய நடவடிக்கைக்கு மாற்றான நகர்வுகளை பற்றிய உரையாடலையும் நகர்வுகளையும் ஏற்கனவே ஆரம்பித்திருந்தது. இக்காலப்பகுதியில் இந்தியாவின் நடவடிக்கைகளை அவதானிக்கும்போது சீன எதிர்ப்புவாதத்தை கொண்டிருக்கும் இந்தியா அத்தகைய எதிர்ப்புவாதத்தின் பெயரால் அரசாங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதிகார மாற்றத்தை அல்லது அதிகாரத்தின் மீதான நெருக்கடியை மேற்கொள்வதற்கான முனைப்புகளை செயற்படுத்தி வருகின்றதை அவதானிக்க முடிகிறது. இதற்கான நகர்வுகளில் ஒன்றாக கொழும்பு துறைமுகம் நோக்கிய ரன் விஜய் கப்பலின் சிநேக பூர்வமான விஜயம் அமைந்திருந்தது. தமிழக அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரைக்கு இந்திய வெளிவிவகார அமைசசர் ஜெய்சங்கர் அனுப்பிய கடிதமொன்றை மாகாணசபை தேர்தலிலை தாமதமின்றி இலங்கை நடாத்தவேண்டும் என்றும் சர்வதேச சமூகத்தின் அழைப்பினை இலங்கை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அதனூடாக அதிகார பகிர்வு 13வது திருத்தசட்ட மூலத்தின் அமுலாக்கம் முழுமைப்படுத்த வேண்டும் என இந்தியா வழியுறுத்துகின்றது. இது மட்டுமன்றி தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் இந்தியா கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளாகும் .

நான்கு மிகப்பிந்திய தகவலாக அணுகதிர்வீச்சு பொருட்களுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் சீன கப்பல் ஒன்று அனுமதியின்றி நுழைந்துள்ளதாகவும் தொழிநுட்ப கோளாறு காரணமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நோக்கி கப்பல் திருப்பப்பட்டதாகவும் இலங்கை அரசாங்கமும் சீன கப்பல் குழுமமும் தெரிவித்துள்ளன. இத்தகைய நடவடிக்கை சீனாவின் நகர்வில் அதிக குழப்பத்தை தந்துள்ளது. குறிப்பாக தென்சீன கடற்பகுதியில் சீன உருவாக்கிய தீவுகளில் (ஆயn ஆயனந ஐளடயனெ) அணுக்கதிர்கள் மூலம் மின்சாரத்தையும் ஏனைய நடவடிக்கைகளையும் சீனா மேற்கொண்டுள்ளதாக தென்சீன கடலை உரிமை கோரும் அயல்நாடுகளும் அமெரிக்காவும் குற்றஞ்சாட்டி வருகின்றது. தொழிநுட்ப பிரச்சினை காரணமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழைந்தபோது இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி பெறவில்லை என்ற குற்றஞ்சாட்டு முன்வைக்கப்படுவதோடு இலங்கையின் அணுசக்தி பேரவையின் தலைவர் தென்னக்கோன் ஒன்றுக்கு மேற்பட்ட கதிர்வீச்சுகளை ஏற்படுத்த கூடிய கொள்கலன்கள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். அதேநேரம் கப்பல் துறைமுகத்துக்குள் நுழைந்தபோது அக்கப்பலில் உள்ள பொருட்கள் குறித்த தகவல் எதனையும் வழங்கவில்லை என்றும் அக்கப்பலில் இருந்து எந்த பொருட்களும் இறக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டவில்லை என்றும் இவ்விடயம் குறித்து ஜனாதிபதிக்கு முழு விபரமும் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிகாட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கை கடற்பரப்பிற்குள் 99 வருடகால குத்தகையில் பெறப்பட்ட ஹம்பாந்தோட்டை சீனாவின் செல்வாக்கு பகுதியாக காணப்படுகின்றது என்பதை அதன் நேரடி விளைவுகள் தற்போது ஆரம்பித்துள்ளது என்றும் குறிப்பிட்டு கொள்ள முடியும் .

ஐந்தாவது சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் எதிர்வரும் 27 ம் திகதி கொழும்புக்கு வருகைத்தரும் நிலையில் அணுசக்தி அடங்கிய கப்பலின் விஜயம் நிகழ்ந்துள்ளது. சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங் அவர்களது விஜயம் இரு நாட்டுக்குமான இராஜதந்திர உரையாடலோடு பாதுகாப்பு சார்ந்து முக்கிய சந்திப்பதாக அமையும் என சீன செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதுமட்டுமன்றி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் கொழும்பு துறைமுக நகரத்திற்கும் சீன பாதுகாப்பு அமைச்சர் பார்வையிடுவார் என்றும் இருதரப்பு வர்த்தக முதலீடு நிதியுதவி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு போன்றவற்றிற்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகவும் ஒத்துழைப்பை அதிகரிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே சீன எதிர்ப்புவாதத்தில் உள்நாட்டிலும் பிராந்திய சர்வதேச தளத்தில் கொண்டு இயங்குகின்ற உலக ஒழுங்கானது ஆட்சி மாற்றத்தை தமது தெரிவாக கொண்டிருக்கின்றது என்பது உணரமுடிகின்றது. இத்தகைய ஆட்சி மாற்றத்தின் அடிப்படை கொழும்பு துறைமுக நகரமும் அதன் மீதான சீனாவின் செல்வாக்கின் வளர்ச்சியும் இந்தோ – பசுபிக் உபாயத்திற்கும் இந்திய புவிசார் நலன்களுக்கும் விரோதமானதாக அமையும் என்பதன் பிரதிபலிப்பாகவே உள்ளது. இதனை அடிப்படையாக கொண்டே இலங்கை அரசாங்கம் தனது வெளியுறவு கொள்கையையும் ஆட்சி அதிகாரத்தையும் சமதளத்தில் அணுகுதல் என்பது தவிர்க்க முடியாத இலங்கையின் அரசியலாக விளங்குகின்றது. சீனாவும் இலங்கையின் மீதான தனது செல்வாக்கை பலப்படுத்திக்கொள்வதன் மூலம் புதிய பட்டுபாதையில் விஸ்தரிக்கவும் இந்தியாவை நெருக்கடிக்குள்ளாக்கவும் இந்தோ- பசுபிக் உபாயத்தை பலவீனப்படுத்தவும் முயற்சிக்கின்றது. அதனை அடைவதிலேயே இரு தரப்பும் செயல்படுகின்றன. இதில் இலங்கை துரதிஸ்டவசமாக அகப்பட்டுள்ளது.

பேராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE