Thursday 18th of April 2024 12:35:53 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 53 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 53 (வரலாற்றுத் தொடர்)


சிங்கள இளைஞர்களின் எழுச்சியைத் தடுக்க பலி கொடுக்கப்பட்ட தமிழ் மாணவர்கள்! - நா.யோகேந்திரநாதன்!

'மாவட்ட அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் அரசியல் தாக்கம் பொதுமானளவுக்கு பேரழிவை நோக்கி இட்டுச் சென்றுள்ளது. அது பெரும்பான்மைச் சிங்களவரிடமிருந்து சமமாக நடத்தப்படுதலை எதிர்பார்த்தல் பயனற்றதென அநேக தமிழரை உறுதியாக நம்பச் செய்துள்ளது. அது தமிழர் ஐக்கிய முன்னணியிலுள்ள பிரிவினைவாத சக்திகளைப் பெருமளவில் பலப்பத்தியுள்ளதுடன் 1975ன் தொடக்கத்தில் தனியரசுக்கான கொள்கைப் பிரசாரத்தை அங்கீகரிப்பதற்கும் வழி வகுத்தது'.

இது இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான நடுநிலை ஆய்வாளரான கே.எம்.டி. சில்வா அவர்களால் மாவட்ட ரீதியான தரப்படுத்தல் மூலம் பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களைத் தெரிவு செய்யும் முறை அமுலுக்குக் கொண்டு வரப்பட்டமையால் ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பாக வெளியிட்ட கருத்தாகும்.

1965 தொடக்கம் 1970 வரை ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டாட்சி மேற்கொண்ட முதலாளித்துவ நலன்களைப் பேணும் கொள்கையின் அடிப்படையிலான நடவடிக்கைகள் காரணமாக பெருமளவு நடுத்தர மற்றும் பின் தங்கிய சிங்களக் கிராமங்கள் மத்தியில் கொடிய வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் தலை விரித்தாடின. ஏறக்குறைய 7 இலட்சம் சிங்கள இளைஞர்கள் வேலையைற்றிருந்த நிலையில் அவர்களிடம் விரக்தியும் ஆட்சியாளர் மீதான வெறுப்பும் உச்சம் பெற்றிருந்தன. அப்படியான ஒரு நிலையில் ஜே.வி.பி.யினரால் அரசைக் கவிழ்த்து ஒரு மக்கள் ஆட்சியை நிறுவும் பிரசாரம் இளைஞர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டது. எனவே ஏராளமான சிங்கள இளைஞர்கள் ஜே.வி.பி.யில் இணைந்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கக் களமிறங்கினார்கள். அந்த நிலையில் ஜே.வி.பி. ஒரு இரகசிய ஆயுதப் புரட்சி இயக்கமாக சிங்களப் பகுதிகளில் வேகமாக வளர ஆரம்பித்தது.

1970ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சிப் பீடமேறியது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 6 மாதங்களில் ஜே.வி.பி.யினரின் ஆட்சிக் கவிழ்ப்புப் புரட்சி இடம்பெற்றது. 1971 ஏப்ரல் 5ம் நாள் தொடங்கிய புரட்சி அன்றே தோற்கடிக்கப்பட்டதுடன், பல முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் 70 பொலிஸ் நிலையங்கள் மீதான தாக்குதலில் 40 புரட்சிவாதிகளால் கைப்பற்றப்பட்டன. அது மட்டுமின்றி வடமத்திய, தென், ஊவா மாகாணங்களில் சில பகுதிகள் சில நாட்கள் ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. அது மட்டுமின்றி யாழ்ப்பாணக் கோட்டைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட ரோஹண விஜயவீரவையும் அவரது 12 தோழர்களையும் விடுவிக்கும் முகமாக நடத்தப்பட்ட தாக்குதலும் படுதோல்வியில் முடிவடைந்தது.

எனினும் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, இராணுவம் களமிறக்கப்பட்ட நிலையில் சில நாட்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டபோது 25,000 சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமற் போயினர். ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்கள் உட்பட 18,000 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் வழக்கு விசாரணைகளின் பின்பு 16,000 பேர் விடுவிக்கப்பட்டனர். விஜயவீர உட்படப் 12 பேருக்குச் சிறைச் தண்டனை விதிக்கப்பட ஏனையோர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சிறிது காலத்தின் பின் விடுவிக்கப்பட்டனர்.

வெகு விரைவிலேயே ஆயுதப் புரட்சி ஒடுக்கப்பட்டுவிட்ட போதிலும் மீண்டும் ஒரு புரட்சி உருவாகிவிடக்கூடாது என்பதற்காக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் துரிதமான சில வேலைத் திட்டங்களில் இறங்கியது. சிங்கள இளைஞர்கள் மத்தியில் நிலவிய வறுமை, வேலையின்மை போன்றவையே ஒரு புரட்சி தோற்றம் பெறுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கின என்பதைப் புரிந்து கொண்ட அரசாங்கம் அவற்றை ஒழிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் இறங்கியது.

அவ்வகையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படக் கூடிய விவசாயப் பொருட்களுக்கான இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதித்தது. அதன் மூலம் விவசாயிகள் நியாயமான சந்தை விலையைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டது. அதுபோன்று வாகனங்கள், இயந்திரங்கள் உட்பட வெளிநாட்டு இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்பட்டன. அதனால் உள்நாட்டில் நெசவாலைகள், வாகனத் திருத்தகங்கள், உதிரிப்பாக உற்பத்திகள் போன்ற தொழிற்துறைகள் வளர்ச்சியடைந்தன. அவற்றின் காரணமாக வேலைவாய்ப்புகள், சுயதொழில்கள் என்பன அபிவிருத்தி அடைந்ததுடன் ஏராளமான இளைஞர்கள் விவசாய முயற்சிகளில் இறங்கினர்.

மேலும் படித்த இளைஞர்களைப் பெருந்தொகையில் உயர் கல்விகளுக்கு உள்ளீர்க்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாகவே பல்கலைக்கழகத்துக்குக் கூடுதலான சிங்கள மாணவர்கள் பிரவேசம் பெறும் வகையில் முதலில் இன அடிப்படையிலும் பின்பு மாவட்ட அடிப்படையிலும் தரப்படுத்தல் முறை அமுலுக்கு வந்தது.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் சிங்கள இளைஞர்கள் புரட்சியில் இறங்காமல் தடுக்கவெனக்கொண்டு வரப்பட்ட தரப்படுத்தல்முறை தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்குவதற்கு உந்து சக்தியாக மாறியமையாகும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பல கிறிஸ்தவ பாடசாலைகளும், இந்து ஆங்கிலப் பாடசாலைகளும் அமைந்திருந்த காரணத்தால் யாழ்ப்பாணம் கல்வியில் எப்போதுமே முன்னிலை வகித்து வந்தது. அதேபோன்று கொழும்பு, கண்டி ஆகிய பெரு நகரங்களிலும் பல உயர்தரப் பாடசாலைகள் அமைந்திருந்த நிலையில் ஏனைய மாவட்டங்களின் கல்வி நிலை ஒப்பீட்டளவில் பின் தங்கிய நிலையிலேயே இருந்தது. 1964ம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களில் பொறியியல், விஞ்ஞான பீடத்துக்கு 37 வீதமும் மருத்துவம், பல் மருத்துவ பீடங்களுக்கு 41 வீதமும் கால்நடை மருத்துவ பீடங்களுக்கு 47 வீதமும் தமிழ் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அதாவது இலங்கையில் தமிழர்களின் சனத்தொகை 12.5 வீதமாக இருந்தபோதிலும் 46 வீதம் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.

அது சிங்களவர் மத்தியில் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சிங்கள மக்களின் சனத் தொகைக்கேற்ற வகையில் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்படும் சிங்கள மாணவர்களின் விகிதாசாரம் அமைய வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றது.

ஜே.வி.பி.கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பெருமளவு சிங்கள மாணவர்களை உயர் கல்விக்கு உள்ளீர்ப்பதன் மூலம் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் உருவாகும் நிலையைத் தவிர்க்கமுடியுமெனக் கருதியது.

அவ்வகையில் 1972ம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு வெட்டுப் புள்ளி முறையைக் கொண்டு வந்தது. அதன்படி அரசியல் ரீதியாக ஒவ்வொரு இனத்திலும் தெரிவு செய்யப்படவேண்டிய மாணவர்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்து அதன்படி ஒவ்வொரு இன மாணவர்களுக்குமான வெட்டுப் புள்ளி முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சையில் சித்தி பெறும் தமிழ் மாணவர்கள் கூடுதலான புள்ளிகளையும் சிங்கள மாணவர்கள் குறைந்த புள்ளிகளையும் பெறவேண்டிய தேவை எழுந்தது. எனவே அதிக புள்ளிகளைப் பெறும் தமிழ் மாணவனுக்குப் பல்கலைக்கழகப் பிரவேசம் கிடைக்காத நிலையில் அவனை விடக் குறைந்த புள்ளிகளைப் பெறும் சிங்கள மாணவனுக்குத் தெரிவு செய்யப்படும் வாய்ப்புக் கிட்டியது.

இது தமிழ் மாணவர்கள் மத்தியில் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பகிஷ்கரிப்புகள் போன்ற போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் தமிழ் மாணவர்கள் பேரவை என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது.

அதேவேளையில் 1972ல் அரசியலமைப்புக் காரணமாகவும் தமிழர் ஐக்கிய முன்னணியின் 6 அம்சக் கோரிக்கை உதாசீனப்படுத்தப்பட்டதாலும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பான ஒருநிலை தோன்றியிருந்தது. தமிழரசுக் கட்சியின் 12வது தேசிய மாநாட்டில் தனிநாட்டுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதும், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் புதிய அரசியலமைப்பை எதிர்த்து பதவியை ராஜினாமாச் செய்தமையும் ஏற்படுத்திய உணர்வும் ஆயுதப் போராட்டத்துக்கான சிந்தனையைத் தமிழ் இளைஞர்கள் மத்தியில் தூண்டின.

கல்வியில் வெட்டுப்புள்ளி முறையும் அமுலுக்கு வரவே மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் சில இரகசிய ஆயுதக் குழுக்கள் தோற்றம் பெற ஆரம்பித்தன.

தமிழ் மாணவர்களின் பலத்த எதிர்ப்பு, தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்ப்பு என்பன காரணமாக வெட்டுப்புள்ளி முறை இரத்துச் செய்யப்பட்டு 1973ல் இனவாரியான தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டது. இது ஒவ்வொரு மொழியிலும் பரீட்சைக்குத் தோற்றுபவர்களின் விகிதாசாரத்துக்கு அமைய அம்மொழி பேசும் மாணவர்களின் தெரிவை நிர்ணயிப்பது என்பதாகும் இம்முறையும் பலதரப்பினதும் எதிர்ப்பை உருவாக்கியது. ஏனெனில் யாழ்ப்பாணம், கொழும்ப, கண்டி ஆகிய பகுதிகளின் மாணவர்கள் ஆங்கிலத்திலேயே பரீட்சைக்குத் தோற்றினர். அதனால் பல திறமையான மாணவர்கள் தெரிவு செய்யப்படமுடியாத நிலை தோன்றியது.

எனவே கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பீட்டர் கெனமன் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அது பல தடவைகள் கூடி ஆலோசித்த பின்பு மாவட்ட ரீதியான தரப்படுத்தலை முன்மொழிந்தது. அதன்படி தெரிவு செய்யப்படுபவர்களின் தொகை, மாவட்ட அடிப்படையில் ஒதுக்கப்படுமெனவும், ஆனால் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு ஒரு குறைந்த பட்சத் தரம் பேணப்படுமெனவும் ஒரு மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்குக் குறிப்பிட்ட தரத்தில் போதுமான மாணவர்கள் இல்லாவிடில் நகர்ப்புறப் பாடசாலைகளில் உள்ளவர்களுக்கு அவ்விடங்கள் ஒதுக்கப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

1974ல் இந்த மாவட்ட ரீதியான தரப்படுத்தல் அமுலுக்கு வந்தது.

இதுவும் தமிழர் தரப்பைத் திருப்திப்படுத்தவில்லை. ஏனெனில் யாழ்.மாவட்டத்தில் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்படுவோர் தொகை 25 வீதத்திலிருந்து 6 வீதமாகக் குறைவடைந்தது. ஆனால் இதுவரைப் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்புக் கிட்டாத கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டப் பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்படும் நிலை உருவாகியது. அதேபோன்று மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் பின்தங்கிய பிரதேச தமிழ், முஸ்லிம் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பும் உருவானது.

இம்மாவட்ட ரீதியான தரப்படுத்தல் மூலம் பின் தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. அதேவேளை யாழ்.மாவட்டம், கொழும்பு, கண்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் மேட்டுக்குடியினருக்கு மட்டுமே உரித்தான கல்வி சாதாரண மக்களுக்கும் கிடைக்கும் நிலை உருவானமையை மறுத்துவிட முடியாது. உயர் குடியினரின் நலன்கள் ஊடாகவே சிந்திக்கும் ஐ.தே.கட்சி, தமிழ் ஐக்கிய முன்னணி என்பன இம்முறைக்கும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. தமிழரசுக்கட்சி ஒட்டுமொத்தத் தமிழ் மாணவர்களும் வஞ்சிக்கப்படுகின்றனர் என்ற பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது.

எனினும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஆயுதப் போராட்டம் உருவானமைக்கான காரணங்களில் இந்தத் தரப்படுத்தல் முறையும் முக்கிய பங்காற்றியது என்பதை மறுத்துவிட முடியாது.

இம்மாவட்ட ரீதியான தரப்படுத்தல் மூலம் பின்தங்கிய தமிழ் மாவட்டங்களிலுள்ள தமிழ் மாணவர்களும் பயன்பட்டனர் என்ற போதிலும் தமிழர் ஐக்கிய முன்னணி இது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி என்றே இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தது. அதனால் மாணவர்கள், இளைஞர் மத்தியில் ஐக்கிய முன்னணி அரசுக்கு எதிரான வெறுப்பு கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது.

இன்னொருபுறம் 1972ம் ஆண்டின் புதிய அரசியலமைப்பை நிராகரித்து தனது நாடாளுமன்றப் பதவியை ராஜினாமாச் செய்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் புதிய அரசியலமைப்பை நிராகரிப்பதற்கு மக்கள் ஆணைகோரி இடைத் தேர்தலில் போட்டியிட்டார். இத்தேர்தலின் போது ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் மக்கள் உரிமையுள்ள மக்களாக வாழமுடியாதெனவம் சுயாட்சி பெறுவதே ஒரே வழி எனவும் தீவிரமான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் செல்வநாயகம் 11,000 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். இத்தேர்தல் பிரசாரத்தின் போது இளைஞர்கள் தீவிரமாகப் பங்கு கொண்டனர். இப்பிரசாரங்களின்போது அரசாங்கத்தை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் துரோகிகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இந்நிலையில் மாணவர் பேரவையினர் மத்தியில் பொன்.சிவகுமாரன் தலைமையில் ஒரு ஆயுத அணி உருவாகியது. இவ்வாறே பிரபாகரன் தலைமையில் ஒரு சிறிய குழுவும் உருவாகியது. இந்த இரு அணிகளுக்கும் அ.அமிர்தலிங்கம் ஊக்கமளித்து வந்தார். இவ்விரு குழுவினராலும் துரோகிகள் என வர்ணிக்கப்பட்ட அரசாங்க சார்பு அரசியல்வாதிகளையும் பொலிஸாரையுமே இலக்கு வைத்தனர். அதேவேளையில் தமிழ்த் தலைமைகளின் மீது முற்றாகவே நம்பிக்கையிழந்த இடதுசாரிப் போக்குடைய தங்கத்துரை தலைமையில் ஒரு இளைஞர் குழு உருவாகியது. குட்டிமணியும் அதே அணியைச் சேர்ந்தவராகும்.

இச்சிறு குழுக்களே வளர்ச்சியடைந்து பின்னாட்களில் விடுதலைப் போராட்ட அமைப்புகளாகிப் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தன. எப்படியிருந்த போதிலும் சிங்கள இளைஞர்கள் மத்தியில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் உருவாவதைத் தடுக்க ஐக்கிய முன்னணி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தமிழர்கள் மத்தியில் ஆயுதப் போராட்டம் தோன்றி வலுவடையும் விளைவையே ஏற்படுத்தியது.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE