Wednesday 24th of April 2024 10:07:06 AM GMT

LANGUAGE - TAMIL
-
தமிழகம் முழுவதும் மே-06 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுலாகும்!

தமிழகம் முழுவதும் மே-06 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுலாகும்!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் மே-06 வியாழக்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க. ஸ்டாலினை நேற்று திங்கட்கிழமை மாலை மாநில சுகாதாரத் துறைச் செயலர், தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பெப்ரவரி மாத இறுதியில் தமிழகத்தில் ஒரு நாளைக்கு 450 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்ட நிலை மாறி தற்போது ஒரு நாளைக்கு 20,000 -க்கும் மேல் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். 23-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்த் தொற்று 10 வீதத்துக்கும் மேல் உள்ளது.

மே 3-ஆம் திகதி நிலவரப்படி தமிழ்நாட்டில் நோய்த் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.23 இலட்சமாக உயர்ந்துள்ளது. தமிழக நிலவரத்தை கடந்த 30ஆம் திகதி ஆய்வுசெய்தபோது தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நோய்த் தொற்று விகிதம் 10 வீதத்திற்கு மேல் உள்ளது. பல மாவட்டங்களில் ஒக்ஸிஜன் அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் 60 வீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளன.

இந்நிலையில் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மே 6-ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் 20ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

அதன் பிரகாரம் பின்வரும் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றன.

1. அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 வீத ஊழியர்களுடன் மட்டும் இயங்கலாம்.

2. அனைத்து பொதுப் போக்குவரத்து வசதிகளிலும் 50 வீத இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணம் செய்யலாம்.

3. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்குக் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களுக்கு அனுமதி இல்லை. பிற பலசரக்குக் கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம். ஒரே சமயத்தில் மொத்த திறனில் 50 வீத வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைக்குள் இருக்கலாம். இந்தக் கடைகள் தவிர, மற்ற கடைகள் இயங்குவதற்கு அனுமதி இல்லை. மருந்தகங்கள், பால் விநியோகம் போன்றவை வழக்கம் போல செயல்படலாம்.

4. அனைத்து உணவகங்களிலும் பொதிகள் சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் 12 மணிவரை செயல்படலாம். உணவகங்கள், தேநீர் கடைகளில் இருந்து உண்பதற்கு அனுமதி இல்லை. விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும்.

5. எல்லாவிதமான சமூக, அரசியல், பொழுதுபோக்கு, கலாசார நிகழ்ச்சிகளையும் நடத்த தடை விதிக்கப்படுகிறது. திரையரங்குகள் செயற்பட அனுமதி இல்லை.

6. இறுதிச் சடங்குகள், ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் அனுமதி இல்லை.

7. மாநிலம் முழுவதும் அழகு நிலையங்கள், மசாஜ் நிலையங்கள் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சில அத்தியாவசிய சேவைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1. அவசரத் தேவைகளுக்கு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் செல்ல வாடகை ஆட்டோ, வாடகைக் கார், தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பணிகள், செய்தித் தாள் விநியோகம், பால் விநியோகம், விநியோக வாகனங்கள் , எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின்போது இயங்க அனுமதிக்கப்படும்.

2. ஊடகத் துறையினர் இரவிலும் பணிகளைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள்.

3. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்ந்து செயற்படலாம்.

4. தொடர்ச்சியாக செயற்பட வேண்டிய தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்களுக்கான தொழிற்சாலைகள் செயற்பட அனுமதிக்கப்படும். இரவில் இந்த தொழிற்சாலைகளுக்கு பணிக்குச் செல்பவர்கள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

5. தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் இரவிலும் செயல்படலாம்.

6. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின்போது பொருட்களை ஏற்ற இறக்க துறைமுகங்களுக்கும் விமான நிலையங்களுக்கும் தொழிலாளர்கள் சென்று வரலாம்.

7. முழு ஊரடங்கு அமுலில் உள்ள நாட்களில் உணவகங்களில் காலை 6 மணி முதல் பத்து மணி வரையிலும் பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பொதிகள் சேவை அனுமதிக்கப்படுகிறது.

8. முழு ஊரடங்கு நாட்களில் மின் வணிக நிறுவன சேவைகளுக்கு அனுமதி இல்லை.

9. திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 50 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம்.

10. இறைச்சி விற்பனைக்கு சனி, ஞாயிற்று கிழமைகளில் அனுமதி இல்லை. மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை செயற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE