Friday 7th of May 2021 04:54:34 AM GMT

LANGUAGE - TAMIL
-
பில்கேட்ஸ் - மெலிண்டா விவாகரத்து அறிவிப்பு;  அறக்கட்டளை எதிர்காலம் குறித்துக் கேள்வி!

பில்கேட்ஸ் - மெலிண்டா விவாகரத்து அறிவிப்பு; அறக்கட்டளை எதிர்காலம் குறித்துக் கேள்வி!


உலகப் பெரும் கோடீஸ்வரர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் இருப்பவராக நம்பப்படும் மைக்ரோசொப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸும் பரஸ்பரம் விவகாரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பை அவா்கள் இருவரும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

நாங்கள் இருவரும் இணைந்து தீவிரமாக ஆலோசித்த பின்னர் இல்லற வாழ்வை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம் என்று பில் கேட்ஸ், மெலிண்டா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

1980களில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் மெலிண்டா சேர்ந்தபோதே அவரை பில் கேட்ஸ் முதல் முறையாக சந்தித்தார். பின்னர் திருமணம் செய்துகொண்ட இந்த கோடீஸ்வர தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இவர்கள் இணைந்து நடத்தி வரும் பில் அண்ட் மெலிண்டா பவுண்டேஷன், உலக அளவில் மிகவும் கொடிய நோய்களுக்கு சிகிச்சை தர உதவும் திட்டங்களுக்கும் தடுப்பூசி திட்டங்களுக்கும் நிதியுதவி செய்து அறப்பணிகளை செய்து வருகிறது.

உலக கோடீஸ்வரர்கள், நல்ல நோக்கங்களுக்காக தங்களுடைய தனிப்பட்ட வருவாயில் ஒரு பகுதியை வழங்குவதற்காக தி கிவ்விங் பிளெட்ஜ் என்ற அமைப்பை பிரபல முதலீட்டாளர் வாரென் பஃபெட்டுடன் சேர்ந்து உருவாக்கினார் கேட்ஸ்.

போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட பட்டியலின்படி 124 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள சொத்துகளுடன் உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் பில் கேட்ஸ் இருக்கிறார்.

1970களில் உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக மைக்ரசொப்டை உருவாக்கிய பிறகு அதன் மூலம் தமது சொத்துகளை சேர்த்தார் பில் கேட்ஸ்.

கடந்த 27 ஆண்டுகளாக எங்களுடைய சிறந்த பிள்ளைகளை வளர்த்தெடுத்தோம். ஒரு சிறந்த அறக்கட்டளையை கட்டமைத்தோம். உலக அளவில் அனைத்து மக்களும் ஆரோக்கியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் வாழ அது உதவியது என இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

மேலும், அறக்கட்டளை பணியில் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளோம். ஆனால், இருவரும் எங்களுடைய வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு ஒரு தம்பதியாக இணைந்து வளர முடியும் என்று நாங்கள் நம்பவில்லைஎன்று அவா்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய வாழ்வை முன்னெடுக்கும் பயணத்தில் எங்களுடைய தனிப்பட்ட முடிவை மதிக்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.

தற்போது 56 வயதாகும் மெலிண்டா, 1987ஆம் ஆண்டில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் தயாரிப்பு பிரிவில் முகாமையாளராக பதவியில் சேர்ந்தார். தொழில்முறை இரவு விருந்தொன்றில் இந்த இருவரும் நியூயோர்க் நகரில் சந்தித்தனர். அப்போதே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது என பில் கேட்ஸ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த காதல் ஜோடி 1994ஆம் ஆண்டில் திருமணம் செய்தனர். லனாயின் ஹவாய் தீவில் இவர்களின் திருமணம் நடந்தது. அந்த நேரத்தில் உள்ளூரில் வாடக்கைக்கு விடப்பட்டிருந்த அனைத்து ஹெலிகப்டர்களையும் இவா்கள் வாடகைக்கு எடுத்திருந்தனர். அன்றைய நாளில் தங்களுடைய திருமணத்துக்கு வருபவர்கள் தவிர வேறு தேவையற்ற விருந்தினர்கள் அங்கு வருவதை அவா்கள் விரும்பவில்லை எனபதே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.

65 வயதாகும் பில் கேட்ஸ், கடந்த ஆண்டு மைக்ரோசொப்ட் நிர்வாகக் குழுவில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து தமது அறப்பணிகளில் கவனம் செலுத்தப்போவதாக அவர் அறிவித்தார்.

பில் கேட்ஸும், மெலிண்டா கேட்ஸும் சேர்ந்து 2000ஆம் ஆண்டு சியாட்டிலில் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நிறுவினார்கள்.

இந்த அறக்கட்டளை பெரும்பாலும் ஆரம்ப சுகாதாரம், கல்வி, பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது.

தடுப்பூசி தயாரிப்பு திட்டங்களுக்காகவும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆராய்ச்சிப் பணிகளுக்காகவும் இந்த அறக்கட்டளை 1.75 பில்லியன் டொலர்களை வழங்கியது.

2019ஆம் ஆண்டில் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனின் சொத்து மதிப்பு 43 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக இருந்தது.

1994 ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 36 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நன்கொடை இந்த அறக்கட்டளைக்கு கிடைக்க இந்த தம்பதி நடவடிக்கை எடுத்தனர்.

2019ஆம் ஆண்டில் அசோசியேடட் பிரெஸ் என்ற செய்தி முகமைக்கு பேட்டியளித்த மெலிண்டா, "நானும் பில் கேட்ஸும் சமமான கூட்டாளிகள். ஆணும் பெண்ணும் பணியிடத்தில் சரிமமாக மதிக்கப்பட வேண்டும்," என்று கூறினார்.


Category: செய்திகள், புதிது
Tags: அமெரிக்கா, உலகம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE