Wednesday 24th of April 2024 07:55:52 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா மரணங்கள்! - நா.யோகேந்திரநாதன்!

இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா மரணங்கள்! - நா.யோகேந்திரநாதன்!


இலங்கையில் முதன்முதலாக ஒரு சீன உல்லாசப் பயணி கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்ததாக இனங்காணப்பட்ட நிலையில் கொரோனா தொற்றின் முதலாவது அலை ஆரம்பமானது. அவருக்கு வழிகாட்டியாகப் பணியாற்றியவர் உட்பட அவருடன் தொடர்பு கொண்டவர்களில் பலரும் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் சிலரும் தொற்றாளராக இனம் காணப்பட்டனர். அந்த நிலையில் கொழும்பிலுள்ள மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகள் கம்பஹா, களுத்துறை ஆகிய பகுதிகளில் சில இடங்கள் என்பன உட்பட சில பகுதிகள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டன. அதேவேளையில் வடக்கிலுள்ள சுவிஸ் நாட்டிலிருந்து மதபோதனைக்காக யாழ்ப்பாணம் வந்த மதபோதகர் ஒருவருடன் தொடர்பைப் பேணிய ஒப்பந்தகாரர் ஒருவருக்கும் நோய்த் தொற்று இனங்காணப்பட்டது. தென்னிலங்கையிலிருந்து வந்த சிலரும் அவருடன் தொடர்புடைய சிலரும் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இப்படியான ஒரு ஆபத்தான நிலைமை உருவாகிக் கொண்டிருந்த நிலையில் அரசாங்கமும், சுகாதார மருத்துவப் பிரிவினரும் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கினர். ஒரு போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நாடெங்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு நிலைமைகளுக்கு ஏற்றவாறு பகுதி, பகுதியாகத் தளர்த்தப்பட்டது. முகமூடியணிதல், கைகளைக் கழுவுதல், இடைவெளிகளைப் பேணல் என்பன கட்டாயப்படுத்தப்பட்டன. பொதுப் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டன. தேவைகளுக்கேற்ற வகையில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.

நோய்த் தொற்று நூற்றுக் கணக்கிலும் மரணமடைந்தோர் பத்துக்கு உட்பட்ட அளவிலும் கட்டுப்படுத்தப்பட்டன.

எப்படியிருந்தபோதிலும் கொரோனா தொற்றின் முதலாவது அலை குறுகிய காலத்திலேயே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டது. மக்கள் முகமூடி இல்லாமலே நடமாடுமளவுக்கு நிலைமை வழமைக்குத் திரும்பியிருந்தது.

இந்த நிலையில்தான் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் ஆரம்பமாகியது.

அந்த ஆடைத்தொழிற்சாலையில் உக்ரேனிலிருந்து வந்த அதிகாரிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரமொன்றில் கலந்துகொண்ட அங்கு பணிபுரியும் பெண்களிலிருந்தே நோய்த் தொற்று ஆரம்பமானதெனக் கூறப்பட்டது. அதிலிருந்து கொரோனா தொற்று பேலியகொட மீன் சந்தைக்கும் பரவியது. மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பல பிரதேசங்களிலுமுள்ள பெண்கள் பணியாற்றுவதாலும் பேலியகொட மீன் சந்தைக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வர்த்தகர்கள் வந்து போவதாலும் மினுவாங்கொட,பேலியகொட என இரு பெரும் கொரோனா கொத்தணிகள் உருவாகின. வர்த்தகம், போக்குவரத்து, சுற்றுலா என்பன இயல்பான நிலையில் இடம்பெற்ற காரணத்தால் நாடு முழுவதும் நோய்த் தொற்று வேகமாகப் பரவ ஆரம்பித்தது. வடக்கில் மருதனார்மடத்தை மையமாகக் கொண்டு ஒரு கொத்தணி உருவான போதும் சுகாதாரப் பிரிவினரின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக அது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் திருநெல்வேலிச் சந்தை, யாழ்ப்பாணம் சந்தைப் பகுதி என்பவற்றை மையமாகக் கொண்டு கொத்தணிகள் ஆரம்பமாகும் நிலை தோன்றியது. எனினும் தனிமைப்படுத்தல், முடக்கம் போன்ற நடவடிக்கைகள் காரணமாக அவை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டன.

எனினும் சித்திரைப் புத்தாண்டின் பின்பு நாடு ஆபத்தான நிலை நோக்கி வேகமாகத் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. நாளாந்தம் புதிதாக நோய்த் தொற்றுக்குள்ளாகுபவர்களின் தொகை ஆயிரங்களால் அதிகரிப்பதுடன், மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்படவேண்டிய தேவை எழுந்ததுடன் புதிய மருத்துவ உபகரணங்களை வாங்க வேண்டிய தேவையும் உருவாகியுள்ளது. அதேவேளையில் கொரோனா சிகிச்சைக்குத் தேவையான ஒட்சிசனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் உருவாகியுள்ளது.

அதைவிடத் திரிபுபடுத்தப்பட்ட புதிய கொரோனா கிருமிகளின் தாக்கமும் ஆரம்பமாகியுள்ளது. இதற்குச் சித்திரைப் புத்தாண்டுக் கொத்தணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் கொரோனா தொற்றின் முதலாவது அலையை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்திய இலங்கைக்கு ஏன் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

மக்களின் பொறுப்பற்ற நடத்தை காரணமாகவே இப்படியான ஒரு அபாய நிலை ஏற்பட்டதென அரசாங்கமும் சுகாதாரப் பிரிவின் தலைமை அதிகாரிகளும் கூறி வருகின்றனர். இதில் ஓரளவு உண்மை இருந்தாலும் இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும் பல அரச திணைக்களங்கள், புகையிரதச் சேவைகள் முடக்கப்படுமளவுக்கு நோய்த் தொற்று தீவிரமடைந்துள்ளமையை மறுக்கமுடியாது.

இவ்வாறு கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் வீரியம் அடைந்துள்ளது ஏன் என்ற கேள்விக்கு சீனா, வட கொரியா, வியட்நாம், கியூபா ஆகிய நாடுகளில் நோய்த் தொற்று எப்படிக் கட்டுப்படுத்தப்பட்டது என்பதையும் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதற்குமான விடைகளை கண்டறிவதன் மூலம் நாம் புரிந்து கொள்ளமுடியும்.

சீனாவில் ஹூப்பே மாகாணத்தின் தலைநகரமான வூஹானிலேயே கொரோனா நோய்த்தொற்று முதன் முதலில் இனம் காணப்பட்டது. அங்கு பாதிக்கப்பட்டோர் 80,894 பேர், உயிரிழந்தோர் 3,257 பேர் உடனடியாகவே பாடசாலைகள், தொழிற்சாலைகள், பொது மண்டபங்கள் மூடப்பட்டு மருத்துவ மனைகளாக்கப்பட்டன. முழு நகரமுமே முடக்கப்பட்டது. மருத்துவர்கள், இராணுவத்தினர் ஒரு மாதகாலம் வீடு செல்லாமல் இரவு பகலாக சிகிச்சைகளை வழங்கினர். சிகிச்சை வழங்கிய மருத்துவர்களில் 19 பேர் நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தனர். ஏனைய மருத்துவர்கள் பின்வாங்கி விடாமல் தொடர்ந்து கடமைகளில் ஈடுபட்டனர். 30.03.2020இல் கொரோனா முற்றாகவே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டு தற்காலிக மருத்துவமனைகள் மூடப்பட்டன. அதன் பின்பு இன்றுவரை புதிதாக எந்தவொரு நோயாளியும் அடையாளம் காணப்படவில்லை.

வடகொரியாவில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த ஒரே ஒருவருக்கு நோய்த் தொற்று காணப்பட்டதாகவும் அவர் குணமடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

வியட்நாமில் 100க்கு உட்பட்டவர்களே பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் குணமாக்கப்பட்டதுடன் தொற்று முற்றாகவே கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட தாகவும் தெரிய வருகிறது.

கியூபாவில் நான்கே நான்கு தொற்றாளர்கள் காணப்பட்டதாகவும் அவர்கள் பூரண குணமடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி கரீபியன் கடலில் பயணித்த பிரித்தானிய உல்லாசக் கப்பலில் 682 பயணிகளும் 381 பணியாளர்களும் பயணித்தனர். அவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று காணப்பட்டதாகவும், கப்பலைத் துறைமுகத்தில் நிறுத்த எந்தவொரு கரீபியன் நாடும் அனுமதிக்கவில்லை. ஆனால் கியூபா தனது கட்டுப்பாட்டிலுள்ள பஹாமாஸ் தீவில் நங்கூரமிட அனுமதித்ததுடன், கப்பல் பயணிகளைச் சோதனை செய்த பின்பு கியூப நாட்டிற்குள் செல்ல அனுமதித்தது. நோய்த் தொற்றுள்ளானவர்களுக்குச் சிகிச்சை வழங்கி அவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டதுடன் ஏனையோர் பிரிட்டனுக்கு விமான மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்விடயம் தொடர்பாகக் கியூபா கருத்து வெளியிடுகையில், “கப்பலில் பயணித்த நோயாளிகளின் நலன் கருதியும் உலகுக்கு விடுக்கப்பட்ட பொதுவான சவாலை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயற்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்தவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” எனத் தெரிவித்திருந்தது. ஜனநாயகம் பேசும் எந்தவொரு நாடும் இப்படியான மனிதாபிமான நடவடிக்கையை எடுக்கத் துணியவில்லை.

சீனா, வடகொரியா, வியட்நாம், கியூபா போன்ற நாடுகளில் மனிதனே முதன்மைப்படுத்தப்படுகிறான். பொருளுற்பத்தியின் மூலகர்த்தா மனித சக்தி என்பதை அந்த நாடுகள் மதிப்பதால் மனிதனை முதலாவது இடத்திலும் உற்பத்தி, வர்த்தகம் என்பவற்றை இரண்டாவது இடத்திலுமே வைத்துள்ளன. எனவே அந்த நாடுகள் நோய்த் தொற்றின் அறிகுறி தென்பட்டவுடன் முற்றாக உற்பத்தி, வர்த்தகம் என அனைத்தையும் முடக்கி விட்டு நோய்க்கெதிரான போரையே முதன்மைப்படுத்தினர். அதன் காரணமாக அவர்களால் மிகக் குறுகிய காலத்தில் நோய்த் தொற்றை வெற்றி கொள்ள முடிந்தது, அல்லது நோயை நாட்டுக்குள் புகுந்து பரவவிடாமல் தடுக்கமுடிந்தது.

இலங்கையிலும் கொரோனா முதலாவது அலை எழுந்தபோது பொருளாதார வர்த்தக நலன்களை இரண்டாம் பட்சமாக்கி நாட்டை முடக்கல் உட்பட பல இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டபடியால் அதை வெற்றி கொள்ள முடிந்தது.

ஆனால் இரண்டாவது அலை எழுந்தபோது அத்தகைய இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

சுற்றுலாத்துறை திறந்து விடப்பட்டதுடன், சுற்றுலா விடுதிகள், சுற்றுலா மையங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. ஆடைத் தொழிற்சாலைகளில் நோயாளர்கள் இனங்காணப்பட்டபோதும் அவை இயங்கிக் கொண்டிருந்தன. பெலியகொட சந்தை சில நாட்கள் பூட்டப்பட்டாலும் மீண்டும் இயங்க ஆரம்பித்துவிட்டது. அதில் தொடர்புடையவர்கள் முழுமையாக இனங்காணப்படவில்லை. தம்புள்ள உட்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் தொடர்ந்து இயங்கின. அரச திணைக்களங்களும் கூட மட்டுப்பட்ட சேவைகளுக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையின் கொரோனா முதலாவது அலை சீனா, வியட்நாம், வடகொரியா, கியூபா போன்று மனிதர்களின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி உற்பத்தி, வர்த்தக நடவடிக்கைகளை இரண்டாம் பட்சமாக்கியமையால் அது வெற்றி கொள்ளப்பட்டது.

ஆனால் இரண்டாவது அலை அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரிட்டன் போன்று பொருளாதார உற்பத்தி, வர்த்தக நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தி மனிதப் பாதுகாப்பை அவற்றுக்குக் கீழ்ப்படுத்தியமையால் வெற்றி கொள்ளப்பட முடியாததாக மாறி பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

தற்சமயம் இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா மரணங்களைத் தடுத்து நிறுத்துவதனால் கொரேனாவுக்கு எதிரான போரை ஏனைய விடயங்களைப் பின் தள்ளி விட்டுத் தீவிரமாக அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பதே ஒரே வழிமுறையாகும்.

அருவி இணையத்திற்காக : நா.யோகேந்திரநாதன்.

05.05.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE