Thursday 25th of April 2024 02:02:08 AM GMT

LANGUAGE - TAMIL
-
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிற்கு அரசினால் வழங்கப்படும் நிதி உரிய நேரத்தில் கிடைப்பதில்லை; தவிசாளர்!

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிற்கு அரசினால் வழங்கப்படும் நிதி உரிய நேரத்தில் கிடைப்பதில்லை; தவிசாளர்!


தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிற்கு அரசினால் வழங்கப்படும் நிதி உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொடிகாமத்திற்கு அருகில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை இருப்பதன் காரணமாக இரண்டு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிற்கான சிகிச்சைகள் இடம்பெற்றன. அதேவேளை அண்ணளவாக 21 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தனிமைப்புடுத்தல் காலத்தில் அவர்களால் வெளியூர் சென்று வரமுடியாத நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில், நாங்கள் நண்பர்கள், புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் அவர்களிற்கான உதவிகளை வழங்கியுள்ளோம். அதேவேளை இனிவரும் காலங்களிலும் வழங்கவும் ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

தனிமைப்படுத்தல் காலத்தில் கொடுக்கப்படவேண்டிய 5000 ரூபா பெறுமதியான நிதியானது அவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தின் பின்னரே பெற்றுக்கொள்ள முடியுமான நிலையையே கண்டுள்ளோம். என்னைப்பொறுத்தவரையில் குறித்த நிதி உரிய காலப்பகுதியில கிடைத்ததாக நான் உணரவில்லை. இது ஏற்கனவே இத்தாவில் என்ற பிரதேசத்தில் இடம்பெற்றது.

இதற்கான காரணங்களை தேடியபோது கச்சேரியிலிருந்து கிடைப்பதற்கு காலதாமதமாகின்றது என்ற விடயத்தினையே கடந்த காலத்தில் கூறியிருந்தார்கள். இது ஒரு பொதுவான நிலைப்பாடாகவே காணப்படுகின்றது.

எமது பிரதேச சபை எல்லைப்பகுதியில், கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் நாம் ஆராய்ந்திருந்தோம். அந்த வகையில் எமது சபையினால் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை இன்றிலிருந்து ஆரம்பித்திருக்கின்றோம்.

அதற்கு அமைவாக எமது சபை கட்டுப்பாட்டு எல்லைகளில் உள்ள வியாபார நிலையங்கள், பொதுச்சந்தைகள், பொது நிறுவனங்களில் குறைந்தது 15 நாட்களிற்கு ஒரு தடவையாவது பி சி ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதனை சுகாதார தரப்புடன் கலந்துரையாடி ஏற்பாடு செய்துள்ளோம்.

அதேவேளை அனைத்து வர்த்தக நிலையங்களிலும் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், அவ்வாறு பின்பற்ற தவறும் வியாபார நிலையங்கள் பொதுச்சந்தை வர்த்தக செயற்பாட்டிற்கு சபையினால் வழங்கப்படும் அனுமதி உடனடியாக இரத்தாகும் என்ற விடயத்தினையும் அறிவுறுத்தியுள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகளும் சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொவிட் பரவலிலிருந்து எவ்வாறு எங்களையும், சமூகத்தையும் பாதுகாப்பது என்பது தொடர்பான வழிப்புணர்வு செயற்திட்டங்கள் ஒலிபெருக்கு மூலமும், துண்டுபிரசுரங்கள் மூலமாகவும் சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் எதுவித நடமாடும் வியாபாரம் மற்றும் தூர இடங்களிலிருந்து வருகை தந்து வியாபாரத்தில் ஈடுபடுதல் ஆகியன நிறுத்தப்பட்டுள்ளது.

அத்தடன் சுகாதார பிரிவினருடன் சேர்ந்து பிரதேச சபை உத்தியோகத்தர்கள் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் ஒவ்வொரு பிரதேசத்திலும் தொற்றுநீக்கும் பணியினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

சிறப்பு ஏற்பாடாக எமது வரவு செலவு திட்டத்தில் அனர்த்த காலத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியானது இதற்கு பயன்படுத்தப்படுகின்றது. இந்த தொற்றும் அனர்த்தமாக கருதப்பட்டு கொவிட் தடுப்பு சேவைத்திட்டத்திற்கு குறித்த நிதியை நாங்கள் பயன்படுத்தகின்றோம்.

எமது பிரதேச மக்கள் கிளிநொச்சி மாவட்டமக்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக நாட்டின் மக்கள் இந்த கொவிட் நோய்க்கு எதிராக போராட வேண்டும். அதேநேரம் உங்களையும் நீங்கள் பாதுகாத்து, இந்த சமூகத்தையும் பாதுகாத்து ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாப்பதன் ஊடாக எமது நாட்டினுடைய எதிர்கால வளர்ச்சிக்கும், சுபிட்சமான வாழ்விற்கும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் எமது சபை சார்பாக வேண்டுகின்றேன் எனவும் அவர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE