Thursday 28th of March 2024 12:15:00 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 54 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 54 (வரலாற்றுத் தொடர்)


மேட்டுக்குடி அரசியலின் ஆயுதமாக்கப்பட்ட மறுக்கப்பட்ட தமிழ் மக்களின் அபிலாஷைகள்! - நா.யோகேந்திரநாதன்!

'மலேசிய அரசின் இனவாதப் போக்கு எம்மைத் தனிவழி போகச் செய்தது. நாங்கள் சிறுபான்மையை நசுக்கிப் பிழியும் பெரும்பான்மையாக இருக்கமாட்டோம் எனத் தீர்மானித்தோம். நீங்கள் எந்த இனத்தவரானாலும் சரி, எந்த மொழி பேசுபவரானாலும் சரி, எந்த மதத்தினரானாலும் சரி நீங்களும் சமத்துவம் மிக்க ஒரு குடிமகன். இதை நாம் சகல மக்களிடமும் பறையறைந்தோம். நீங்கள் வாக்குகளை இலகுவாகப் பெறுவதற்காக இனவாத அல்லது மதவாத அரசியல் செய்தால் இந்தச் சமூகம் அழிந்துவிடும். இனவாதம் வாக்குகளைப் பெற இலகுவான வழியாகும். நான் சீனன், அவர்கள் மலாயர்கள், அவர்கள் இந்தியர்கள் என அரசியல் செய்தால் எங்கள் சமூகம் கிழித்தெறியப்பட்டு விடும். நீங்கள் ஒன்றுபட்ட சமூகத்தைக் கொண்டிராவிட்டால் முன்னேற்றம் என்பது இருக்காது.

'1965ல் கடந்த 20 வருடங்களாகத் தோல்வியடைந்த அரசுகளின் அனுபவங்களை நாம் கொண்டிருக்கிறோம். எனவே நாம் எதைத் தவிர்க்க வேண்டுமென்பதை அறிந்திருந்தோம். இனப் பிரச்சினை, மொழி முரண்பாடு, மதப் பிரச்சினை என்பவை தவிர்க்கப்படவேண்டும். இலங்கையில் இதுதான் நடந்தது'.

இவை சிங்கப்பூரின் முன்னாள் பிரதமரும் எந்த வளமுமற்ற பல்லினங்கள் வாழுகின்ற ஒரு சின்னஞ்சிறிய தேசத்தை குறுகிய காலத்தில் ஒரு வளர்ச்சியடைந்த நாடாகக் கட்டியெழுப்பியவரும், சிங்கப்பூரின் சிற்பி எனப் போற்றப்படுபவருமான லீ வான் கீயூ இன, மதவாத அரசியலின் தீமை பற்றி வெளியிட்ட கருத்தாகும்.

இலங்கையில் 1972ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய அரசியலமைப்புச் சட்டமானது இலங்கையைப் பூரணமாக பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து விடுவித்து சுயாதிபத்தியமும் இறைமையும் கொண்ட ஒரு சுதந்திரக் குடியரசாகப் பிரகடனம் செய்த ஒரு துணிச்சலான முற்போக்கான சாதனையாகும். அது இலங்கையில் வாழும் ஒவ்வொருவரும் இந்த நாட்டின் சுதந்திரக் குடிமகன் என்பதை ஆணித்தரமாகப் பிரகடனம் செய்தது.

ஆனால் அந்த அரசியலமைப்பு தனிச் சிங்களத்தை அரச கருமமொழியாகவும் பௌத்த மதத்துக்கு முதன்மை என்பதையும் அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்த நிலையில் தமிழ் மக்களால் எதிர்க்கப்படும் நிலை ஏற்பட்டது. இலங்கையின் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என அனைவருமே பிரிட்டனின் நாணயக் கயிற்றிலிருந்து விடுபட்டாலும் தமிழர்களும் முஸ்லிம்களும் அந்த அரசியலமைப்பு மூலம் சிங்கள மேலாதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்டனர். இலங்கையின் சிறுபான்மையினர் மீது மாட்டப்பட்ட நாணயக் கயிற்றைப் பிடிப்பவர்கள் மாறினரேயொழிய நாணயக் கயிறு கழற்றப்படவில்லை.

மேலும் பல்கலைக்கழக அனுமதியில் அமுலுக்கு வந்த தரப்படுத்தல்முறை, ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் மலையக மக்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டமை போன்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளும் தமிழ் மக்களை இந்த அரசியலமைப்பிலிருந்து அந்நியப்படுத்தியமையை மறுக்கமுடியாது.

ஐக்கிய முன்னணி அரசால் முன்னெடுக்கப்பட்ட சுதேசிய எழுச்சி காரணமாகத் தமிழ் மக்களுக்குக் கிடைத்த நன்மைகளைக் கூடக் கணக்கெடுக்காத வகையில் ஒட்டுமொத்தமாக அந்த ஆட்சிக்கெதிராகத் தமிழ் மக்களை தமிழ் அரசியல் கட்சிகள் அணி திரட்டுவதற்கு வாய்ப்பான சூழல் இவ்வரசியலமைப்பாலும் இனப் பாகுபாட்டு நடவடிக்கைகளாலும் உருவாக்கப்பட்டது.

அதன் காரணமாக 1965 – 1970ம் ஆண்டு காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் பங்காளிக் கட்சிகளாக இருந்த தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரில் 1972ல் ஒரே அமைப்பாக மாறின. ஐக்கிய முன்னணி அரசின் தேசிய சுயாதிபத்தியக் கொள்கைகளுக்கு எதிராகத் தமிழ் பேசும் மக்களை அணி திரட்டுவதில் அவர்கள் வெற்றி பெறுவதற்கு அந்த அரசு அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இன் அடிப்படையிலான ஒடுக்குமுறை நடவடிக்கைகள் வாய்ப்பான சூழ்நிலைகளை ஏற்படுத்தின.

அதன் காரணமாக ஐக்கிய முன்னணி அரசின் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய சுயாதிபத்தியக் கொள்கைகள் காரணமாகத் தமிழ் மக்கள் பெற்ற நன்மைகள் கூட இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளப்பட்டு அரசாங்க எதிர்ப்பே தமிழ் மக்கள் மத்தியில் கூர்மைப்படுத்தப்பட்டது. சில நல்ல விடயங்களுக்கும் இனவாதச் சாயம் பூசப்பட்டு அவை தீயவையாகக் காட்டப்பட்டன.

ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்பு பொருளாதார அடிப்படையில் பல மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். ஒரு தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி மேற்கொள்ளப்பட் நடவடிக்கைகள் சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமின்றி தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் ஏராளமான சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தியதன் மூலம் மக்கள் சுபீட்சமான வாழ்க்கையைப் பெற்றுக் கூடிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற உப உணவுப் பொருட்களின் இறக்குமதி முற்றாகவே தடை செய்யப்பட்டது. அரசின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாகக் கோதுமை இறக்குமதி செய்வதற்கு மேற்கு நாடுகள் பல இடையூறுகளை விதித்தன.

அதன் காரணமாக மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு என்பவற்றுக்கு வியப்படையும் வகையில் உயரிய சந்தை விலை கிடைத்தது. இன்னொருபுறம் உழுந்து, பயறு, சோயா, குரக்கன் போன்ற உற்பத்திப் பொருட்களுக்கான கேள்வி அதிகரித்ததுடன் பிற்றூட், கோவா, கரட், பெரிய வெங்காயம் போன்ற பொருட்களின் உற்பத்தியும் ஆரம்பிக்கப்பட்டன. அதனால் மலையக மக்கள் சிறு தோட்டங்களை ஏற்படுத்தி வீட்டுப் பயிர்ச் செய்கை மூலம் வருமானம் ஈட்டும் வசதி ஏற்பட்டது.

இதன் காரணமாக வடபகுதி விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் வேகமாக உயர்ந்தது. விவசாயம் செய்து கல்வீடு கட்ட முடியும், வாகனங்கள் வாங்கமுடியும், காணிகளை வாங்க முடியும் என்ற ஒரு வரலாறு வடபகுதித் தமிழ் மக்களிடம் உருவாகியது. இளைஞர் குடியேற்றத் திட்டங்களின் விவசாய உற்பத்தி அதிகரித்ததுடன் பலாத்காரமாகக் காடுகளை வெட்டி இளைஞர்கள் விவசாயம் செய்யும் முயற்சிகள், இளைஞர் குடியேற்றத் திட்டங்களுக்கு அருகாமையில் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டன. வடக்கின் கலியாணச் சந்தையில் அரச உத்தியோகத்தரைத் தேடும் நிலை மாறி விவசாயிகளைத் தேடும் நிலை உருவாகியது.

நெல் உற்பத்தியில் உரப் பசளைக்கு மானியம் வழங்கப்பட்டு ஒரு அந்தர் 50 ரூபாவாக இருந்த விலை 20 ரூபாவாகக் குறைக்கப்பட்டது. மகாவலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் அதிக விளைச்சலைத் தரக்கூடிய நெல்லினங்கள், மிளகாய் இனங்கள் கண்டு பிடிக்கப்பட்டு விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டன. நெல்லுக் கொள்முதலில் தனி வியாபாரிகள் விவசாயிகளிடம் கொள்ளையடிப்பதைத் தடுக்குமுகமாக பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவில் ஈடுபட்டதுடன், மாவட்டங்களுக்கிடையே நெல் அனுமதியின்றிக் கொண்டு செல்வது தடுக்கப்பட்டது.

மேலும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கடைகள் மூலம் ஒவ்வொருவருக்கும் அரைக் கொத்து அரிசி இலவசமாகவும் ஒன்றரைக் கொத்து அரிசி கட்டுப்பாட்டு விலைக்கும் வழங்கப்பட்டன. அது மட்டுமின்றி குரக்கன், சோயா, கௌபீ, உழுந்து, பயறு என்பனவும் பங்கீட்டு அட்டைக்கு வழங்கப்பட்டன.

இவ்வாறான ஒரு சுபீட்சத்தை நோக்கி முன்னேறும்போது ஆரம்ப கட்டங்களில் சில நெருக்கடிகள் உருவாவதும் காலப்போக்கில் அவை வேகமாகச் சரி செய்யப்படுவதும் தவிர்க்கப்படமுடியாததாகும்.

இந்த நிலையில் தமிழ் ஐக்கிய முன்னணியினர் பாணுக்கு வரிசையில் நிற்பது பற்றியும் மாவட்டங்களுக்கிடையே நெல் கொண்டு செல்லப்படுவது தடுக்கப்பட்டமை பற்றியும் உரத்துக் கூவி அரசாங்கத்துக்கு எதிராகச் சேற்றை அள்ளி வீசினர். தமிழ் விவசாயிகள் தொழிலாளர்கள், சீவல் தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்வு வளம் பெற்றமை பற்றியோ, தேசிய உற்பத்திகள் பெருகியமை போன்ற விடயங்கள் அவர்களை மகிழ்விக்கவில்லை. அதிலிருந்து இவர்களின் இனப்பற்றின் தேசியத் தன்மை பற்றி கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

மரவரி முறையிலிருந்து சீவல் தொழில் கூட்டுறவு முறைக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் காரணமாகச் சீவல் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததுடன் அவர்களும் விவசாயிகள் போன்று அதிக வருமானம் பெறும் நிலை தோன்றியது. மிக வறிய நிலையில் அடங்கி ஒடுங்கி வாழ்ந்த அந்த மக்கள் சொந்தமாகக் காணிகளை வாங்கி கல்வீடுகள் கட்டி வாழுமளவுக்கு முன்னேறினர்.

வாகனங்களின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டதன் மூலம் வாகனத் திருத்தகங்கள் பொலிவு பெற்றதுடன் 'லேத்' இயந்திரங்கள் மூலம் உதிரிப்பாகங்களை உருவாக்கும் தொழிலும் வளர்ச்சி பெற்றது. அதன் காரணமாக திருத்தகங்கள் சிறு தொழிற்சாலைகளாக முன்னேறின.

புடவைகள் இறக்குமதி ஆடைகள் உற்பத்தி என்பன கட்டுப்படுத்தப்பட்ட காரணத்தால் அத்தொழிலும் வேகமாக வளர்ச்சியடைந்தது. வடக்கில் திருநெல்வேலி சீமா சில்க், தெல்லிப்பழை இயந்திர நெசவாலை போன்ற நிறுவனங்கள் உருவாகி ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்கின. ஊருக்கு ஊர் நெசவாலைகள் ஆரம்பிக்கப்பட்டு கைத்தறி துணி உற்பத்தி வேகமாக வளர்ச்சியடைந்தது. மட்டக்களப்பு சாரங்கள், துவாய்கள் என்பன மக்கள் விரும்பி வாங்குமளவுக்குத் தரம் வாய்ந்தவையாக அமைந்திருந்தன. மட்டக்களப்பு பாய்கள் உற்பத்தியும் பெருகியது.

ஹென்லி, றீகல், மென்ஹற்றன் போன்ற வெளிநாட்டு ஆடைகள் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டதன் மூலம் தையல் தொழில் நல்ல வருமானமுள்ள தொழிலாக மாறியமையால் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் வாழ்விலும் புதிய மலர்ச்சி ஏற்பட்டது. மேலும் மாவிட்டபுரம் அலுமினியத் தொழிற்சாலை, கூரைத்தகடு உற்பத்தி, நீர்வேலி கண்ணாடித் தொழிற்சாலை, ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை என்பவற்றினூடாக வடக்குக் கைத்தொழிலும் முன்னேறியது.

அதேபோன்று அமைச்சர் குமாரசூரியர் தபால் திணைக்களம், ஆசிரியர் தொழில் என்பவற்றில் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 3,000 பேருக்கு வேலை வழங்கியதுடன் நீர்ப்பாசனம், போக்குவரத்து என்பனவற்றிலும் பல அபிவிருத்திகளை மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் அல்பிரட் துரையப்பா மேயராயிருந்த காலத்தில் புதிய பஸ் நிலையம், நவீன சந்தை என்பவற்றை மேற்கொண்டு நகரை நவீனமயப்படுத்தியதுடன் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் மேற்கொண்டார். யாழ்.பலநோக்குக் கூட்டறவுச் சங்கத் தலைவராகவும் ஏராளமான சேவைகளைச் செய்தார். ஒரு கட்டத்தில் யாழ். நகரில் வேலையற்ற ஒருவர் கூட இல்லை என்ற வகையில் பல வேலை வாய்ப்புக்களை வழங்கினார்.

இவ்வாறே நல்லூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருளம்பலம், வட்டுக்கோட்டை உறுப்பினர் தியாகராஜா ஆகியோரும் பல சேவைகளைச் செய்தனர். அதுபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உடுவில் அமைப்பாளராக இருந்த வினோதன் ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்கியும் அபிவிருத்திகளை மேற்கொண்டும் சேவையாற்றினார்.

ஆனால் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் நான்கரை வருடங்கள் பங்காளியாயிருந்து அமைச்சுப் பதவியை வகித்தபோதும் தமிழ் மக்களின் முன்னேற்றம் தொடர்பாகவோ, வாழ்நிலையை உயர்த்தவோ ஒருசிறு துரும்பைக் கூட எடுத்துப்போடவில்லை. அதேவேளை தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாகவும் எந்தவொரு சாதகமான விளைவும் ஏற்படுத்தவில்லை. ஆனால் புதிய அரசியலமைப்பு, தரப்படுத்தல் என்பவற்றை வைத்து ஐக்கிய முன்னணிக்கு எதிராகக் கடும் பிரசாரங்களை மேற்கொண்டனர்.

அது மட்டுமின்றி குமாரசூரியர், அல்பிரட் துரையப்பா, தியாகராஜா, அருளம்பலம், வினோதன் ஆகியோருக்கு எதிராக இளைஞர்கள் துப்பாக்கியை நீட்டிக்கொண்டு திரியும் நிலையை உருவாக்கத் தயங்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் பங்காளிகளாக இருந்தபோது தமிழரசுக் கட்சியினர் திருமலையில் தமிழ் பல்கலைக்கழகம் கேட்டும் தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணத்தில் இந்துப் பல்கலைக்கழகம் கேட்டும் போட்டியிட்டுக் கொண்டனர். தமிழரசுக் கட்சி தமிழ் பல்கலைக்கழகம் அமைக்கப் பெருந்தொகை நிதியையும் திரட்டினர். அந்த நிதிக்கு என்ன நடந்தது என்பது இதுவரை வெளியிடப்படவில்லை. பல்கலைக்கழகம் அமைப்பது அடையாள மானியமாக 10 ரூபா ஒதுக்கப்படுவதுடன் அது முற்றுப் பெற்றது.

ஆனால் வடக்கில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கவேண்டுமென சேர்.பொன்.இராமநாதனின் மருமகளான கனகநாயகம், கம்யூனிஸ்ட் கார்த்திகேயன், கைலாசபதி உட்படப் பல புத்திஜீவிகள் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டனர். அமைச்சர் குமாரசூரியரும் அவர்களுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக அமைச்சரவையில் அழுத்தம் கொடுத்தார்.

இறுதியில் 1974ல் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. அதைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க திறந்து வைத்தார்.

தங்களால் ஒரு பல்கலைக்கழகத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத தமிழரசுக் கட்சியினர் உட்பட்ட தமிழர் ஐக்கிய முன்னணியினர் பல்கலைக்கழகத்தைத் திறந்து வைக்க வந்த ஸ்ரீமாவோ அம்மையாருக்கு எதிராகக் கறுத்தக் கொடி இரு இடங்களில் காட்டித் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதன்மூலம் இவர்கள் வடபகுதியின் கல்வி வளர்ச்சி தொடர்பாகக் கொண்டிருந்த அக்கறையை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

இவர்களால் துரோகிகளாக வர்ணிக்கப்பட்டவர்கள் விவசாயம், சிறு கைத்தொழில், கிராமிய கைத்தொழில், அபிவிருத்தி, உயர் கல்வி வளர்ச்சி போன்ற விடயங்களில் செய்த சேவைகளில் ஒரு துளியைக் கூட இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியில் இருந்தபோது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே இவர்களின் எதிர்ப்பின் மத்தியிலும் ஐக்கிய முன்னணி அரசுக்கும் அமைச்சர் குமாரசூரியருக்கும், அல்பிரட் துரையப்பாவுக்கும் செல்வாக்கு மட்டம் தமிழ் மக்கள் மத்தியில் விரிவடைய ஆரம்பித்தது. அவற்றிலிருந்து தமிழ் மக்களைத் திசை திருப்பக் கையிலெடுத்த ஆயுதம்தான் 'தனிநாட்டுக் கோரிக்கை'.

எனவே தமிழரசுக் கட்சியின் கோப்பாய் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட தனிநாடுதான் தீர்வு என்ற தீர்மானம் மல்லாகம் மாநாட்டில் தனிநாட்டுக் கோரிக்கையாக முனைப்புப் பெற்றது.

1972ம் அரசியலமைப்பு, தரப்படுத்தல் போன்ற விடயங்கள் ஐக்கிய முன்னணி அரசின் தேசிய சுயாதிபத்திய முற்போக்கு நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழ் மக்களை அணி திரட்ட மேல்மட்ட பிற்போக்கு சக்திகளின் நலன்களைப் பேணும் தரப்பினருக்கு வாய்ப்பளித்தது என்பது மறுக்கமுடியாத வரலாற்று உண்மையாகும்.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE