Thursday 25th of April 2024 05:44:10 AM GMT

LANGUAGE - TAMIL
.
இந்திய சட்டசபைத் தேர்தல்களும் இலங்கைத் தமிழ் மக்களும்! - நா.யோகேந்திரநாதன்!

இந்திய சட்டசபைத் தேர்தல்களும் இலங்கைத் தமிழ் மக்களும்! - நா.யோகேந்திரநாதன்!


அண்மையில் இந்தியாவில் நான்கு மாநிலங்களில் இடம்பெற்ற சட்டசபைத் தேர்தல்களில் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கூட்டணி அமோக வெற்றியீட்டியுள்ளது. தமிழகத்தின் மிகப் பெரும் தலைவர்களாகக் கருதப்பட்ட கலைஞர் மு.கருணாநிதி, செல்வி. ஜெயலலிதா ஆகியோரின் இறப்பின் பின்பு இடம்பெற்ற முதலாவது தேர்தலில் தி.மு.க.வுக்கு இப்படியான மகத்தான வெற்றி கிட்டியுள்ளது.

செல்வி ஜெயலலிதாவின் இறப்பின் பின்பு எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்ச் செல்வம் ஆகியோரின் கைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை சென்றடைந்த பின்பு எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வரானார். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, காமராஜர் போன்ற ஒப்பற்ற ஆளுமைகள் வீற்றிருந்த தமிழக முதல்வர் பதவி எடிப்பாடியின் வருகையின் பின்பு அது தனது முன்னைய சிறப்பை இழந்து விட்டதெனவே கருதப்பட்டது.

பெரியார் ஈ.வெ.ரா.வின் கொள்கைகளை முன்னைய தலைவர்கள் முழுமையாகப் பின்பற்றாவிட்டாலும் கூட அவர்கள் அந்தத் திராவிட பாரம்பரிய அரசியலிலிருந்து விலகி விடவில்லை. ஆனால் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி இந்துவ தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட பாரதீய ஜனதா கட்சி ஆட்சி பீடத்துடன் ஒரு சரணடைவு அரசியலை முன்னெடுத்தனர். பெரியாரும் அவரின் வழிவந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர் இந்துத்துவ பிராமணிய மேலாதிக்கத்துக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தியே திராவிட அரசியலைத் தமிழகத்தில் மக்கள் மயப்படுத்தி அசைக்க முடியாத சக்தியாக விளங்கினர். இன்று வரை திராவிடக் கட்சிகளை விட வேறு எந்தக் கட்சியும் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாதளவுக்குத் தி்ராவிட அரசியலின் செல்வாக்கை அவர்கள் நிலை நிறுத்தினர்.

இந்த நிலையில் பிராமணிய இந்துத்துவ மேலாதிக்கக் கொள்கைகளைக் கொண்ட பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணியமைத்த அ.தி.மு.க. தோற்கடிக்கப்பட்டதில் ஆச்சரியம் எதுவும் இருக்கமுடியாது.

எம்.ஜி.ஆரின் செல்வாக்கில் உருவாகி வளர்ந்து நிலைபெற்ற அ.தி.மு.க. இப்போதைய தலைவர்கள் தடம் மாறிச் சென்றதால் மிகப் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையின் அரசியல் தலைமைகள் போட்டி போட்டுக்கொண்டு தி.மு.க.வின் வெற்றிக்குத் தங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். சிலர் வெற்றி பெறும் போது வாழ்த்துக்களைத் தெரிவிப்பது ஒரு சம்பிரதாய விடயம் என்ற வகையில் அதைக் குறைகூறி விடமுடியாது. ஆனால் இந்த வாழ்த்துக்களில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் எமது தமிழ்த் தலைமைகள் இந்திய அரசியலில் ஒரு மாநில ஆட்சியின் அதிகாரங்களைப் புரிந்து கொள்ளாதவர்களா அல்லது புரிந்தும் தி.மு.க. வெற்றியை வைத்துத் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்களா என்ற கேள்வியை எழுப்புகின்றன.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைத்தபடியால் தமிழ் மக்களின் இனவிடுதலைக்கு பேராதரவு கிடைக்குமெனவும் தி.மு.க. ஈழத்தமிழர் பிரச்சினையில் ஆத்மார்த்தமாகச் செயற்படுமெனவும், இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடல் பகுதியில் புகுந்து மீன் பிடிக்கும் பிரச்சி்னைக்குத் தீர்வு கிட்டுமெனவும் தி.மு.க. வெற்றி இலங்கைத் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளைத் தடுத்து நிறுத்த வழிகோலுமெனவும் இலங்கையின் தமிழ்த் தலைமைகளிடமிருந்து பல்வேறு விதமான கருத்துகள் வெளிவந்தன.

செல்வி ஜெயலலிதா முதலமைச்சராயிருந்த காலப் பகுதியில் அ.தி.மு.க. அரசு சட்டசபையில் இலங்கையில் இடம்பெற்றவை இனப்படுகொலை எனத் தீர்மானம் நிறைவேற்றியது. இத்தீர்மானம் சர்வதேச மட்டத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது மட்டுமின்றி இந்திய மத்திய அரசு கூட அதை ஏற்றுக்கொள்ளவோ ஆதரவு தெரிவிக்கவோ இல்லை. அதுமட்டுமின்றி ராஜிவ் காந்தி கொலை சம்பந்தமான கைதிகளை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டென உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனடிப்படையில் தமி்ழக அரசு ராஜிவ் காந்தி கொலை தொடர்பான கைதி்களை விடுவிப்பதற்கான தீர்மானத்தைச் சட்டசபையில். நிறைவேற்றியது. இப்போது பல வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் ஆளுனர் கையொப்பமிடாத நிலையில் கைதி்கள் விடுவிக்கப்படவில்லை.

இவற்றிலிருந்து நாம் தமிழக அரசின் அதிகார எல்லையின் அளவைப் புரிந்து கொள்ளமுடியும். தி.மு.க. ஆட்சியிலிருந்தாலென்ன அ.தி.மு.க. ஆட்சியிலிருந்தாலென்ன இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மாநி்ல அரசுகள் எதையும் சுயமாகச் செய்யமுடியாது. இவ்விடயத்தில் முழு அதி்காரமும் மத்திய அரசுக்கே உண்டு.

நிலைமை இப்படியிருக்க தி.மு.க.வின் வெற்றியை வைத்துக் கொண்டு தமிழ் மக்களிடையே புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்துவது ஒரு அப்பட்டமான அரசியல் ஏமாற்று என்றே கருத வேண்டியுள்ளது.

இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினையை மூலதனமாக வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் நாம் தமிழர் கட்சிக்கும் அதன் தலைவர் சீமானுக்கும் உரிய பதிலைத் தமிழ் நாட்டு மக்கள் தேர்தல் முடிவுகள் மூலம் வழங்கியுள்ளனர்.

அதேவேளையில் இச்சட்டசபைத் தேர்தல்கள் ஒரு ஆரோக்கியமான முற்போக்கான செய்தியை தேர்தல் இடம்பெற்ற 4 மாநிலங்களில் மூன்றில் வழங்கியுள்ளன.

அதாவது தமிழ் நாட்டில் தி.மு.கவும் கேரளாவில் இடதுசாரி முன்னணியும் மேற்கு வங்காளத்தில் மம்தா பனர்ஜியின் திருநாமுல் காங்கிரஸ் கட்சியும் அமோக வெற்றி பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்ற பாரதீய ஜனதா கட்சி் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்ட போதும் வெற்றியடைய முடியவில்லை. இந்திய அரசியலில் முக்கிய மாநிலங்களாகக் கருதப்படும் இம்மாநிலங்களும் வழங்கிய செய்தி ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதாவது இந்த மூன்று மாநிலங்களும் இந்திய தேசியம் என்பது இந்துத்துவ தேசியம் என்பதையும் இந்துத்துவ பிராமணிய ஆரிய மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் என்பதையும் கொள்கையாகக் கொண்ட பாரதீய ஜனதா கட்சியை நிராகரித்தமை ஒரு முக்கிய கவனத்துக்குரிய அம்சமாகும்.

இலங்கை, மியன்மார் ஆகிய நாடுகளில் பௌத்த பேரினவாதமும் பாகிஸ்தானில் முஸ்லிம் அடிப்படைவாதமும் இந்தியாவில் இந்துத்துவ பிராமணிய மேலாதிக்கவாதமுமே அரசியலை நகர்த்தும் முக்கிய மூலசக்திகளாக விளங்கி வருகின்றன. அதன் காரணமாக இந்த நாடுகளில் இன ஒடுக்குமுறைகள், இனக்கலவரங்கள், இன அழிப்புகள் போன்ற அவலங்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. ஆட்சி பீடங்களும் அவற்றுக்கு ஆதரவு வழங்கி வருகின்றன.

அவ்வாறே இன்று இந்தியாவை ஆட்டிப் படைக்கும் சக்தியாக இந்துத்துவ பிராமணிய மேலாதிக்கமே கோலோச்சி வருகிறது.

பாரதீய ஜனதாவின் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமிக்கும் இலங்கையின் ராஜபக்ஷ் தரப்பினருக்குமிடையுள்ள நெருக்கமான உறவிலிருந்து நாம் மத அடிப்படையிலான மேலாதிக்க சக்திகளுக்கிடையேயுள்ள ஆழமான புரிந்துணர்வை நாம் விளங்கிக் கொள்ளமுடியும்.

இந்தி்யாவில் மகாத்மா காந்தி தலைமையில் இடம்பெற்ற இந்தி்ய சுதந்திரப் போராட்டம் இந்திய தேசியத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டது. இதற்கெதிராக பிரித்தானிய ஆட்சியாளர்களின் ஆசியுடன் உருவாக்கப்பட்டதுதான் இந்திய தேசியக் கழகம். அதன் தலைவர்களாக பஞ்சாப்பைச் சேர்ந்த முஸ்லிமான நவாப் என்பவரும் காசியைச் சேர்ந்த ராஜா என்பவரும் விளங்கினர். இது சமஸ்தான மன்னர்களினதும் இந்தியப் பெரும் நிலவுடைமையாளர்களினதும் அமைப்பாக விளங்கியது. 1966ல் முஸ்லிம்கள் பிரிந்து சென்று முஸ்லிம் லீக்கை உருவாக்க இந்துக்கள் 1909ல் பஞ்சாப் இந்து மகா சபையை உருவாக்கினர். பின்பு இது இந்திய இந்து மகா சபையாக 1915ல் உருவானது.

இந்து மகா சபை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆகியவை இணைந்து மனுதர்ம சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரிய இனத்தை, நிலத்தை பிராமணிய பண்பாட்டை, நிலைப்படுத்தும் இந்து தேசம் ஒன்றைக் கட்டியமைக்கும் கொள்கையுடன் செயற்பட ஆரம்பித்தன. 1925ல் இந்து மகா சபையின் தீவிரவாதப் பிரிவாக ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்டது. அதில் “சுவாயம் சேவாக்கள்“ என்ற தொண்டர் படையும் உருவாக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிரிவான பாரதீய ஜனதா கட்சி அமைப்பு ஆட்சியமைத்தபோது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரச இயந்திரத்திற்குள் தீர்மானிக்கும் சக்தியாக நிலைக்கும் வகையில் ஊடுருவிக் கொண்டது. “பாஜரத்வால்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு முஸ்லிம்கள், கிறீஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அந்தக் காலப்பகுதியில் பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரங்கள், பஞ்சாப் கலவரம், கிறிஸ்தவப் பாதிரியாரும் அவரின் இரு பிள்ளைகளும் உயிருடன் எரிக்கப்பட்ட கொடுமை போன்ற இனவாத வன்முறைகள் இடம்பெற்றன.

மீண்டும் 1996ல் ஆட்சியமைத்த பாரதீய ஜனதா தொடர்ந்தும் அரசு இயந்திரத்திற்குள் தன்னைப் பலப்படுத்திக் கொண்டது.

மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கார், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரால் கட்டியமைக்கப்பட்ட இந்தியத் தேசியவாதம் பாரதீய ஜனதா கட்சியாலும் அதன் சகோதர வன்முறை அமைப்புகளாலும் ஆரிய இந்துத்துவ தேசியமாகத் திசை திருப்பப்பட்டது.

ஆனால் தமிழ் நாட்டில் பெரியாரால் முன்னெடுக்கப்பட்ட திராவிட எழுச்சி, கேரளா, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் பொதுவுடைமைவாதிகளின் செல்வாக்கு என்பன காரணமாக அம்மாநிலங்களில் இந்துத்துவத் தேசியம் செல்லும்படியாகவில்லை ஆனால் வடமாநிலங்களில் அது பலம் பெற்றே உள்ளது.

இவற்றின் தொடர்ச்சியாகவே தமிழ், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களை பாரதீய ஜனதா கட்சியால் கைப்பற்ற முடியவில்லை.

இந்த நிலையில் மத்தியில் பாரதீய ஜனதாக் கட்சி அதிகாரத்திலிருக்கும் நிலையில் தமிழகத்தின் தி.மு.க. ஆட்சி இலங்கைத் தமிழர்களின் விமோசனத்துக்காகச் செயற்பட முடியுமெனக் கருதுவது ஒரு சிறுபிள்ளைத் தனமான கற்பனை என்றே கூறமுடியும்.

ஆனால் ஸ்டாலின் தனது பெயருக்கு ஏற்றவகையில் (ஸ்டாலின் என்றால் இரும்பு மனிதன்) பெரியாரின் திராவிடக் கொள்கைகளை முன்னெடுத்து ஆரிய, இந்துத்துவ மேலாதிக்கத்துக்கு எதிராகச் செயற்படுவதுடன் கேரளா, மேற்குவங்கம், ஆந்திரா போன்ற மாநிலங்களுடனும் நல்லுறவைக் கட்டியெழுப்பி ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுப்பாரானால் அது நீண்ட கால அடிப்படையில் இந்திய மக்களுக்கு மட்டுமின்றி இலங்கைத் தமிழர்களுக்கும் ஆக்கபூர்வமான நலன்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

ஆரிய இந்துத்துவ தேசிய மேலாதிக்கத்துக்கு எதிராகவும் சிங்கள பௌத்த பேரினவாத்துக்கு எதிராகவும் எழக்கூடிய போராட்டங்கள் ஒன்றுக்கொன்று அனுசரணையாக முன் செல்லும் போது மட்டுமே தமிழக மக்களுக்கு மட்டுமின்றி இலங்கைத் தமிழர்களுக்குமான விமோசனத்துக்குமான கதவுகள் திறக்கும் சாத்தியம் ஏற்படமுடியும் என்பது உணரப்படவேண்டும்.

அருவி இணைத்திற்காக : நா.யோகேந்திரநாதன்

11.05.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், கேரளா, வட மாகாணம், தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE