Friday 29th of March 2024 07:13:12 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொக்கிளாயிலிருந்து குருந்தூர் ஊடாக விரிவடையும் இன அழிப்பு! - நா.யோகேந்திரநாதன்!

கொக்கிளாயிலிருந்து குருந்தூர் ஊடாக விரிவடையும் இன அழிப்பு! - நா.யோகேந்திரநாதன்!


2009 மே மாதம்-

இது இலங்கைத் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து 30 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த இன அழிப்பு நடவடிக்கைகள் உச்சம் பெற்ற நாட்கள் அந்த மேமாதத்தில் தான் அமைந்திருந்தன.

பாதுகாப்பு வலயம் என்ற பேரில் ஒரு சிறு பகுதிக்குள் ஏறக்குறைய 4 இலட்சம் மக்களை முடக்கி விட்டு விமானக் குண்டுகளாலும் எறிகணைகளாலும் தொலைதூரத் துப்பாக்கி வேட்டுகளாலும் நடத்தப்பட்ட அந்தக் கொடிய இன அழிப்புக் கொடூரத்தை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் மே 18ல் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வை நடத்தி வருகிறோம்.

இவ்வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எமது அஞ்சலிகளை கோவில்களில் மணியோசை எழுப்பியும் வீடுகளில் நினைவுச் சுடறேற்றியும் அனுஷ்டிப்பதாகத் தீர்மானித்தோம்.

2009 மே மாதத்தை நாம் நினைவுகூரும் இப்புனித நாட்களில் இவ்வருட மே மாதத்திலும் இன அழிப்பு வேறு ஒரு வடிவில் திணிக்கப்படுகிறது.

இன அழிப்பு என்பது இரு வழிகளில் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்று ஆயுத நடவடிக்கைகள் மூலம் நடத்தப்படும் இனப்படுகொலைகள். மற்றது ஒரு தேசிய இனத்துக்குரிய தனித்துவ அம்சங்களான மொழி, கலாசாரம், பாரம்பரிய வாழிடம், பொதுப் பொருளாதாரம் என்பனவற்றை அழிப்பதாகும். 30 வருடங்களாக இலங்கையில் மாறிமாறி வந்த அரசாங்கங்கள் எமது மொழி, பாரம்பரிய வாழிடம், கலாசாரம், பொருளாதாரம் என்பவற்றை அழிக்கும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.

எனவே எம்மை நாம் பாதுகாக்கும் வகையில் ஆயுதப் போராட்டத்தை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டோம். எமது ஆயுதப் போராட்டத்தை முறியடிப்பது என்ற பேரில் எம் இனத்தின் மீதான மனிதகுல வேட்டை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

எனவே இரு விதங்களிலும் நாம் இன அழிப்புக்கு முகம் கொடுத்தவர்கள் என்பது மட்டுமின்றி எம்மை நாமே பாதுகாக்கப் போராட வேண்டியவர்களாயுள்ளோம். போராட்டத்தின் வடிவம் மாறினாலும் பேரினவாத ஒடுக்குமுறைகள் எம்மைப் போராட்டத்தை விட்டு வெளியேற அனுமதிப்பதாயில்லை.

எமது ஆயுதப்போராட்டம் மௌனிக்க வைக்கப்பட்டு 12 ஆண்டுகளின் பின்பு கடந்த மே மாதம் 10ம் நாளில் குருந்தமலையில் இரவோடிரவாக விகாரை அமைக்கப்பட்டு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுப் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பிரித் ஓதி வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.

அங்கு பௌத்த தொல்பொருட் சின்னங்கள் இருப்பதாகக் கூறப்பட்டு கடந்த சில மாதங்களின் முன் விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் மக்களின் எதிர்ப்புக் காரணமாக அது இடைநிறுத்தப்பட்டது. அங்கு பல்லவர் காலச் சதுர வடிவிலான சிவலிங்கத்தின் எச்சங்கள் காணப்பட்டமையும் குருந்தூர் மலை என்ற அதன் பெயரும் அது ஒரு இந்து சமய தொன்மையான வழிபாட்டிடம் என்பதை நிரூபித்தன.

தற்சமயம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நாட்களில் மீண்டும் அதைப் பௌத்த சிங்கள மயப்படுத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக மக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடுவது தடுக்கப்பட்டுள்ளபோதிலும் பௌத்த காங்கிரஸ் தலைவர் ஜெகத் சுமதிபால தலைமையில் தலைமைப் படையதிகாரிகள் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் 30இற்கு மேற்பட்ட பிக்குகள் என 300க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தியுள்ளனர்.

கொவிட் 19 தனிமைப்படுத்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய படையதிகாரி இதில் கலந்து கொண்டுள்ளார் என்றால் அவர்களின் சட்டத்தை அவர்களே மீறுமளவுக்கு இன அழிப்பு எவ்வளவு வலிமை பெற்றுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

குருந்தூர் மலை விவகாரம் செம்மலை நீராவிப்பிட்டியில் விகாரை அமைத்தல் வெடுக்குநாறி லிங்கேஸ்வரர் ஆலய வழிபாட்டுக்குத் தடை போன்ற விடயங்கள் ஒரு மதத் தொடர்பான பிரச்சினையாக மட்டும் பார்த்து விட முடியாது. அடிப்படையில் இவை இன அழிப்பின் முக்கிய இரு கூறுகளான நில ஆக்கிரமிப்பு, கலாசார ஆக்கிரமிப்பு என்பனவற்றின் கூர்மைப்படுத்தப்பட்ட வடிவங்களாகும்.

2009இற்குப் பின்பு மணலாற்றின் பல தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் மகாவலி அபிவிருத்திச் சபை, வனவளத் திணைக்களம், தொல்பொருட் திணைக்களம் என்பவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு சிங்களவர்கள் குடியேற்றப்படுவதை நாம் அவதானிக்க முடியும்.

குருந்தமலை ஆக்கிரமிப்பும் அதன் ஒரு பகுதியேயொழிய அதைத் தனி ஒரு சம்பவமாகப் பார்க்கமுடியாது.

அண்மையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ் மணலாற்றில் உள்ள போகஸ்வெவ என்ற கிராமத்திற்கு கிராமத்துடனான கலந்துரையாடல் நிழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். அவரின் வருகையை முன்னிட்டு காப்பற் வீதிகள், பாடசாலை, விளையாட்டு மைதானம், விஹாரை என்பன அமைக்கப்பட்டு அக்கிராமம் நவீனமயப்படுத்தப்பட்டிருந்தது. அங்கு மக்களுடன் உரையாடிய ஜனாதிபதி, அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும்படியும் அதை மகாவலி அபிவிருத்திச் சபையின் கீழ் கொண்டு வரும்படியும் கட்டளையிட்டார்.

இந்த போகஸ்வெவ என்ற கிராமம் கொக்கச்சன் குளம் என்ற பாரம்பரிய தமிழ்க் கிராமம். அக்கிராமம் உட்பட வெடிவைச்ச கல்லு, அம்பட்டன் வாய்க்கால் ஆகிய அயல் கிராமங்களிலி்ருந்தும் 1984ம் ஆண்டு தமிழ் மக்கள் மகாவலி அபிவிருத்தி சபையால் 48 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டனர். அதன்பின்பு அங்கு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். இங்கு குடியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிங்கள ஊர்காவற்படையினராகும். ஓயாத அலைகள் படை நடவடிக்கையின்போது அவ்விடத்தை விட்டு ஓடியவர்கள் மீண்டும் 2010இன் பிறகு குடியேறினர். இது ஒட்டு மொத்த சிங்களப் பிரதேசமாக மாற்றப்பட்டதுடன் பட்டிக்குடியிருப்பு, வெடிவைத்த கல்லு போன்ற கிராம மக்கள் தங்கள் இடங்களில் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் தனிக்கல்லு, ஒதியமலை, இலுப்பைக்குளம், கற்குளம் ஆகிய கிராமங்களில் 80 வீதம் மகாவலி அதிகார சபையின் கீழ்க்கொண்டுவரப்பட்டு விட்டது.

ஜனாதிபதியின் போகஸ்வெவ விஜயத்தின் பின்பு உற்சாகமடைந்த மகாவலி அபிவிருத்தி சபையினரால் கொக்கிளாய், கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டங்கேணி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு, செம்மலை கிழக்கு, செம்மலை ஆகிய எட்டுக் கிராம சேவகர் பிரிவுகளை மகாவலி அபிவிருத்திச் சபையின் கீழ்க்கொண்டுவரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் இது தொடர்பாக 13 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ்வைச் சந்தித்து மேற்படி நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு கோரினர். அவர் அதை இடைநிறுத்துவதாகவும் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின் அடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதியளித்திருந்தார்.

ஆனால் மகாவலி அபிவிருத்தி சபையின் நடவடிக்கை இடை நிறுத்தப்பட்ட நிலையில் தொல்பொருள் திணைக்களம் கிடப்பில் போடப்பட்டிருந்த குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் கோவில் விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. இங்கு பந்தல்கள் தோரணங்கள் அமைக்கப்பட்டு ஏறக்குறைய 300 பேர் கலந்து கொண்ட வழிபாட்டு நிகழ்வு தொடர்பாக அரசாங்க அதிபருக்கோ பிரதேசச் செயலருக்கோ சுகாதாரப் பிரிவினருக்கோ அறிவிக்கப்படவில்லை. மாவட்ட அரச அதிபரே அம்மாவட்டத்தின் விவகாரங்களுக்குரிய பொறுப்பானவர் என்பதும் எந்த ஒன்றுகூடல்களும் கொரோனா தொற்று காரணமாக சுகாதாரப் பகுதியினரின் அனுமதியுடன் அவர்களின் அறிவுறுத்தல்களுக்கமை வாகவே மேற்கொள்ளப்படவேண்டுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் மாவட்டப் படையதிகாரி உட்பட அரசு இயந்தித்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள் ளனர்.

ஏற்கனவே நெடுங்கேணியில் பண்ணைகளை அமைப்பதற்கென 1000 ஏக்கர் 500 ஏக்கர் எனக் கொழும்பின் தமிழ் வர்த்தகர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தன. அங்கு குடியிருந்த தமிழ் மக்கள் 1984ல் 48 மணி நேர அவகாசத்தில் மகாவலி அதிகார சபையால் வெளியேற்றப்பட்டனர். அங்கும் படிப்படியாக சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு அவையும் இப்போது சிங்களக் குடியேற்றங்களாகி விட்டன. அதேபோன்று தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த கிராமங்களான தனிக்கல்லு, ஒதியமலை, மருதோடை, பட்டிக்குடியிருப்பு, ஊஞ்சல் கட்டி, அம்பட்டன் வாய்க்கால், கொக்கச்சன் குளம், வெடிவைத்த கல், கற்குளம், இலுப்பைக்குளம் ஆகிய கிராம மக்களும் வெளியேற்றப்பட்டனர். அவற்றில் 80 வீதமான நிலங்கள்மகாவலி அதிகார சபையின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. இந்த இடங்களை உள்ளடக்கிய மணலாறு பிரதேசம் தற்சமயம் வெலிஓயா எனப் பெயர் மாற்றப்பட்டு விட்டது.

நெடுங்கேணி பிரதேசச் செயலர் பிரிவின் கீழுள்ள மணலாறு, கரைத்துறைப்பற்று பிரதேசச் செயலர் பிரிவின் கீழுள்ள கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டங்கேணி, செம்மலை, நாயாறு ஆகிய பகுதிகளை உள்ளடக்கி “சம்பத்நுவர” என்ற ஒரு தனி மாவட்டம் உருவாக்கும் திட்டத்தின் அடிப்படையிலேயே இவ்வாக்கிரமிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்மூலம் வடமாகாணத்தில் ஒரு சிங்கள மாவட்டம் உருவாவதுடன் அங்கு தமிழ் மக்கள் சிறுபான்மையாக்கப்படுகின்றனர்.

மேலும் அம்மாவட்டம் வடக்கிற்கும் கிழக்கிற்குமிடையிலான நிலத்தொடர்பையும் துண்டிக்கிறது. இது தமிழர் தாயகத்தைத் துண்டாடும் நோக்கம் கொண்டது என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும்.

எனவே குருந்தூரில் விகாரை அமைப்பது என்பது எமது மண் மீது மகாவலி அதிகார சபை, வனவளத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் என்பவற்றின் மூலம் பேரினவாத ஆட்சியாளர்களால் நிலப்பறிப்பு, கலாசார அழிப்பு என்பவற்றினூடாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இன அழிப்பின் ஒரு பகுதியாகும் என்பது உணரப்பட்டாலே இதன் பேராபத்தை புரிந்து கொள்ளமுடியும்.

அருவி இணையத்திற்காக : நா.யோகேந்திரநாதன்

18.05.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE