Monday 20th of September 2021 02:01:18 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 56 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 56 (வரலாற்றுத் தொடர்)


துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டவர்களும் ஆயுத நடவடிக்கைகளும்! - நா.யோகேந்திரநாதன்!

'திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் கையாட்களாக விளங்கும் அல்பிரட் துரையப்பா, அருளம்பலம் தியாகராஜா, சிறுபான்மைத் தமிழர் மகா சபைத் தலைவர் ஆகியோர் தமிழினத் துரோகிகள். அவர்கள் இயற்கையாகவோ விபத்தொன்றின் மூலமோ மரணமடைவதற்குத் தகுதியற்றவர்கள். அவர்கள் எப்படி இறக்க வேண்டுமென்பதைத் தமிழ் இளைஞர்கள் தான் முடிவெடுக்கவேண்டும்'.

1972ம் ஆண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட நிலையில் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அந்த அரசியலமைப்பை எதிர்த்துத் தன் நாடாளுமன்ற பதவியை ராஜிநாமாச் செய்தார். அதையடுத்து தமிழரசுக் கட்சியினர் அரசியலமைப்பை எதிர்த்தும் அந்த அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இனத் துரோகிகளாகச் சித்தரித்தும் கிராமம் கிராமமாகக் கூட்டங்களை நடத்தி வந்தனர். அப்படியான கூட்டங்களில் உணர்ச்சிக் கவிஞர் உரையாற்றும்போது குறிப்பிட்ட விடயமே இது.

இந்த உரை காரணமாகக் காசி ஆனந்தன் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்ட போதிலும் இப்படியான உரைகள் ஏற்கனவே பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் மூலம் கொதி நிலையிலிருந்த இளைஞர்கள் மத்தியில் ஆயுத நடவடிக்கைகளுக்கான உந்து சக்தியாக விளங்கின. சிவகுமாரன் தலைமையில் ஒரு சிறு குழுவும், செட்டி குழு என அழைக்கப்பட்ட பிரபாகரன் தலைமையிலான அணியினரும் இத்தகைய ஆயுத நடவடிக்கைகளில் இறங்கினர். இவர்களுக்கு அமிர்தலிங்கம், ஆலாலசுந்தரம் ஆகியோரின் ஆதரவும் கிடைத்தது. இவர்கள் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளைத் தங்கள் மறைவிடங்களாகவும் பயன்படுத்திக் கொண்டனர். அதேவேளையில் தமிழ் அரசியல் தலைமைகளில் நம்பிக்கையிழந்த சில இளைஞர்கள் தங்கத்துரை தலைமையில் தமிழீழ விடுதலைக் கழகம் (ரெலோ) என்ற ஆயுத அமைப்பை உருவாக்கினர். குட்டிமணியும் அந்த இயக்கத்தில் ஒரு முக்கியமானவராகும். சில காலத்தின் பின் பிரபாகரன் தனது குழுவுக்கு புதிய தமிழ்ப் புலிகள் எனப் பெயர் சூட்டிக் கொண்டார்.

சிவகுமாரன், பிரபாகரன் ஆகியோரின் குழுக்களின் இலக்குகள் தமிழரசுக் கட்சிக்குப் போட்டியான அரசியல்வாதிகளும் அரச புலனாய்வுப் பிரிவினரும், சில பொலிஸ் அதிகாரிகளாகவுமே இருந்தனர். இந்த இரு குழுக்களும் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் இடம்பெறுவதற்கு முன்பே ஆயுத நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டன.

கெஸ்பாவ நாடாளுமன்ற உறுப்பினர் சோமவீர சந்திரசிறி உரும்பிராயில் தனது நண்பரொருவரைச் சந்திப்பதற்கு வந்திருந்தார். அவரது வாகனத்துக்குக் குண்டு வைக்கப்பட்டது. அவரின் வாகனம் சேதமடைந்தபோதும் அவருக்கு எவ்வித ஆபத்தும் இடம்பெறவில்லை. இச்சம்பவத்தையடுத்து சிவகுமாரன் தேடப்படும் நபரானார்.

சோமவீர சந்திரசிறி 'அலிபாபாவும் பதினான்கு திருடர்களும்' என்றொரு நாடகத்தை டி.எஸ்.சேனநாயக்காவையும் அவரது ஆட்சியையும் விமர்சனம் செய்யும் வகையில் சிங்களப் பகுதியெங்கும் மேடையேற்றி வந்தார். அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். 1956 தேர்தலில் அவர் சிறையிலிருந்தே போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். 1958 இனக்கலவரத்தின்போது கெஸ்பாவ தொகுதியில் ஒரு தமிழர் கூடத் தாக்கப்படவில்லை. அவர் அங்குள்ள தமிழர்களுடன் நல்லுறவைப் பேணி வந்தார். கெஸ்பாவ உபதபாலதிபர் ஒரு தமிழராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரன் என்பதைவிட வேறு காரணம் எதுவுமிருக்கவில்லை.

அதேபோன்று பிரதான வீதியிலுள்ள பிரிமியர் பேக்கரிக்கு முன்பாக அல்பிரட் துரையப்பாவின் வாகனத்துக்குக் குண்டு வைக்கப்பட்டது. அவர் சற்றுத் தாமதித்து விட்டதால் காரில் வெடித்த குண்டினால் அவருக்கு ஆபத்து ஏற்படவில்லை. அதையடுத்து சிவகுமாரன் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு அமைச்சர் செல்லையா குமாரசூரியரின் வாகனத்தை இலக்கு வைத்து பண்ணைப் பாலத்தில் வைத்து பிரபாகரன் குழுவினரால் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. ஆனால் வாகனம் அந்த இடத்தைக் கடந்த பின்பே குண்டு வெடித்தது.

அதுமட்டுமின்றி வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் சில புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸ் அதிகாரிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவ்வாறான ஆயுத நடவடிக்கைகளையடுத்து தமிழ் இளைஞர் பேரவை, தமிழ் மாணவர் பேரவை ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உட்படப் பலர் கைது செய்யப்பட்டனர். அல்பிரட் துரையப்பா கொலை முயற்சி தொடர்பாக சிவகுமாரன் கைது செய்யப்பட்டு சில மாதங்களின் பின் பிணையில் விடப்பட்டுப் பின் தலைமறைவானார்.

இதேபோன்று நல்லூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருளம்பலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியும் வெற்றி பெறவில்லை. ஆனால் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மாவை சேனாதிராசா, திருநாவுக்கரசு, பேபி சுப்ரமணியம் முதலியோர் முக்கியமானவர்கள். ஏறக்குறைய 50 பேர் 1972 - 1977 காலப்பகுதியில் அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருசிலர் மட்டுமே ஆயுத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டவர்களாயிருந்தனர். பெரும்பாலானவர்கள் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்களாயிருந்தனர்.

இவ்வாறு சில இளைஞர் குழுக்களால் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டவர்கள் மீதும் பொலிஸ் அதிகாரிகள், புலனாய்வாளர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சிகள் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளின் பின்பு தீவிரமடைய ஆரம்பித்தன.

அப்படுகொலைகளை அடுத்து அன்றிரவே பிரதான வீதியில் அமைந்திருந்த அல்பிரட் துரையப்பாவின் காரியாலயம் தாக்கப்பட்டது. அது மட்டுமின்றி அப்படுகொலைகளை எதிர்த்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள், ஹர்த்தால்கள், கடையடைப்புகள் என்பன தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

இப்போராட்டங்களின் போது இப்படுகொலைகளின் சூத்திரதாரி அல்பிரட் துரையப்பா தான் எனவும் அவர் தன்னை மாநாட்டுக்கு அழைக்காத காரணத்தால் மாநாட்டைக் குழப்பும்படி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசிறியை ஏவி விட்டுச் சிங்கப்பூருக்குப் பறந்து விட்டார் என்ற பிரசாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. அல்பிரட் துரையப்பா ஒரு துரோகி என ஒவ்வோர் தமிழர் மனதிலும் படிய வைக்குமளவுக்கு தமிழர் ஐக்கிய முன்னணியினரால் பட்டிதொட்டியெங்கும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளையில் சட்டவிரோதமாக விசா இன்றி கடல் மூலம் கொண்டு வரப்பட்ட ஜனார்த்தனத்தை பொதுக்கூட்ட மேடையில் அமர்த்தியிருந்தமை, வீதியை மறித்திருந்த மக்களை விலகி வழிவிடும்படி பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்க விலகி வழிவிடாதது மட்டுமன்றி, பொலிஸார் மீது கற்களையும் செருப்புகளையும் வீசியமை போன்ற அத்துமீறல்களே பொலிஸார் தாக்குதலை மேற்கொள்ள வாய்ப்பை வழங்கின என்பதையும் மறுத்துவிடமுடியாது. இப்படியான விடயங்களைத் தவிர்த்து, பொலிஸார் கேட்டுக்கொண்டபடி விலகி பாதையை விட்டிருந்தால் தாக்குதலை மேற்கொள்ள பொலிஸாருக்குக் காரணம் கிடைத்திருக்காமற் போயிருக்கும். ஏனெனில் பொதுக்கூட்டத்தை நடத்த தாக்குதலுக்கு கட்டளையிட்ட ஏ.எஸ்.பி. சந்திரசேகரவே அனுமதியை வழங்கியிருந்தார்.

யாழ்ப்பாண நகரத்தை நவீனமயப்படுத்தியமை, யாழ்.கூட்டுறவுச் சங்கம் மூலம் ஏராளமான அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டமை, இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியமை போன்ற விடயங்களால் அல்பிரட் துரையப்பா யாழ்ப்பாணத் தொகுதியில் தமிழர் ஐக்கிய முன்னணியினரால் வெல்லப்படமுடியாத வேட்பாளராக விளங்கினார். எனவே அவரை மக்கள் மத்தியில் செல்வாக்கிழக்க வைக்கும் நோக்கத்துடன்னேயே தமிழர் ஐக்கிய முன்னணியினர் அவருக்குத் துரோகி பட்டம் சூட்டியதுடன் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளுக்கு அவரே சூத்திரதாரி எனப் பிரசாரம் செய்தனர்.

ஆனால் இளைஞர் குழுக்கள் அத்துடன் மட்டுப்படவில்லை. அவர்கள் அப்படுகொலைகளுக்குப் பழிவாங்கும் முனைப்புடன் தீவிரவாத நடவடிக்கைகளில் இறங்கினர்.

அவ்வகையில் யாழ்.மணிக்கூட்டுக் கோபுர வீதியில் வைத்து பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேகர மீது சிவகுமாரன் குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதல் அவர்கள் எறிந்த குண்டு வெடிக்காததால் வெற்றியளிக்கவில்லை. பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்து சிவகுமாரைப் பிடிக்க முயன்ற போதும் அவர் காயங்கள் எதுவுமின்றித் தப்பியோடி விட்டார்.

இவ்வாறே பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலில் வைத்து அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொல்லப்பட்டார். அது பிரபாகரன் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.

இவ்வாறு ஆயுத நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் அவற்றை மேற்கொள்ளவும் ஏனைய செலவுகளுக்கும் பணம் தேவைப்பட்டது. இளைஞர் சிவகுமாரன் அமிர்தலிங்கம் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் பண உதவி கோரியபோதும் எவரும் அவர்கள் கோரிய நேரத்தில் வழங்கவில்லை.

எனவே சிவகுமாரன் குழுவினர் புத்தூர் மக்கள் வங்கியைக் கொள்ளையிட முடிவு செய்தனர். அத்தகவல் எப்படியோ பொலிஸாருக்குப் போய்விட கோப்பாய் பொலிஸார் விரைந்து செயற்பட்டு கொள்ளை இடம்பெறும் முன்னரே அவ்விடத்தைச் சுற்றி வளைத்தனர். அதிலிருந்து தப்பியோடிய சிவகுமாரன் தொடர்ந்து பொலிஸாரால் கலைக்கப்படவே ஒரு தோட்டத்திற்குள் புகுந்து சயனைட் அருந்திச் சாவடைந்தார்.

அவரே முதன் முதலாக சயனைட் அருந்திச் சாவடைந்த போராளி எனப் போற்றப்படுகிறார்.

அவரது மரணச் சடங்கில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செய்தனர். அதில் உரையாற்றிய தமிழர் ஐக்கிய முன்னணியினர் துரோகிகள் எதிர்ப்பு, தனிநாட்டுக் கோரிக்கை, இளைஞர்கள் எழுச்சி பெற வேண்டியமை என்பன தொடர்பாக முழங்கியதுடன் அடுத்த தேர்தலுக்கான மேடையாகவும் பயன்படுத்திக்கொண்டனர்.

அதேவேளையில் யாழ்ப்பாணத்திலுள்ள பல புத்திஜீவிகளின் முயற்சிகள் காரணமாகவும் அமைச்சர் குமாரசூரியரின் அழுத்தம் காரணமாகவும் யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. அதைத் திறந்து வைக்கப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வரவிருந்தார்.

தாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருந்தபோது பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் அமையவேண்டுமெனவும் தமிழரசுக் கட்சியினர் திருகோணமலையில் அமைய வேண்டுமெனவும் ஒருவரோடொருவர் மோதி பல்கலைக்கழகம் வருவதைத் தடுத்தனர். தற்சமயம் அவர்களை மீறி ஒரு பல்கலைகழகம் உருவாக்கப்பட்டபோது திருமதி ஸ்ரீமாவோவின் வருகையை எதிர்த்து கறுப்புக் கொடிப் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். மக்களையும் பிரதமரின் வருகையை பகிஷ்கரிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் இரு இடங்களிலும் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. ஆனால் அந்தப் பாதையூடாகப் பிரதமர் பயணிக்கவில்லை. அதேநேரம் இளைஞர் குழவினரால் யாழ்ப்பாணம் சந்தை, ரயில் நிலையம், காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையம், அரசின் பங்காளிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வி.பொன்னம்பலத்தின் வீடு என்பன உட்பட 6 இடங்களில் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. இவற்றைப் பிரபாகரன் தலைமையிலான புதிய தமிழ்ப் புலிகளே மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

எனினும் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க எவ்வித இடையூறுமின்றி பல்கலைக்கழகத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். தமிழரசுக் கட்சிக்கு ஆதரவான சில கல்விமான்கள் பணியாற்ற மறுத்தபோதும் பேராசிரியர் கைலாசபதி உபவேந்தராகப் பொறுப்பேற்றார். லண்டனில் பணியாற்றியவர்கள் உட்பட பல இடதுசாரிக் கல்விமான்கள் பேராசியரியர்களாக வந்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பல்கலைக்கழக வளாகமாக ஆரம்பிக்கப்பட்ட இது பேராசிரியர் கைலாசபதியுடையதும் ஏனைய பேராசிரியர்களதும் கடும் உழைப்புக் காரணமாக 1979ல் ஒரு முழுமையான பல்கலைக்கழகமாக விருத்தி பெற்றது.

ஆரம்பத்தில் இதை எதிர்த்த தமிழரசுக் கட்சிப் பேராசிரியர்களே உபவேந்தர் பதவிக்குப் போட்டியிடுமளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

1972ல் புதிய அரசியலமைப்பை எதிர்த்துத் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தந்தை செல்வா அவர்கள் ராஜினாமாச் செய்த பின்பு இரண்டரை வருடங்களின் பின்பு 1975 பெப்ரவரி 6ம் நாள் இடைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் மாவை. சேனாதிராஜா, காசி ஆனந்தன் உட்பட வன்முறைக் குற்றச்சாட்டுகளின் பேரில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்களை 1975 ஜனவரியில் விடுதலை செய்தது.

அஹிம்சை தான் தனது கொள்கையெனக் கூறிக் கொள்ளும் ஈழத்துக் காந்தி என அழைக்கப்பட்ட எஸ்.ஜே.வி.செல்வநாயகம் விடுவிக்கப்பட்ட இளைஞர்களை யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் பெரும் கோலாகலமாக வரவேற்கிறார். இச் சம்பவம் இளைஞர்கள் மத்தியில் ஆயுத நடவடிக்கைகளுக்கான புதிய உந்துதலை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்குகின்றனர்.

செல்வநாயகம் அவர்கள் 1972ன் அரசியலமைப்பை நிராகரிக்கவும், தனித் தமிழீழக் கோரிக்கையை முன் வைத்தும் மக்கள் ஆணை கோரி தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினரான வி.பொன்னம்பலம் போட்டியிடுகிறார். அவரின் ஆதரவாளர்கள் மீது ஆங்காங்கே வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர் இனப்பிரச்சினைத் தீர்வாக கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையான பிரதேச சுயாட்சியை வைத்தே போட்டியிடுகிறார்.

செல்வநாயகம் அவர்கள் பதினோராயிரம் அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெறுகிறார். அதையடுத்து தமிழீழக் கோரிக்கையைத் தமிழ் மக்கள் அங்கீகரித்து விட்டதாகத் தமிழர் ஐக்கிய முன்னணியினர் தீவிர பிரசாரத்தை மேற்கொள்கின்றனர்.

அதேவேளையில் துரோகிகள் ஒழிப்பாக ஆரம்பித்த இளைஞர்களின் போராட்டம் ஆயதப் போராட்ட நடவடிக்கைகளாக விரிவடைய ஆரம்பிக்கின்றன. பல்வேறு ஆயுதக் குழுக்கள் தோன்றும் சூழ்நிலையும் உருவாகி வளர்ச்சியடைய ஆரம்பித்தது.

அதையடுத்து தமிழர் ஐக்கிய முன்னணியினரின் தமிழீழக் கோரிக்கையும் இளைஞர்களின் ஆயுத நடவடிக்கைகளும் சமாந்தரமான பாதையில் பயணிக்கத் தொடங்கின.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE