Saturday 20th of April 2024 02:03:27 AM GMT

LANGUAGE - TAMIL
.
சிங்களத்தின் பெருமிதமாக்கப்படும் தமிழர்களின் துயரம்! - நா.யோகேந்திரநாதன்!

சிங்களத்தின் பெருமிதமாக்கப்படும் தமிழர்களின் துயரம்! - நா.யோகேந்திரநாதன்!


கடந்த வாரம் 2009 மே 18 இனப் படுகொலைகளை நினைவு கூர்ந்து தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் என்றும் ஆற்றப்படமுடியாத வேதனைகளைச் சுமந்து, இழக்கப்பட்ட உறவுகளின் நினைவுகள் கண்ணீராக ஓட நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்க பயங்கரவாதத் தடைச் சட்டம், கொரோனா தனிமைப்படுத்தல் விதி முறைகள், நீதிமன்றத் தடைகள் எனப் பலவிதமான ஆயுதங்கள் ஏவி விடப்பட்டும், பொலிஸாராலும் படையினராலும் பல நெருக்கடிகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோதும் அன்று ஆலயங்களில் மணியொலி எழுப்பப்படுவதோ சுடரேற்றப்பட்டு அஞ்சலிக்கப்படுவதோ இடம்பெறத்தான் செய்தன. எந்த ஒடுக்குமுறைச் சட்டங்களாலும் மிரட்டல்களாலும் கெடுபிடி நடவடிக்கைகளாலும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்தி விடமுடியவில்லை.

எமது மக்கள் அடிமைகளாக வாழ மறுத்து உரிமை கோரிப் போராடிய ஒரே காரணத்துக்காக ஒரு சிறிய பகுதிக்குள் முடக்கப்பட்டுக் கொலை வெறியாட்டம் மேற்கொள்ளப்பட்ட கொடிய நாட்கள் அவை. இரத்தத்தாலும் கண்ணீராலும் பட்டினியாலும் தாங்க முடியாத துயரங்களாலும் நிறைக்கப்பட்ட நாட்களை எமது மக்கள் நினைவு கூர்ந்து மனமுருகக்கூட வருடாவருடம் எத்தனையோ தடைகள் ஏவி விடப்படுகின்றன. கடந்த வருடங்களைப் போலவே இவ்வருடமும் தடைகளை உடைத்து நினைவுவேந்தல் சுடர்களாக எழுந்து ஒளி வீசி நின்றன.

இவ்வாறு தமிழ் மக்கள் துயரத்தில் தோய்ந்து பெருகியோடும் கண்ணீருடன் நினைவஞ்சலியை மேற்கொண்டபோது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் அதை சிங்களத்தின் வெற்றித்திருநாளாகப் பெருமையுடன் கொக்கரித்தார். 30 வருடப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த நாள் எனவும் பயங்கரவாதத் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்ட நாள் எனவும் பெருமையுடன் குரலெழுப்பினார். அது மட்டுமின்றி வெற்றியைப் பெற்றுக்கொடுத்த படையினருக்கு இம்மாத ஊதியத்தை முன்கூட்டியே வழங்கியும் அவர்கள் பெற்ற கடன்களுக்கு வட்டியை நீக்கியும் 1030 பேருக்கு பதவி உயர்வு வழங்கியும் அவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தினார்.

அதேவேளையில் மே 18ல் மஹிந்த ராஜபக்ஷ் விடுத்த அறிக்கையில் தமிழ் மக்களை நோக்கி தேன் தோய்த்த நச்சுக் கனிகளை அவர் நீட்டத் தவறவில்லை. அவர் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை புலிகள் பிடித்துக் கொண்டு போய் விடுவார்களென அச்சமடைந்து ஒளித்து வைத்திருக்கும் நிலைமையும் ஊர்ஊராக இடம்பெயர்ந்து அகதிகளாக அலையும் நிலையும் இல்லாமற் செய்யப்பட்டு விட்டதெனப் பெருமைப்பட்டுக் கொண்டார். அது மட்டுமின்றி இலட்சக் கணக்கான தமிழ் மக்களைப் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து படையினர் மீட்டெடுத்தனர் எனவும் படைகளைப் புகழ்ந்துரைத்தார். மெலும் படையினரைத் தாங்கள் ஐக்கிய நாடுகள் சபை உட்படச் சர்வதேசத்தின் குற்றச் சாட்டுகளிலிருந்து காப்பாற்றியதுடன், பதவிகளையும் பட்டங்களையும் வழங்கிக் கௌரவித்திருப்பதாகவும் எக்காளமிட்டிருந்தார்.

2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி 3 இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் “மெனிக்பாம்” முகாம்களில் திறந்த வெளிச் சிறைக் கைதிகளாக தாங்கொணாத துயரங்களை முட்கம்பி வேலிகளுக்குள் அனுபவித்துக் கொண்டிருந்த வேளையில் கொழும்பில் பிரமாண்டமான போர் வெற்றி விழா கொண்டாடப்பட்டமையையும் அதில் இந்திய சினிமா நட்சத்திரங்கள் சிலர் வரவழைக்கப்பட்டு மேடையேற்றப்பட்டமையையும் மறந்து விடமுடியாது. கொரோனா பேரிடர் ஆரம்பமாவதற்குமுன் ஒவ்வொரு வருடமும் தமிழ் மக்கள் பல தடைகள் மத்தியிலும் மே 18ல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தும்போது கொடும்பில் மே 19ல் படைவீரர் வெற்றி நாள் கொண்டாடப்பட்டு வந்தமையை நாம் நினைத்துப் பார்க்கிறோம்.

அதாவது தமிழ் மக்களின் கண்ணீர், துயரம், மாற்றமுடியாத வடுக்கள், திருப்பிப் பெறமுடியாத பேரிழப்புகள், சிங்கள அதிகார பீடங்களால் வெற்றி் விழாக்களாகவும் பெரும் களியாட்ட நிகழ்வுகளாகவும் வீரத்தைக் கௌரவிக்கும் நாளாகவும் கொண்டாடப்பட்டு வந்துள்ளன.

ஒரு சின்னஞ்சிறிய ஒரு இனத்தின் மாற்ற முடியாத பெருந்துயரம் இன்னொரு இனத் தலைமைகளால் பெரும் வெற்றிக் களியாட்டமாகப் பார்க்கப்படும்போது இந்த நாடு இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்திலிருந்து எவ்வளவு தூரம் தொலை தூரத்தில் நிற்கிறது என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

உலகில் வரலாறு என்பது எப்போதுமே வெற்றி காண்பவர்களின் வரலாறாகவே இருந்து வந்துள்ளது. அவர்களையே வீரர்களாகவும் மனித குல மீட்பவர்களாகவும் வரலாறு பதிவு செய்து வருகிறது. யூலிச சீஸர், அலெக்சாண்டர், நெப்போலியன் முதல் ராஜராஜசோழன், சேரன் செங்குட்டுவன், துட்டகைமுனு வரை வென்றவர்களே வீரர்களாகவும் சாதனையாளர்களாகவும் போற்றப்பட்டு வருகின்றனர். அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு சுதந்திரமிழந்த தேசங்கள் பற்றியோ அவர்களால் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் பற்றியோ, அவர்களின் நாடு பிடிக்கும் வேட்கையில் பலியாக்கப்பட்ட அவர்களின் படை வீரர்கள் பற்றியோ எவரும் அக்கறைப்பட்டிருப்பதில்லை.

இரண்டாம் உலகப் போரின் முன்பு பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் பெரும் போர்கள் மூலம் ஆசிய ஆபிரிக்க நாடுகளைக் கைப்பற்றித் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தன. பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய நாடுகள் அமெரிக்கப் பழங்குடிகளை வகைதொகையின்றிக் கொன்றொழித்து அந்த நாட்டைக் கைப்பற்றினர்.

அதேநேரத்தில் வேகமாக வளர்ந்து வந்த ஜெர்மன் முதலாளித்துவத்துக்கு மூலப் பொருட்களும் தங்கள் உற்பத்திகளுக்கான சந்தைகளும் தேவைப்பட்டன. எனவே ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லர் ஏனைய ஏகாதிபத்தியங்களால் கைப்பற்றப்பட்ட நாடுகளை மட்டுமின்றி ஏகாதிபத்திய நாடுகளையும் கைப்பற்றும் போரில் இறங்கினான்.

அந்த நிலையில் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்க நேசநாடுகளாகவும் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அந்த நாடுகளாகவும் இரண்டாம் உலகப் போர் வெடித்தது. இறுதியில் சோவியத் யூனியனில் ஆரம்பித்த ஹிட்லரின் தோல்வி இறுதியில் அவனை முழுமையான அழிவுக்குள் தள்ளியது.

அதன் காரணமாக ஹிட்லர் ஒரு கொடிய சர்வாதிகாரி எனவும் 60 இலட்சம் யூதர்களைக் கொன்றொழித்த பயங்கரவாதி எனவும் தூற்றப்பட்டான். பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஹிட்லரின் கொடிய நாசிசத்திலிருந்து உலகைக் காப்பாற்றிய மீட்பர்கள் எனவும் போற்றப்பட்டன.

எப்படிப் பார்த்தாலும் இரு தரப்பினரும் நாடுகளைக் கைப்பற்றும் ஆக்கிரமிப்பாளர்களே! எனினும் வரலாறு வெற்றி பெற்றவர்களை மீட்பர்களாகவும் தோல்வியடைந்தவர்களைக் டியவர்களாகவுமே பதிவு செய்கிறது.

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வெற்றி பெற்றிருந்தால் என்ன நடந்திருக்கும்?

ஐரோப்பிய நாடுகளை பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து காப்பாற்றிய வீரநாயகனாக ஹிட்லர் போற்றப்பட்டிருப்பான். ஜப்பான் நாடு சீனா, இந்தியா உட்பட ஆசிய நாடுகளை பிரிட்டன், பிரான்ஸ், போத்துக்கல் ஆகிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விடுவித்த பெருமை பெற்றிருக்கும். கம்யூனிச பூதத்திடமிருந்து சோவியத் மக்களைக் காப்பாற்றிய மீட்பராகக் ஹிட்லர் போற்றப்பட்டிருப்பான். யூதர்கள் சாத்தானால் படைக்கப்பட்டவர்களெனவும் அவர்களுக்கு நகர நெருப்பு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் புதிய மத நூல்கள் எழுதப்பட்டிருக்கும். அதேவேளையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரீமனும், பாதுகாப்பு அமைச்சர் ஜஸனோவரும் ஜப்பானின் இருபெரும் தொழில் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி ஆகியவற்றைக் குண்டு வீசி அழித்து ஏறக்குறைய 2 இலட்சம் மக்களைக் கொன்றமைக்காக போர்க்குற்றவாளிகளாகத் தண்டிக்கப்பட்டிருப்பார்கள். ஆரிய இனத்தின் மேன்மையை நிலைநாட்டிய ஒப்பற்ற நாயகனாக வரலாறு ஹிட்லரைப் போற்றியிருக்கும். ஆனால் ஹிட்லர் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அவன் கொடியவனாக அவனின் சாவு மக்களால் கொண்டாடப்பட்டது.

இலங்கையில் ஹிட்லரின் வாரிசுகள் வெற்றி பெற்று விட்ட நிலையில் அவர்கள் தங்களை வீர நாயகர்களாகவும் விடுதலைப் போராளிகளைப் பயங்கரவாதிகளாகவும் விடுதலை வேண்டிய மக்களைச் சபிக்கப்பட்டவர்களாகவும் வரலாறு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி அநீதியான வெற்றிகளின் மேல் கட்டியெழுப்பப்படும் வரலாறுகள் நெடுங்காலம் நின்று பிடிப்பதில்லை என்பது உலக அனுபவமாகும்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பெரும் இனப்படுகொலை சிங்களத்தினால் மனிதாபிமான நடவடிக்கையாகவும் எமது மக்களை அடிமைத்தனத்திலிருந்தும் பேரழிவிலிருந்தும் மீட்க முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பயங்கரவாதம் எனவும் வரலாறு எழுதப்படுகிறது. அதாவது எமது பேரிழப்புகளும் அதனால் விளைந்த ஆற்றமுடியாத துயரமும் அவர்களின் வீரமாகவும் பெருமையாகவும் சித்தரிக்கப்படுகின்றன. இவ்வாறு அதிகார பலத்தாலும் இன ஒடுக்குமுறை மேலாதிக்க முனைப்புகளாலும் கட்டியமைக்கப்பட்ட அந்தப் பொய்மையான வரலாற்றின் அடிப்படையிலேயே வெற்றி விழாக்கள் கொண்டாடப்பட்டும் எமது நினைவேந்தல் நிகழ்வுகள் தடை செய்யப்பட்டும் சாதாரண சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இன ஒடுக்குமுறையை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளில் படை வீரர்களாகக் களமிறக்கப்பட்டு பலியாக்கப்பட்ட சிங்கள இளைஞ!ர்களின் உயிரிழப்பு “தாய் நாட்டைப் பாதுகாத்தல்” என்ற முலாம் பூசப்பட்டு தியாகங்களாகக் காட்டப்படுகின்றன.

அதிகாரத்திலிருந்து கொண்டு எவ்வளவுதான் வரலாற்றைப் புரட்டி வியாக்கியானம் செய்த போதிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களாலும் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட சில படையதிகாரிகளுக்குச் சில நாடுகள் தடை விதித்ததன் மூலமும் உண்மைகள் நெடுங்காலத்துக்கு மறைக்கப்படமுடியாதவை என்பது வெளிப்பட்டு வருகிறது.

எப்படியிருந்த போதிலும் தமி்ழ் மக்களின் துயரத்தை சிங்கள மக்களின் பெருமையாகவும், வெற்றியின் வெளிப்பாடாகவும் காட்டும் மூன்றாம் தர அரசியல் வியாபாரம் அம்பலப்படும்போது இவர்கள் அதே சிங்கள மக்களாலேயே குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்படுவார்கள் என்பது நிச்சயம்.

அருவி இணையத்திற்காக : நா.யோகேந்திரன்.

26.05.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE