Tuesday 23rd of April 2024 08:17:41 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 57 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 57 (வரலாற்றுத் தொடர்)


காங்கேசன்துறை இடைத்தேர்தலும் தனிநாட்டுக் கோரிக்கையும்! - நா.யோகேந்திரநாதன்!

'வரலாற்றுக் காலம் முதல் அந்நியர் ஆதிக்கம் ஏற்படுத்தப்படும் வரை இந்த நாட்டில் தமிழர்களும் சிங்களவர்களும் வேறுபட்ட இறைமை கொண்ட மக்களாகவே வாழ்ந்து வந்திருக்கின்றனர். கடந்த 25 வருடங்களாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிங்கள மக்களுடன் சமதையாக வாழ்வதற்காக எமது உரிமைகளை வென்றெடுக்க நாம் எம்மாலான சகல முயற்சிகளையும் முன்னெடுத்தோம். ஆனால் சுதந்திரம் பெற்ற பின்பு அதிகாரத்துக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் தமது அதிகாரத்தை எமது அடிப்படை உரிமைகளை நசுக்கவும் அதன் மூலம் எம்மை இரண்டாம் தரப் பிரஜைகளாக்கவும் பயன்படுத்தின என்பது மிகவும் வேதனையளிக்கும் விடயமாகும். தமிழ் மக்களுக்கு எதிராக பாரபட்சமாகச் செயற்பட்டே இந்த அரசாங்கங்கள் எம்மை இந்த நிலைக்குக் கொண்டு வந்தன. இந்தத் தேர்தல் முடிவு மூலம் சொல்லி வைக்க விரும்புகிறேன். நான் இந்தத் தேர்தல் தந்த தீர்ப்பை தமிழீழ தேசம் ஏற்கனவே தமிழ் மக்களிடம் பொதிந்துள்ள இறைமையைக் கொண்டு விடுதலை பெறுவதற்கான மக்கள் ஆணையாகவே நான் கருதுகிறேன். தமிழர் ஐக்கிய முன்னணி சார்பாக நான் ஒரு உறுதி மொழியைத் தருகிறேன். இந்த மக்களாணையை நிச்சயம் நாம் முன் கொண்டு செல்வோம்'.

அது தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் தந்தை செல்வா எனப் போற்றப்பட்டவருமான எஸ்.ஜே.வி.செல்வநாயகம் 1975ம் ஆண்டு பெப்ரவரி 6ம் நாள் இடம்பெற்ற காங்கேசந்துறை இடைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பின்பு இடம்பெற்ற வெற்றி விழா பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும். இவ்வுரை கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மத்தியில் பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கூட்டத்திலிருந்தவர்கள் 'தமிழீழமே எங்கள் உயிர் மூச்சு எனவும்', 'உடல் மண்ணுக்கு, உயிர் தமிழீழத்துக்கு' எனவும் கோஷமெழுப்பித் தமது ஆதரவைத் தெரிவித்தனர். சிலர் தங்களின் கைகளைத் தாங்களே கீறி அதில் வழிந்த இரத்தத்தைத் தொட்டு செல்வநாயகத்தக்கு இரத்தத் திலகம் இட்டனர்.

இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆற்றிய உரைகளின் சிகரமாக செல்வநாயகம் அவர்களின் தேர்தல் வெற்றி அமைந்துள்ள நிலையில் ஏற்கனவே அரசாங்க ஆதரவாளர்கள் மீதான கொலை முயற்சிகள், அரசாங்க பஸ்களை எரித்தல் போன்ற வன்முறைகளில் ஈடுபட்டுவந்த இளைஞர் குழுக்கள் தங்கள் நடவடிக்கைகளை மேலும் மேலும் தீவிரப்படுத்தின.

இத்தேர்தலில் இரு கோரிக்கைகள் தமிழர் ஐக்கிய முன்னணியினரால் முன்வைக்கப்பட்டுத் தமிழ் மக்களின் ஆணை கோரப்பட்டது. ஒன்று 1972ம் ஆண்டின் அரசியலமைப்பைத் தமிழ் மக்கள் நிராகரிக்ககிறார்கள் என்பது. மற்றது இலங்கையிலிருந்து பிரிந்து தனித் தமிழ் நாடு அமைப்பது, அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளாக வடக்கே அமைச்சர்கள் பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகளைப் பகிஷ்கரிப்பது, சுதந்திர தினத்தைப் பகிஷ்கரிப்பது, அமைச்சர்களுக்குக் கறுப்புக் கொடி காட்டுவது போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளையில் தனிநாட்டுக் கோரிக்கையை வெற்றி கொள்ள அஹிம்சை வழியிலான போராட்டங்களை நடத்துவதெனவும் இந்தியா பங்களாதேஷ் நாட்டை உருவாக்கியது போன்று தமிழீழத்தையும் உருவாக்கித் தரும் எனவும் ஒரு மாயை தேர்தல் மேடைகள் மூலம் பரப்பப்பட்டது. அதேவேளையில். இளைஞர் குழுக்களின் வன்முறைகளுக்கு மறைமுக ஆதரவு வழங்கப்பட்டதுடன் அவை தேர்தல் பிரசாரங்களுக்கும் பயன்படுத்தப்பட்டன.

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு வங்காளத்தில் ஏராளமான சணல் வயல்கள் அமைந்திருந்தன. சணலை மூலப் பொருளாகக் கொண்டு இயங்கும் பல தொழிற்சாலைகள் இந்தியாவுக்குச் சொந்தமான மேற்கு வங்காளத்திலேயே அமைந்திருந்தன. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமிடையே நிலவிய முரண்பாடுகள் காரணமாகப் போதிய சணலை இந்தியாவின் மேற்கு வங்கத் தொழிற்சாலைகள் பெறமுடியவில்லை. எனவே கிழக்கு வங்காளத்தை அதாவது பங்களாதேஷை இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டியிருந்தது. இது ஒரு காரணமாகும்.

அடுத்த காரணம் அப்போது பாகிஸ்தான் அமெரிக்க சார்பு நாடாகவும், இந்தியா சோவியத் யூனியன் சார்பான நாடாகவும் விளங்கின. இந்த நிலையில் கிழக்கு வங்காளம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றே கருதப்பட்டது. இந்த நிலையில் வங்காள தேசத்துக்கு விடுதலை வேண்டி முஜுபிர் ரஹ்மான் தலைமையில் ஜனநாயக வழியிலான போராட்டங்கள் இடம்பெற்று வந்தன. அதைச் சாட்டாக வைத்து இந்தியா பங்களாதேஷ் மீது படையெடுத்து அதை ஒரு சுதந்திர நாடாக்கியது. அதுமட்டுமின்றி பங்களாதேஷ் விடுதலை கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய விடுதலைப் போராளிகளையும் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தது.

தமிழீழத்தைப் பொறுத்த வரையில் இந்தியாவுக்கு அப்படியான தேவை எதுவுமே இருக்கவில்லை. அதுமட்டுமின்றி இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்குமிடையே மிக நெருக்கமான நல்லுறவு நிலவி வந்தது. அவ்வடிப்படையில் 1974ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூலம் கச்சதீவு மீதான இலங்கையின் உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேவேளையில் இரு நாடுகளினதும் கடல் எல்லைகளைத் தீர்மானிக்கும் ஒப்பந்தத்தின்படி கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமாக்கப்பட்டது.

இப்படியான நிலையில் இந்தியா இலங்கை மீது படையெடுத்து தமிழீழம் பெற்றுக் கொடுக்கும் என்பது எவ்வளவு போலியான தமிழ் மக்களை ஏமாற்றும் வகையிலான பிரசாரம் என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும். 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது கொழும்பு நகரை இந்தியப் படைகளே பாதுகாத்தன என்பதையும் மறந்து விடமுடியாது. அதேவேளையில் செல்வநாயகத்தை எதிர்த்துக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வி.பொன்னம்பலம் போட்டியிட்டார். அவர் இனப்பிரச்சினைத் தீர்வாக பிரதேச சுயாட்சி முறையைப் பெற்றுக் கொடுக்க முடியுமெனப் பிரசாரம் செய்தார். ஆனால் அதுவொரு பொய்ப் பிரசாரம் எனத் தமிழர் ஐக்கிய முன்னணியினர் தீவிரமான பிரசாரத்தை மேற்கொண்டனர்.

1954ம் ஆண்டு ஐ.தே.கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு சிங்களத்தை ஆட்சி மொழியாகக் கொண்டு வரப்போவதாகப் பிரசாரங்களைத் தீவிரமாக மேற்கொண்டிருந்த காலப்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்த மாநாடு வல்வெட்டித்துறையில் இடம்பெற்றபோது அதில் இனப்பிரச்சினைத் தீர்வாக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய பிரதேச சுயாட்சி என்ற கொள்கை முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

1956ல் தனிச் சிங்களச் சட்டம் முன்வைக்கப்பட்டபோது கம்யூனிஸ்ட் கட்சி அதற்கெதிராகப் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணிகளையும் பொதுக்கூட்டங்களையும் நடத்தியது. அதேவேளையில் கம்யூனிஸ்ட் கட்சி தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக நாடு பரந்த இயக்கத்தை நடத்த தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்க் காங்கிரஸுக்கும் அழைப்பு விடுத்தபோதும் அவை அதை நிராகரித்துவிட்டன.

அவ்வாறு இலங்கையில் இனப்பிரச்சினை தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீண்டதும் நேர்மையானதுமான ஒரு வரலாறு உண்டு. பல்கலைக்கழக மாணவர்களுக்கான தரப்படுத்தல் முறை நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டபோது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என்.ஏ. விக்கிரமசிங்கவும் அரசாங்கத்தில் பங்கு கொண்டிருந்தபோதும் அதை எதிர்த்து வாக்களித்தனர்.

அதுமட்டுமின்றி திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அமைச்சர் குமாரசூரியரிடம் காங்கேசன்துறை மக்கள் வி.பொன்னம்பலத்தை வெற்றி பெறவைப்பார்களாயின் பண்டா –செல்வா ஒப்பந்தத்துக்குக் குறையாத வகையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதாக வாக்களித்தார்.

அவ்வகையில் குமாரசூரியர், ரி.பி.ரத்நாயக்க, பீட்டர் கெனமன், மைத்திரிபால சேனநாயக்க முதலிய அமைச்சர்கள் வடக்கில் தங்கி நின்று பிரசாரங்களை மேற்கொண்டனர். ரி.பி. ரத்நாயக்க பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் என்பது மைத்திரிபால சேனநாயக்க யாழ். மத்திய கல்லூரியில் கல்வி கற்றதுடன் யாழ்ப்பாண வாலிபர் அமைப்பின் தலைவர் ஹண்டி பேரின்பநாயகத்தின் மகளைத் திருமணம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் தேர்தல் முடிவுகளின்படி செல்வநாயகம் 25,927 வாக்குகளையும் வி.பொன்னம்பலம் 9,487 வாக்குகளையும் பெற்று 11,000 திற்கு மேற்பட்ட அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றார். அதாவது தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவாக 72.5 வீத வாக்குகளும் எதிராக 26.9 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன.

இத்தேர்தல் முடிவானது ஏற்கனவே ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இளைஞர் குழுக்களுக்கு மேலும் உற்சாகத்தை வழங்கியது.

அந்த நிலைமையில் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்ட சிறுசிறு தாக்குதல்களை அடுத்து 27.07.1975 அன்று பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு வழிபாட்டுக்குச் சென்ற அல்பிரட் துரையப்பா சில இளைஞர்களால் சுட்டுக்கொல்லப்படுகிறார். அவர்கள் மேற்படி கொலையை நடத்திவிட்டு அவரின் காரை எடுத்துக்கொண்டு தப்பி விடுகின்றனர். அதைப் பிரபாகரன் குழுவினரே செய்ததாகப் பின்னாட்களில் உரிமை கோரியிருந்தனர். அவ்வாறே நல்லூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருளம்பலம் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் அவர் தப்பி விடுகிறார். ஆனால் ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டர் காயமடைகிறார். அதே காலப்பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காங்கேசந்துறைத் தொகுதி அமைப்பாளரான முருகையா அவர்களைத் தலைமையாகக் கொண்ட தெல்லிப்பளை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் கொள்ளையிடப்படுகிறது. இதுவே வடக்கில். இடம்பெற்ற முதல் அரசியல் கொள்ளை எனக் கருதப்படுகிறது. அதுபோன்று குரும்பசிட்டியிலுள்ள நகை அடைவு பிடிப்பவரின் வீடும் கொள்ளையிடப்படுகிறது.

ஏற்கனவே 1973ல் தமிழர் ஐக்கிய முன்னணியின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் இளைஞர் பேரவையில் கருத்து மேதல்கள் வெடிக்கின்றன. தமிழ்த் தலைமைகளின் கொள்கை உறுதியற்ற போக்கை எதிர்த்து ஒரு சாரார் வெளியேறி ரெலோ அமைப்பை உருவாக்குகின்றனர்.

1976 மே 6 ஆம் திகதி தமிழர் ஐக்கிய முன்னணியிலுள்ள சிலரின் முன்முயற்சியால் தமிழ் இளைஞர் பேரவையும் புதிய தமிழீழப் புலிகளும் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்குகின்றனர். தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளைத் தலைவர் உமா மகேஸ்வரனையும் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைத் தளபதியாகவும் கொண்டு அந்த அமைப்பு உருவாக்கப்படுகிறது. அந்த இயக்கம் அமிர்தலிங்கத்தின் அனுசரணையுடன் இடதுசாரிப் போக்குடைய ரெலோ அமைப்புக்குப் போட்டியாக அவரால் உருவாக்கப்பட்டாலும் அவ்வமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்குமளவுக்கு தீவிரமாக இயங்க ஆரம்பிக்கிறது.

ஏற்கனவே 1973ம் ஆண்டு செப்டெம்பர் 7, 8, 9ம் திகதிகளில் மல்லாகத்தில் இடம்பெற்ற 12 ஆவது தேசிய மாநாட்டில் சுயாட்சிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருந்தது.

அதேநிலையில் காங்கேசன்துறை இடைத் தேர்தலில் தனிநாட்டுக் கோரிக்கைக்கு மக்கள் வழங்கிய ஆணை இளைஞர்களைச் சுயாட்சியை நோக்கிய நடவடிக்கைகளுக்கு வேகமாக முன்தள்ளின. இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உருவாக்கம் ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின்பு அதாவது 1976 மே மாதம் 14ம் திகதி தமிழர் ஐக்கிய முன்னணியின் மாநாடு வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது.

அம்மாநாட்டில் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர்கள் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டு உணர்ச்சிகரமான உரைகளை ஆற்றினர். அங்கு இறுதியில் தமிழர் ஐக்கிய கூட்டணியின் பெயர் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயர் மாற்றப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அதாவது பெயரில் 'விடுதலை' என்ற சொல் அதன் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாகச் சேர்க்கப்பட்டது. அத்துடன் தனி நாட்டுக் கோரிக்கை சமாதான வழியிலோ அல்லது நேரடி நடவடிக்கைகள் மூலமோ பெற்றுக்கொள்வதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

1970ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி அடைந்த தோல்வியை 1977ல் பெரும் வெற்றியாக மாற்றவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழ் விவசாயிகள் மத்தியிலும் வேலையற்ற இளைஞர்கள் மத்தியிலும் பெற்று வந்த செல்வாக்கை முறியடிக்கவும் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து வீழ்த்தவுமான நோக்கங்களை அடிப்படையான நோக்கமாகக் கொண்டு தமிழ்த் தலைமைகளால் முன் வைக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் சிறிது காலத்தில் அவர்களையே பரிதாபமான முறையில் இக்கட்டான நிலைக்குத் தள்ளிவிட்டது.

தமிழ் அரசியல் தலைமை என்ற அரங்கிலிருந்து முற்றாகவே தூக்கி வீசப்பட்டு தலைமை இளைஞர்களின் கைகளுக்கு மாறும் நிலை ஏற்பட்டது மட்டுமின்றி இளைஞர்களாலேயே தண்டிக்கப்படும் நிலையும் ஏற்பட்டு விட்டது. தேர்தல் வெற்றியை இலக்காகக்கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியால் முன்வைக்கப்பட்ட தமிழீழக் கோரிக்கை இறுதியில் அவர்களையே அரசியலிலிருந்து ஓரங்கட்டும் அளவுக்கு வலிமை பெற ஆரம்பித்தது.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE