Friday 19th of April 2024 04:43:23 PM GMT

LANGUAGE - TAMIL
-
கனடா பழங்குடி சிறுவர் புதைகுழி விவகாரம்  தொடர்பில் பொதுமன்றத்தில்  காரசார விவாதம்!

கனடா பழங்குடி சிறுவர் புதைகுழி விவகாரம் தொடர்பில் பொதுமன்றத்தில் காரசார விவாதம்!


கனடா - பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள முன்னாள் குடியிருப்புப் பள்ளி ஒன்றின் புதைகுழியில் இருந்து 215 பழங்குடிசிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ள விடயத்தில் கனடா தவறிழைத்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கண்களை மூடிக்கொண்டு இது நடக்கவில்லை என கனடியர்களால் பாசாங்கு செய்ய முடியாது என்றும் ட்ரூடோ கூறினார்.

அந்த குழந்தைகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அவர்களின் சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி விடயத்தில் கனடா தோல்வியடைந்துள்ளதை அனைத்துக் கனேடியர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் எனவும் அவா் கூறினார்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள முன்னாள் குடியிருப்புப் பள்ளி ஒன்றின் புதைகுழியில் இருந்து 215 பழங்குடிசிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் நேற்று கனேடிய பொதுமன்றத்தில் இடம்பெற்ற விசேட விவாத்தில் பேசும்போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

கடந்த வாரம் குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை பெரும் துயரமாகும். ஆயிரக்கணக்கான பழங்குடி குழந்தைகள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு குடியிருப்பு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு பல குழந்தைகள் எந்தத் தடயமும் இன்றிக் காணாமல் போயினர்.

இன்று கம்லூப்ஸ் குடியிருப்பு பள்ளியில் பழங்குடி சிறுவர்களின் எச்சங்கள் மீட்கப்பட்ட போதிலும் நாடு முழுவதும் வேறு இடங்களில் இன்னும் கண்டுபிடிக்கப்படாதவர்கள் இருக்கலாம். எச்சங்களாக கண்டறியப்பட்டவர்கள் இன்று இருந்திருந்தால் தாத்தா, பாட்டிகளாக இருந்திருப்பார்கள். பெரும் அறிவு ஜீவிகளாக அவர்கள் மாறியிருக்கலாம். சமூகத் தலைவர்களாக இருந்திருக்கலாம் எனவும் பிரதமர் ட்ரூடோ கூறினார்.

ஆனால் துரதிஸ்டவசமாக அவா்கள் இன்று இல்லை. இது கனடாவின் தவறு எனவும் அவா் தெரிவித்தார்.

215 குழந்தைகளின் எச்சங்கள் கண்டறியப்பட்ட புதைகுழிகளைப் பாதுகாக்கவும், பிற முன்னாள் குடியிருப்புப் பள்ளிகளில் இவ்வாறான புதைகுழிகள் உள்ளனவா? என கண்டுபிடிப்பதற்கும் மத்திய அரசு ஆதரவளிக்கும் எனவும் ட்ரூடோ உறுதியளித்தார்.

இதேவேளை, இந்தக் குழந்தைகளின் புதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் இன்னும் அதிகமாகச் செயற்பட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் தலைவர் எரின் ஓ டூல் வலியுறுத்தினார்.

குடியிருப்புப் பள்ளிகளில் இறந்த குழந்தைகளின் ஆவணங்கள், அவா்களை நினைவுகூரல் மற்றும் அவர்களின் கல்லறைகளின் பாதுகாப்பு தொடர்பாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட ஆறு விடயங்கக்கும் உடனடி முன்னுரிமை அளிக்குமாறு அரசாங்கத்தை அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் கனடாவில் இருந்த குடியிருப்பு பள்ளி முறைமை மொழி மற்றும் கலாச்சாரத்தை அழிக்கவும், பழங்குடி சமூகங்களை ஒன்றிணைக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய காலனித்துவ கொள்கையின் ஒரு பகுதி என பிரதமர் ட்ரூடோ ஏற்றுக்கொண்டார்.

எனினும் பழங்குடி மக்களின் தனித்துவத்தை அவர்களின் அடையாளங்களை அழிக்கும் வகையில் குடியிருப்புப் பள்ளிகள் மேற்கொண்ட நடவடிக்கையை ஒரு இனப்படுகொலை எனக் கூறுவதை அவா் தவிர்த்தார்.

ஆனால் கனடாவில் குடியிருப்புப் பள்ளிகள் பழங்குடியின இனப்படுகொலையை முன்னெடுப்பதற்காக நிறுவப்பட்டவைதான் என விவாதத்தை கோரிய என்.டி.பி. தலைவர் ஜக்மீத் சிங் வலியுறுத்தினார்.

இந்தப் பள்ளிகளின் நடவடிக்கைகள் கலாசார இனப்படுகொலை கொள்கையை பிரதிபலிப்பதாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முடிவு செய்தது எனவும் அவா் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் கம்லூப்ஸ் பள்ளியில் 215 குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறித்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என பிளாக் கியூபெக்கோயிஸ் தலைவர் யவ்ஸ்-பிராங்கோயிஸ் பிளான்செட் கூறினார்.

இதேபோன்ற முன்னாள் குடியிருப்பு பள்ளிகளில் வேறு புதைகுழிகள் உள்ளனவா? என்பதைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு நிதியளிக்க வேண்டும் எனவும் அவா் கேட்டுக்கொண்டார்.

எனினும் நடந்தவை குறித்து முழுமையாக அறியாமல் இதனை ஒரு இனப்படுகொலை என வர்ணிக்க தான் விரும்பவில்லை எனவும் யவ்ஸ்-பிராங்கோயிஸ் பிளான்செட் தெரிவித்தார்.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE