Tuesday 23rd of April 2024 02:33:31 AM GMT

LANGUAGE - TAMIL
-
இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பின்றி அத்தியாவசிய சேவைகளைப் பேணுமாறு ஜனாதிபதி  பணிப்புரை!

இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பின்றி அத்தியாவசிய சேவைகளைப் பேணுமாறு ஜனாதிபதி பணிப்புரை!


இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசியச் சேவைகளைப் பேணுவதற்கு, ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்ய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

தற்போதைய நிலைமைகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்க முடியாதென்றும் சவாலை வெற்றிகொண்டு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்லும்போது, அனைவரதும் பங்களிப்பு அவசியமாகும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, கைத்தொழில் நிலையங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு ஆளுநர்களிடமும் மாவட்டச் செயலாளர்களிடமும் தெரிவித்தார்.

மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற மாதாந்த சந்திப்பின்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கைத்தொழில் நிலையம் அல்லது அபிவிருத்தித் திட்டச் சூழலில் நோய்த் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்படும் பட்சத்தில், அந்தத் தொழிற்சாலையை அல்லது திட்டத்தை ஒரேயடியாக மூடிவிடுவதற்குப் பதிலாக சுகாதாரப் பரிந்துரைகளைப் பின்பற்றி தொடர்ச்சியாகப் பேணுவதற்கான சூழல் குறித்துக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பயணக்கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்பட்டிருக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

உரிய சுகாதாரப் பரிந்துரைகளைப் பின்பற்றி, கைத்தொழில் மற்றும் அத்தியாவசிய சேவைகளை பேணுவதற்கு அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள நிலையில், பிரதேச மட்டத்தில் குறித்த நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது குறைபாடுகள் இடம்பெற்றிருப்பது தொடர்பில் தெரியவந்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பிரதேச மட்டத்தில் விவசாயிகளின் மரக்கறி மற்றும் பழவகைகளை மேலதிக விலைக்கு கொள்வனவு செய்து விநியோகிக்கும் பொறிமுறையைச் சரியாக நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, விவசாயப் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்காதிருப்பது, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரினதும் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டார்.

உள்நாட்டு நிதி மற்றும் வெளிநாட்டுக் கடன் உதவிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த இலக்குகளை உரிய முறையில் பூர்த்தி செய்ய வேண்டும். அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 1000 குளங்கள் நிகழ்ச்சித்திட்டம், ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி, 1000 பாடசாலைகள், வீடமைப்பு, பிரதேச வைத்தியசாலைகள், குடிநீர், மீள்பிறப்பாக்கச் சக்திவலு போன்ற திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுடன் நேரடித் தொடர்புகளை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி ஆளுநர்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுத்தார்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு நாட்டுக்குத் தேவையான முழுமையான தடுப்பூசி தொகை தற்போது கிடைத்து வருகின்றது. விஞ்ஞானபூர்வமாகவும் உரிய திட்டமிடல்களுக்கு அமையவும் குறித்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதன்போது மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில் சுகாதாரத்துறைக்குத் தேவையான மேலதிக ஒத்துழைப்பை, அரசியல்துறை சார்ந்தவர்களிடமும் ஆளுநர்கள் உள்ளிட்ட அனைத்து அரச அதிகாரிகளிடமிருந்தும் தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

விவசாயிகளுக்குத் தேவையான சேதனப் பசளைகளை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சேதனப் பசளையுடனான விவசாயத்தை ஊக்குவிப்பதில் உள்ள சவாலை வெற்றிகொள்வதற்குத் தேவையான உதவியை வழங்குமாறு ஆளுநர்களை அறிவுறுத்தினார். சேதனப் பசளை உற்பத்தியில் ஈடுபடும் சிறு வியாபாரிகளுக்கும் விவசாய சங்கங்களுக்கும் தேவையான உதவிகளை, அரச வங்கிகளின் ஊடாகச் சலுகை வட்டிக்கு கடன் வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்போதைய பெருந்தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்தி இயல்பு வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும் சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் எதிர்காலத் திட்டங்களை வெற்றிகரமானதாக முன்னெடுப்பதற்கும், ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்புகளுக்கு ஆளுநர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

துறைமுகங்கள், புகையிரதம், சுங்கம், எரிபொருள் விநியோகம், பொதுப்போக்குவரத்துச் சேவைகள், வங்கிகள், உள்ளூராட்சி நிறுவனங்களை அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை, தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பெரும் உதவியாக அமைந்ததாக மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்தனர்.

மாகாண ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் அரச அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE