Thursday 18th of April 2024 07:53:54 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 58 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 58 (வரலாற்றுத் தொடர்)


தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் திருப்பு முனையாக வட்டுக்கோட்டைத் தீர்மானம்! - நா.யோகேந்திரநாதன்!

'இலங்கைத் தமிழர்கள் தங்கள் தொன்மை வாய்ந்த மொழியாலும் மதங்களினாலும் வேறான கலாசாரப் பாரம்பரியம் ஆகியவற்றாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுத பலத்தினால் அவர்களை வெற்றி கொள்ளும்வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாங்கம் சுதந்திரமாக இயங்கி வந்த வரலாற்றின் காரணமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தம் சொந்தப் பிரதேசத்தில் தம்மைத் தாமே ஆண்டு கொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவரிடமிருந்து வேறுபட்ட தனித்தேசிய இனமாக உள்ளனரென இத்தால் பிரகடனப்படுத்தப்படுகிறது. மேலும் 1972ல் குடியரசு தமிழ் மக்களை புதிய காலனித்துவ எசமானர்களால் ஆளப்படும் ஒரு அடிமைத் தேசிய இனமாக ஆக்கியுள்ளதெனவும் தமிழ்த் தேசிய இனத்தின் ஆட்சிப் பிரதேசம் மொழி, பிரஜாவுரிமை, பொருளாதார வாழ்க்கை மற்றும் கல்வி ஆகியவற்றை இழக்கச் செய்வதற்கு சிங்களவர் தாம் முறைகேடாகப் பறித்துக்கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனர் எனவும் அதன் மூலம் தமிழ் மக்களின் தேசியத்துக்கான இயற் பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றன எனவும் இம்மாநாடு அறிவிக்கிறது. மேலும் தமிழீழம் என்ற தனியான அரசை அமைப்பதற்கான அதன் ஈடுபாட்டுக் கடப்பாடு தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே வாழ்கின்றவர்களும் வேலை செய்கின்றவர்களுமான பெரும்பான்மையான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளிப்படுத்திய ஒவ்வாமையைக் கருத்தில் கொள்கிற அதேவேளையில் ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய அடிப்படையில் சுதந்திரமான இறைமை பொருந்திய சமய சார்பற்ற சமதர்ம தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்த் தேசிய இனம் உள்ளிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாததாகி உள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கிறது'.

'மேலும் இம்மாநாடு சுதந்திரத்துக்கான இப்புனிதப் போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க என வரும்படியும் இறைமையுள்ள, தமிழீழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும்படியும் தமிழ் தேசிய இனத்துக்கும் குறிப்பாகத் தமிழ் இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கிறது'.

இவை 1976 மே மாதம் 14ம் திகதி வட்டுக்கோட்டை, பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி எனப் பெயர் மாற்றப்பட்ட தமிழர் ஐக்கிய முன்னணியின் முதலாவது தேசிய மகாநாட்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற பேரில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களால் முன்வைக்கப்பட்டு மு.சிவசிதம்பரம் அவர்களால் ஆமோதிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் சில பகுதிகளாகும்.

தனித் தமிழீழம் என்பது பாராளுமன்ற நடைமுறைகள் மூலமோ அல்லது பேச்சுவார்த்தை மூலமோ அடைந்துவிட முடியாத இலக்கு என்பதை உணர்ந்திருந்த போதிலும் நாடாளுமன்ற நடைமுறைகளில் நம்பிக்கை கொண்டிருந்த தமிழ் தலைமைகள் துணிச்சலாக ஏன் அதற்கு முன்வந்தன என்ற கேள்வி எழுகிறது.

தனிநாட்டுக் கோரிக்கை என்பது ஒரு நாளில் உருவான கருத்துருவாக்கம் அல்ல என்பதும் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சம உரிமையுள்ள மக்களாக வாழ்வதற்கு எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையிலேயே பிரிந்து போவதைவிட வேறு வழியில்லையென்ற முடிவுக்கு வர வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்ததாகவும் கூறப்பட்டது. அதில் உண்மையில்லையென்று கூறி விடமுடியாது. தமிழ் மக்கள் உரிமை கோரி அஹிம்சை வழியில் நடத்தப்பட்ட போராட்டங்களெல்லாமே வன்முறைகள் மூலமும் இரத்தக் களரி மூலமும் பதிலளிக்கப்பட்டன. இனக் கலவரங்கள் என்ற பேரில் நாடு முழுவதும் தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உயிர்கள் பலியெடுக்கப்பட்டதுடன், சொத்துக்கள் சூறையாடப்பட்டும் அழிக்கப்பட்டும் இரத்த ஆறு ஓட வைக்கப்பட்டது. இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் என்பனவும் கிழித்தெறியப்பட்டன.

ஒரே நாட்டுக்குள் உரிமையுள்ள மக்களாக வாழ முடியாது என்ற விடயம் மீண்டும் மீண்டும் உணர்த்தப்பட்ட நிலையிலேயே பிரிந்து போக வேண்டிய முடிவு எடுக்கப்பட்டது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அதை தமிழ் மக்களும் நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ளுமளவுக்குக் கடந்த கால அனுபவங்கள் பாடங்களைக் கற்பித்திருந்தன.

அதேவேளையில் தமிழரசுக் கட்சியினர் நலிவடைந்து போய்க் கொண்டிருந்த தமது அரசியல் செல்வாக்கை மீண்டும் நிமிர்த்தவே தீர்க்க தரிசனமற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன் வைத்தனர் என்ற குற்றச் சாட்டும் எழாமலில்லை.

பிரபல அரசியல் ஆய்வாளரான மெய்வரம்பன் தனது 'தந்தையும் மைந்தர்களும்' என்ற நூலில் 1965 தொட்டு 1970 வரை தமிழரசுக் கட்சி ஐ.தே.கட்சிக்கு ஆதரவளித்ததால் தமிழ் மக்களிடையே ஏற்பட்ட கசப்புணர்வையும் 1970ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தளபதி அமிர்தலிங்கம் உட்பட சில தமிழ்த் தலைவர்கள் தோல்வியடைந்தமையால் ஏற்பட்ட பின்னடைவையும் சரி செய்யவே இளைஞர்களைத் தம் பின்னால் அணி திரட்டும் வியூகமாகவே தனிநாட்டுக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது எனக் குற்றம் சாட்டியிருந்தார். அதிலும் கூட உண்மையில்லாமலில்லை.

1965 தொட்டு 1969 வரை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் பங்காளிகளாக விளங்கிய தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 1970ல் பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சிக்கெதிராக வடக்குக் கிழக்கு தமிழர்கள், மலையகத் தமிழர்கள் ஆகியோரை அணி திரட்டும் முகமாகவே 1972ல் மூன்று கட்சிகளும் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கினர்.

தமிழர் ஐக்கிய முன்னணியினர் 1972ம் ஆண்டின் தமிழர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக்கும் புதிய அரசியலமைப்பு, பல்கலைக்கழக அனுமதியில் இனவாரியான தரப்படுத்தல் போன்ற விடயங்களுக்குக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அது நியாயமான, கட்டாயம் செய்ய வேண்டிய கடமையாகும். ஆனால் வெளிநாட்டு உணவுப் பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடு விதித்ததன் மூலம் தமிழ் விவசாயிகளின் வாழ்க்கை நிலையை உயர்த்தியமை, வெளிநாட்டுப் பொருட்களுக்கு இறக்குமதித் தடை விதித்ததன் மூலம் வடக்குக் கிழக்கில் சுயதொழில்களை ஊக்குவித்தமை, வடக்குப் பல்கலைக்கழகம் அமைந்தமை போன்ற தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களையும் எதிர்த்தனர். அதன் காரணமாகவே ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு எதிராகத் தமிழ் மக்களை எழுச்சி பெறவைப்பதையே தமிழர் ஐக்கிய முன்னணியினர் முதன்மை இலக்காகக் கொண்டு செயற்பட்டனர் எனச் சில ஆய்வாளர்கள் குற்றம் சாட்டினர்.

தமிழர் ஐக்கிய முன்னணியிலுள்ள மூன்று கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நல்லுறவையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பகைமையையும் கொள்கையாகக் கொண்டு செயற்பட்டவர்கள் என்பதை மறுக்கமுடியாது.

எனவேதான் வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் ஐக்கிய முன்னணியை தமிழர் விடுதலைக் கூட்டணி எனப் பெயர் மாற்றம் செய்ததுடன் அதன் தலைவர்களாக எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், சௌ.தொண்டமான் ஆகியோரும் பொதுச் செயலாளராக அ.அமிர்தலிகமும் தெரிவு செய்யப்பட்டு, அதன் சின்னம் உதய சூரியனாகவும் அறிவிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கைப் பிரகடனமாகவே அங்கு தமிழீழக் கோரிக்கை பிரகடனப்படுத்தப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவராகத் தொண்டமான் தெரிவு செய்யப்பட்ட ஒரு வாரத்தில் வடக்குக் கிழக்கில் மக்களின் பிரச்சினைகளும் மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் வெவ்வேறானவை என்ற வகையில் அத் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாகவும் ஆனால் தொடர்ந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கிச் செயற்படவுள்ளதாகவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.செல்லச்சாமியால் உத்தியோகபூர்வமாக அமிர்தலிங்கம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

அதேவேளையில் ஐக்கிய முன்னணி அரசில் முக்கிய அமைச்சர்களாக இருந்த சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா, லெஸ்லி குணவர்த்தன ஆகியோரின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அதன் காரணமாக 31.05.1975ல் சமசமாஜக் கட்சியினரால் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. அதேபோன்று 19.11.1976ல் ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச் சாட்டில் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இவை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றபோதிலும் இரண்டும் நிறைவேற்றப்படவில்லை.

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு தமிழர் ஐக்கிய முன்னணியும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் பலத்த ஆதரவை வழங்கினர்.

இந்த இரு பிரேரணைகளில் ஏதாவது ஒன்று நிறைவேறினாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். அப்படி ஒரு நிலை ஏற்படுமானால் அது ஐக்கிய தேசியக் கட்சிக்கே சாதகமாக அமையும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியை விழுத்துவதாலோ, ஐக்கிய தேசியக் கட்சியை அரியாசனம் ஏற்றுவதாலோ 1975 பெப்ரவரியில் இடம்பெற்ற காங்கேசந்துறை இடைத் தேர்தலில் தமிழீழக் கோரிக்கைக்குத் தமிழ் மக்களிடம் ஆணை பெற்ற தமிழர் ஐக்கிய முன்னணிக்கோ எவ்வித நன்மையும் கிட்டப்போவதில்லை. ஆனாலும் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியை வீழ்த்துவதில் முனைப்புடன் செயற்பட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வழங்கப்போவதில்லை என்ற திட்டவட்டமான முடிவு எட்டப்பட்டதாலேயே தனி நாட்டுக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

எனவே இந்த இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன் வைக்கப்பட்டபோதும் தமிழர் ஐக்கிய முன்னணி எதிர்த்தோ, ஆதரித்தோ பங்கு கொண்டிருக்கக்கூடாது. ஆனால் அவர்கள் பங்கு கொண்டமை ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் ஆட்சியில் ஏற்றும் உள்நோக்கத்துடனேயே எனக் கருதப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியினர் கண்டி யாத்திரை நடத்தியதன் மூலமும் பண்டாரநாயக்கவின் இல்லத்தின் முன்பு பிக்குகளின் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஏற்பாடு செய்து பண்டா – செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட வேண்டிய நிலையை உருவாக்கியதுடன், தென்னிலங்கையில் தமிழ் எழுத்துக்களை அழிக்கும் இயக்கத்தை ஆரம்பித்து அதன் மூலம் இனக் கலவரத்தை உருவாக்கித் தமிழ் மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தினர். அப்படியிருந்தும் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 1965ல் ஐ.தே.கட்சி ஆட்சியில் பங்கு கொண்டு மாவட்ட சபை என்ற மாய மானைக் காட்டி தமிழ் மக்களை நான்கரை வருடங்கள் ஏமாற்றி விட்டு வெறுங்கையுடன் வெளியேறினர்.

1972ல் அதே கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கெதிராகத் தமிழர் ஐக்கிய முன்னணியாக உருவெடுத்தது. 1976ல் தமிழர் விடுதலைக் கூட்டணியாய் மாறி தனி நாட்டுக் கோரிக்கையைக் கையிலெடுத்தது.

தமிழ் மக்களிடம் தனிநாட்டுக் கோரிக்கை அவர்களால் பெரும் முழக்கமாக முன் வைக்கப்பட்டாலும் அவர்களின் அடிப்படை நோக்கமான ஐ.தே.கட்சியுடன் நல்லுறவைப் பேணுவதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியை விழுத்துவதும் என்பதில் மிகவும் உறுதியாகவே இருந்தனர்.

ஆனால் தமிழ் இளைஞர்கள் தமிழீழ இலட்சியத்தை மனப்பூர்வமாகவே உள்வாங்கிக் கொண்டனர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில், 'தமிழீழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும்படி' விடுக்கப்பட்ட அறைகூவலை அது விடுக்கப்படுவதற்குப் பல ஆண்டுகள் முன்பே அதை உள்வாங்கிக் குழுக்களாகத் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டனர். அதன் காரணமாக அறைகூவல் விடுத்த தமிழர் விடுதலைக் கூட்டணியினராலேயே இளைஞர்களுடன் சமாந்தரமாக முன் செல்லமுடியவில்லை.

அதன் காரணமாகத் தமிழ் அரசியலிலிருந்து அவர்கள் தூக்கி வீசப்பட்டதுடன் அரசியல் தமிழ் ஆயுத இயக்கங்களுக்குக் கைமாறியது. பிற்போக்கு ஏகாதிபத்திய சார்பு அரசியலதிகாரத்தை நிலை நிறுத்த அவர்களால் ஊக்குவிக்கப்பட்ட கோரிக்கைகள் அவர்களையே அரசியல் அரங்கிலிருந்து தூக்கி வீசி விட்டன.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE