Tuesday 23rd of April 2024 04:53:21 AM GMT

LANGUAGE - TAMIL
-
கப்பல் தீ தொடர்பில் ஆராயப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமியுங்கள் -  ரணில்!

கப்பல் தீ தொடர்பில் ஆராயப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமியுங்கள் - ரணில்!


'எக்ஸ் - பிரஸ் பேர்ல்' கப்பல் தீ பற்றியமை தொடர்பில் ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போதுள்ள சட்டத்தை ஏன் 'எக்ஸ் - பிரஸ் பேர்ல்' கப்பல் தீ விபத்து ஏற்பட்ட மே 20 முதல் மே 25 வரையான காலப்பகுதியில் அரசு செயல்படுத்தவில்லை எனவும் ரணில்அவர் கேள்வி எழுப்பினார்.

'எக்ஸ் - பிரஸ் பேர்ல்' கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்குள் பிரவேசித்தபோது தீப் பரவல் ஏற்பட்டிருந்தால், அது கொழும்புத் துறைமுகத்திலிருந்து ஷங்க்ரி-லா ஹோட்டல் வரையிலான அனைத்துக் கட்டடங்களையும் அழித்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

"மே 19 இரவு கொழும்புத் துறைமுகக் கடற்பரப்புக்குள் பிரவேசித்த கப்பலுக்கு மே 20ஆம் திகதி எமது குழுவினர் சென்றபோது கப்பலில் தீ விபத்து ஏற்பட்டமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து மே 25 இற்குள் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை சர்வதேச கடல்சார் அமைப்புக்கு அந்தப் பகுதி ஆபத்தில் இருக்கின்றது எனத் தெரிவித்தது. தீ விபத்து ஏற்படும் அபாயம் இருக்கின்றது எனவும் எச்சரிக்கை விடுத்தது.

இது ஆங்கிலத்தில் 'அடுக்கு 2' என்று குறிப்பிடப்படுகின்றது. இதன் பொருள் என்னவென்றால், இலங்கையால் தீப் பரவலைக் கட்டுப்படுத்துவது கடினம். அதற்கு வெளி உதவி தேவைப்படலாம் என்பதாகும்.

சர்வதேச கடல்சார் அமைப்பு (ஐ.எம்.ஓ.) உதவி தேவை என்று அறிவிக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசோ அல்லது கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையோ சர்வதேச உதவியைக் கோரவில்லை. மே 20 முதல் மே 25 வரை தற்போதுள்ள சட்டத்தை அரசு ஏன் செயல்படுத்தவில்லை? இது மிக முக்கியமான கேள்வியாகும்.

இத்தகைய சூழ்நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தேசிய கவுன்சில் கூட்டப்படலாம். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் 5 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட 20 அமைச்சர்கள் பங்கேற்று இந்தத் தேசிய கவுன்சில் உருவாக்கப்படலாம்.

இவ்வாறு நியமிக்கப்பட்ட தேசிய கவுன்சில் கடலோரப் பாதுகாப்புப் படை சார்பாக சந்தித்து முடிவுகளை எடுத்திருக்கலாம். ஆனால், யாரும் அத்தகைய முடிவை எடுக்கவில்லை.

ஒரு தேசிய பேரழிவு ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தால், தீயை அணைக்க வெளிநாட்டு உதவியைப் பெற்றிருக்கலாம். இந்தியாவின் உதவியும் தாமதமாகவே பெற்றுக்கொள்ளப்பட்டது.

இரசாயனக் கப்பலின் தீ பற்றி ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மிகப் பெரிய அறிவு இருக்கின்றது. சர்வதேச கடல் அமைப்புக்கு ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை? தீயை அணைக்க சர்வதேச உதவியை ஏன் கோரவில்லை? ஏன் தீப் பரவலைக் கப்பலை அழிக்கும் நிலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது? போன்ற கேள்விகள் எழுகின்றன.

இதனால் நமது எதிர்கால பொருளாதாரத்துக்கு ஏற்படப் போகும் சேதம் மற்றும் கடல் சார் சுற்றுச்சூழலுக்கு ஏற்படப் போகும் சேதம் குறித்து அரசும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையமும் சிந்தித்திருக்க வேண்டும்.

கொழும்பில் உள்ள பவளப்பாறை காரணமாகவே சுனாமிப் பேரழிவின்போது கொழும்பு நகரம் காப்பாற்றப்பட்டது. இந்த இரசாயனங்கள் கடலில் சேர்வதால் கொழும்பைச் சுற்றியுள்ள பவளப்பாறைகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது.

கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ஆராய உடனடியாகப் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும்

எனவே, இந்த வாரம் பாராளுமன்றம் கூடும்போது உறுப்பினர்களை நியமித்து, ஒரு தெரிவுக் குழுவை நியமிக்க முடியும்.

அதன்படி, கப்பல் தீ விபத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதம் குறித்த பூர்வாங்க அறிக்கையை பாராளுமன்றத் தெரிவுக்குழுவால் ஜூலை முதல் வாரத்தில் முன்வைக்க முடியும்.

கப்பல் எவ்வாறு தீப்பிடித்தது, ஏன் அதை அணைக்க முடியவில்லை என்பதை அறியவும் கப்பல் தொடர்பாக அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து அறியவும் மக்களுக்கு உரிமை உண்டு.

எனவே, இதனை விரைவாகச் செயற்படுத்துமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்" - என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE