Thursday 18th of April 2024 06:55:33 PM GMT

LANGUAGE - TAMIL
-
சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையின் விளைவே அமெரிக்க காங்கிரஸ் பிரேரணை - சம்பந்தன்!

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையின் விளைவே அமெரிக்க காங்கிரஸ் பிரேரணை - சம்பந்தன்!


"ராஜபக்ச அரசு உள்நாட்டிலும், சர்வதேசத்துக்கும் இதுகால வரையிலும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்றாகவே அமெரிக்க காங்கிரஸால் இலங்கை குறித்த பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ராஜபக்ச அரசு உள்நாட்டிலும், சர்வதேசத்துக்கும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக போரின் பின்னரான சூழலில் இனப்பிரச்சினை தீர்வு உட்பட இன நல்லிக்கணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குதல் என்று பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் நாட்டில் நிரந்தமான சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதற்கான விருப்பத்தை வெளியிட்டிருந்தார். ஆகவே, ராஜபக்ச சகோதரர்கள் இருவருமே உள்நாட்டிலும், சர்வதேசத்துக்கும் வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள்.

ஆனால், அவர்கள் அதனை நடைமுறையில் முன்னெடுக்கவில்லை. குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கரிசனைகளை கொண்டிருக்கவில்லை. அதேநேரம், ஜனநாயகத்துக்கு முரணான கருமங்களை அவர்கள் முன்னெடுத்திருக்கின்றார்கள். இதனால் நாட்டின் ஸ்திரமற்ற நிலைமை நீடிக்கின்றது.

இவ்வாறான நிலையில்தான் அமெரிக்கா காங்கிஸால் இலங்கை பற்றிய தீர்மானம் பிரேரணையாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது அடுத்தகட்டமாக வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும். அவ்வாறான நிலைமைகள் ஏற்படுகின்றபோது இலங்கை அரசு பொறுப்புக்கூறலிருந்து விலகி நிற்க முடியாத நிலைமைகள் தீவிரமடையும்.

அரசு இதுகாலவரையிலும் முன்னெடுத்த செயற்பாடுகளைக் கைவிட்டு உடனடியாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு இல்லையேல் இதுபோன்ற பல விடயங்களுக்கு சர்வதேச ரீதியாக முகங்கொடுக்க நேரிடும். அடுத்துவரும் காலங்களில் இவ்விதமான பல காரியங்கள் நிகழலாம்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இரா சம்பந்தன், இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE