Wednesday 24th of April 2024 10:39:39 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையின் இரண்டு முகங்கள்! - நா.யோகேந்திரநாதன்!

இலங்கையின் இரண்டு முகங்கள்! - நா.யோகேந்திரநாதன்!


ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாகவும், கொரோனா தொற்றுக் காரணமாகவும் பெரும் பாதிப்புக்குள்ளாகிய இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு அமெரிக்கா வெளியிட்டுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கான பயணத் தடை அறிவித்தல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அமெரிக்கப் பிரஜைகளுக்கான வெளிநாட்டுப் பயண எச்சரிக்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவித்தலில் பட்டியலிடப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒரு நாடாக உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பற்றிய பாதுகாப்பு எச்சரிக்கையில் பிரதான விடயமாக இலங்கையில் கொரோனா அபாயம் பற்றிக் குறிப்பிட்டுள்ள வேளையில் நான்காவது விடயமாக பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றிச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வறிவித்தல் வெளியானதுமே இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அமெரிக்கத் தூதுவரைத் தனது செயலகத்துக்கு அழைத்து அவரிடம் பயங்கரவாத அச்சுறுத்தல் இலங்கையில் இல்லை என விளக்கமளித்ததுடன் அமெரிக்காவின் கருத்துக்கு தனது ஆட்சேபனையையும் தெரிவித்திருந்தார்.

அதன்பின்பு அமெரிக்கத் தூதுவர் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக தங்கள் முன்னைய கருத்தில் எவ்வித மாற்றமுமில்லையென அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இலங்கை வெளிவிவகார அமைச்சரின் ஆட்சேபனையைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அமெரிக்கத் தூதரகம் தனது அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை எப்போதுமே சர்வதேசத்துக்கு ஒரு முகமும் உள்ளூரில் வேறொரு முகமுமாக இரட்டை முகங்களைக் காட்டிவருவது என்பது அப்படியொன்றும் புதிய விடயமல்ல. இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு இங்கு சமாதானமும் நல்லிணக்கமும் நிலவுவதாக சர்வதேச அரங்கில் கூறிக்கொண்டு பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பேரில் பலர் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதும் இடம்பெற்று வருகின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 31/1 தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக இலங்கை ஒப்புக் கொண்டபோதிலும் அது இன்றுவரை நீக்கப்படாதது மட்டுமின்றி அச்சட்டத்தின் கீழ் கைதுகளும் தடுத்து வைக்கப்படுவதும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு உள்நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகக் காட்டிக் கொண்டு கைதுகளையும் பழிவாங்கல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அரசாங்கம் தங்கள் அதிகாரத்தையும் அநீதிகளையும் நிலை நாட்டியவாறே சர்வதேசத்தின் முன்னால் இங்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லையெனச் சத்தியம் பண்ணினால் அதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியுமா?

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன், அவர்கள் ஏப்ரல் குண்டுத் தாக்குதல் ஆயுததாரிகளுடன் தொடர்பைப் பேணி வந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கு கொள்ள அனுமதி கோரியபோது பொதுசனப் பாதுகாப்பு அமைச்சர் அவர் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார். அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் அவர் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்படுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குச் சாதகமாக அமைந்து விடுமெனவும் அமைச்சர் வாதிட்டார். எனினும் நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய சிறப்புரிமை காரணமாக ரிசாட் பதியுதீனால் கூட்டத் தொடரில் பங்கு கொள்ள முடிந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் அங்கு உரையாற்றும்போது தான் பல மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டபோதும் உரிய விசாரணை எதுவும் நடத்தப்படவில்லையெனக் குறிப்பிட்டதுடன் தான் பயங்கரவாதக் குற்றங்களுடன் தொடர்புபட்டதாக நிரூபிக்கப்பட்டால் தான் தூக்குத் தண்டனையைக் கூட ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் சவால் விட்டார்.

இங்கு இரண்டு விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படவேண்டும். ஒன்று, அவர் தாக்குதல் தாரிகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இரண்டு வருடங்களின் பின்பு கைது செய்யப்பட்டமை மூலம் இன்னும் பயங்கரவாத அச்சுறுத்தல் உண்டு என்ற காரணத்தை வெளிப்படுத்துகிறது. அடுத்தது அவர் நாடாளுமன்றத்துக்கு வருவதை அமைச்சர் எதிர்த்தமை ரிசாட் அங்கு வந்து உரையாற்றுவது ஏனைய பயங்கரவாதிகளை உற்சாகப்படுத்தி விடும் என்பதனாலாகும்.

இந்நடவடிக்கை மூலம் பொதுசனப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இங்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உண்டு என்பதை மூலமாக வைத்தே தன் ஆட்சேபனையை முன் வைத்துள்ளார். அவர் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் என்ற வகையில் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்புக்கமைய அரசாங்கமும் நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் உண்டு என்பதை ஏற்றுக்கொண்டதாகவே அர்த்தமாகும்.

அது மட்டுமின்றி பிரதான குண்டுதாரியான சஹ்ரானுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டிலும், பயங்கரவாத வகுப்புகளை நடத்தினர் என்ற பேரிலும் இன்னும் பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். முற்றாகவே முஸ்லிம் அடிப்படைவாதம், பயங்கரவாத அச்சுறுத்தல் களையப்பட்டு விட்டால் ஏன் இந்தக் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகும். ஏற்கனவே விடுதலைப் புலிகளின் பயங்கரவாத அச்சுறுத்தல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டு விட்டபோதிலும் ஒட்டுசுட்டானில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்யும் நோக்குடன் முச்சக்கர வண்டியில் சென்றார்களென நால்வர் கைது செய்யப்பட்டதுடன் மட்டக்களப்பு வவுணதீவில் இரு பொலிஸ்காரர்களைக் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் ஒட்டுசுட்டானில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் பல வருடங்களாக இராணுவத்தில் மாதச் சம்பளம் பெறும் ஒரு உளவாளி என்பதை விசாரணையிலிருந்து தெரிய வந்தது. இவ்வாறே வவுணத்தீவு காவல்துறையினரின் கொலை சஹ்ரானின் உதவியாளராலேயே மேற்கொள்ளப்பட்டதெனவும் அதற்கான தகவல்களை இரு இராணுவ அதிகாரிகளே வழங்கினரெனவும் ஏப்ரல் தாக்குதல் விசாரணைகளின்போது தெரிய வந்தது.

எனவே பயங்கரவாத அச்சுறுத்தல் என்பது சில தரப்பினரால் சிலரைக் கைது செய்யவும் பழிவாங்கவும் பயங்கரவாதத் தடுப்பின் பேரால் தமது ஒடுக்குமுறைகளைத் தொடரவும் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்படுவது என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

இவ்வாறான நடவடிக்கைகளை தற்சமயம் அமைச்சர் சரத் வீரசேகர தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்கிறார் என்ற தோற்றப்பாடே வெளிப்படுகிறது.

இந்த நிலையிலேயே அமெரிக்கா இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவுவதாகத் தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று இலங்கை அரசால் தமது நோக்கங்களை நிறைவேற்ற உருவாக்கப்படும் பயங்கரவாத அச்சுறுத்தல் மாயை அவர்களைச் சர்வதேச மட்டத்திலேயே சிக்கலுக்கு உட்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையை வெளிவிவகார அமைச்சர் மட்டுமின்றி பாதுகாப்புச் செயலர் கமால் குணரட்ணவும் கடுமையாக மறுத்துள்ளார்.

இராணுத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, பாதுகாப்புச் செயலர் கமால் குணரட்ண ஆகிய முக்கிய அதிகாரத்தில் உள்ளவர்கள் சர்வதேச அளவில் போர்க் குற்றவாளிகளாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இலங்கை தரப்பின் ஆட்சேபனைக்கு அமெரிக்கா மதிப்பளிக்குமென எதிர்பார்க்கமுடியாது.

இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் உண்டோ இல்லையோ ஆனால் மக்கள் மத்தியில் குறிப்பாகச் சிறுபான்மை மக்கள் மேல் ஒரு பயங்கரவாத அச்சுறுத்தல் மேகம் கவிந்திருப்பதை மறுத்துவிட முடியாது.

அருவி இணையத்திற்காக : நா.யோகேந்திரநாதன்.

08.06.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE