Thursday 18th of April 2024 11:07:57 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஓய்வுபெற்ற தாதியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள பிரதமர் தீர்மானம்!

ஓய்வுபெற்ற தாதியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள பிரதமர் தீர்மானம்!


ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.

தாதியர் சேவையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர், மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் முறுத்தெட்டுவே ஆனந்த தேரரின் வேண்டுகோளுக்கமையஅவரி மாளிகையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே சுகாதார அமைச்சருக்கு பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.

நாடளாவிய ரீதியில் சுமார் 34,000 தாதியர்கள் இதுவரை தாதியர் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தாதியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் கருத்து தெரிவித்தார்.

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவிற்கு பயிற்சி பெறாத தாதியர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றமை குறித்து தேரர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, தற்போது ஓராண்டிற்கு பயிற்சிக்காக 2000 எனும் குறைந்த எண்ணிக்கையிலான தாதியர்கள் மாத்திரம் இணைத்துக் கொள்ளப்படுவதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

தற்போது அப்பிரிவுகளில் சேவையாற்றும் பயிற்சி பெறாத தாதியர்களை குறித்த பிரிவுகளில் சேவையாற்றும் காலத்தை பயிற்சி காலத்துடன் சேர்க்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

மேலும் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச்.முனசிங்க , இதுவரை 840 தாதியர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேவையாற்றுவதற்கான குறுகிய கால பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சுமார் 1000 பேருக்கு துரித பயிற்சி வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சருக்கு இதன்போது தெரிவித்த பிரதமர், தாதியர்களின் சேவை காலத்தை நீடிப்பது குறித்த செயற்பாட்டின் தற்போதைய நிலை குறித்தும் வினவினார்.

தாதியர்களின் சேவை காலத்தை 63 ஆண்டுகள் வரை நீடிப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஏற்கனவே அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச்.முனசிங்க இதன்போது வலியுறுத்தினார்.

கோவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் சுகாதார சேவையில் ஈடுபடும் அனைவரும் இதுவரை சிறப்பாக சேவையாற்றி வருவதாக தெரிவித்த பிரதமர், அவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் வினவினார்.

சுகாதார துறையில் அனைவருக்கும் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது குடும்ப உறுப்பினருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் தாதியர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுக்க முறையான செயற்பாடொன்றை வகுக்குமாறு இதன்போது பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தாதியர் பட்டத்தை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர், சுகாதார அமைச்சருக்கு தெரிவித்தார்.

தற்போது தாதியர் பட்டத்தை வழங்குவதற்கான பணி சட்ட வரைவுகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட வரைபை விரைவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது இந்த கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது.

பிரதமர், ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் தாதியர்களுக்கான சீருடை கொடுப்பனவு அதிகரிக்கப்பட்ட பின்னர் இதுவரை அக்கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை என தெரிவித்த வணக்கத்திற்குரிய முறுத்தெட்டுவே தேரர், அக்கொடுப்பனவை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து பொதுத் தீர்மானம் மேற்கொண்டு எதிர்வரும் வரவு-செலவு திட்டத்தில் அதனை நிறைவேற்ற முடியும் என பிரதமர் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னஆராச்சி, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ச, சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் எஸ்.எச்.முனசிங்க, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைமை செயலாளர் எச்.ஏ.டீ.கல்யாணி, உப தலைவர் ஆர்.கே.படுவிட, உப செயலாளர் புஷ்பா ரம்யானி டி சொய்சா, கந்தானை தாதியர் கல்லூரியின் அதிபர் டப்ளிவ்.ஏ.கீர்த்தி உள்ளிட்ட பலர் ல் கலந்து கொண்டனர்.


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE