Saturday 20th of April 2024 03:01:41 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கை மீது மீள அழுத்தம் கொடுக்கத் தொடங்கியதா அமெரிக்கா? - பேராசிரியர்  கே.ரீ.கணேசலிங்கம்!

இலங்கை மீது மீள அழுத்தம் கொடுக்கத் தொடங்கியதா அமெரிக்கா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!


அமெரிக்க இலங்கை உறவில் மீண்டுமொரு நெருக்கடி ஆரம்பித்திருக்கின்றதென ஊடகங்களின் தகவல்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் சபையில் இலங்கை தமிழர் தொடர்பாக முன்வைக்கப்பட்ட தீர்மானமே அத்தகைய பதட்டத்துக்கும் குழப்பத்துக்கும் காரணமாக தெரிகிறது. இலங்கையின் அமெரிக்காவுக்கான தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க முன்னெடுக்கும் நகர்வுகள் இலங்கை வெளிவிவகார அமைச்சு பதட்டத்தை எதிர்நோக்குகின்றது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இத்தகைய குழப்பம் ஏன் ஏற்பட்டுள்ளது என்பதை தேடுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலில் அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் சாரம்சத்தை நோக்குவோம். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் 2009 மே 18 போர் முடிவடைந்து 12 வருடங்கள் பூர்த்தியாகி உள்ள நிலையில் இறந்த உறவுகளை கௌரவித்தலும் மரியாதை செலுத்தலும் மற்றும் நீடித்த இலங்கை மக்களின் செழிப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கான நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான நீதி பொறுப்புக்கூறல் நல்லிணக்கம், புனரமைப்பு, இழப்பீடு, மறுசீரமைப்புக்கான ஆதவை வெளிப்படுத்தல் என்பதை வலியுறுத்திய விடயமாக அமைந்துள்ளது. அதில் மிகப்பிரதானமாக விடுதலைப்புலிகளினை தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக போராடிய ஓர் அமைப்பாக குறிப்பிட்டதோடு, வடக்கு - கிழக்கு தமிழரின் தாயகம் என்பதை அங்கீகரிக்கும் விதத்தில் முன்மொழிகளின் உளளடக்கம் அமைந்திருந்தது. இத்தகைய பிரேரணை அமெரிக்க வெளியுறவுக்குழுவின் அனுமதியை பெறும்பட்சத்தில் அமெரிக்க செனட்சபை ஏற்றுக்கொள்ளப்படும். அத்தகைய அங்கீகாரம் சாத்தியப்படுமாயின் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பில் இலங்கை தமிழ் விடயம் பிராந்திய ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் பிரதான இடம்பெறும் அம்சமாக விளங்கும்.

இவ்வாறு இக்காலப்பகுதியில் அமெரிக்கா நடந்து கொண்டதுக்கு காரணங்களை புரிதல் அவசியமாகும். அதேநேரத்தில் கோவிட் தடுப்பூசி மற்றும் அதற்கான மருத்துவ உதவிகளை வழங்கும் விதத்தில் ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கான மேற்கொண்டுவரும் அமெரிக்கா இலங்கையை அதில் இணைத்து கொண்டிருப்பதோடு இலங்கைக்கான மருத்தவ அவசர உதவிகளோடு விமானமொன்று இலங்கையை வந்தடைந்தது. USAID நிறுவனத்தினூடாக அத்தகைய உதவியை வழங்குவதாகவும் அமெரிக்க அறிவித்தது. அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனமாகிய USAID இலங்கைக்கு அனுப்பியுள்ள அவசர உதவியுடன் 880 000 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் 1200 துடிப்பு ஒப்சி மீற்றர்களும் மற்றும் 200 செயற்கை சுவாசக்கருவிகளும், மற்றும் படுக்கைகளும் உள்ளடங்களாக பல மில்லியனுக்கான பெறுமானமுடைய உதவிகளை வழங்கியுள்ளது.

மேற்குறித்த இரு விடயங்களும் ஒன்றுக்கொன்று முரணானதாக அமைந்திருந்தாலும் USAID இனுடைய உதவிகள் தென்னாசிய நாடுகளையே அதிகம் இலக்கு வைத்ததாக அவதானிக்க முடிகிறது. USAID உதவியும் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஸ் என்பனவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதுடன் இவை அனைத்தும் சீனா சார்பு நாடுகள் என்ற அடிப்படையிலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி உலகளாவியரீதியில் தடுப்பூசி இராஜதந்திரத்தை (Vaccine Diplomacy) உருவாக்கியது என்றும் கருதுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கு வலுவான இன்னொரு காரணி ஜூன்-06, 2021 அமெரிக்க உதவிகள் இலங்கைக்கு வந்த அன்றய தினத்தில் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசியும் இலங்கையை வந்தடைந்துள்ளன. இத்தகைய இராஜதந்திர நகர்வை முதலில் தொடக்கிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. எதுவாயினும் இலங்கை விடயத்தில் அமெரிக்காவின் நகர்வு தீவிரம் பெற ஆரம்பித்துள்ளது. இதற்கான காரணங்களை விளங்கி கொள்ளுதல் அவசியமாகிறது.

முதலாவது, வெளிப்படையாக பார்த்தால் சீன - இலங்கை உறவின் மீதான பதில் நடவடிக்கையாகவே தெரிகிறது. குறிப்பாக கொழுப்பு நகர சட்டமூலம் அதிக ஆபத்தை பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் அமெரிக்க , இந்திய நலக்களுக்கு பாதிப்பை ஏற்படத்தக் கூடியதென்பது மதிப்பீடாக உள்ளது. சீனாவின் இலங்கை மீதான நிரந்தரமான செல்வாக்கிகை தடுக்கும் விதத்தில் இத்தகைய நகர்வுகள் முன்னெடுக்கப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.தற்போதைய அரசாங்கத்தின் வெளியுறவு சீனா சார்பானதாக அமைந்திருப்பதனால் அமெரிக்கா இந்தியா என்பன அதிருப்தி அடைந்துள்ளன.

இரண்டாவது, இலங்கை - சீன உறவு சீனாவின் பொருளாதார செழிப்பையும் அவ்வாறே ஒரே சுற்று ஒரே பாதை என்ற சீனாவின் வியூகத்தையும் வெற்றிகரமாக நகர்த்த உதவும் என்பது அவதானிக்க் கூடியதாக உள்ளது. இந்து சமுத்திரத்தின் மையத்தில் விளங்கும் இலங்கையுடனான உறவை, சீனாவின் வர்த்தக மார்க்கங்களுக்கு பெரும் உந்துதலான அமையும் என்றும் கருதப்படுகிறது. கொழும்பை மையப்படுத்தியே பிரித்தானியரும் பின்னர் அமெரிக்காவும் இந்து சமுத்திர பிராந்தியம் மீது பொருளாதார அரசியல் மற்றும் இராணுவ நலன்களை அடைந்திருந்தன. இலங்கையை இழத்தல் என்பது இந்துசமுத்திர இழப்பதற்கு சமனானது என்ற வாதம் பிரித்தானிய காலத்திலேயே உரையாடப்பட்டு வந்துள்ளது. தொழில்நுட்பங்கள் பாரிய அளவில் வளர்ந்த பின்பும் இலங்கையின் முக்கியத்தவம் அற்றுப்போகவில்லை. எனவே தான் இலங்கை - சீனா உறவு அமெரிக்க மற்றும் மேற்கு நலன்களை பாதகமான சூழலுக்கு கொண்டுசெல்லும் என அமெரிக்கர்கள் அச்சமடைகிறார்கள்.

மூன்றாவது, இலங்கை - சீனா உறவென்பது இந்தோ - பசுபிக் மூலோபாய திட்டமிடல்களை அதற்கான நகர்வுகளை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. காரணம் இந்தோ - பசுபிக் உபாயத்தின் முக்கிய நாடுகளில் ஒள்றான இந்தியா, இலங்கை - சீனா உறவினால் இரு கடலுக்குமான இணைப்பினை சாத்தியமற்றதாக்குவதோடு அத்தகைய உபாயம் முடிவுக்கு வரும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. அதாவது இந்தோ - பசுபிக் கடலை இணைக்கும் பிரதான நாடுகள் அனைத்தும் சீனாவின் ஒரே சுற்று ஒரே பாதைக்குள் இணங்கி செயற்படுகின்றது. அதனால் கொழும்பு துறைமுகம் அமெரிக்கா செல்வாக்கை இழக்கும் நிலை ஏற்படுமாயின் அதற்கு பதிலீடான நகர்வுகளை அமெரிக்கா முன்னெடுக்கும் என்பதையும் காங்கிரஸில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் உணர்த்துகின்றது.

நான்காவது, அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்ட உள்ளடக்கங்கள் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களாலோ அல்லது தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு பதிலீடாகவோ அமைந்திருக்கின்றது என்பதற்கு அப்பால் அமெரிக்க நலன்களை அடைவதற்கான உத்திகளாக அதன் உள்ளடக்கங்கள் காணப்படுகின்றது. விடுதலைப்புலிகளை தடைசெய்துள்ள அமெரிக்க மற்றும் அத்தகைய தடையை மீள மீள தொடரும் இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணும் அமெரிக்கா இத்தகைய தீர்மானத்தை முன்வைத்தள்ளது என்பது அதன் அரசியல் பொருளாதார இராணுவ நலனுக்கானதேயாகும். அத்தகைய நலனை அமெரிக்க எட்டவதற்கு மேற்குறித்த இரு விடயங்களை வெறும் அரசியல் சுலோகமாக அன்றி நிரந்தரமான கோட்பாடாக ஆக்குவதற்கும் அமெரிக்கா தயாராகவே இருக்கும். இங்கு முக்கியம் அமெரிக்க நலன்களேயாகும்.

எனவே அமெரிக்காவின் நகர்வு அமெரிக்க நலனுக்கு உட்பட்டதென்பது உலகம் முழுவதும் கண்டுகொள்ளக்கூடிய ஒர் அம்சமாகும். எனினும் அத்தகைய நலன்களுக்குள் தமிழர்களுடைய அபிலாசைகளும் நலன்களும் பூர்த்திசெய்யக்கூடிய ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. அத்தகைய வாய்ப்பு சரியாக அடையாளம் காண்பதுவும் அதனை நோக்கி நகருவதும் இன்றைய தமிழரசியல் பரப்பில் அவசியமான பொறிமுறையாகும். மீளவும் அறிக்கைகளையும், வாதங்களையும் முன்வைப்பதை விடுத்து அமெரிக்காவின் தளர்ச்சியான போக்கினை அடையாளம் கண்டு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றினை கண்டறிதல் அதற்கன நகர்வினை மேற்கொள்ளல் அவசியமானதொன்றாக உள்ளது.

பொதுஜன பெரமுனாவின் ஸ்தாபகரும், முன்னாள் பொருளாதார அமைச்சரும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளருமாகிய பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருக்கும் போது இத்தகைய நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதென்பதும் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும். அவருடைய மருத்துவ தேவை மாத்திரமின்றி இலங்கையர்களின் மருத்துவ தேவையும், இலங்கை - சீனா உறவின் பிரதிபலிப்பும் காங்கிரஸ் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதென்பது கவனிக்க வேண்டிய விடயமகும். இதேநேரம் இலங்கை, அமெரிக்காவிற்கான தூதரினூடாக அமெரிக்காவிற்கு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையில் இரு விடயங்கள் முதன்மை பெறுகிறது. ஒன்று, அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தினை நிறைவேற்றக்கூடாதென விண்ணப்பித்துள்ளது. இரண்டு, இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீரமானத்தை அடுத்து கடந்த 2021ஜனவரி மாதத்திலிருந்து அதற்கான செயலணிகளை உருவாக்கி செயற்பட்டுவருவதாகவும் அத்தகைய பணிகள் கோவிட் தொற்றினால் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவத்துள்ளதுடன், பெரியளவில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சரும், அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவரும் இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

எனவே இதனை அவதானிக்கும் போது, இலங்கை விடயத்தில் அமெரிக்கா மீளவும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளதாகவே தெரிகிறது. இதன்மூலம் தமிழ் மக்களின் நலன்களை அமெரிக்கா தனக்கு ஏற்ற வகையில் கையாள முயன்றிருப்பதையும் அதனை எதிர்கொள்வதற்கு தமிழ் தலைமைகள் தயாராக வேண்டுமெனவும் தற்போதைய அரசியலாக உள்ளது.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE