Saturday 20th of April 2024 02:20:27 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 59 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 59 (வரலாற்றுத் தொடர்)


வட்டுக்கோட்டைத் தீர்மானமும் தமிழ்த் தலைவர்கள் கைதும்! - நா.யோகேந்திரநாதன்!

'இனவெறியைத் தூண்டியும் இனப்படுகொலையை நடத்துவதன் மூலமுமாகவும் ஆட்சியில் கூதல் காய்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசு நேர்மையான போராளிகளான எங்களைப் பார்த்து பயங்கரவாதிகள் என்பதைவிட வேறு வேடிக்கை என்ன இருக்கமுடியும்? பாராளுமன்ற ஜனநாயகத்தின் அரை நூற்றாண்டைக் கொண்டாடிய அதேவேளையில் இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தலைவர்களை, அதே பாராளுமன்ற உறுப்பினர்களை அர்த்த சாமத்தில் இராணுவ வேட்டையாடிப் பிடிப்பதும் அவர்களை வீட்டுடன் வைத்து தீயிட்டுக் கொழுத்த முயன்றமையும் உங்கள் ஜனநாயக பாரம்பரியத்தில் எத்தனையாவது அத்தியாயத்தில் சேர்த்துக்கொள்ளப்போகிறீர்கள்?'

இது தமிழீழ விடுதலை இயக்கத்தின் அதாவது ரெலோ அமைப்பின் நிறுவன உறுப்பினரும் அதன் தலைவருமான 'தங்கண்ணா' அழைக்கப்பட்ட தங்கத்துரை அவர்கள் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் நிறுத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படவிருந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்றில் 24.02.1983 அன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

பிடல்காஸ்ரோ பஸ்பாட்டில் அரசால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டபோது அவர் ஆற்றிய 'வரலாறு என்னை விடுதலை செய்யும்', என்ற உரை எவ்வாறு கீயூப மக்களைப் புரட்சியை நோக்கி அணி திரட்டியதோ அவ்வாறே தங்கத்துரை அவர்களின் உரையும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெரும் காட்டுத் தீயாகப் பற்றியெரிந்து ஆயிரக் கணக்கான இளைஞர்களைப் போராட்டப் பாதையை நோக்கிக் கவர்ந்திழுத்தது. தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக உரத்துக் குரல் எழுப்பும்போது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதும், ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதும், கைது செய்து நீதிமன்றில் நிறுத்தி மரண தண்டனை, நீண்ட காலச் சிறை போன்ற கொடிய தண்டனைகளை வழங்க முயற்சிப்பதும் இதுதான் முதல் தடவையல்ல.

தங்கத்துரை, குட்டிமணி ஆகியோருக்குத் தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கியதன் மூலம் தமிழ் மக்களின் எழுச்சியை முறியடிக்க முயற்சித்ததைப் போன்றே ஏற்கனவே ஜனநாயக வழியில் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகளை முன்னெடுத்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்து நீதிமன்றின் முன் நிறுத்தி தேசத் துரோகக் குற்றச்சாட்டின் பேரில் 20 வருடச் சிறைத் தண்டனை விதிக்கவும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவும் திட்டமிட்ட வகையில் காய்கள் நகர்த்தப்பட்டன.

அதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான இந்த வழக்கு சாதாரண ஜூரர்கள் பங்கு கொள்ளும் நீதிமன்றில் விசாரிக்கப்படாமல் அவசரகாலச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு மூன்று நீதியரசர்கள் கொண்ட 'ட்றயல் அற் பார்' நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

1976ம் ஆண்டு மே மாதம் 14ம் நாள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாவது தேசிய மகாநாட்டில் தமிழீழக் கோரிக்கை பிரகடனப்படுத்தப்பட்டதுடன் அந்த இலட்சியத்தை எட்டும் போராட்டத்தில் ஒன்றிணையுமாறு மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அக்கோரிக்கையையும் அதன் அழைப்பையும் மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் அவை துண்டுப் பிரசுரங்களாக அச்சிடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன.

1976 மே 21ம் நாள் சட்டவிரோதமான துண்டுப் பிரசுரங்களை வைத்திருந்தமை, விநியோகித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அ.அமிர்தலிங்கம், முன்னாள் உடுப்பிட்டி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்களான வி.என்.நவரத்தினம், பண்டிதர் க.பொ.ரத்தினம், துரைரத்தினம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவ்வேளையில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தன்னையும் கைது செய்யும்படி கேட்டுக்கொண்ட போதிலும் பொலிஸார் அவரைக் கைது செய்ய மறுத்துவிட்டனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட தமிழ்க் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சிவசிதம்பரமும் கைது செய்யப்பட்ட போதிலும் பின்னர் மறுநாள் விடுவிக்கப்பட்டார்.

அமிர்தலிங்கம், துரைரத்தினம். வி.என். நவரத்தினம், கா.பொ. ரத்தினம் ஆகியோர் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டு குற்ற விசாரணைப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டு தேசத் துரோகக் குற்றச்சாட்டில் 10 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

இக்கைதானது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கொதி நிலையையும் இளைஞர்கள் மத்தியில் ஒரு புதிய வேகத்தையும் உருவாக்கியது. அதுமட்டுமின்றித் தமிழ்த் தலைவர்கள் தமிழீழ இலட்சியத்துக்காகத் தங்களை அர்ப்பணிக்கத் தயாராகி விட்டனர் என்ற நம்பிக்கையைத் தமிழ் மக்களிடையே இக்கைதுகள் வலுப்படுத்த ஆரம்பித்தன.

அடிப்படையில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், தொண்டமான் ஆகியோரைவிட அமிர்தலிங்கம் மிகவும் ஆபத்தான நபர் என இனவாதிகள் நம்பினர். அமிர்தலிங்கத்தின் உணர்ச்சிகரமான உரைகளும் இளைஞர்கள் மத்தியிலுள்ள செல்வாக்கும் அவரே இளைஞர்களை வழிநடத்துகிறார் என்றொரு கருத்தும் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் நிலவியது.

எனவே எப்படியாவது அமிர்தலிங்கத்துக்குக் கடும் தண்டனை வழங்கி அவரை அரசியல் அரங்கிலிருந்து அகற்ற வேண்டுமென்ற நோக்கத்துடன் அவ்வழக்கு சாதாரண நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாமல் மூன்று நீதிபதிகள் கொண்ட 'ட்ரயல் அற் பார்' நீதிமன்றத்தில் விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது.

றியல் அட்மிரல் கலாநிதி சரத் விஜயசேகர என்ற முன்னாள் கடற்படைத் தளபதி தனது 'நாட்டைத் தீயிட்ட வெள்ளாள அதிகாரத் தாகம்' என்ற கட்டுரையில் சிங்களவர்களை அழிப்பதற்கென்றே தயார்படுத்தப்பட்ட வட்டுக்கோட்டைப் பொடியன்கள் மறுபுறம் திரும்பி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தோற்றுவித்த வெள்ளாளத் தலைவர்களையே அழித்துத் தள்ளினார்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார். அமிர்தலிங்கம் தமிழ் இளைஞர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இதிலிருந்தே சிங்கள இனவாதிகள் மத்தியில் அமிர்தலிங்கம் போன்றவர்களே இளைஞர்களை ஏவி விட்டனர் என்ற கருத்து வலுப்பெற்றிருந்ததை நாம் அவதானிக்க முடியும். அன்றும் சரி, இன்றும் சரி தமிழ் மக்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்ட அநீதிகளும், தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட பேரழிவுகளுமே இளைஞர்களை எழுச்சி பெற வைத்தன என்பதை அவர்கள் ஏற்கத் தயாராயில்லை.

அதன் காரணமாகவே அமிர்தலிங்கம் போன்றவர்களை நீண்ட காலச் சிறைக்கு அனுப்பி அவர்களை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவதன் மூலம் இளைஞர்களின் எழுச்சியின் மூலவேரையே அழித்து விடமுடியுமென நம்பினர்.

அந்த நோக்கத்தோடு அமைக்கப்பட்ட 'ட்றயல் அற் பார்' நீதிமன்றம் கூட அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை.

இவ்வழக்கை 'ட்றயல் அற் பார்' நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்முகமாக அவசரமவசரமாக அவசரகாலச் சட்ட விதிகளின் 59வது பிரிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அதன் அடிப்படையில் அப்போதைய சட்டமா அதிபர் சிவ பசுபதி அவர்களால் அவசரகாலச் சட்ட விதிகளின்படி மூன்று மேன்முறையீட்டு நீதிபதிகளைக் கொண்ட 'ட்றயல் அற் பார்' நீதிமன்றம் உருவாக்கப்பட்டு திரு. அமிர்தலிங்கம் உட்பட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் ராசா வழக்கறிஞரான எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ராணி வழக்கறிஞர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், மு.திருச்செல்வம் உட்படக் கொழும்பிலுள்ள 67 தமிழ்ச் சட்டத்தரணிகள் எதிரிகள் சார்பில் ஆஜராகினர். பிரித்தானிய ஆட்சியாளர்களின் மிகக் கௌரவ பட்டங்கள் கொண்ட ராசா வழக்கறிஞர்கள், ராணி வழக்கறிஞர்கள் ஒன்றாக ஆஜரான வரலாற்று நிகழ்வாக இது கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி தனது அரசியல் வாழ்விலோ, தொழிற்துறையிலோ எப்போதுமே இரண்டாவது இடத்தை ஏற்றுக்கொள்ளாத ஜீ.ஜீ.பொன்னம்பலம் செல்வநாயகம் தலைமையில் ஆஜரானதும் தமிழ்த் தலைமைகளின் ஒற்றுமை பற்றித் தமிழ் மக்களுக்குப் புதிய நம்பிக்கையை ஊட்டியது. ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் இலங்கையில் மட்டுமின்றி நாட்டுக்கு வெளியேயும் சிறந்த குற்றவியல் வழக்கறிஞராகக் கருதப்பட்டார்.

இவ்வழக்கு ஆரம்பமானபோது ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரம் அந்த நீதிமன்றத்துக்கு இல்லையென்ற நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்தார். எனினும் நீதிமன்றத்துக்கு மரியாதை கொடுக்கும் வகையில் குற்றப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

அவ்வகையில் அமிர்தலிங்கத்திடம் நீங்கள் குற்றவாளியா, சுற்றவாளியா என வினவப்பட்டபோது. ஜீ.ஜீ.பொன்னம்பலம் இவ்விடயம் தொடர்பாகச் சில விடயங்கள் விவாதிக்கப்படவேண்டியிருப்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவர் பதிலளிக்க முடியாதெனத் தெரிவித்தார். அதையடுத்து அமிர்தலிங்கம் தன்னிலை விளக்கமாக இரு விடயங்களை முன்வைத்தார். ஒன்று - இந்த நீதிமன்றம் அமைப்பதற்கான அவசரகாலச் சட்டம் செல்லுபடியாகாது. மற்றது - இந்த நீதிமன்றம் உருவாக்க அதிகாரமளித்த 1972ம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டம் செல்லுபடியற்றதாகும். அதன் காரணமாக அந்த நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளியா, சுற்றவாளியா என தீர்மானிக்க முடியாதென அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

ஜீ.ஜீ.பொன்னம்பலம் தான் அமிர்தலிங்கம் முன்வைத்த காரணங்களின் அடிப்படையில் வாதிடப் போவதாகவும் எதிரிகளைப் பிணையில் விடுவிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கு பிறிதொரு திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

விசாரணைகளின் போது 1972ம் ஆண்டின் அரசியலமைப்பின்படி அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கே உரியதென்றும், பிரதமரின் ஆலோசனையின் பேரிலேயே ஆளுநர் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்யமுடியுமெனவும் பிரதமரின் ஆலோசனை இன்றி கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்டம் செல்லபடியாகாதென்றும், அதன்படி அமைக்கப்பட்ட நீதிமன்றமும் செல்லுபடியாகாது என ஜீ.ஜீ.பொன்னம்பலம் வாதிட்டார். அடுத்துத் திருச்செல்வம் அவர்கள் 1972ம் ஆண்டின் அரசியலமைப்பு செல்லுபடியாகாது என வாதிட்டார். அது சிங்கள மக்களின் ஆணை பெற்றப்பட்டது என்பதை உறுதி செய்யமுடியாதெனவும் தமிழ் மக்கள் 1970 தேர்தலில் சமஷ்டி அமைப்புக்கே ஆணை வழங்கினர் எனவும் அவர் வாதிட்டார்.

1976 செப்டெம்பர் 16ல் தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க அந்த நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்பதை ஏற்றுக்கொண்டு குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் விடுவித்தது. அதேவேளையில் 1972ம் ஆண்டின் அரசியலமைப்பு செல்லுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்த நீதிமன்றத்துக்கு இல்லையெனக் கூறப்பட்டு அது நிராகரிக்கப்பட்டது.

இத்தீர்ப்பின்படி அவசரகாலச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்குகள் அத்தனையும் செல்லபடியாகாமல் போய்விடுமென்பதால், இத்தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் மேன்முறையீடு செய்தது. ஆனால் இவ்வழக்கு எடுக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் அமிர்தலிங்கம் உட்பட நான்கு பேரின் மீதான குற்றச் சாட்டுக்களை வாபஸ் பெற்றார்.

எனவே நால்வரின் விடுதலை மேன்முறையீட்டு நீதிமன்றத்தாலும் உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கும் வழக்கின் வெற்றியும் தமிழ் மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கைகளையும் இளைஞர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தையும் ஏற்படுத்தின என்பதை மறுத்துவிடமுடியாது. ஒன்று, தமிழீழக் கோரிக்கையை வென்றெடுக்கத் தமிழ்த் தலைமைகள் எல்லா பேதங்களையும் கைவிட்டு ஒன்றிணைந்து தலைமை தாங்குவார்கள்.

அடுத்து தமிழ்த் தலைவர்கள் சிங்கள ஆட்சியாளர்களையும் சட்டபூர்வமாகத் தோற்கடிக்கும் வலிமை பெற்றவர்களாதலால் தமிழீழத்தை வென்றெடுக்கும் ஆற்றல் அவர்களிடம் உண்டு.

ஆனால் இவ்வழக்கில் தமிழீழக் கோரிக்கையின் நியாயம் பற்றியோ, தமிழர்களுக்குத் தனிநாடு அமைப்பதற்கான சட்டபூர்வமான உரிமை பற்றியோ எவ்வித வாதங்களும் முன்வைக்கப்படவில்லை ஆனால் இலங்கை அரசியலமைப்புச் சட்டங்களில் உள்ள ஓட்டைகளைப் பாவித்தே குற்றம் சுமத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் 1983ல் இடம்பெற்ற தங்கத்துரை, குட்டிமணி ஆகியோர் சம்பந்தப்பட்ட வழக்கில் அவர்கள் இருவருமே நீதிமன்றத்தை ஒரு மேடையாகப் பாவித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களையும் இனவாத அநீதிகளையும் முழுமையாக அம்பலப்படுத்தியிருந்தனர். அவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும் சிறையில் பின்பு படுகொலை செய்யப்பட்டாலும் அவர்களின் உரைகள் விடுதலைப் போராட்டத்துக்குப் பெரும் உந்து சக்தியாக விளங்கின என்பது வரலாறு.

எப்படியிருந்த போதிலும் இரு வழக்குகளும் அவற்றின் விசாரணைகளும் தீர்ப்புகளும் தமிழீழக் கோரிக்கையை மக்கள் மயப்படுத்துவதில் பாரிய பங்கு வகித்தன என்பதை மறுத்துவிடமுடியாது.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE