Wednesday 24th of April 2024 11:37:07 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை இரத்தானால் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும்! - ரணில் எச்சரிக்கை!

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை இரத்தானால் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும்! - ரணில் எச்சரிக்கை!


ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை இரத்தானால் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 300 ரூபா வரை வீழ்ச்சயடையும். ஆயிரக்கணக்கானோர் வேலைகளை இழக்க நேரிடும். இதனால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை முகம் கொடுக்க நேரிடும் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை மீளப் பெற 2017 இல் எங்களது அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதன்மூலம் வரிவிதிப்பு இல்லாமல் ஐரோப்பாவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிகிறது.

ஆடை மற்றும் மீன்பிடித் தொழில் துறைகளில் சிறப்பான அடைவைப் பெற இந்தச் சலுகை வழிவகுத்தது.

இந்நிலையில் ஏற்கனவே உறுதியளித்தவாறு பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காவிட்டால் இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை இரத்து செய்யப்படும் என ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் எங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவிட்-19 தொற்றுநோயால் நமது சுற்றுலாத் துறை ஆபத்தில் உள்ளது. எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் எங்கள் கடலில் மூழ்கியதால் மீன்பிடித் துறையிலும் பிரச்சினைகள் எழுந்துள்ளன. வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே, நமது அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்நிய செலாவணி வீழ்ச்சியால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இலங்கை பங்களாதேஷில் இருந்து 200 மில்லியன் டொலரை கடனானப் பெற்றுள்ளது.

தற்போது, தேயிலை மற்றும் ஆடைத் தொழில்களால் மட்டுமே நம் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்ட முடிகிறது.இதிலும் நாங்கள் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை நம்பியிருக்கிறோம். இந்த வரிச் சலுகையை இழந்தால் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும். ஒரு டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி சுமார் 300 ரூபாவரை மோசமாக வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடலாம். இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலைகளை இழக்க வேண்டி ஏற்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படுவதைத் தவிர்க்க ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைக் பாதுகாக்க வேண்டும். அரசியலுக்கு அப்பால் இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இழப்பதன் மூலம் மக்களின் பொருளாதார சுமைகளை மேலும் அதிகரிக்க வேண்டாம். நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE