Thursday 28th of March 2024 02:28:48 PM GMT

LANGUAGE - TAMIL
.
குமார் சங்கக்காரவுக்கு ஐசிசி கௌரவம்! முரளிதரனுக்கு பின்னர் உயர் கௌரவத்தை பெற்ற 2வது இலங்கை வீரர்!

குமார் சங்கக்காரவுக்கு ஐசிசி கௌரவம்! முரளிதரனுக்கு பின்னர் உயர் கௌரவத்தை பெற்ற 2வது இலங்கை வீரர்!


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னணி வீரருமாகத் திகழந்த குமார் சங்கக்காரவை ஐசிசி கௌரவப்படுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கிய வீரர்கள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, 1996 - 2015 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிரிக்கெட் விளையாட்டுக்கு பெரும் பங்களிப்பை செய்த வீரர்களுக்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார இடம்பிடித்துள்ளார்.

​முன்னதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடிக்கும் இரண்டாவது இலங்கை வீரர் என்ற பெருமையை குமார் சங்கக்கார பெற்றுள்ளார்.

சர்வதேச டெஸ்ட் போட்டி பெறுபேறுகள்

2000 - 2015 வரையான காலத்தில் 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சங்கக்கார 12,400 ஓட்டங்களை குவித்திருந்தார். அதிகபட்ச ஓட்டகுவிப்பாக 319 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

ஒரு முச்சதம் மற்றும் 10 இரட்டைச் சதம் உள்ளடங்கலாக 38 சதங்களை விளாசியிருந்த சங்கக்கார விக்கெட் காப்பாளராக 182 பிடியெடுப்புகள் மற்றும் 20 ஸ்டம்பிங் என 202 ஆட்டமிழப்புகளையும் செய்திருந்தார்.

டெஸ்ட் துடுப்பாட்ட சராசரியாக 57.40 ஐ பெற்றிருந்தார்.

சர்வதேச ஒருநாள் போட்டி பெறுபேறுகள்

குறித்த காலகட்டத்தில் 404 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடிய சங்கக்கார 14,234 ஓட்டங்களை இலங்கை அணி சார்பில் பெற்றிருந்தார்.

அதிகபட்டச ஓட்ட எண்ணிக்கையாக 169 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன் 25 சதங்களையும் விளாசியிருந்தார்.

விக்கெட் காப்பாளராக 402 பிடியெடுப்புகள் மற்றும் 99 ஸ்டம்பிங் என 501 ஆட்டமிழப்புகளையும் செய்திருந்தார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 14,234 ஓட்டங்களை குவித்து 41.98 சராசரியை பெற்றிருந்தார்.

சர்வதேச ரீ-20 போட்டி பெறுபேறுகள்

இதேபோன்று இலங்கை அணி சார்பில் குறித்த காலப்பகுதியில் 56 ரீ-20 போட்டிகளில் விளையாடி 1,382 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

அதிகபட்சமாக 78 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன், விக்கெட் காப்பாளராக 25 பிடியெடுப்புகள் மற்றும் 20 ஸ்டம்பிங் என 45 ஆட்டமிழப்புகளையும் செய்திருந்தார்.

இவ்வாறு பல சாதனைகளை படைத்து சர்வதேச கிரிக்கெட்டில் தடம்பதித்த அடிப்படையில் குமார் சங்கக்காரவுக்கு இந்த உயர் கௌரவம் ஐசிசி யினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE