Wednesday 24th of April 2024 12:50:19 PM GMT

LANGUAGE - TAMIL
-
அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் இருந்து  தமிழ் குடும்பம் தற்காலிகமாக விடுவிப்பு!

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் இருந்து தமிழ் குடும்பம் தற்காலிகமாக விடுவிப்பு!


அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பிரியா-நடேஸ் குடும்பத்தினர் தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்காலிகமாக பெர்த் நகரில் வாழ அவுஸ்திரேலிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரியா-நடேஸ் குடும்பம் அவர்களது குழந்தைகளுடன் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்காலிகமாக பெர்த்தில் வாழ அனுமதிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் இன்று அறிவித்தார்.

இதன்மூலம் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பத்தினரின் நீண்ட காலப் போராட்டத்திற்கு தற்காலிகமாக சாதகமான பதிலொன்று கிடைத்துள்ளது.

எனினும் அவர்களின் நிரந்தர வதிவிட உரிமை குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.

பிரியா-நடேஸ் குடும்பத்தினர் தடுப்பு முகாமில் இருந்து வெளியேறி பெர்த் நகரில் வாழ எனக்கிருக்கும் அதிகாரத்தைக் கொண்டு தற்காலிக அனுமதியை வழங்கியுள்ளேன். இந்த அனுமதியானது இந்தக் குடும்பத்தினர் நிரந்தர விசா ஒன்றுக்கு விண்ணப்பிப்பதற்கான வழியாக அமையாது என குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் கூறினார்.

உடல் நிலை பாதிக்கப்பட்டு பெர்த் நகர சிறுவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடேஸ் -பிரியா தம்பதிகளின் இளைய மகள் தருணிகாவுடன் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வாழும் வகையில் இந்த தற்காலிக அனுமதி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி பிரியா-நடேஸ் குடும்பம் சட்டப்போராட்டத்தை தொடரும் பின்னணியில், தடுப்புக்காவலில் சிறுவர்களை வைத்திருப்பது தொடர்பிலான சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இரக்கத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா பெர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருடன் தாயார் பிரியா மாத்திரம் பெர்த் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தந்தையும் சகோதரி கோபிகாவும் கிறிஸ்மஸ் தீவிலேயே தங்கியிருந்த நிலையில் அமைச்சரின் இன்றைய அறிவிப்பைத் தொடர்ந்து அவர்கள் பெர்த் சென்று தருணிகாவுடன் இணையவுள்ளனர்.

தருணிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து பிரியா-நடேஸ் குடும்பம் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் வலுவடைந்ததுடன், கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பலரிடமிருந்தும் அரசுக்கு அழுத்தங்கள் வழங்கப்பட்ட பின்னணியில் குடிவரவு அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்தடைந்தனர்.

நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக விசாவும் 2018 ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட்டது. இதனையடுத்து அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை இறங்கியது.

2018 மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் பிலோலாபகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2018 ஜுன் 21 அன்று மெல்பேர்ன் கூட்டாட்சி நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது. ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.

ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை 2018 டிசம்பர் 21-ஆம் திகதி விசாரித்த கூட்டாட்சி நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது. பின்னர் இக்குடும்பம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து தருணிகாவின் பாதுகாப்பு குறித்தும், தருணிகாவின் சூழ்நிலைகளை உள்துறை அமைச்சர் மதிப்பீடு செய்திருக்க வேண்டுமா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், பிரதான விண்ணப்பதாரியான தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

தருணிகா குழந்தை என்பதால் அவரிடமிருந்து பெற்றோரை தனியாகப்பிரித்து நாடுகடத்தமுடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தப்பித்து தொடர்ந்தும் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE