Tuesday 16th of April 2024 10:39:54 AM GMT

LANGUAGE - TAMIL
-
“வடக்கின் திணைக்களங்களில் ஊழல்” - சாமரம் வீசுகிறதா கணக்காய்வுத் திணைக்களம்? - புருஷோத்தமன்!

“வடக்கின் திணைக்களங்களில் ஊழல்” - சாமரம் வீசுகிறதா கணக்காய்வுத் திணைக்களம்? - புருஷோத்தமன்!


வடமாகாணத்தின் ஆளுகைக்குட்பட்ட அரச திணைக்களங்களில் மேல்மட்ட அதிகாரிகளின் நிர்வாக முறைகேடுகளும், ஊழல் குற்றச்சாட்டுக்களும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவருகின்றன.

எனினும் அரச சுற்றுநிருபங்கள், தாபன நடைமுறைகள், நிதிப்பிரமாண ஒழுங்கு நடைமுறைகளில் காணப்படும் ஓட்டைகளைப் பயன்படுத்தி இவ்வாறான முறைகேடுகளிலிருந்து குறித்த திணைக்கள அதிகாரிகள் தப்பிக்கவைக்கப்படுகின்றனர். பதிலாக கீழ்மட்ட குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட முற்படும் ஊழியர்கள் பழிவாங்கப்படுகின்றனர்.

ஒருபானை சோற்றில் ஒரு சோறு பதம் போல வடக்கு மாகாணத்தின் இரண்டு திணைக்களங்களின் கீழ் இடம்பெறும் இருவேறுபட்ட நிர்வாக முறைகேடுகள் இவற்றுக்கு எடுத்துக்காட்டாக காணப்படுகின்றன.

இதில் மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கீழ் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட தொற்றுநோயியல் மருத்துவமனையில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டுவரும் நிலையில் தற்போது அக்குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்க ஓட்டைகளை அதிகாரிகள் தேடிக்கொண்டிருக்கின்றனர் என்ற செய்தி, எதிர்காலத்தில் அத் திணைக்களத்தின் கீழ் ஊழல் நிதி மோசடி இடம்பெற்றிருக்கவில்லை என்ற அறிவிப்பு வெளியாகினால் கூட அதிசயம் இல்லை என்கின்றனர் அந்தத் திணைக்களத்தின் ஊழியர்கள் சிலர்.

இங்கும் கணக்காய்த் திணைக்களத்தின் அறிக்கை நேர்த்தியான முறையில் தயாரிக்கப்படவில்லை. அந்த அறிக்கை நிதிக்குற்றச்சாட்டுக்களில் இருந்து அதிகாரிகளைத் திட்டமிட்டுத் தப்பிக்கவைக்க வரையப்பட்டுள்ளது என குற்றம் சாட்டப்படுகின்றது.

இதுபோல வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் மாகாண விவசாயத் திணைக்களம் இயங்கிவருகிறது. குறித்த திணைக்களங்களின் மாவட்ட அலுவலகங்களிலும் அதன் கீழ் செயற்படுத்தப்படும் உப பிரிவுகளிலும் இவ்வாறாக தொடர்ச்சியாக ஊழில், நிதி மோசடிக்குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுவரும் நிலையில் குறித்த திணைக்களத்திலும் கண்துடைப்பு நாடகமே அரங்கேற்றப்பட்டு குற்றவாளிகள் தப்பிக்கவைக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எதிரொலிக்கிறது.

வவுனியா பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் பணிமனை

விவசாய திணைக்களத்தின் வவுனியா மாவட்ட அலுவலகம் இது. இங்கு அரச விதை உற்பத்திப் பண்ணை, மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம், விவசாயப் போதனாசிரியர் பிரிவுகள் என உப நிலையங்கள் ஊடாக விவசாய சேவைகள் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்குமாகாண விவசாயத்திணைக்களங்களின் மாவட்ட அலுவலகங்களில் பிரதிப் பணிப்பாளர்கள் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளாகச் செயற்படவேண்டியவர்கள். இங்கு ஐந்து மாவட்டங்களில் 4 மாவட்டங்களின் பிரதி பணிப்பாளர்கள் ஓய்வு பெற்று மீள் நியமனம் செய்யப்பட்டவர்களாக உள்ளார்கள். சில நிமிடங்கள் எழுந்து நிற்பதற்கு கூட முடியாத அளவிற்கு அவர்களின் உடல் நிலை காணப்படும் நிலையில் அவர்களின் உள நிலை பற்றிச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இவர்களது நிர்வாக அசிரத்தை காரணமாக பொறுப்பிற்கு மேலதிகமாக செயற்படும் கையாட்களே அலுவலகத்தை நிர்வகிக்கும் அவல நிலை காணப்படுகிறது. இந்த நிலைதான் வவுனியா மாவட்ட பணிமனையிலும் நடைபெறுகின்றது என விவசாயிகளே குற்றம் சாட்டுகின்ற அளவிற்கு நிலைமை காணப்படுகின்றது.

தற்போதுவரை இவ்வருடத்திற்கான மீள் நியமன அனுமதி கிடைக்கப்பெறாத ஒருவரே குறித்த திணைக்களத்தில் பொறுப்பு வாய்ந்த அலுவலராகச் செயற்பட்டுவருகிறார். குறித்த அலுவலருக்கு அந்த அனுமதி வழங்கப்படாது போகுமிடத்து அவர் இதுவரைகாலமும் (பதவிக்கான அனுமதி கிடைக்காத காலப்பகுதி)ஆற்றிய பணிகள், இட்ட கையொப்பங்கள் நிர்வாக நடைமுறைகளை மீறிய ஒன்றாகக் காணப்படும். எனவே விரும்பியோ விரும்பாமலோ குறித்த இளைப்பாறிய அதிகாரிக்கு கால நீடிப்பு செய்து அனுமதி வழங்கவேண்டியது மாகாண பிரதம செலாளரின் கடமையாக மாறியுள்ளது. இதற்கான வேலைகளே தற்போது இடம்பெற்றுவருகின்றன.

இந்த இழுபறிகளுக்குள் குறித்த நிறுவனத்தில் அண்மையில் ஒரு நிதி மோசடி இடம்பெற்றதாகத் தெரிவித்து அதனுடன் நேரடித் தொடர்புடைய ஊழியர் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். குறித்த ஊழியர் விவசாயப் பேதனாசிரியர் (பயிற்சித்தரம்) பதவியில் கடந்த வருட ஆரம்பத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டவர். குறித்த ஊழியர் அரச ஊழியர் என்ற வகுதிக்குள் உள்ளடக்கப்படாது அவருக்கு விதவைகள் அனாதைகளுக்கு பங்களிப்பு செய்யும் தொகை கழிக்கப்படாது முழு சம்பளமும் செலுத்தப்பட்டுவரும் பயிற்சிக்காலத்திற்குரியவர். இரண்டுவருட விவசாயக் கற்கைநெறி ஒன்றை நிறைவு செய்யும் சந்தர்ப்பம் ஒன்றில் இவருக்கு பதவி நிரந்தரம் செய்யப்படும் என்பதே ஒப்பந்தம்.

இவ்வாறு பயிற்சித்தர ஊழியர் ஒருவர் விவசாயிகள் அதிகம் வாழும் பகுதியான கனகராயன் குளத்திற்கு விவசாயப் போதனாசிரியராக மேல்மட்ட அதிகாரிகளின் செல்வாக்குடன் நியமிக்கப்பட்டுள்ளார். அரவரது நியமனம் கேள்விக்குட்படாதிருக்க அவரை வைத்து வினைத்திறனான சேவை குறித்த பகுதியில் வழங்கப்படுவதாக காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சலுகைச் சந்தர்ப்பம் ஒன்றை தவறாகப் பயன்படுத்தமுற்பட்ட குறித்த ஊழியர் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானிய திட்டங்கள், அரைமானியதிட்டங்களை இடைமறித்து அவற்றின் பெறுமதிக்கு ஏற்ப பண அறவீடு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தற்போது அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளைக் கண்காணிக்க, நெல், தானியங்கள், விவசாய இரசாயன உரங்கள், விவசாய உபகரணங்கள் என தனித்தனி மேலாளர்கள் குறித்த மாவட்ட அலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள பெரும் பகுதியிலுள்ள விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளையும் பொறுப்பான விவசாயப் போதனாசிரியர்களது கடமைகளையும் கண்காணிக்கவேண்டியர்கள். இதற்காக இவர்களுக்கு மேலதிக கொடுப்பனவு, போக்குவரத்து கொடுப்பனவு, போக்குவரத்து வசதி என பல சலுகைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இருக்க பயிற்சித்தர ஊழியர் ஒருவர் மட்டும் குறித்த குற்றச்சாட்டில் சிக்கிக்கொள்வது எவ்வாறு? இவரைக் கண்காணிக்காது விட்ட குறித்த விடயங்களுக்கு பொறுப்பான மேலாளர்கள் எவ்வாறு காப்பாற்றப்பட்டனர், அவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள், போக்குவரத்துப் படிகள் எவ்வாறு செலுத்தப்பட்டது, என்று கேள்விகள் அடுக்கடுக்காய் எழுப்பப்பட்டுள்ளன.

அரச விதை உற்பத்திப் பண்ணை

நீண்டகாலமாகவே மேல்மட்ட நிர்வாகத்தலைமைகளின் அசமந்தப்போக்காலும் தமது தனிப்பட்ட வருமான தேவைகளுக்காகவும் வவுனியாவின் நகரில் பெரும் வர்த்தகக் கேள்வி அதிகரித்த 68 ஏக்கர் நிலப்பரப்பு தற்போதுவரை வீண்விரையப்படுத்தப்படும் நிலத் துண்டமாக வினைத்திறனின்றி காணப்படுகின்றது.

முற்பணக் கணக்கு நடைமுறையைக் கொண்ட வடக்கு மாகாணத்தின் விதை உற்பத்திக்குரிய ஒரேயொரு பண்ணையான குறித்த பண்ணை வருட ஒதுக்கீட்டில் அதிகப்படியாக எந்த இலாபமும் இன்றி இயங்கிவருகின்றது.

இலாபகரமாக இயங்குவதாக பிழையான செலவு-வருமான கணக்கறிக்கை தயாரிக்கப்பட்டு சொத்து (இருப்பு) விபரங்களை மிகைப்படுத்தி, நிரந்தர பணியாட்களது சம்பளம் செலவுத் தலைப்புக்களில் காட்டப்படாது இவ்வாறு இலாபம் காட்டப்படுகிறது.

குறித்த பண்ணையில் காலத்திற்கு காலம் நியமிக்கப்படும் பண்ணை முகாமையாளர்கள் மேலதிகாரிகளின் வயிற்றை நிரப்புவதற்கு பங்களிப்பவர்களாகச் செயற்பட்டுவந்துள்ளனர். இத்தகைய இயல்புடைய ஒருவரே அப்பதவியை தொடர்ச்சியாகத் தக்கவைத்துக்கொள்ளமுடியும்.

இதன் சாராம்சம் யாதெனில் அரச நிறுவனம் என்பது மக்களுக்கும்> நாட்டிற்கும் சேவையாற்றத்தக்க அரச அங்கமாகச் செயற்படுதலிலிருந்து விலகி அதிகாரிகளின் தொடர்ச்சியான பதவித்தக்கவைப்பிற்காகவும், அவர்களதும் அவர்கள் சர்ந்த துணை அதிகாரிகளினதும் சுய இலாபமீட்டும் தனியார் முதலாழித்துவ நிறுவனங்கள் போலச் செயற்படுதல் என்று கொள்ளமுடியும்.

பண்ணை நிர்வாகக் கட்டமைப்பு சீராகக் கண்காணிக்கப்படாமை காரணமாக காலத்திற்கு காலம் ஊழல், நிதிக்கையாடல்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவந்துள்ளன. எனினும் இவை மேலதிகாரிகளின் செல்வாக்கு காரணங்களால் நிர்வாக ஓட்டைகளுடாக தடையமின்றி மேற்கொள்ளப்பட்டதனால் கணக்காய்விற்கு உட்படுத்தமுடியாதும் போயுள்ளன.

அண்மையில் இத்தகைய நிர்வாக முறைகேடு குறித்து மாகாணக் கணக்காய்வு திணைக்கள அதிகாரிகள் பண்ணையில் ஆய்வு செய்திருந்தனர். இதன்போது பண்ணைக்கு பொறுப்பான தொழிலாளர் விடுதி காணிகளில் பயன்தரு மரங்கள் வெட்டப்பட்டமை, பண்ணை ஊழியர்களைப் பயன்படுத்தி பண்ணை உலர்தளத்தில் தனியாரின் உழுந்தை உலர்த்தி பண்ணையின் பொருட்களைக் கொண்டே பொதியிட்டு முறைகேடாக வியாபாரம் செய்தமை, பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட 450 கிலோகிராம் நிலக்கடலையை (கச்சான்) நிதி ஒழுங்குகளை மீறி விற்பனை செய்து குறித்த பணத்தை வங்கியில் வைப்பிலிடாது பண்ணை முகாமையாளர் தன்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட நிர்வாக நிதி முறைகேடுகளை ஆய்வுக்குட்படுத்தியிருந்தனர்.

எனினும் குறித்த கணக்காய்வுப் பகுதியினருடன் தொடர்புகொண்ட மேலதிகாரிகள் குறித்த முறைகேடுகளை அறிக்கையிடாதவாறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த செயற்பாடானது வடக்கு மாகாண கணக்காய்வு திணைக்கள அதிகாரிகளும் தமது கடமையிலிருந்து விலகி செயற்பட்டனரா என்ற கேள்வியை தோற்றுவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் கூடுதல் அதிகாரங்களைக் கோரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இவ்வாறு தமது பதவியைத் தக்கவைப்பதற்காகவும் தமது பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்வதற்காகவும் முயற்சிக்கிறார்களே தவிர மக்களுக்கு அர்பணிப்பு மிக்க சேவையை ஆற்ற துளி அளவேனும் அக்கறை காட்டவில்லை என்பதுதான் கவலைதரும் விடயமாக உள்ளது.

புருஷோத்தமன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE