Wednesday 24th of April 2024 05:06:58 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 60 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 60 (வரலாற்றுத் தொடர்)


சர்வதேச கௌரவமும் தேசிய நெருக்கடிகளும்! - நா.யோகேந்திரநாதன்!

'தமிழ் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொள்கிறது. அவர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வு ஒன்று வழங்கப்படாமை தமிழ் மக்கள் தனிநாடு கோரும் ஒரு குழுவை ஆதரிக்கும் சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளது. நாடு முழுவதிலும் பொருளாதார அபிவிருத்திக்கான தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமையின் காரணத்திற்காக குறித்த பிரச்சினைகள் காலதாமதமின்றி தீர்க்கப்படவேண்டுமெனக் கட்சி கருதுகிறது. எமது கட்சி ஆட்சிக்கு வரும்போது பின்வரும் துறைகள் சார்ந்த அவர்களின் கவலைகளைத் தீர்ப்பதற்கு சகல சாத்தியமான வழிமுறைகளையும் முன்னெடுக்கும். கல்வி, குடியேற்றம், தமிழ் மொழியின் பயன்பாடு பொதுக்கூட்டுத்தாபனங்களின் வேலைவாய்ப்பு போன்ற விடயங்களை முன்னெடுக்க ஒரு சர்வகட்சி மாநாட்டைக்கூட்டி அதன் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவோம்'.

1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களின் சார்பில் தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த போது ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிரான கோபாவேசத்தைத் தங்களுக்குச் சாதகமாக அணி திரட்டும் வகையில் அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் விடுக்கப்பட்ட பகிரங்க அறிக்கையின் ஒரு பகுதியாகும்.

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளை அடுத்து தமிழ் இளைஞர் குழுக்களால் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த ஆயுத நடவடிக்கைகள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையடுத்துத் தீவிரமடையத் தொடங்கின. அதேவேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழீழக் கோரிக்கைக்கான பிரசாரத்தை வடக்குக் கிழக்கெங்கும் தீவிரமாக முன்னெடுத்து வந்தது. தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் கடந்த காலங்களில் தீவிரமாகச் செயற்பட்டு தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது அவற்றையெல்லாம் முன்னின்று எதிர்த்து வந்தவரான ஜே.ஆர்.ஜயவர்த்தன தமிழ் மக்களின் எழுச்சியை ஐக்கிய முன்னணி அரசுக்கு எதிராகத் தான் பயன்படுத்தும் வகையில் அவற்றைக் கையில் எடுத்துக்கொண்டார். மேலும் கோதுமை மாவுக்கும், பாணுக்கும் ஏற்பட்ட தட்டுப்பாடு, இறக்குமதிப் பொருட்கள் மீதான தடை என்பவற்றுக்கெதிராக மக்களை அணி திரட்டிப் பல்வேறு விதமான போராட்டங்களில் இறங்கினார். இன்னொருபுறம் அரசின் பங்காளிகளான இடதுசாரிக் கட்சிகளின் வெளியேற்றம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறியமை போன்ற நெருக்கடிகளுக்கும் அரசாங்கம் முகம் கொடுக்கவேண்டியிருந்தது. அதேவேளையில் பல தொழிற்சங்கப் போராட்டங்களும் அரசாங்கத்தைத் திக்குமுக்காட வைத்தன.

உள்நாட்டில் வடக்குக் கிழக்கிலும் தென்னிலங்கையிலும் அரசாங்கத்துக்கு எதிரான அலை மெல்ல மெல்ல உருவாகி வலுப்பெற்று வந்த நிலையில் சர்வதேச அளவில் இலங்கையின் நிலை உயர் மட்டத்தை நோக்கி வளர்ச்சியடைந்ததுடன் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க உலகத் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படும் நிலைமையும் உருவாகியது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட்ட ஏகாதிபத்திய வல்லரசுகளால் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் கொடுமையாகச் சுரண்டப்படும் நிலையில் அவை ஒரே அணியாகத் திரண்டு தங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று முடிவெடுத்தன. ஜவகர்லால் நேரு, எகிப்தின் நாசர், யூகோஸ்லாவியாவின் மார்ஷல் டிட்டோ, லிபியாவின் கேணல் கடாபி, பாகிஸ்தானின் அலிகார்பூட்டோ ஆகியோர் ஒன்றிணைந்து 1965ம் ஆண்டு யூகோஸ்லாவியாவின் தலைநகர் பெல்கிரேட் நகரில் முதலாவது அணிசேரா மாநாட்டை நடத்தினர். இதில் ஸ்தாபக நாடுகளாகப் பங்குகொண்ட 12 நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

1970ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு நடுநிலைமைக் கொள்கையை இறுக்கமாகக் கடைப்பிடித்ததுடன் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தி ஏகாதிபத்திய பொருளாதார ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் முகமாகத் தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கையை அமுலுக்குக்கொண்டு வந்தது. அதன் காரணமாக மக்கள் சில அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தாலும் நாடு படிப்படியாக முன்னேற ஆரம்பித்தது. அதேவேளையில் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பன கடும் நிபந்தனைகளை விதித்து இலங்கையின் தன்னிறைவுப் பொருளாதார முயற்சிகளை முறியடிக்க முயன்றனர். அதன் காரணமாகவும் உள்நாட்டில் ஒரு நெருக்கடி நிலை நிலவியது.

இப்படியான நிலையிலும் அணிசேரா நாடுகளின் மாநாடு இலங்கைத் தலைநகர் கொழும்பில் இடம்பெற்றது. அதில் அணி சேரா நாடுகளின் தலைவியாகத் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தெரிவு செய்யப்பட்டார். அதன் மூலம் அவர் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குத் தலைமை தாங்கும் உலகத் தலைவியானார். அதேவேளையில் இலங்கையும் அணிசேரா நாடுகளின் தலைமை நாடாக உலக அரங்கில் தலைநிமிர்ந்து நின்றது.

இவ்வாறு திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்தில் இலங்கையின் பெறுமதி சர்வதேச மட்டத்தில் அதிகரித்தாலும் ஏகாதிபத்திய நாடுகளும், இலங்கையிலுள்ள பிற்போக்கு சக்திகளும் அரசாங்கத்தை மக்கள் மத்தியில் செல்வாக்கிழக்க வைப்பதற்கும் அதைக் கவிழ்ப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.

அரசாங்கத்தில் பங்கு வகித்த சிலரின் புத்திபூர்வமற்ற நடவடிக்கைகள், அதிகார துஷ்பிரயோகம், கட்சிக்குள் இருந்த பிற்போக்கு சக்திகளின் குழப்பகரமான நடவடிக்கைகள், இனவாத நடவடிக்கைகள் போன்றவை எதிர்த்தரப்பினரின் நோக்கங்களுக்குச் சாதகமாக அமைந்தன.

தேயிலைத் தோட்டங்களைத் தேசிய மயப்படுத்துவது என்பது அடிப்படையில் ஒரு முற்போக்கான நடவடிக்கை. ஆனால் அந்த நடவடிக்கையைக் கையாண்டவிதம் அரசாங்கத்துக்குப் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தியது. தோட்டத் தேசிய மயத்தின் போது முதலில் 1972ம் ஆண்டு உள்நாட்டு முதலாளிகளின் தோட்டங்களையே தேசிய மயமாக்கினர். அதன் காரணமாக உள்ளூர் தோட்ட முதலாளிகள் ஆட்சியை வீழ்த்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டனர். 1973லேயே வெளிநாட்டுப் பெரும் நிறுவனங்களின் தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டன. முதலில் வெளிநாட்டுக் கம்பனிகளின் தோட்டங்களைத் தேசிய மயமாக்கி உள்ளூர் தோட்டங்களை அபிவிருத்தி செய்திருந்தால் அவர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாயிருந்திருப்பார்கள். மேலும் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்த வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் தேயிலை வர்த்தகத்துக்கு இடையூறு விளைவிக்கும் போது உள்ளூர் தோட்ட உரிமையாளர்களின் உற்பத்தியைச் சந்தையில் விட்டு அதை நிவர்த்தி செய்திருக்கலாம்.

அதுமட்டுமின்றி தேசியமயமாக்கப்பட்ட தோட்டங்கள் பெருந்தோட்ட கூட்டுத்தாபனம், ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்தி சபை என்பவற்றின் கீழ் கொண்டு வரப்பட்டன.

அனுபவமற்றவர்களின் நிர்வாகத்தில் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததுடன் தேயிலையின் தரமும் வீழ்ச்சியடைந்தது. அது மட்டுமின்றி தோட்டத் தொழிலில் எவ்வித அனுபவமுற்ற சிங்களவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதுடன், தோட்டக் காணிகள் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் குடியேற்றப்பட்டனர். ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படவோ, வசதிகள் வழங்கப்படவோ இல்லை.

இந்த நிலையில் 1975ம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமையில் பெருந்தோட்டத் தொழிலாளர் வேலை நிறுத்தம் இடம்பெற்றது. இதில் சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்கம் உட்படச் சகல தொழிற் சங்கங்களும் கலந்து கொண்டன.

அதனையடுத்து சமசமாஜக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்படுகிறது. வெளியேற்றப்பட்ட சமசமாஜக் கட்சியினர் திருமதி ஸ்ரீமாவோவின் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகின்றனர். அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஐ.தே.கட்சியினர், தமிழர் ஐக்கிய முன்னணியினர் அதற்கு ஆதரவாக வாக்களிக்கின்றனர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டபோதும் அதை அரசாங்கத்துக்கு எதிரான வலுவான பிரசாரமாக எதிர்க்கட்சியினர் பயன்படுத்திக் கொள்கின்றனர். சமசமாஜக் கட்சியினரை தங்கள் பரமவைரிகளாகக் கருதிய ஐ.தே.கட்சியும், தமிழர் ஐக்கிய முன்னணியும் அதற்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது. 1976ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியும் அரசாங்கத்தை விட்டு வெளியேறுகிறது.

1977ம் ஆண்டு இடம்பெற்ற ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நாட்டின் முழுப் போக்குவரத்தையுமே ஸ்தம்பிக்க வைக்கிறது.

இப்படியாக நெருக்கடி நிலை அதிகரித்துவந்த வேளையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ரொனிடிமெல், ரொனி ஜயசூரிய ஆகியோர் வெளியேறுகின்றனர். அதனையடுத்து முக்கிய இடதுசாரி ஆதரவாளரான நந்தா எல்லாவல்ல உட்பட பி.ஜீ.ஆரியதிலக, ரொனிசன் எதிரிசூரிய, ஏ.ஜே.ஜினதாச, ரி.பி.சுபசிங்க ஆகியோர் வெளியேறுகின்றனர்.

இடதுசாரிகளும், இடதுசாரிகளின் ஆதரவாளர்களும் முற்றாக வெளியேறிவிட்ட நிலையில் அரசாங்கத்தின் அதிகாரம் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகச் சென்றடைகிறது.

இந்தச் சூழலைப் பயன்படுத்தும் முகமாக ஜே.ஆர்.ஜயவர்த்தன பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாக்கா மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தார். எனினும் அது வெற்றி பெறமுடியவில்லை. எனினும் அதன்போது இடம்பெற்ற விவாதங்கள் அரசாங்கத்துக்கு எதிரான வலிமையான பிரசாரமாக விளங்கின.

அதேவேளையில் தேர்தல் தொகுதிகளை மறுசீரமைப்புச் செய்வது தொடர்பாக தேர்தல் நிர்ணய சபையின் சில நடவடிக்கைகள் பற்றி இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி அமைத்த நிலையில் வவுனியா தொகுதியை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.எக்ஸ்.செல்லத்தம்புவுக்கா அல்லது தமிழ்க் காங்கிரஸ் கட்சியைத் சேர்ந்த வவுனியா சிவசிதம்பரத்துக்கா வழங்குவது என்ற பிரச்சினை எழுந்தது. எனவே வவுனியாவை வவுனியா, முல்லைத்தீவு என இரு தொகுதிகளாகப் பிரிக்கும்படி கோரியது.

அப்படியானால் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்த மூதூர் தொகுதியை மூதூர் சேருவில என இரு தொகுதிகளாகப் பிரிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரியது. அதன் காரணமாக ஒரு முஸ்லிம், ஒரு தமிழர் வழமையாகத் தெரிவு செய்யப்படும் மூதூரில் ஒரு முஸ்லிம் மூதூர் தொகுதியிலும் ஒரு சிங்களவர் சேருவிலவிலும் தெரிவாகும் நிலை உருவாகி மூதூரில் தமிழ் அங்கத்துவம் இல்லாமற் போனது. அதுமட்டுமின்றி கிழக்கு மாகாண நிலத் தொடர்பைத் துண்டிக்கும் வகையில் இடையில் சேருவில தொகுதி உருவாக்கப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணி தங்களுக்குள் உள்ள பதவிப் போட்டி காரணமாக எமது தாயக நிலத்தில் ஒரு சிங்களத் தொகுதி உருவாக அனுமதியளித்தனர் என்பதை நாம் கவனத்தில் எடுக்காமல் விடமுடியாது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் கௌரவமும் மதிப்பும் பெற்றிருந்த போதிலும் நாட்டில் நெருக்கடி மேல் நெருக்கடியைச் சந்தித்தது.

தன்னிறைவுப் பொருளாதாரம், உள்ளுர் உற்பத்தி ஊக்குவிப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிகார துஷ்பிரயோகம், நிர்வாக ஆற்றலின்மை, இனவாதம் போன்றவற்றால் மக்களிடையே செல்வாக்கிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியில் 21.07.1977ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுப் புதிய தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியை விழுத்தி ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வர தமிழர் விடுதலைக் கூட்டணி முழுமையான பங்களிப்பை வழங்கிய நிலையில் 1977ன் பின் ஐ.தே.கட்சி ஆட்சியில் தமிழ் மக்கள் முன்னெப்பொழுதும் சந்திக்காத கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE